என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிறுவனுக்கு முதலுதவி செய்தனர்.
    • சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் உள்ள ஒரு வால்மார்ட் கடைக்கு வெளியே, 14 வயது சிறுவன் தனது தம்பியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து சோக்டாவ் காவல்துறை தலைவர், கெல்லி மார்ஷல் கூறுகையில், "இரண்டு சிறுவர்களும் காருக்குள் அமர்ந்திருக்கின்றனர். அவர்களின் தாய் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன், காருக்குள் துப்பாக்கி இருப்பதை கண்டிருக்கிறான். அதனை எடுத்து விளையாட்டாக அழுத்தும்போது, தற்செயலாக அவனது தம்பியை சுட்டு விட்டான். அந்த சத்தம் அந்த வழியாக சென்றவர்களுக்கு கேட்டதையடுத்து அவசர உதவி எண் 911ஐ அழைத்தனர்" என தெரிவித்தார்.

    இரண்டு சிறுவர்களும் ஓக்லஹோமா நகர காவல்துறை அதிகாரி ஒருவரின் மகன்கள் என்றும் இதில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அவருடையது என்றும் ஆனால் சம்பவம் நடந்த போது அவர் சம்பவ இடத்திலேயே இல்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சிறுவனுக்கு முதலுதவி செய்தனர். உடலில் தோட்டா பாய்ந்த பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறுவதை நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர். சுடப்பட்ட அந்தச் சிறுவன் சுயநினைவோடு இருந்திருக்கிறான்.

    அவசரகால மருத்துவ பணியாளர்கள் அவனை ஆம்புலன்ஸ் மூலம் ஓக்லஹோமா பல்கலைக்கழக சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவன் விரைவில் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவான் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    சில மாதங்களுக்கு முன் விடுமுறை தின வியாபாரம் மும்முரமாக நடைபெற்றபோது, வால்மார்ட் ஊழியர் ஒருவர், துப்பாக்கியால் 6 பேரை சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக் கொண்டு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீஸ் அதிகாரியிடம் தாக்குவதை நிறுத்தும்படி, இந்த சம்பவத்தை பதிவு செய்தவர் வலியுறுத்தினார்.
    • விசாரணை நடந்து வருவதாக கூறி லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் 17-வயது சிறுவனை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்றதால், அங்கு கலவரம் வெடித்தது. காவல்துறையினரின் அத்துமீறலை பலர் கண்டித்தனர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி பகுதியில் போலீஸ் அதிகாரி ஒருவர், ஒரு பெண்ணை தரையில் தள்ளிவிட்டு, அவர் முகத்தில் மிளகுத்தூள் தூவி சித்ரவதை செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.

    இச்சம்பவம் ஜூன் 24 அன்று லான்காஸ்டரில் உள்ள வின்கோ (WinCo) மளிகை கடைக்கு வெளியே நடந்திருக்கிறது. ஆனால், கடைக்குள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆணையும், பெண்ணையும் கைது செய்ததாகவே காவல்துறை தெரிவித்திருக்கிறது.

    அந்த வீடியோவில், ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு ஆணுக்கு விலங்கிடுவது தெரிகிறது. அதே நேரம் ஒரு பெண் இந்த நிகழ்வுகளை பதிவு செய்கிறார். அப்போது ஒரு அதிகாரி அந்த பெண்ணை நோக்கிச் சென்று, அவளைப் பிடித்து கீழே தள்ளுகிறார். பின்னர், அப்பெண்ணின் முகத்தில் "பெப்பர் ஸ்பிரே" (Pepper Spray) தூவுகிறார். அப்பெண் சத்தமிட்டு, "என்னை தொடாதே" என்று கெஞ்சுவதும், கைது செய்யப்பட்ட நபர், "அவளை தாக்காதீர்கள். அவளுக்கு புற்றுநோய் இருக்கிறது" என கூறுவதையும் காண முடிகிறது.

    இந்த சம்பவத்தை பதிவு செய்தவரும், அந்த பெண்ணை கீழே தள்ளிய அதிகாரியிடம் தாக்குவதை நிறுத்துமாறு கத்துகிறார்.

    காவலரின் முழங்கால் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்ததா அல்லது முதுகில் இருந்ததா என்பது தெளிவாக தெரியவில்லை.

