என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • விண்வெளியை ஆய்வு செய்வதற்காக 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை உருவாக்கியுள்ளன.
    • 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

    வாஷிங்டன்

    அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்கள் ஆகியவை இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை உருவாக்கியுள்ளன. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி பிரபஞ்சத்தின் அரிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த புகைப்படங்களை அண்மையில் நாசா வெளியிட்டது. பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ரகசியங்களை அறிவதற்கான தேடலில், இந்த புகைப்படங்கள் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்கள் இந்த சாதனையை பாராட்டி வருகின்றனர்.

    அதே சமயம் மீம் கிரியேட்டர்கள் பலர் இந்த புகைப்படங்களை பல்வேறு விஷயங்களுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தும் வருகின்றனர். அந்த வகையில், உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

    நாசா வெளியிட்ட நட்சத்திர மண்டலத்தின் புகைப்படத்தை சமையல் அறையில் இருக்கும் டைல்ஸ் டிசைனுடன் ஒப்பிட்டு அவர் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் 'நல்ல முயற்சி நாசா' என்று கூறப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் இந்த பதிவு டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.

    • ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகளை வாங்க இந்தியா 2018-ல் ஒப்பந்தம் போட்டுள்ளது.
    • ரஷிய ஏவுகணை வாங்க இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.

    வாஷிங்டன்:

    ரஷியாவிடம் இருந்து 5 எஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகளை வாங்குவதற்கு இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டுள்ளது.

    இதற்கிடையே, ரஷிய ஏவுகணை வாங்க இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக கட்சி எம்.பி., ரோ கன்னா தாக்கல் செய்து பேசியதாவது:

    அண்டை நாடான சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவுக்கு நவீன ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அதனால் இந்தியா ரஷியாவிடம் எஸ் 400 ஏவுகணைகளை வாங்க அனுமதிக்க வேண்டும். இந்த நடவடிக்கை இந்தியா, அமெரிக்கா இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும். எனவே இந்த மசோதாவை கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தியா வாங்குவதற்கான தடைகளுக்கு எதிரான விலக்கு அளிக்கும் சட்டத் திருத்தத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.

    அமெரிக்க தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தின் (என்.டி.ஏ.ஏ) பரிசீலனையின் போது, ​​சட்டத்திருத்தம் திருத்தத்தின் ஒரு பகுதியாக நிறைவேற்றப்பட்டது. சீனா போன்ற ஆக்கிரமிப்பாளர்களைத் தடுக்க உதவும் வகையில் தடைகள் மூலம் அமெரிக்காவின் எதிரிகளை எதிர்க்கும் காட்சா (சிஏஏடிஎஸ்ஏ) சட்டத்தை இந்தியாவிற்கு வழங்க ஜோ பைடன் நிர்வாகத்தை தனது அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு இந்தத் திருத்தம் வலியுறுத்துகிறது.

    காட்சா என்பது கடுமையான அமெரிக்க சட்டமாகும். இது 2014-ல் கிரீமியாவை ரஷியா இணைத்ததற்கும், 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதற்கும் பதிலளிக்கும் விதமாக ரஷியாவிடமிருந்து பெரிய பாதுகாப்பு சாதனங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க நிர்வாகத்தை அங்கீகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிரம்பின் முதல் மனைவி இவானா.
    • இவர் 1992-ல் டிரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா (73). இவர் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார்.

    டிரம்பின் முதல் மனைவியான இவானா 1992 ஆம் ஆண்டு டிரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். மேலும், இவர் டொனால்ட் ஜூனியர், எரிக் டிரம்ப் மற்றும் இவாங்கா டிரம்பின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நியூயார்க் காவல்துறையின் அவசர உதவி எண்ணிற்கு வந்த அழைப்பின் பேரில் போலீசார் அங்கு சென்றுபார்த்தனர். அப்போது, அங்கு இவானா சுயநினைவின்றி கிடந்ததாகவும், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நியூயார்க் நகர போலீசார் தெரிவித்துள்ளனார்.

    இவானா மரணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • கேரளா கடவுளின் தேசம் என அழைக்கப்படுவதாக டைம் இதழ் தெரிவித்துள்ளது.
    • அகமதாபாத் நகரம் கலாச்சார சுற்றுலாவுக்கான ஒரு மெக்கா என டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.

    நியூயார்க்:

    அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழ் 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த 50 இடங்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் கேரளா மற்றும் குஜராத்தின் அகமதாபாத் ஆகியவை டைம் இதழில் இடம் பெற்றுள்ளன.

    கண்கவர் கடற்கரைகள், கோயில்கள், அரண்மனைகள் என கேரளா கடவுளின் தேசம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள படகு வீடுகள் சிறந்த சுற்றுலா அனுபவத்தினை தருகிறது. சுற்றுலா பயணிகள் கேரளாவின் கடற்கரை அழகை கண்டு அனுபவிக்க தொடங்கி உள்ளனர். என டைம் இதழ் தெரிவித்துள்ளது.

