என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்து சென்ற விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
    • மணிப்பூர் கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தூதர் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. 140க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு 300 பேருக்கும் மேல் காயமடைந்த இக்கலவரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது.

    இந்த கலவரத்தை அடக்கி, மணிப்பூரில் அமைதி திரும்பு நடவடிக்கைகளை எடுக்க ஆளும் பா.ஜ.க. முதல்வர் தவறி விட்டதாகவும், பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நிலைமையை சரியாக கையாளவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது.

    இந்நிலையில் மே மாதம் மணிப்பூரில் ஒரு சம்பவம் நடந்ததாக வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. நாட்டையே அதிர வைத்த இந்த வீடியோ காட்சிகளில் ஒரு இனத்தை சேர்ந்த ஆண்கள் கும்பல், மற்றொரு இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்து செல்கின்றனர். பிறகு அந்த பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர வைத்திருக்கும் இந்த சம்பவம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

    மணிப்பூர் கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை. இப்போதுதான் அது குறித்து கேள்விப்படுகிறேன். அக்கம்பக்கத்திலோ, உலகெங்கும் உள்ள நாடுகளிலோ அல்லது அமெரிக்காவிலோ, மனிதர்கள் துன்பப்படும்போதெல்லாம் எங்கள் இதயம் நொறுங்குகிறது. இந்த தருணத்தில் இந்திய மக்களின் துயரத்தையும் மனவேதனையையும் உணர்ந்து நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவின் 140 கோடி மக்களையும் இந்த சம்பவம் வெட்கப்பட வைத்திருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

    • 90 வயதிலும் ஜிம்முக்கு செல்லும் பாடிபில்டர் அமெரிக்காவில் உள்ளார்.
    • நான் ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்க விரும்பினேன்.

    இளைஞர்கள் தங்களது உடலை வலுவாக்க ஜிம்முக்கு செல்வார்கள். அதுவும் குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு தொடர்ந்து ஜிம்முக்கு செல்பவர்கள் ஒரு சிலர் மட்டும் தான். ஆனால் 90 வயதிலும் ஜிம்முக்கு செல்லும் பாடிபில்டர் அமெரிக்காவில் உள்ளார். அவரது பெயர் ஜிம் ஆரிங்டன்.

    இவர் தனது உடலை கட்டுமஸ்தாக வைப்பதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று வருகிறார். மேலும் தற்போதும் பாடிபில்டர் போட்டிகளில் பங்கேற்கிறார். சமீபத்தில் நடந்த ஒரு போட்டியில் பங்கேற்ற இவர் 70 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் 3-வது இடத்தையும், 80 வயதுக்கு மேற்பட்டவருக்கான பிரிவில் முதல் இடத்தையும் பிடித்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்கள் உடல்நலம் குறித்த ஒரு இதழுக்காக நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து ஜிம் ஆரிங்டன் கூறுகையில், நான் பிறக்கும் போது எடை குறைவாக இருந்ததாகவும், ஆரோக்கியமற்ற நிலையில் பிறந்ததாகவும் எனது பெற்றோர் கூறினர். இதனால் அடிக்கடி நோய்வாய்பட்ட என்னை காப்பாற்ற எனது பெற்றோர் மிகவும் போராடி உள்ளனர். எனது 15 வயதில் ஜிம்முக்கு செல்ல தொடங்கினேன். அப்போது நான் ஒரு சூப்பர் ஹீரோவாக இருக்க விரும்பினேன். அற்புதமான உடல் அமைப்பு இருந்தால் மட்டுமே அதை உருவாக்க முடியும் என்பதால் தொடர்ந்து ஜிம்முக்கு சென்றேன் என்றார்.

    • பொருளாதார மந்த நிலைக்கிடையே சுட்டெரிக்கும் வெயில்
    • சராசரி குடும்பத்தினர் 32 ஆயிரம் ரூபாய் மினகட்டணம் செலுத்த வேண்டியுள்ளது

    இந்தியாவில் வீடுகளில் ஏர் கண்டிஷனர்களை நிறுவி பயன்படுத்துவது பணக்காரர்களுக்கும், உயர் நடுத்தர மக்களுக்கும் மட்டுமே முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. ஏசி வாங்க முடிந்தாலும், அதனை பராமரிக்கும் செலவும், மின்கட்டணமும் மிக அதிகம் என்பதால் பல நடுத்தர மக்கள் மின்விசிறியை கொண்டே கோடை வெயிலை சமாளித்து வருகின்றனர்.

