என் மலர்tooltip icon

    ரஷ்யா

    • 50 ஆண்டு காலமாக லூனா முயற்சிகளை நிறுத்தி வைத்தது தவறு
    • தோல்வியால் என் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது

    1959-ல் தொடங்கி 1976 வரை தொடர்ச்சியாக பல விண்கலன்களை ரஷியா நிலவிற்கு அனுப்பியது. அதில் 15 விண்கல பயணம் வெற்றிகரமாக அமைந்ததால் உலகைமே ரஷியாவை வியந்து பார்த்தது.

    ரஷியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்காஸ்மாஸ் (Roscosmos), நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி அங்குள்ள கனிம வளங்கள் உட்பட பல்வேறு விவரங்களை குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக லூனா-25 எனும் விண்கலத்தை இம்மாதம் வாஸ்டோச்னி காஸ்மோடிரோமிலிருந்து (Vostochny Cosmodrome) நிலவிற்கு அனுப்பியது.

    ஆனால், ஆகஸ்ட் 19 அன்று அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து நொறுங்கியதால், இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

    இதுகுறித்து ராஸ்காஸ்மாஸ் நிலைய அமைப்பின் தலைவர் கூறியிருப்பதாவது:-

    நிலவிற்கு தொடர்ந்து விண்கலன்களை அனுப்பும் முயற்சிக்கு தடை போட கூடாது. அது ஒரு மோசமான முடிவாகி விடலாம். சுமார் 50 ஆண்டு காலம் இந்த முயற்சிகளை நிறுத்தி வைத்ததன் மோசமான பின்விளைவைத்தான் நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். அரசாங்கங்கள் இந்த திட்டத்தை இடைநிறுத்தம் செய்ததன் காரணமாக ஈடில்லாத நமது முந்தைய தலைமுறையினரின் தொழில்நுட்ப அறிவை நாம் கிட்டத்தட்ட இழந்து விட்டோம்.

    இறங்குவதற்கான சுற்றுப்பாதைக்கு முன்னதான சுற்றுப்பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்தம் செய்ய வேண்டிய எஞ்சின் திட்டமிட்ட 84 வினாடிகளுக்கு பதிலாக 127 வினாடிகள் தொடர்ந்து செயல்பட்டது. இதனால் லூனா விழுந்து நொறுங்கியது. ஒரு தொழில்நுட்ப வல்லுனர்களின் குழு இதற்கான துல்லிய காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே இம்முறை ரஷியா அனுப்பிய லூனா-25 ஆராய்ச்சியில் பங்கு பெற்ற அனுபவம் வாய்ந்த 90 வயதான ரஷிய விண்வெளி ஆராய்ச்சியாளர் மிக்கெய்ல் மரோவ் (Mikhail Marov) இந்த தோல்வியினால் திடீரென உடல்நலம் குறைந்து, ரஷிய தலைநகரான மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இவர் ரஷியாவின் முந்தைய நிலவிற்கு விண்கலன்கள் அனுப்பும் முயற்சிகளில் பங்கேற்ற ஒரு தேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி வல்லுனராவார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-

    நான் எவ்வாறு கவலைப்படாமலிருக்க முடியும்? நான் மருத்துவ கண்காணிப்பில் உள்ளேன். என்னுடைய வாழ்நாளின் ஆராய்ச்சி அனுபவம்தான் இந்த முயற்சி. இந்த தோல்வியால் என் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா, கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் தனது சந்திரயான் திட்டத்தின்படி, சந்திரயான் 3 எனும் விண்கலத்தை அனுப்பியுள்ளது என்பதும் தற்போது வரை திட்டமிட்டபடி தனது சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கும் இந்த விண்கலத்தை நாளை மாலை 06:04 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்களுக்கான ராணுவப் பயிற்சியை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக கடந்த நவம்பரில் அறிவித்தது.
    • எதிரி ட்ரோன்களை எதிர்கொள்வதற்கான வழிமுறையைக் கற்றுக்கொள்வார்கள்.

