என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • பெற்றோர் உணவு அளிக்காமல் அறையில் பூட்டி வைத்துள்ளனர்
    • 2-வது மாடியில் இருந்து குதித்து அருகில் உள்ள கடையில் தஞ்சம் அடைந்துள்ளார்

    பசிக்கு உணவளிக்காமல் தவிக்கவிட்ட பெற்றோரிடமிருந்து தப்பிக்க ஒரு 8 வயது சிறுமி, தனது பொம்மையை கையில் பிடித்தபடி இரண்டாவது மாடியில் இருந்து குதித்தார். அதன் பின்னர் உணவுக்காக அனைவரையும் கெஞ்சியிருக்கிறாள். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

    அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவின் அர்னால்ட்ஸ்பர்க் பகுதியில் வசித்து வருபவர்கள், ரியான் கீத் ஹார்ட்மேன் (33) மற்றும் எல்லியோ எம். ஹார்ட்மேன் (33) தம்பதியர்.

    இவர்கள் தங்களின் 8 வயது மகளுக்கு நீண்ட நாட்களாக குறித்த நேரத்தில் உணவளிக்காமல் இருந்திருக்கின்றனர். மேலும் அந்த சிறுமியை மாடியிலிருந்து கீழே வரவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்கவில்லை.

    இதனை பொறுத்து கொள்ள முடியாத அந்த சிறுமி, பசி தாங்க முடியாமல் தனது வீட்டின் இரண்டாம் தளத்து ஜன்னலிலிருந்து டெட்டி பியர் (Teddy Bear) பொம்மையுடன் கீழே குதித்தார். வெறும் கால்களுடன் நடந்த அச்சிறுமி அருகில் உள்ள ஃபேமிலி டாலர் கடைக்கு சென்று அங்குள்ள பணியாளர்களிடம் உண்பதற்கு ஏதேனும் உணவு கேட்டு கெஞ்சியிருக்கிறாள்.

    "என் பெற்றோருக்கு நான் தேவைப்படவில்லை. எனக்கு பசிக்கிறது. நான் சாப்பிட ஏதாவது கொடுப்பீர்களா?" என அவள் கேட்டதாக கெல்லி ஹட்சின்ஸன் எனும் அக்கடை பணியாளர் ஒருவர் கூறினார்.

    "எனக்கும் குழந்தைகள் இருக்கின்றன. அச்சிறுமி பசிக்கு உணவு கேட்டு வந்தது என் இதயத்தை உடைத்துவிட்டது. எந்த குழந்தைக்கும் 'தான் யாருக்கும் தேவைப்படவில்லை' எனும் எண்ணம் வரக்கூடாது" என்றார் சாண்ட்ரா நிக்லி எனும் இன்னொரு பணியாளர்.

    ஒரு வாரத்திற்கும் மேல் அச்சிறுமியை அறையில் வைத்து அவளின் பெற்றோர் பூட்டி வைத்து உணவு தராமல் துன்புறுத்தி வந்ததாகவும், உடன்பிறந்தவர் ஒருவர் கொடுத்த சாண்ட்விச் ஒன்றை 3 நாட்களுக்கு முன் உண்டதாகவும் அச்சிறுமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    அந்த வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கு அலமாரிகளிலும், சமையலறையிலும் மற்றும் குளிர்சாதன பெட்டியிலும் ஒரு குடும்பத்திற்கு போதுமான அளவு உணவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிகாரிகள் போதை மருந்து சம்பந்தமான பொருட்களையும் கண்டெடுத்ததாக தெரிகிறது.

    குழந்தைகள் பாதுகாப்பு சேவை அமைப்பு, அச்சிறுமியையும் மேலும் 3 குழந்தைகளையும் தங்கள் பொறுப்பில் அழைத்து சென்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள தாய், தந்தை இருவரும் தலா ரூ.80 லட்சம் பிணையில் மட்டுமே வெளியே வர முடியும்.

    • நலமாக உள்ள குழந்தை உடல்நலம் சரியில்லை எனக்கூறி மருத்துவம் பார்க்க வற்புறுத்தல்
    • ஒருவகை நோயால் மனநோய்க்கு உள்ளாகி இவ்வாறு செய்திருக்கக் கூடும்

    பல அரிய மனநல குறைபாடுகளில் ஒன்றாக கருதப்படுவது முன்சாஸன் சிண்ட்ரோம் (Munchausen's syndrome) மற்றும் அதன் ஒரு வகையான முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி (Munchausen Syndrome by proxy).