    வீடியோவை பதிவு செய்த லிசா மிச்செல் காரெட், பாதுகாப்பு பணியில் முன்னர் இருந்ததாக தெரிகிறது. அதிகாரிகள் ஆணையும், பெண்ணையும் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதை கவனித்தவர் அதனை பதிவு செய்திருக்கிறார்.

    வீடியோவில் உள்ள பெண், "என்னால் மூச்சுவிட முடியவில்லை" என்று கூறியதாக லிசா தெரிவித்தார்.

    இச்சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம், விசாரணை நடந்து வருவதாக கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், "தற்போதைய விசாரணைகள் தொடர்பான அறிக்கைகளை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், ஷெரீஃப் அலுவலக பணியாளர்கள் அனைத்து பொதுமக்களையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஷெரிஃப் தெளிவுபடுத்தியுள்ளார். தங்கள் செயல்களுக்கு பணியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் குறித்த அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இருவரும் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மட்டும் ஷெரீஃப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் (Minneapolis) நகரில், 2020 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் காவல்துறை அதிகாரிகளால் இதே போன்று கீழே தள்ளப்பட்டு தாக்கப்பட்டதில் இறந்தது பெரும் பிரச்சனையானது குறிப்பிடத்தக்கது.

    • வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • வெள்ளை மாளிகை முழுவதும் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப பட்டிருக்கும். அக்கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும்.

    இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வெள்ளை மாளிகை முழுவதும் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு வெள்ளை பவுடர் போன்று ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டது.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் அது தாக்குதலுக்கான நாச வேலையாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த சமயத்தில் அதிபர் ஜோபை டன் வெள்ளை மாளிகையில் இல்லை.

    வெள்ளை மாளிகைக்கு உயர் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர். முன் எச்சரிக்கையாக வெள்ளை மாளிகை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    அந்த மர்ம பொருள் அபாயகரமானதல்ல என்று தீயணைப்பு துறை உறுதிப்படுத்தியது. பின்னர் மர்ம பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் அது கோகைன் போதை பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பலத்த பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் போதைப் பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • ஹட்சன் நீர்வீழ்ச்சி பகுதியை சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் அய்டின் பெடோன்.
    • சிறுவன் சம்பவத்தன்று ஸ்பைடர் மேன் போன்று உடை அணிந்து கொண்டு அப்பகுதியில் உள்ள பூங்காவில் நின்று கொண்டிருந்தான்.

    அமெரிக்காவில் உள்ள பூங்கா ஒன்றில் ஸ்பைடர் மேன் போன்று உடை அணிந்து நின்ற பள்ளி மாணவனை பெண் ஒருவர் கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹட்சன் நீர்வீழ்ச்சி பகுதியை சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் அய்டின் பெடோன். இந்த சிறுவன் சம்பவத்தன்று ஸ்பைடர் மேன் போன்று உடை அணிந்து கொண்டு அப்பகுதியில் உள்ள பூங்காவில் நின்று கொண்டிருந்தான்.

    அவரை பூங்காவுக்கு வந்தவர்கள் பார்த்து ரசித்து கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த ஒரு பெண், ஸ்பைடர் மேன் உடையில் இருந்த அய்டின் பெடோனை சரமாரியாக தாக்கினார். இதில் மாணவனின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததால் மாணவன் முகமூடியை கழற்றுவது போன்று காட்சி உள்ளது. மாணவன் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவனது தாயார் ஷெல்லி பெடோன் தனது பேஸ்புக் பதிவில், எனது மகன் பொழுதுபோக்கிற்காக ஸ்பைடர் மேன் உடை அணிந்து நின்ற நிலையில், கொடூரமாக தாக்கப்பட்டுள்ளான் என பதிவிட்டுள்ளார்.

    • வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 800 பதிவுகளை பார்க்க முடியும்.
    • கார்ப்பரேட் விளம்பரதாரர்களின் பக்கங்கள் உட்பட எந்த டுவீட்களையும் பார்க்க முடியவில்லை.

    டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் ஒரு நாளில் எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. ஏஐ ஸ்டார்ட்அப்-கள் மேற்கொள்ளும் தகவல் திருட்டு தான் இதற்கு முக்கிய காரணம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் தற்காலிக கட்டுப்பாடு மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டுவிட்டர் பதிவுகளை பார்க்க முடியும். டுவிட்டரின் இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதுபற்றிய அறிவிப்பு கடந்த சனிக்கிழமை எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். அதன்படி வெரிஃபைடு பெற்று இருக்கும் டுவிட்டர் பயனர்கள் ஒரு நாளில் 6 ஆயிரம் பதிவுகளை பார்க்க முடியும். வெரிஃபைடு பெறாத பயனர்கள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை பார்க்க முடியும் என்று புதிய கட்டுப்பாடுகள் விதித்தார்.

    பின்னர், எலான் மஸ்க் வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 8 ஆயிரம் பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 800 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 400 பதிவுகளையும் பார்க்க முடியும் என்று தெரிவித்தார். இந்த எண்ணிக்கையையும் எலான் மஸ்க் மீண்டும் மாற்றினார். தற்போது வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 10 ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாதவர்கள் தினமும் ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 500 பதிவுகளை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ ஜூலை 1ம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாட்டுக்கு ஆதரவுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " டுவிட்டர் போன்ற ஒரு பணியைக் கொண்டிருக்கும் போது தளத்தை வலுப்படுத்த பெரிய நகர்வுகளை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையானது தரவு ஸ்கிராப்பிங் மற்றும் சிஸ்டம் கையாளுதலின் "தீவிர நிலைகளை" ஊக்கப்படுத்துகிறது.

    எங்கள் பயனர் தளத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, எங்கள் தளத்திலிருந்து ஸ்பேம் மற்றும் போட்களை அகற்ற தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

    இருப்பினும், மஸ்க் அறிவித்த சில நாட்களில், டுவிட்டர் பயனர்கள் வரம்பை எட்டிய பிறகு, கார்ப்பரேட் விளம்பரதாரர்களின் பக்கங்கள் உட்பட எந்த டுவீட்களையும் பார்க்க முடியவில்லை என்பதைக் காட்டும் ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டனர். விளம்பரதாரர்களை ஈர்க்கும் யாக்கரினோவின் முயற்சிகளை இது குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று சந்தைப்படுத்தல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

    • தேவாலயத்தில் அருட் தந்தைக்கு மாறாக சாட்ஜிபிடி உதவியுடன் இயங்கும் ஒரு எந்திரத்தால் இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • திருமண விழாவை நடத்தி விட்டு முடிவில் நிறைவு திருப்பலியுடன் திருமண விழாவை முடித்து வைத்தது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி பல துறைகளிலும் விரிவடைந்து வருகிறது. அந்த வகையில் ஓபன்ஏஐ-ன் சாட்ஜிபிடி உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் நாம் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு பதில்களை கொடுக்கும் ஒரு விரிவான மொழி கருவியாகும்.

    இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ரீஸ் வீஞ்ச்-டெய்டன் ட்ரூட் ஜோடிக்கு கடந்த வாரம் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்தது. வழக்கமான திருமணங்களை போல் அல்லாமல், தேவாலயத்தில் அருட் தந்தைக்கு மாறாக சாட்ஜிபிடி உதவியுடன் இயங்கும் ஒரு எந்திரத்தால் இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

    எந்திரம் வரவேற்புரையை நிகழ்த்தி திருமண விழாவை நடத்தி விட்டு முடிவில் நிறைவு திருப்பலியுடன் திருமண விழாவை முடித்து வைத்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெரிஃபைடு பெற்றிருந்தால் மட்டுமே டுவீட்டெக்கை பயன்படுத்த முடியும்
    • ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதிவுகளைத்தான் படிக்க முடியும் என சில நாட்களுக்கு முன் அறிவிப்பு

    உலகின் நம்பர் ஒன் கோடீசுவரரான எலான் மஸ்க் நடத்தி வரும் சமூக வலைதள நிறுவனம் டுவிட்டர் (Twitter). இதற்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கின்றனர். பயனர்களுக்கு ஒரு தங்குதடையற்ற சேவை வழங்கும் அதே நேரத்தில் அந்நிறுவனத்தை லாபகரமாக நடத்தவும் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்.