    மிகவும் பணக்கார நாடு என கருதப்படும் அமெரிக்காவில் நிலைமை இன்னும் மோசம் என தெரிய வந்துள்ளது. மந்தமாகும் பொருளாதாரம், அதிகரிக்கும் வேலையின்மை, மற்றும் திடீரென நடக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுடன் கடும் வெப்ப அலையும் அமெரிக்கர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரியாகி விட்டது.

    ஐரோப்பாவை போன்றே அமெரிக்காவிலும் வெப்ப அலை கடுமையாக வீசுகிறது. அமெரிக்காவில் பலர், வெப்பம் காரணமாக முன்பகலுக்கு பிறகு தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாகியுள்ளது.

    டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா, நியூ மெக்ஸிகோ மற்றும் புளோரிடா போன்ற மாநிலங்களில் வசிப்பவர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது தங்கள் பகுதிகளில் வெப்பநிலை மிகவும் அதிகரித்திருப்பதாகவும், வீடுகளில் ஏசி இல்லாமல் வசிக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.

    அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் தரவுகளின்படி, 2020-ல் கிட்டத்தட்ட 90 சதவீத அமெரிக்க குடும்பங்கள் ஏ.சி.-யை பயன்படுத்தின.

    அதே சமயம், அமெரிக்காவில் வீடுகளில் ஏசியை நிறுவுவதற்கு மிகவும் பொருட்செலவு ஆகிறது. இதை தவிர ஏசியை பராமரிக்கும் செலவு, பழுதுபார்ப்பதற்கும் ஆகும் செலவு, குறைந்தபட்ச சேவைக்கட்டணங்கள், கோளாறை சரிபார்க்க வரும் மெக்கானிக்குகளின் சம்பளம், உதிரிபாகங்களின் செலவு என அனைத்தும் அங்கு பன்மடங்காக உயர்ந்துள்ளது.

    இதனால் அமெரிக்க மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

    சூரிய ஒளி மின்சாரத்திற்காக 'சோலார் பேனல்'களை நிறுவிய ஒரு சிலர் மட்டும் ஏ.சி. வசதிக்கு ஆகும் செலவை சமாளிக்கின்றனர்.

    தவிர ஏசி பயன்படுத்தலுக்கான மின்சார கட்டணமும் அங்கு மிக அதிகமாகிவிட்டது. ஒரு குடும்பம் வசிக்கும் வீட்டிற்கே மாதம் சுமார் ரூ.32,000 ஆகிறது. இது தாக்குபிடிக்க கூடிய செலவில்லை என்றாலும் ஏசி இல்லாமல் வாழ்வதும் முடியவில்லை என்பதால் நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என அமெரிக்க மக்கள் குழம்புகின்றனர்.

    • ஏரி, குளம், போன்றவற்றில் வாழும் அமீபா மூலம் இந்த நோய் பரவும்.
    • நோயில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் விழிப்புணர்வு டன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மூளையை தின்னும் அரிய வகை நோயான அமீபா நோய் பரவி வருகிறது. நெல்லேரியா பவுலேரி என்ற தொற்று மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் நேரடியாக மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகளை நேரடியாக தாக்கும். இதனால் உயிர் இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஏரி, குளம், போன்றவற்றில் வாழும் அமீபா மூலம் இந்த நோய் பரவும். அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் போது மூக்கு வழியாக அமீபா உடலுக்குள் சென்று விடும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, தூக்கமின்மை, கடுமையான தலைவலி, சுவையில் மாற்றம், கழுத்து வலி, மாறுபட்ட மனநிலை போன்றவை ஏற்படும்.

    இந்த நோயால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட நிவேடா என்ற பகுதியை சேர்ந்த உட்ரோ டர்னர் என்ற 2 வயது சிறுவன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால் அங்கு அவன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தான். இதுதொடர்பாக அவனது தாய் பிரியனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் வெளியிட்டு உள்ளார். கடந்த 7 நாட்களாக அமீபா நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், தனது மகன் தான் எனக்கு ஹீரோ என்றும் உருக்கமாக அவர் தெரிவித்து உள்ளார். இந்த நோயில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • சுஸ்ருன்னியாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்று விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    இந்தியாவை சேர்ந்தவர் சுஸ்ருன்னியா. இவர் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தகவல் தொழில் நுட்பம் படித்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும் அவர் இன்டர்ன்ஷிப் பயிற்சி எடுத்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் ஜான்ஜசிண்டோ நினைவு இடத்தை பார்வையிட சென்றார். அப்போது அவரை திடீரென மின்னல் தாக்கியது. இதனால் அவர் அருகில் உள்ள குளத்தில் விழுந்தார். இதை பார்த்தவர்கள் சுஸ்ருன்னியாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மின்னல் தாக்கியதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மூளை பாதிக்கப்பட்டது. இதில் அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்று விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவி கோமாவில் இருக்கும் தகவல் கிடைத்து இந்தியாவில் இருக்கும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    • எதிர்தாக்குதலில் உக்ரைன் முன்னேற அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகள் வழங்கியது
    • ரஷியாவும் பரஸ்பர தாக்குதல் நடத்துவோம் என ஏற்கனவே தெரிவித்திருந்தது

    ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் தனது ராணுவ படையால் ஆக்ரமித்தது. இதற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் வீடுகளும், கட்டிடங்களும் சேதமடைந்து பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    500 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெறும் இந்த போர் இந்த ரஷிய- உக்ரைன் போர் தற்போது 513-வது நாளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ராணுவ ரீதியாக பலம் வாய்ந்த ரஷியாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகள் (cluster bombs) எனும் பெருஞ்சேதம் விளைவிக்கும் வெடிகுண்டுகளை வழங்கியது.

    இந்நிலையில் கொத்து வெடிகுண்டுகளை சரியான முறையில் உக்ரைன் பிரயோகப்படுத்துவதாகவும், இது நல்ல பலனை தந்து வருவதாகவும், இதனால் ரஷியாவின் ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் முன்னேற முடிவதாகவும் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

    இந்த ரஷிய- உக்ரைன் போரில் கொத்து வெடிகுண்டுகளை வீசுவதாக பரஸ்பர குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

    பெரிய அளவில் நாசத்தை உண்டாக்க கூடிய இந்த வெடிகுண்டுகளை ரஷிய ராணுவ வீரர்கள் குவிகின்ற இடங்களில் மட்டுமே பயன்படுத்துவோம் என உக்ரைன் தெரிவித்திருந்தது.

    உலகில் 120 நாடுகளுக்கும் மேல் தடை செய்யப்பட்ட இந்த கொத்து வெடிகுண்டுகள், வெடிக்கும்போது சிறு சிறு குண்டுகளை ஒரு பெரிய பரப்பளவில் வீசி சேதத்தை ஏற்படுத்தும். இதில் ஒரு சில குண்டுகள் வெடிக்காமல் போகலாம். அவை பல தசாப்தங்களுக்கு அப்பகுதியில் ஆபத்தை உண்டாக்கும்.

    மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் இரு நாடுகளும் அப்பாவி பொதுமக்களை அழிக்கும் இத்தகைய ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது.

    கிளஸ்டர் குண்டுகளின் (கொத்து வெடிகுண்டு) பயன்பாட்டில் எந்த சர்வதேச சட்டமீறலும் இல்லை. ஆனால், பொதுமக்களுக்கு எதிராக அவற்றை பயன்படுத்துவது ஒரு சட்டமீறலாக மாறலாம். 120-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து இந்த வெடிகுண்டுகளை பயன்படுத்துவதைத் தடைசெய்யும் மாநாட்டில் கையொப்பமிட்டன.

    அந்த நாடுகள், "இந்த வெடிகுண்டுகளை உற்பத்தி செய்யவோ, பயன்படுத்தவோ, வினியோகிக்கவோ, அல்லது எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கவோ மாட்டோம்" என உறுதியெடுத்தது. மேலும் தங்களின் இருப்பில் உள்ளவற்றை அழிக்கவும் ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    கொத்துகுண்டு விவகாரத்தில் ''எங்களிடம் போதுமான கையிருப்பு உள்ளது. உக்ரைன் பயன்படுத்தினால், பரஸ்பர தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது'' என ரஷியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், கிர்கிஸ்தான் நிறுவனங்கள் மீது தடை
    • ஏற்றுமதியாளர்கள் மீதும் பொருளாதார தடை விதித்துள்ளது

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நாளில் இருந்து அமெரிக்கா பல்வேறு தடையை ரஷியா மீது அமல்படுத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

    மேலும், உக்ரைன் பதிலடி கொடுக்க பில்லியன் கணக்கில் ராணுவ உதவிகளும் செய்து வருகிறது. இருந்தாலும் ரஷியா போரை நிறுத்துவதுபோல் தெரியவில்லை. வருவாய், ராணுவ உதவிகள் எங்கிருந்து வருகிறதோ, அந்த இடத்தையெல்லாம் முடக்கி, ரஷியாவிற்கு மூச்சுச் திணறலை கொடுக்க அமெரிக்கா முயற்சி செய்துள்ளது.