    இது ஒரு அரிய உளவியல் நடத்தை நிலை.

    முதல் வகையில் ஒருவர், இல்லாத நோய் அறிகுறிகளை தனக்குள்ளேயே கற்பனையாக உருவாக்கிக் கொண்டு, தான் நோய்வாய்பட்டதாக தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பார்.

    இரண்டாவது வகை "முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி" என்பது ஒரு குழந்தை துஷ்பிரயோக குற்றமாக கருதப்படுகிறது. இதில் ஒரு குழந்தையின் பராமரிப்பாளர் (பெரும்பாலும் தாய்) போலியான நோய் அறிகுறிகளை தன் குழந்தைக்கு இருப்பதாக கூறி அக்குழந்தை உண்மையிலேயே நோய்வாய்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆட்படுத்துவார்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசிப்பவர் 27 வயதான ஜெசிகா கேஸர். இவர் சமூக ஊடக பிரபலமானவர். இவர் தற்போது முன்சாஸன் பை பிராக்ஸி என மனநோய்க்கு உள்ளாகியிருக்கிறார்.

    டெக்சாஸ் மாநில சட்ட அமலாக்க மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி, கேஸர் தனது 3 வயது மகளுக்கு இல்லாத அரிய நோய்களை இருப்பதாக கூறி தேவையற்ற மருத்துவ நடைமுறைக்கு உட்படுத்தும்படி கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

    டார்ரன்ட் கவுன்டி ஷெரீப் அலுவலகம் தனது முகநூல் பதிவில், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜெசிகாவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

    டார்ரன்ட் கவுன்டி ஷெரீப் அலுவலகம் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

    இந்த வழக்கு இந்த அரிய மனநோய்க்கான ஒரு நல்ல உதாரணம். இது தொடர்பாக நீங்கள் ஜெசிகாவுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்தால், மைக்கேல் வெபர் எனும் காவல்துறை அதிகாரியை தொடர்பு கொள்ளவும் எனத் தெரிவித்துள்ளது.

    ஜெசிகா தனது குழந்தைக்கு பல தேவையற்ற சிகிச்சைகளை அளிக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். இந்த துஷ்பிரயோகம் எவ்வளவு காலம் தொடர்ந்தது என்பது இன்னும் உறுதியாகவில்லை.

    கேஸர் தனது குழந்தையின் உடல்நலம் குறித்த தனிப்பட்ட செய்திகள் உட்பட முகநூலில் உள்ள தனது அனைத்து தரவுகளையும் நீக்கப்போவதாக தனது நண்பருக்கு செய்திகள் அனுப்பியுள்ளார்.

    காவல்துறையினர் கடந்த வாரம் ரஸ்க் கவுண்டியில் ஜெசிகாவை கைது செய்து டாரன்ட் கவுண்டி சிறையில் அடைத்தனர்.

    • நீர் சறுக்கு விளையாட்டின்போது திடீரென அலையில் அடித்து செல்லப்பட்டார்
    • வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் பிடித்தமான சமையல்காரராக இருந்தவர்

    8 வருடம் அமெரிக்க அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. அவரின் பதவிக்காலம் முடிவடைந்ததும், ஒபாமா அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிரபலமான மார்தா'ஸ் வைன்யார்ட் (Martha's Vineyard) எனும் தீவில் ஒரு மாளிகையை வாங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

    ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்தபோது, அவரின் தலைமை சமையல்காரராக இருந்தவர் டஃபாரி கேம்ப்பெல் (Tafari Campbell). ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததும், அவரின் இல்லத்து பிரத்யேக சமையற்கார குழுவுடன் டஃபாரியும் இணைந்து கொண்டார்.

    டஃபாரி நீரில் துடுப்பு பலகையில் நின்று சறுக்கி விளையாடும் நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபாடுடையவர்.