    இதில் ஒன்றாக டுவிட்டர் வலைதளத்தில் உள்ள டுவீட்டெக் (TweetDeck) வசதியை பயன்படுத்த வேண்டுமென்றால், இனி பயனர்கள் வெரிஃபைடு (Verified) அதாவது சரிபார்க்கப்பட்டவர்கள்- எனும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். இந்த நடைமுறை இன்னும் 30 நாட்களில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டுவீட்டெக் பழைய பதிவுகளை எளிதாக பார்ப்பது உட்பட பலவிதமான எளிதான படிக்கும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. தற்போது புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட டுவீட்டெக்கை பயன்படுத்தி வெரிஃபைடு அவசியம் என்ற நிலையில், பயனர்களிடம் கட்டணம் வசூலிக்குமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    வணிக நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள், டுவிட்டரின் உள்ளடக்கத்தை எளிதாக கண்காணிக்க டுவீட்டெக் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால், இது டுவிட்டர் நிறுவனத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தரும். டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து விளம்பர வருவாய்க்கு மிகவும் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    டுவிட்டரை வாங்கியதும் வெரிஃபைடு பெறுவதற்கு கட்டணம் வசூலித்தது. சரிபார்க்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பதிவுகளைத்தான் படிக்க முடியும் என்று சில நாட்களுக்கு முன்புதான் டுவிட்டர் அறிவித்திருந்தது. இந்த நிலையில் டுவீட்டெக்கில் அடுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

    • அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
    • அமெரிக்கர்கள் சீனாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    வாஷிங்டன்:

    சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனையில் தவறான தடுப்பு காவலில் வைக்கப்படும் அபாயம் இருப்பதால் அமெரிக்கர்கள் சீனாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் சீன பயணத்தை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    • இரு குழந்தைகள் உள்பட பலர் மீது துப்பாக்கிச்சூடு
    • முதற்கட்ட விசாரணையில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்

    அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மாநிலத்தின் பெரிய நகரம் பிலடெல்பியா. அங்கு நேற்று மாலை நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பலர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என கூறியுள்ள பிலடெல்பியா காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அடையாளங்களோ அல்லது வேறு கூடுதல் விவரங்களோ எதுவும் வெளியிடவில்லை.

    உள்ளூர் நேரப்படி, நேற்றிரவு இரவு 08:30 மணியளவில் பிலடெல்பியாவின் கிங்ஸெஸிங் சுற்றுவட்டாரத்தில் உள்ள வாரிங்டன் அவென்யூவில் உள்ள 5700-வது பிளாக்கில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    குறைந்தது 8 பேர் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களின் நிலை குறித்தும் எந்த தகவலும் இல்லை. பாதிக்கப்பட்ட 6 பேர் பென் பிரெஸ்பிடேரியன் மருத்துவ மையத்திற்கும், 2 பேர் பிலடெல்பியாவின் குழந்தைகள் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பலியான 4 பேரின் உடல்கள் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாக மற்றுமொரு செய்தி தெரிவிக்கிறது.

    இச்சம்பவம் குறித்து காவல்துறை செய்தித்தொடர்பாளர் மிகெல் டோரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் ஃப்ரேஸியர் (South Frazier) தெருவில் உள்ள 1600-வது பிளாக்கிற்குப் பின்னால் உள்ள சந்துப் பாதையில், அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய ஒரு நபரை காவலில் எடுத்து அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் கூடுதல் வெடிமருந்துகள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர் என தெரிவித்தார்.

    உள்ளூர் செய்திகளின்படி, சுடப்பட்டவர்களில் குறைந்தது 2 சிறுவர்களும் அடங்குவர்.

    துப்பாக்கி வன்முறை ஆவணக்காப்பகம் (Gun Violence Archive) அளிக்கும் தகவல்கள்படி, 4 நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் மட்டுமே இந்த ஆண்டு இதுவரை அமெரிக்காவில் குறைந்தது 339 முறை நடந்திருக்கிறது.

    இதுகுறித்து டுவிட்டரில் பிலடெல்பியா மேயர் ஜிம் கென்னி, "தென்மேற்கு பிலடெல்பியாவில் நடைபெற்றிருக்கும் துப்பாக்கிச் சூடு குறித்த செய்தி திகிலூட்டுகிறது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயம்அடைந்தவர்களின் குடும்பத்தினருடன் என் இதயம் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன். இந்த அபாயகரமான வன்முறை நிறுத்தப்பட வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

    இதற்கிடையில், கைது நடவடிக்கையின்போது தங்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். சமீபகாலமாக அதிகரித்து வரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்கர்களிடையே பெரும் கவலையை தோற்றுவித்திருக்கிறது.