    வரும் கல்வியாண்டில் ராணுவ ஆளில்லா விமானங்களை எவ்வாறு இயக்குவது மற்றும் எதிர்கொள்வது என்பதை ரஷிய இளைஞர்கள் கற்றுக்கொள்வார்கள் என்று ரஷிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட பாடத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைனுக்கு எதிராக ஏறக்குறைய 17 மாத போர் தாக்குதலை முன்னெடுத்துச் செல்லும் ரஷியா, 2023ம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கான சோவியத் பாணி ராணுவப் பயிற்சியை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக கடந்த நவம்பரில் அறிவித்தது.

    15 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த ட்ரோன் பாடநெறி, ரஷியா கிட்டத்தட்ட தினசரி உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களால் குறிவைக்கப்படுவதால், அவற்றின் பயன்பாடு முக்கியமானதாக இருக்கும்.

    இதுகுறித்து ரஷிய கல்வி அமைச்சகத்தின் வலைத்தளத்தில், "மாணவர்கள் போரில் ஆளில்லா வான்வழி வாகனங்களை பயன்படுத்தக்கூடிய வழிகளைப் பற்றிய புரிதலைப் பெறுவார்கள்.

    அவர்கள் ட்ரோன் பைலட்டிங்கில் நடைமுறைப் பணிகளைச் செய்வார்கள். அத்துடன், எதிரி ட்ரோன்களை எதிர்கொள்வதற்கான வழிமுறையைக் கற்றுக்கொள்வார்கள்" என்று குறிப்பிட்டிருந்தது.

    • மோஸ்க்வா ஆற்றில் மேலும் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • சுற்றுப்பயணத்தின் அமைப்பாளர் மீது சட்ட அமலாக்கப் பிரிவு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல்.

    மாஸ்கோவில் பல சுற்றுலா வழிகாட்டிகள் தலைநகரின் கழிவுநீர் அமைப்பின் பரந்த சுரங்கங்களுக்குள் பயணிகளை அழைத்துச்சென்று பயணங்களை மேற்கொள்கின்றனர். அவற்றில் சில சுரங்கங்கள் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. இதனால், சுரங்கங்களை சுற்றிப் பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாபயணிகள் இங்கு குவிகின்றனர்.

    இந்நிலையில், மாஸ்கோவில் கழிவுநீர் அமைப்பின் சுரங்கப்பாதை சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற 4 பேர் தண்ணீரில் அடித்துச்சென்று உயிரிழந்தனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மாஸ்கோவில் பெய்த திடீர் மழையால் பாதாள கழிவுநீர் அமைப்பில் நீர் மட்டம் விரைவாக உயர்ந்தது. அப்போது, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பயணிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இதில், ஒரு பெண்ணின் உடல் உட்பட மூன்று பேரின் சடலங்கள் அதிகாலையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மோஸ்க்வா ஆற்றில் மேலும் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுரங்கப்பாதையில் மக்கள் தப்பிக்கக்கூடிய தங்குமிடங்கள் இருப்பதாகவும், ஆனால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் நகர்ப்புற ஆய்வாளர் ஒருவர் கூறினார்.

    மேலும், சுற்றுப்பயணத்தின் அமைப்பாளர் மீது சட்ட அமலாக்கப் பிரிவு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • நேற்றைய தினம் லூனா 25-ன் சுற்றுவட்டப் பாதையை குறைக்கும்போது தொடர்பு துண்டிக்கப்பட்டது.
    • லூனா-25 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷியா விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில் தோல்வி.

    நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ந் தேதி விண்ணில் செலுத்தியது.

    இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம் 23-ந்தேதி நிலவில் தரை இறங்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு முன்பாக 21-ந்தேதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க ரஷிய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

    சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் கடந்த 17-ந்தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. இதையடுத்து அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்றது. அதன்படி லூனா-25 விண் கலத்தின் உயர குறைப்புகளை விஞ்ஞானிகள் செய்து வந்தனர்.