    நேற்று முன்தினம் ஒபாமா இல்லத்தருகில் உள்ள எட்கார்டவுன் கிரேட் பாண்ட் எனும் நீர்நிலையில், நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். திடீரென அவர் காணாமல் போனதாக அங்கு நீர் சறுக்கில் ஈடுபட்டு வந்த மற்றொரு நபர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

    அவசர குழுவினரின் நேரடி தேடுதலில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகள் மூலம் கண்டறியும் சோனார் கருவி மூலம் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இறுதியில், கரையிலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

    விபத்தின்போது ஒபாமாவும் அவரது மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான மிச்செல் ஒபாமாவும் வீட்டில் இல்லை. ஒபாமா ஜனாதிபதியாக இருந்த 8 வருட காலம் காம்ப்பெல், வெள்ளை மாளிகையில் புகழ்பெற்ற சமையல்காரராக திகழ்ந்தார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் பயிரிடப்பட்ட பொருட்களை கொண்டு ஒரு வித்தியாசமான பீர் உட்பட பல உணவு வகைகளை பிரபலப்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்துயர சம்பவம் குறித்து ஒபாமாவும் அவர் மனைவியும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் அவரை முதல்முறை சந்திக்கும் போதே மிகவும் திறமை வாய்ந்த சமையல் கலைஞராக திகழ்ந்தார். மக்களை ஒன்றிணைக்கும் ருசியான உணவுகளின் குணங்கள் மீது அவர் ஆழ்ந்த ஈடுபாடுடையவராக இருந்தார். எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே டஃபாரி இருந்தார். அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு எங்கள் இதயங்கள் உடைந்தன.

    இன்று ஒரு உண்மையான, அற்புதமான மனிதரான டஃபாரியை நன்கு அறிந்த மற்றும் நேசிக்கும் அனைவருடனும், குறிப்பாக அவரது மனைவி ஷெரிஸ் மற்றும் அவர்களது இரட்டை மகன்களான சேவியர் மற்றும் சவின், ஆகியோருடன் அவரை இழந்த துக்கத்தில் பங்கு கொள்கிறோம்.

    இவ்வாறு ஒபாமாக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒபாமா குடும்பம், 2021-ம் ஆண்டில் பாஸ்டன் செல்டிக்ஸ் கூடைப்பந்து அணியின் உரிமையாளர் விக்லிஃப் க்ரூஸ்பெக்கிடம் இருந்து மார்தா'ஸ் வைன்யார்டு தீவில், கிட்டத்தட்ட 7,000 சதுர அடி கொண்ட இந்த மாளிகையை வாங்கியது. இந்த வீடு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து ஒரு குறுகிய தடுப்பு கடற்பகுதியால் பிரிக்கப்பட்ட கடற்கரை குளத்தை ஒட்டி உள்ளது.

    • போலி பாதிரியாரை நியமித்த மோசடி செயல் உறுதியானது
    • பணியாளர்களுக்கு எதிரான பணியிட ஏமாற்றுதல்களை அரசாங்கம் பொறுத்து கொள்ளாது

    கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சேக்ரிமெண்டோ பகுதியில் உள்ள டகேரியா கரிபால்டி மெக்ஸிகன் (Taqueria Garibaldi Mexican) எனும் உணவகத்தை நடத்தும் சே கரிபால்டி (Che Garibaldi Inc.) நிறுவனத்திற்கு, உணவக ஊழியர்கள் 35 பேருக்கு சம்பள ஈடாகவும், நஷ்டஈடாகவும் ரூ.1.15 கோடி ($140,000) வழங்க அமெரிக்க தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.

    பணியிடத்தில் தாங்கள் செய்யும் குற்றங்களை பணியாளர்கள் ஒப்புக்கொள்ள ஒரு போலி பாதிரியாரை நியமித்த மோசடி செயல் உறுதியானதை தொடர்ந்து தொழிலாளர் துறை இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

    "ஒரு முதலாளி தனது ஊழியர்களுக்கு எதிராக எடுத்த மிக வெட்கமற்ற நடவடிக்கை" என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொழிலாளர் பிராந்திய வழக்கறிஞர் மார்க் பிலட்டின் இது குறித்து கூறியிருப்பதாவது:

    "டகேரியா கரிபால்டியின் ஊழியர் ஒருவர் இந்த குற்றத்தை எப்படி செய்தார் என ஒத்து கொண்டுள்ளார். பணியாளர்கள் ஏதேனும் புகாரளித்தால், அவர்களின் குடியுரிமை குறித்த பிரச்சனைகள் அரசாங்கத்தால் எழுப்பப்படும் என்று ஒரு மேலாளர் அவர்களை மிரட்டியிருக்கிறார். தொழிலாளர்களை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் வைக்கவும், விசாரணைகளை தடுக்கவும் மற்றும் வழங்கப்படாத ஊதியத்தை பணியாளர்கள் கேட்காமல் இருக்கவும், இந்த முதலாளியின் வெறுக்கத்தக்க முயற்சிகள் நடந்துள்ளன. பணியாளர்கள் வேலைக்கு தாமதமாக வருவதையும், திருட்டு நடவடிக்கைகளை கண்டறியவும், இந்த போலி பாதிரியார் அமர்த்தப்பட்டுள்ளார். தொழிலாளர் சட்டத்தை மீறும் விதமாக ஊழியர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய கூடுதல் நேர ஊதியத்தையும் அந்நிறுவனம் மறுத்திருக்கிறது. அரசாங்கத்திடம் புகாரளித்ததாக குற்றம் சாட்டி ஒரு பணியாளரை பணிநீக்கமும் செய்திருக்கிறது.