    அந்த வகையில் ரஷியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், கிர்கிஸ்தான் வரை பல்வேறு நாடுகளில் உள்ள 120 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்துள்ளது.

    ரஷிய சுரங்கம், தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைவிதித்துள்ளது. கிர்கிஸ்தானில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நபர்கள் மீதும் இந்த பொருளாதார தடை பாய்ந்துள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாக கொண்ட பொறியியல் கம்பெனி ரஷியாவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தது. இந்த நிறுவனத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மே மாதம் ஜப்பானில் அமெரிக்கா மற்றும் ஏழு நடுகள் இடையிலான மாநாடு நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆஸ்திரேலியா பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பொருளாதார தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    உக்ரைன் மீது முழு அளவில் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவுக்கு பொருளாதார அளவில் நெருக்கடி கொடுப்பதற்கும், சட்டவிரோத போரை ஆதரிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பொறுப்புகளை மேம்படுத்துவதற்கும் இந்த எதிர்பாராத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.

    உக்ரைனுக்கு எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு காலம் துணை நிற்போம்'' என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

    • தங்கள் குழந்தை பட்ட அவஸ்தைக்கு நிவாரணம் கேட்டு மெக்டொனால்டு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
    • மெக்டொனால்டு நிறுவனம் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு.

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிலானா-ஹம்பர்டோ தம்பதியர் சிக்கன் நக்கெட்ஸ் பார்சல் வாங்கி உள்ளனர். பார்சலை பெற்றுக்கொண்டு காருக்கு சென்ற அவர்கள் இருக்கையில் வைத்துள்ளனர். அதில் ஒரு சிக்கன் நக்கெட்ஸ் துண்டு இருக்கையில் சிக்கியிருக்கிறது. அதன்மீது அவர்களின் 4 வயது குழந்தை ஒலிவியாவின் கால் பட்டதால் குழந்தையின் கால் வெந்துள்ளது.

    குழந்தை வலியால் துடித்ததால் பெற்றோர் மிகவும் வேதனை அடைந்தனர். அத்துடன் சூடான சிக்கன் நக்கெட்டை சரியாக பார்சல் செய்து வழங்காத மெக்டொனால்டு நிறுவனத்தின் மீது அவர்களுக்கு கோபம் ஏற்பட்டது. தங்கள் குழந்தை பட்ட அவஸ்தைக்கு நிவாரணம் கேட்டு மெக்டொனால்டு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    விசாரணையின்போது மெக்டொனால்டு நிறுவனம் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் இந்த சம்பவம் நடந்ததாகவும், 1.5 கோடி டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால் எந்த தவறும் செய்யவில்லை என நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

    கடந்த 4 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கின் வாதங்கள் சமீபத்தில் நிறைவடைந்தது. விசாரணையின் முடிவில், மெக்டொனால்டு நிறுவனம், பாக்கெட்டில் சரியான எச்சரிக்கை வாசகத்தை அச்சிடாததும், பாதுகாப்பற்ற முறையில் உணவை கொடுத்ததும் குழந்தையின் காயத்திற்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 8 லட்சம் டாலர் இழப்பீடாக வழங்க வேண்டும் என மெக்டொனால்டு நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், இனி நக்கெட்சை பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    • அந்த பெண் மகனின் புகைப்படங்கள் மற்றும் அவன் இருக்கப் போகும் சரியான இடத்தை வலைதளத்தில் சமர்ப்பித்துள்ளார்.
    • கூலிக்கு கொலை செய்யும் கொலையாளியாக காட்டி கொண்ட ஒரு புலனாய்வாளர் விசாரணை நடத்தி கண்டுபிடித்துள்ளார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் தனது 3 வயது மகனை கொல்ல ஒரு வாடகை கொலையாளியை தேடி வந்துள்ளார். இதற்காக ஒரு வலைதளத்தில் கூலிக்கு ஆள் தேடியுள்ளார்.

    ஆனால் அந்த வலைதளம் வேடிக்கைக்காக உருவாக்கப்பட்டது என்றும் இது போன்ற கோரிக்கைகள் உண்மையிலேயே வந்தால் அந்த வலைதளத்தை நடத்துபவர்கள், காவல்துறையினரிடம் தகவல்களை அளித்து விடுவார்கள் என்றும் அப்பெண்ணுக்கு தெரியவில்லை.