    லூனா-25 விண்கலத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. நிலவில் தலையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் பின்னடைவு ஏற்பட்டதால் விண்கலத்தை திட்டமிட்டபடி அடுத்த சுற்றுப்பாதைக்கு அனுப்ப முடியவில்லை.

    தற்போதைய பாதையிலேயே ரஷிய விண்கலம் சுற்றி வந்தது. இந்நிலையில், ரஷியாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதியதாக ரஷியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    நேற்று லூனா 25 விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிலவில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    லூனா-25 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.

    • லூனா-25 விண்கலம் தரையிறங்குவதை தோல்வி அடைய செய்யுமா என்பதை ரஷிய விண்வெளி நிலையம் தெரிவிக்கவில்லை.
    • தொழில் நுட்ப கோளாறை சரி செய்வதில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மாஸ்கோ:

    நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ந் தேதி விண்ணில் செலுத்தியது.

    இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம் 23-ந்தேதி நிலவில் தரை இறங்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு முன்பாக 21-ந்தேதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க ரஷிய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

    சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் கடந்த 17-ந்தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.

    இதையடுத்து அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்றது. அதன்படி லூனா-25 விண் கலத்தின் உயர குறைப்புகளை விஞ்ஞானிகள் செய்து வந்தனர்.

    இந்நிலையில் லூனா-25 விண்கலத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நிலவில் தலையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இறுதிக் கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் பின்னடைவு ஏற்பட்டதால் விண்கலத்தை திட்டமிட்டபடி அடுத்த சுற்றுப்பாதைக்கு அனுப்ப முடியவில்லை. தற்போதைய பாதையிலேயே ரஷிய விண்கலம் சுற்றி வருகிறது.

    இதுதொடர்பாக ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் கூறும்போது, லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும் வேளையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்த செயல்பாட்டின் போது தானியங்கி நிலையத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டபடி இறுதி கட்ட செயல்முறையை மேற்கொள்ள முடியவில்லை. நிலைமையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

    இந்த திடீர் கோளாறு காரணமாக லூனா-25 விண்கலம் நிலவில் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இந்நிகழ்வு, லூனா-25 விண்கலம் தரையிறங்குவதை தோல்வி அடைய செய்யுமா என்பதை ரஷிய விண்வெளி நிலையம் தெரிவிக்கவில்லை. தொழில் நுட்ப கோளாறை சரி செய்வதில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • ரஷிய நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.
    • ரஷியாவின் பிரையன்ஸ்க் பிராந்திய எல்லை பகுதிக்குள் 4 உக்ரைன் ராணுவ வீரர்கள் நுழைய முயற்சித்த போது அவர்கள் கொல்லப்பட்டனர்.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷிய நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்ற உக்ரைன் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    வடக்கு உக்ரைன் பகுதியை ஒட்டி உள்ள ரஷியாவின் பிரையன்ஸ்க் பிராந்திய எல்லை பகுதிக்குள் 4 உக்ரைன் ராணுவ வீரர்கள் நுழைய முயற்சித்த போது அவர்கள் கொல்லப்பட்டனர்.

    இது குறித்து ரஷிய கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் கூறும்போது, "உக்ரைனிய நாசவேலை மற்றும் உளவுக்குழுவின் 6 பேர் பிரையன்ஸ்க்குள் நுழையும் முயற்சி முறியடிக்கப்பட்டது" என்றார்.

    • ரஷியாவில் எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டது.
    • இந்த பயங்கர வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தெற்கு பகுதியில் தாகெஸ்தான் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    இந்த வெடிவிபத்து 12 பேர் உயிரிழந்ததனர் என்றும், 60க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர் என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து எரிவாயு நிலையத்திற்கு பரவியதாக கூறப்படுகிறது.

    • வெடிவிபத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
    • கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து பெட்ரோல் நிலையத்திற்கு பரவியது.

    ரஷியாவின் காகசஸ் குடியரசின் தாகெஸ்தானில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    ரஷ்ய நாளிதழான இஸ்வெஸ்டியாவின் டெலிகிராமில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு சாட்சியின்படி, கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து பெட்ரோல் நிலையத்திற்கு பரவியதாக கூறப்பட்டது.