    அமெரிக்க தொழிலாளர் துறை மற்றும் அதன் வழக்கறிஞர் அலுவலகம், பணியாளர்களுக்கு எதிரான பணியிட ஏமாற்றுதல்களை பொறுத்துக் கொள்ளாது. பணியாளர்கள் சட்டபூர்வமாக குடியேறினார்களோ இல்லையோ, நியாயமான தொழிலாளர் சட்டத்தின் கீழ் அவர்கள் உரிமைகள் அவர்களுக்கு கிடைக்க அனைத்தையும் தொழிலாளர் துறை செய்யும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    டகேரியா கரிபால்டி நிறுவனம் சம்பள ஈடாகவும், நஷ்ட ஈடாகவும் ரூ.1.15 கோடி வழங்கவும், சுமார் ரூ.4 லட்சம் அபராதமாகவும் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கின்றது.

    • அமெரிக்காவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்களிடம் அச்சம் பரவியது.
    • அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன.

    வாஷிங்டன்:

    இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த அதிக பருவமழை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் மழை பற்றாக்குறை போன்ற வானிலை மாறுபாடுகள் காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உள்ளது. இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை அறிவிப்பு வெளியானதையடுத்து, அமெரிக்காவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்களிடம் அச்சம் பரவியது. இதையடுத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக அரசி வாங்க வந்தபடி உள்ளதால், விரைவில் விற்று தீர்ந்துவிடுகின்றன.

    அரிசியை பிரதான உணவாக கொண்ட ஆசிய சமூகத்தினர் குறிப்பாக இந்திய வம்சாவளி மக்கள் அனைத்து வகை அரிசி வகைகளையும் வாங்கிச் சென்றனர். நேரம் செல்லச் செல்ல மக்கள் வருகை அதிகரிப்பதால், அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன.

    சில கடைகளில் ஒரு நபருக்கு ஒரு அரிசி பை என்ற வரம்பில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் தேவை அதிகரிப்பது தெரிந்ததும் பல கடைகள் அரிசி விலையை உயர்த்தி வருகின்றன.

    உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலிருந்து 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

    • தற்போதுள்ள சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் எடுக்கக்கூடிய நிர்வாக நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறோம்.
    • அமெரிக்க பாராளுமன்றத்தின் மூலமாக சட்டம் கொண்டு வர உள்ளதாக ஆர்த்தி பிரபாகர் தெரிவித்தார்.

    செயற்கை நுண்ணறிவின் போக்கை வடிவமைப்பதில் இந்தியா போன்ற ஒத்த சிந்தனையுள்ள நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவியல் ஆலோசகர் ஆர்த்தி பிரபாகர் இன்று தெரிவித்தார்.

    செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்கும் வழிமுறைகள் குறித்து கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து அமெரிக்க அரசாங்கம் செயலாற்றி வருகிறது.

    இந்தியாவில் பிறந்த அமெரிக்க பொறியாளரான ஆர்த்தி பிரபாகர், அமெரிக்க வெள்ளை மாளிகையின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கொள்கைக்கான அறிவியல் ஆலோசக அலுவலகத்தின் 12வது இயக்குனர் ஆவார்.

    இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஈடுபடும் நிறுவனங்களை தாங்கள் செய்யும் செயலுக்கு பொறுப்பேற்கும் வகையில் செயல்பட வைக்க முயற்சித்து வருகிறோம். தற்போதுள்ள சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் எடுக்கக்கூடிய நிர்வாக நடவடிக்கைகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். செயற்கை நுண்ணறிவின் தீங்குகளை சமாளிக்கும் திறனை அதிகரிக்கவும், செயற்கை நுண்ணறிவை மக்களின் நன்மைக்காக பயன்படுத்தவும் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க அதிபர் தயாராக உள்ளார்.