    வார இறுதிக்குள் தனது மகனை கொல்ல வேண்டும் என்றும் அதற்காக கூலிக்கு ஒரு கொலைகாரன் வேண்டும் என அந்த வலைதளத்தில் தேடி வந்துள்ளார். மேலும் அவர் தனது மகனின் புகைப்படங்களையும் அவன் இருக்கப் போகும் சரியான இடத்தையும் அந்த வலைதளத்தில் சமர்ப்பித்துள்ளார்.

    உடனே அந்த இணையதளத்தின் ஆபரேட்டர்கள், காவல்துறையினரிடம் தெரிவித்தனர். காவல்துறையினர், இணையதளத்தில் கோரிக்கை வைக்க பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரியை (IP address) ஆய்வு செய்தனர். கோரிக்கை வைத்த அந்த பெண்ணும் அதே கணினியை பயன்படுத்துவதை உறுதி செய்து கொண்டனர்.

    இதற்கு பிறகு தன்னை கூலிக்கு கொலை செய்யும் கொலையாளியாக காட்டி கொண்ட ஒரு புலனாய்வாளர், அப்பெண்ணைத் தொடர்பு கொண்டார். ரூ.2,40,000க்கு ($3,000) கொலை செய்ய அவர் ஒப்புக்கொள்வதாக அப்பெண்ணிடம் நடித்துள்ளார். இதன் மூலம் குற்ற முயற்சியை உறுதி செய்து கொண்ட காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சிக்கான கோரிக்கை விடுத்தல் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை சட்டத்திற்கு புறம்பான வழியில் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.12,00,000 ($15,000) பிணையம் செலுத்தவும் அவரது குழந்தையிடமிருந்து விலகி இருக்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அச்சிறுவன் தற்போது பாதுகாப்பாக உறவினர்களுடன் இருக்கின்றான்.

    அப்பெண் எதற்காக தன் மகனையே கொலை செய்ய முற்பட்டார்? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 

    • பூங்காவில் ஏற்பட்ட சிறிய சண்டை ஆசிட் வீசும் அளவிற்கு சென்றுள்ளது
    • தாய் கொடுத்த ஆசிட்டை சிறுமி மற்றொரு சிறுமி மீது வீசியுள்ளார்

    அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள டெட்ராய்ட் நகரில் அதிர்ச்சி தரும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள வெர்னர் ஆரம்பநிலை பள்ளி மைதானத்தில் குழந்தைகளின் சண்டையின்போது 12-வயது சிறுமி மற்றொரு 11-வயதான சிறுமியின் மீது ஆசிட் ஊற்றியுள்ளார்.

    ஜூலை 9-ம்தேதி டியரா சம்மர்ஸ் எனும் 11 வயது சிறுமி தன் இளைய சகோதரிகளுடனும், உறவுக்கார சிறுமிகளுடனும் பூங்காவில் விளையாடி கொண்டிருந்திருக்கிறாள். அப்போது, அவளை விட மூத்த ஒரு அடையாளம் தெரியாத சிறுமிக்கும், டியராவின் உறவுக்கார சிறுமி ஒருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    அந்த அடையாளம் தெரியாத சிறுமிக்கு ஆயுதமாக அவள் தாயாரே திராவகத்தை கொண்டு வந்துள்ளார். அப்போது டியராவும் அவளுடன் வந்தவர்களும் புறப்பட்டு சென்று விட்டனர். ஆனால், தனது பர்ஸை பூங்காவில் தவற விட்டதால் அதனை எடுக்க டியரா மீண்டும் பூங்காவிற்கு திரும்பி வர நேர்ந்தது. அப்போது அந்த அடையாளம் தெரியாத சிறுமி டியரா மீது ஆசிட் வீசியுள்ளார்.

    இதில் டியராவிற்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை காயங்கள் உண்டாகியது. இதில் அவரின் கைகள், கால்கள் மற்றும் முதுகுப்புறம் ஆகியவற்றில் கடுமையான காயங்கள் ஏற்பட்டது.

    ''வீசப்பட்ட 2 நிமிடங்களில் எரிய ஆரம்பித்தது. நான் அலறி அழுதேன்'' என டியரா தெரிவித்தார்.