    இதேபோல், அகமதாபாத் நகரம் கலாச்சாரச் சுற்றுலாவுக்கான ஒரு மெக்கா எனவும் டைம் இதழ் குறிப்பிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான அகமதாபாத், டைம் பத்திரிகையால் 2022-ன் உலகின் 50 மகத்தான இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் குறிப்பாக, குஜராத் மக்களுக்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும் என பதிவிட்டுள்ளார்.

    • மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
    • புதிதாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

    வாஷிங்டன்:

    உலகில் பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட் கம்பெனியில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. மறுசீரமைப்பு காரணமாக 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

    இருந்த போதிலும் தொடர்ந்து புதிதாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. மற்ற நிறுவனங்களை போலவே எங்கள் நிறுவனத்திலும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து உள்ளோம் என்றும் இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் தான் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    • ஏப்ரல் முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
    • பூஸ்டர் தடுப்பூசி கடுமையான பாதிப்புக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 8 கோடியே 86 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் BA.4 மற்றும் BA.5 என பெயரிடப்பட்ட இரண்டு புதிய வகை கொரோனா தொற்றுகள் வேகமாக பரவுவதாக அமெரிக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

    இது ஓமிக்ரான் வகையை சேர்ந்தது என்றும் இதற்கு முந்தைய தொற்றுகளை விட வீரியம் வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க மக்கள் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதுடன், பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டு கொள்ளுமாறு வெள்ளை மாளிகை அறிவுறுத்தி உள்ளது.

    அமெரிக்காவில் ஏப்ரல் முதல் கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்றும் இது புதிய வகை கொரோனா பரவலை பிரதிபலிக்கிறது என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    பூஸ்டர் தடுப்பூசி கடுமையான பாதிப்புக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது, ஒருவருக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு இருந்தால், அவர் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்றும் வாலென்ஸ்கி தெரிவித்தார். கொரோனா நம் வாழ்க்கையை சீர்குலைக்க விடக்கூடாது, கொரோனா என்பது நாம் சமாளிக்க வேண்டிய ஒரு உண்மை என்பதை மறுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

    • மனித கண்களுக்கு புலன் ஆகாத பகுதிகளையும் கதிர்வீச்சு ஊடுருவல் முறையில் படம் பிடித்து அனுப்பி உள்ளது.
    • நாசாவின் இந்த சாதனை புகைப்படத்தை வெளியிட்ட ஜோபைடன், விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டி உள்ளார்.

    வாஷிங்டன்:

    உலகை ஆராய்வதில் தொலைநோக்கிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு மையம் விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திராத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறது.

    இதன்படி ஐரோப்பா மற்றும் கனடாவில் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து 'ஜேம்ஸ் வெப்' என்ற விண்வெளி தொலைநோக்கியை நாசா உருவாக்கியது.

    சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 5 ராக்கெட்டுகள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

    பூமியில் இருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி அங்கிருந்து பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது.

    இதன் முதலாவது வண்ணப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேற்று இரவு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை அதிபர் கமலாஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மனித கண்களுக்கு புலன் ஆகாத பகுதிகளையும் கதிர்வீச்சு ஊடுருவல் முறையில் படம் பிடித்து அனுப்பி உள்ளது. இதன் மூலம், விண்வெளியில் ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பூமியில் இருந்து 1,300 ஆண்டுகள் பயணம் செய்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக நாசாவின் நிர்வாகி பில்நெல்சன் கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள டூவிட்டர் பதிவில், 'இன்று வரை பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு காட்சி. அது நமக்கு கண்ணுக்கு தெரியாத விண்மீன் திறள்களை காட்டுகிறது. தொலை நோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு ஜூலை 12-ந்தேதி வெளியிடப்படும்' என கூறப்பட்டுள்ளது.

    நாசாவின் இந்த சாதனை புகைப்படத்தை வெளியிட்ட ஜோபைடன், விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டி உள்ளார்.

    • ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ட்ரோன்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்குகிறது.
    • ட்ரோன் பயன்பாடு குறித்து ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்க ஈரான் தயாராகி வருகிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல நகரங்களை கைப்பற்றிய போது, உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் ரஷியாவுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், உக்ரைன் மீதான படையெடுப்பில் பயன்படுத்துவதற்கு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ட்ரோன்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஆளில்லா வான்வழி வாகனங்களை ரஷியாவிற்கு ஈரான் வழங்கி வருவதாக கூறினார். தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அவற்றை பயன்படுத்துவது குறித்து இந்த மாதத்தில் ரஷிய படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஈரான் தயாராகி வருகிறது என்றும் அவர் கூறினார்.