    மேலும், ரியா நோவோஸ்டி செய்தி நிறுவனத்தால் டெலிகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், "ஒரு கட்டிடத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதைக் காட்டியது. அதைத் தொடர்ந்து ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் 600 சதுர மீட்டர் (6,450 சதுர அடி) பரப்பளவில் தீ பரவியது. மேலும், சம்பவ இடத்தில் 260 தீயணைப்பு வீரர்கள் இருப்பதாக அமைச்சகம் கூறியுள்ளது.

    • இரு தரப்பிலும் டிரோன்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது
    • 2023 ஆகஸ்டில் சிறிய மற்றும் பெரிய தாக்குதல்கள் உக்ரைனால் தினமும் நடைபெறுகிறது

    ரஷியாவில் பல தசாப்தங்களாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தை ரஷியர்கள் ஒரு வித அச்சத்துடன் பார்த்து வருகின்றனர்.

    "ஆகஸ்ட் சாபம்" (August Curse) என அவர்கள் பெயரிட்டு அழைக்கும் இந்த மாதத்தில் தான், அதிக எண்ணிக்கையில் ஆபத்தான விபத்துகள், தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் போர் தொடக்கம் ஆகியவை நடைபெற்று பலத்த உயிர்சேதங்களும், கட்டிட சேதங்களும் நடக்கின்றன என அவர்கள் நம்புகிறார்கள்.

    கடந்த சில வருடங்களாக அந்நாட்டு மக்கள் இதனை சற்று மறந்திருந்தார்கள். ஆனால் நடைபெற்று வரும் ரஷிய-உக்ரைன் போர் இந்த அச்சத்தை மீண்டும் தட்டி எழுப்பியிருக்கிறது.

    கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் பெரும் உயிர்சேதமும், கட்டிட சேதங்களும் நடைபெற்று வருகிறது.

    போர் 530 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இப்போரில் இரு தரப்பிலும் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆகஸ்ட் மாதம், ரஷியாவின் மீதான உக்ரைன் தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது.

    கருங்கடல் பகுதியில் ரஷிய ராணுவ மற்றும் சரக்கு கப்பல்கள் மீது உக்ரைன் 'கப்பல் டிரோன்கள்' மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் சிறியளவிலேயே பல டிரோன் தாக்குதல்களை தினந்தோறும் நடத்தி உக்ரைன் அதிரடி காட்டி வருகிறது.

    இவை ரஷியாவில் உள்ள அலுவலக கட்டிடங்கள், ராணுவ தளங்கள், வர்த்தக இடங்கள் மற்றும் பொதுமக்களின் வசிப்பிடங்களை குறி வைத்து நிகழ்த்தப்படுகிறது. இவற்றில் பல வீழ்த்தப்பட்டாலும், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் உக்ரைனிலிருந்து ரஷியாவின் பல இடங்களை நோக்கி ஏவப்பட்ட 20 ஆளில்லா விமானங்களை ரஷியா இடைமறித்து வீழ்த்தியதாக தெரிவித்தது. இத்தாக்குதல்களில் உயிர்சேதம் ஏதுமில்லை.

    இந்த 20 டிரோன்களில் மாஸ்கோவிற்கு தென்மேற்கே 150 கிலோமீட்டர் தொலைவில் கலுகா பகுதியில் ஒரு டிரோன் வீழ்த்தப்பட்டது. ரஷிய தலைநகர் மாஸ்கோவின் மேற்கு பகுதிக்கு குறிவைக்கப்பட்ட மற்றொரு டிரோன் இதே போல் வீழ்த்தப்பட்டுள்ளது. இவை மக்களிடையே மீண்டும் ஆகஸ்ட் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கடந்த 2022 மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து வெளியேறியது
    • ஐ-போன் மூலமாக ரஷியர்களை அமெரிக்கா உளவு பார்ப்பதாக ரஷியா கூறியது

    உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு.

    ரஷியாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரஷியர்களில் பலரும் ஐ-போன் மற்றும் ஐ-பேடு சாதனங்களை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.

    கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.

    உக்ரைன் ஆக்ரமிப்பை அடுத்து கடந்த 2022 மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. எனினும், வேறு நாடுகளிலிருந்து ரஷியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐ-போன் 14 உள்பட பல மாடல்களை ரஷியர்கள் வாங்கி பயனபடுத்தி வந்தனர்.

    அமெரிக்காவின் ஒரு உளவு நடவடிக்கையின் விளைவாக ரஷியாவினரால் பயன்படுத்தப்படும் பல ஆயிரக்கணக்கான ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பாதுகாப்பை இழந்து விட்டதாக ரஷியாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி. (FSB) 2 மாதங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தது.

    ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையும் இணைந்து இதனை செய்ததாக எஃப்.எஸ்.பி. தெரிவித்தது.

    இதனையடுத்து ரஷிய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஒரு சுற்றறிக்கை அந்நாட்டு அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

    "ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷிய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஐ-போன்கள் மற்றும் ஐ-பேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷிய அரசாங்க ஊழியர்கள் இனி பயன்படுத்தப்பட கூடாது. பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தை செய்யவும், ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்த கூடாது. தனிப்பட்ட தேவைகளுக்காக ஐ-போன்களைப் பயன்படுத்தலாம்" என ரஷிய அரசாங்கத்தின் டிஜிட்டல் மேம்பாட்டுக்கான அமைச்சர் மக்சுட் ஷடேவ் (Maksut Shadaev) அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆப்பிளுடன் இணைந்து இந்த உளவு வேலையில் ஈடுபட்டதாக FSB குற்றம் சாட்டிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

    • ஐந்து நாட்களில் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும்
    • சந்திரயான்-3 தரையிறங்கும் நாளில், லூனாவும் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்ப்பு

    இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய விண்ணில் செலுத்தியுள்ளது. வருகிற 23-ந்தேதி விண்கலம் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சந்திரயான்-3 போன்று நிலவின் தென்துருவத்தை ஆராய ரஷியா லூனா-25 என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலம் ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

    இந்த விண்கலம் 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என்றும், பின்னர் 5 முதல் 7 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது. இதற்காக மூன்று இடங்களை ரஷிய விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.

    ரஷியா கடந்த 1976-ம் ஆண்டு முதல்முதலாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. அதன்பின் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விண்கலத்தை அனுப்ப உள்ளது.

    நிலவில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று லூனா-25 ஆய்வு செய்யும் என்றும் 2021-ம் ஆண்டே விண்கலத்தை ஏவ திட்டமிட்டு, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளனர்.

    • ரஷிய- உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது
    • இரு நாடுகளும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன

    ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் தனது ராணுவத்தால் ஆக்ரமித்தது.

    சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டு ரஷியா மேற்கொண்ட இந்த ஆக்ரமிப்பிற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது.

    இந்த ரஷிய-உக்ரைன் போர் தற்போது 530 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்து பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சில மாதங்களாக தாக்குதல்களில் இரு நாடுகளும் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன.

    இந்நிலையில் உக்ரைன் இரு டிரோன்களை ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி ஏவியது. இவற்றை ரஷியாவின் விமானப்படை தாக்கி அழித்தது. மாஸ்கோவின் தெற்கு புறநகரில் உள்ள டொமோடிடோவோ (Domodedovo) பகுதியின் மீது ஏவப்பட்ட ஒரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது.

    தலைநகரின் மேற்கு பகுதியில் உள்ள மின்ஸ்க் நெடுஞ்சாலையின் மேலே இன்னொரு டிரோனை ரஷியா இடைமறித்து வீழ்த்தியது. வீழ்த்தப்பட்ட டிரோன்களின் பாகங்கள் தாக்கப்பட்டு காயமடைந்ததாகவோ அல்லது உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல்கள் இல்லை.

    ரஷியாவின் மாஸ்கோ நகரை குறிவைத்து ஒரே வாரத்தில் 3-வது முறையாக உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×