    திராவகம் வீசிய அந்த 12 வயது சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிந்தே ஒரு நடவடிக்கையில் ஈடுபடும் பெருங்குற்ற பிரிவில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். சுமார் ரூ.8,00,000 ($10,000) பிணையில் அவர் வெளியே வந்துள்ளார். மீண்டும் ஆகஸ்ட் 1 அன்று ஆஜர்படுத்தப்படுவார்.

    டியராவின் மருத்துவ செலவிற்காக "கோ ஃப்ண்ட் மீ" சமூக வலைதளத்தில் நிதியுதவி கோரியுள்ள அவளின் பாட்டி டெப்ரா கோல்ஸ்டன் இதுகுறித்து கூறுகையில், "டியராவிற்கு முதுகிலிருந்து கீழ்பகுதி வரை கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் நல மருத்துவமனையில் அவள் 4 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றாள். அவள் உயிருடன் இருப்பதே அதிசயம். அவள் உடல்நிலை சரியாகும் வரை அவளுக்கு நீண்டகால சிகிச்சை தேவைப்படுகிறது" என தெரிவித்தார்.

    • டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் கலவரத்தில் ஈடுபட்டதில் 7 பேர் பலியாகினர்.
    • கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் பதிவிட்டிருக்கிறார்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் முன்னோடி வேட்பாளராக உள்ளார். ஆனால் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.

    அதில் முக்கியமான வழக்கு, கேபிடால் கலவர வழக்கு. அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் டிரம்ப் தோல்வியை ஏற்காமல் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டினார். இந்த சூழ்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக 2021ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் (கேபிடால் கட்டிடம்) புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 7 பேர் பலியாகினர்.

    டிரம்ப் ஆதரவாளர்களின் கிளர்ச்சியால் 7 பேர் இறந்ததாக செனட் அறிக்கை உறுதி செய்தது. கிளர்ச்சியைத் தூண்டியதற்காக டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் செனட் சபையால் விடுவிக்கப்பட்டார். எனினும், பாராளுமன்ற கட்டிடத்தில் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பான கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுவருகிறார்.

    இவ்வழக்கில் டிரம்ப், உத்தியோகபூர்வ நடவடிக்கைக்கு இடையூறு செய்தது, அரசாங்கத்தை ஏமாற்ற சதி செய்தது மற்றும் கிளர்ச்சியைத் தூண்டுயது ஆகிய 3 முக்கிய பிரிவுகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

    இந்நிலையில் டிரூத் சோஷியல் (Truth Social) எனப்படும் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் "ஜோ பைடனின் நீதித்துறையின் வழக்கறிஞர் ஜாக் ஸ்மித், ஜனவரி 6 ஆம் தேதி வழக்கின் விசாரணைக்கு நான் ஒரு "இலக்கு" என்பதால் விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள். அனேகமாக இது என் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கலையும், என்னை கைது செய்யும் நடவடிக்கையையும் குறிக்கலாம்" என டிரம்ப் பதிவிட்டிருக்கிறார்.

    மேலும் இது குறித்து ஒரு பேட்டியில் "என்னை இந்த நடவடிக்கை தொந்தரவு செய்கிறது. ஆனால் நான் பயப்படவில்லை. அவர்கள் மக்களை இழிவுபடுத்தவும், பயமுறுத்தவும் முயற்சிக்கிறார்கள். நாங்கள் அமெரிக்காவை மீண்டும் பெரிதாக மாற்றப் போகிறோம். சொல்வதற்கு அவ்வளவுதான் உள்ளது." என்று தெரிவித்தார்.

    வரும் நாட்களில அவரின் அரசியல் எதிர்காலம் எந்த திசையில் செல்லும் என்பதை இந்த வழக்கின் போக்கு முடிவு செய்யும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • கஞ்சா மற்றும் கஞ்சாவை புகைக்க பயன்படுத்தப்படும் கருவிகள் இருந்தது.
    • இருவருக்கும் தலா ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஜிகி ஹடிட், தனது நண்பர்களுடன் கேமன் தீவுகளுக்கு தனியார் விமானம் மூலம் சென்றார். ஓவன் ராபர்ட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஜிகி ஹடிட் மற்றும் நண்பர்களின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில் கஞ்சா மற்றும் கஞ்சாவை புகைக்க பயன்படுத்தப்படும் கருவிகள் இருந்தது. இதையடுத்து ஜிகி ஹடிட்டும், அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜராகி தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

    இருவருக்கும் தலா ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கிடையே ஜிகி ஹடிட் சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது. நன்றாகவே முடிந்தது என்று பதிவிட்டுள்ளார்.

    ×