    முன்னதாக சவுதி அரேபியாவைத் தாக்க ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் இதேபோன்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை வழங்கியதாக சல்லிவன் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து தமது சுற்றுப்பயணத்தின் போது பைடன் ஆலோசிக்க உள்ள நிலையில், ஈரான் குறித்த சல்லிவன் குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ==

    • உலக மக்கள்தொகை நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • ஐ.நா. அறிக்கைபடி 2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின்படி உலக மக்கள் தொகை 2030-ம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050-ம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என்று கணக்கிட்டுள்ளது.

    மேலும், இது 2080-களில் சுமார் 10.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் என்றும், 2100 வரை அந்த நிலையில் இருக்கும் என்றும் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:

    உலக மக்கள்தொகை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பூமியில் மக்கள்தொகை 8 பில்லியனாக அதிகரிப்பதை எதிர்பார்க்கிறோம். இது நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், நமது பொதுவான மனிதகுலத்தை அங்கீகரிப்பதற்கும், ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கண்டு வியப்பதற்கும் ஒரு சந்தர்ப்பமாகும்.

    நீட்டிக்கப்பட்ட ஆயுட்காலம் மற்றும் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் வியத்தகு முறையில் குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இது நமது கிரகத்தை கவனித்துக்கொள்வதற்கான நமது அனைவருக்குமான பொறுப்பை நினைவூட்டுகிறது. மேலும், ஒருவருக்கொருவர் நமது கடமைகளை நாம் இன்னும் எங்கே இழக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க ஒரு தருணம் என தெரிவித்தார்.

    ஐ.நா.வின் அறிக்கையின் படி 2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவை இந்தியா விஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    2022-ல் தலா 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் சீனாவும் இந்தியாவும் இந்த பிராந்தியங்களில் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன.

    அறிக்கையின்படி, சீனாவின் 1.426 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2022-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 1.412 பில்லியனாக உள்ளது. இது 2023-ம் ஆண்டில் இந்தியா சீனாவை மிஞ்சும். 2050-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 1.668 பில்லியனாக இருக்கும். அப்போது சீன மக்கள்தொகை 1.317 பில்லியனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    • உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.
    • உக்ரைனுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 150-வது நாளை நெருங்கியுள்ளது. போரில் உக்ரைனின் பல நகரங்கள் ரஷியாவிடம் வீழ்ந்தபோதும், உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.

    இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி குண்டுகள், ராணுவ கவச வாகனங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இத்தொகுப்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

    • இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
    • கோத்தபய ராஜபக்சே வரும் 13ந் தேதி பதவி விலகுவதாக தெரிவித்துள்ளதாக சபாநாயகர் அபேவர்தன கூறியுள்ளார்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையால் மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் அங்கேயே தங்கி வருகின்றனர். இதற்கிடையே, கோத்தபய ராஜபக்சே மாளிகையில் இருந்து தப்பியோடிவிட்டார்.

    தொடர்ந்து, இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

    முன்னதாக நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், ரணில் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு கோத்தபய ராஜபக்சேவை வலியுறுத்தி சபாநாயகர் அபேவர்தன கடிதம் எழுதினார். அதற்கு பதில் அளித்துள்ள கோத்தபய, வரும் 13ந் தேதி பதவி விலகுவதாக தெரிவித்துள்ளதாக அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கையில் வெடித்த மக்களின் போராட்டம், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், நீண்ட காலத் தீர்வுகளைக் காண விரைவாக செயல்படுமாறு இலங்கைத் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அந்தோணி பிலிங்கன் கூறுகையில், " எந்தவொரு புதிய அரசாங்கமும் நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும், இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்கும், தீர்வுகளை விரைவாகக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

    • ஜோ பைடனின் நடவடிக்கைகள் கருக்கலைப்பு செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் அபராதங்களை தடுக்கும்.
    • ஆனால் கருக்கலைப்புக்கு தடை உள்ள மாகாணங்களில் இந்த நிர்வாக உத்தரவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.

    அமெரிக்காவில் 50 ஆண்டுகளாக அமலில் இருந்த கருக்கலைப்பு உரிமை சட்டத்தை சமீபத்தில் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி தெரிவித்தார்.

    இந்நிலையில், கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

    ஜோ பைடன் அங்கம் வகிக்கும் ஜனநாயக கட்சியில் உறுப்பினர்களின் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிர்வாக உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். ஜோ பைடனின் இந்த நடவடிக்கைகள் கருக்கலைப்பு செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் அபராதங்களை தடுக்கும். ஆனால் கருக்கலைப்புக்கு தடை உள்ள மாகாணங்களில் இந்த நிர்வாக உத்தரவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.

    இதையடுத்து கருக்கலைப்பு தடை அமலில் உள்ள மாகாணங்களில் பாராளுமன்றம் மூலம் அத்தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.

    ×