    • இந்திய வம்சாவளியான அபிஜித் தாஸ் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார்.
    • கடந்த 2021-ம் ஆண்டு அபிஜித் தாஸ் அமெரிக்காவின் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வடக்கு அண்டோவர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் தாஸ் (வயது 50). இந்திய வம்சாவளியான இவர் அங்கு வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர் சிலரிடம் பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்தநிலையில் இவர் தன்னிடம் வழக்கு தாக்கல் செய்ய வந்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து 2.7 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.40 கோடி) தனது வங்கி கணக்கு மாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து அபிஜித்தை போலீசார் கைது செய்தனர். பண மோசடி குற்றச்சாட்டில் சிக்கி உள்ளதால் இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.2 கோடி அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரசார விதிகளை மீறுதல், தவறான அறிக்கை தாக்கல் செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தீயணைப்பு துறை விரைந்து செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
    • அமெரிக்க வெளியுறவுத்துறை கடும் கண்டம் தெரிவித்துள்ளது

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்தை காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் தீவைத்து எரித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்க விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த சம்பவத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2-ந்தேதி நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக சட்டம் நிறைவேற்றம்.
    • சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதியை மீண்டும் விண்வெளிக்கு திருப்புதல் உள்ளிட்ட வழிமுறைகள் குறித்து ஆராயப்படுகிறது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், "காலநிலை மாற்றங்களிலிருந்து நமது பூமியை காப்பாற்ற சூரிய ஒளியை எவ்வாறு தடுப்பது" என்பது குறித்து ஆராய்வதற்கு, ஒப்புதல் அளித்திருக்கிறது.

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை அலுவலகம், சூரிய புவி-பொறியியல் குறித்த அறிக்கையை வெள்ளை மாளிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், புவி வெப்பமடைதலை விரைவுபடுத்துவது சூரியக் கதிர்கள்தான் என்பதால், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளை ஒரு குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சூரிய புவி பொறியியல் ஆராய்ச்சி குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக 2022ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இத்தகைய ஆராய்ச்சிகள் குறித்து அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    பூமியின் சிக்கலான அமைப்புகள் குறித்து வளர்ந்து வரும் புரிதலின் அடிப்படையில், இவற்றினால் ஏற்படப்போகும் நன்மைகள் மற்றும் அபாயங்கள் ஆகியவற்றை தெரிந்துகொள்ள ஒரு ஆராய்ச்சிக்கான தேவை இருக்கிறது. சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதியை மீண்டும் விண்வெளிக்கு திருப்புதல், சூரிய கதிர்களை பிரதிபலிக்கும் வகையில் கடல் மேகங்களை பிரகாசமாக்குதல், சிரஸ் மேக ஆய்வு போன்ற வழிமுறைகள் குறித்து ஆராயப்படுகிறது.

    இந்த ஆராய்ச்சியானது, தொழில்நுட்பங்களை காட்டிலும், 'சூரிய கதிர்வீச்சு மாற்றியமைத்தல் முறைகள்' (Solar Radiation Modification) ஏற்படுத்தப்போகும் தாக்கங்களைப் பற்றிய ஒரு புரிதலை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. இதன் பெரும்பகுதி அடிப்படை காலநிலை செயல்முறைகள் மற்றும் "மனித கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகள்" (Human Greenhouse Gas Emissions) ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறித்தும், காலநிலைக் கொள்கையின் ஒரு அங்கமாக சூரிய கதிர்வீச்சு மாற்றியமைத்தல் முறைகள் விளைவிக்கக் கூடிய அபாயங்கள் மற்றும் நன்மைகள் ஆகியவற்றை குறித்தும் சிறந்த முடிவுகளை செயல்படுத்த வழிவகுக்கும்.

    வரும் காலங்களில், பொது அல்லது தனியார் நிறுவனங்களால் இந்த வழிமுறை (SRM) பயன்படுத்தப்படுவதற்கு அமெரிக்காவை தயார்படுத்தவும் உதவும். இதன் மூலம் சில வருட காலங்களுக்கு நமது கிரகமான பூமியை கணிசமாக குளிர்விக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அந்த ஆய்வறிக்கை தெரிவித்திருக்கிறது.

    ×