    இந்த பிரச்சனையில் நிர்வாக ரீதியாக தற்போது இவ்வளவுதான் செய்ய முடியும். இதற்கு பிறகு அமெரிக்க பாராளுமன்றத்தின் மூலமாக சட்டம் கொண்டு வர போகிறோம். பின்னர் இதற்கான கருத்து பரிமாற்றங்களுடன் இந்தியா உட்பட நமது சர்வதேச நட்பு நாடுகளுடன் சேர்ந்து செயலாற்றுவோம்.

    இது ஒரு உலகளாவிய தொழில்நுட்பம். இது எல்லா இடங்களிலும் உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்கிறார்கள். இது அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கப் போகிறது.

    இதன் போக்கை வடிவமைக்க ஒத்த சிந்தனை கொண்ட பல நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

    கடந்த மாதம் வாஷிங்டன் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் சந்தித்தபோது நடைபெற்ற கருத்து பரிமாற்றங்களில் செயற்கை நுண்ணறிவும் முக்கியமான ஒன்றாக இருந்தது.

    இவ்வாறு ஆர்த்தி கூறியிருக்கிறார்.

    • எலான் மஸ்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்வில முன்னணியில் உள்ளது
    • செயற்கைக்கோள் கட்டுமான வசதியை உருவாக்க அமேசான் ஆயிரம் கோடி முதலீடு

    உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்கின் பல நிறுவனங்களில் ஒன்று ஸ்பேஸ்எக்ஸ். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், செயற்கைக்கோள் தகவல் தொடர்பிலும், விண்கல உற்பத்தியிலும் ஏவுகணை தொடர்பான சேவைகளை வழங்குவதிலும் முன்னணியில் உள்ள தனியார் நிறுவனமாக உள்ளது.

    இந்நிறுவனத்திற்கு போட்டியாக விண்வெளி இணையச்சேவையைத் தொடங்கும் தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் நாசாவுக்கு சொந்தமான கென்னடி விண்வெளி மையத்தில் ஒரு செயற்கைக்கோள் கட்டுமான வசதியை உருவாக்க சுமார் ஆயிரம் கோடி ($120 மில்லியன்) முதலீடு செய்யப்போவதாக அமெரிக்காவின் இணையதள வர்த்தக நிறுவனமான அமேசான் தெரிவித்திருக்கிறது.

    அதன் புராஜெக்ட் குய்ப்பர் எனும் திட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் சேவை செய்யப்படாத மற்றும் குறைவான சேவைகளையே பெற்று வரும் சமூகங்களுக்கு வேகமான, தடையற்ற, குறைந்த விலையில் பிராட்பேண்ட் சேவைகளை அமேசான் வழங்கும்.

    இதற்காக புவியின் கீழ் சுற்றுப்பாதையில் 3200-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை அமேசான் நிறுவப்போகிறது.

    முழு அளவிலான உற்பத்தி வெளியீடுகள் மற்றும் ஆரம்ப வாடிக்கையாளர்களுக்கான "பைலட்" திட்ட செயலாக்கங்களை அடுத்த ஆண்டு அமேசான் தொடங்கும் என்று இத்திட்டத்தின் துணைத்தலைவர் ஸ்டீவ் மெட்டேயர் தெரிவித்துள்ளார்.

    ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், 3700-க்கும் மேற்பட்ட செயல்பாட்டு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் முதல் தொகுப்பை 2019-ல் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இத்துறையில் ஈடுபட்டு வரும் மற்றோரு நிறுவனம், இங்கிலாந்தின் லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஒன்வெப். தற்போது இப்போட்டியில் அமேசானும் இறங்கியிருக்கிறது.

    இந்த 3 நிறுவனங்கள் மட்டுமல்லாமல், இணைய சேவையுடன் பல்வேறு தொழில்நுட்ப காரணங்களுக்காக சீனா - 13000, கனடா- 300 மற்றும் ஜெர்மனி- 600, ஐரோப்பிய ஒன்றியம்- 170, அமெரிக்கா- 300-லிருந்து 500

    எனும் எண்ணிக்கையில் பல நாட்டு அரசாங்கங்கள் செயற்கைகோள்களை வானில் ஏவ திட்டமிட்டிருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தபால் அட்டை 1969-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி பாரீஸ் நகரில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
    • தவறாக தனது முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என கருதினார்.

    இன்டர்நெட், இ-மெயில், சமூக வலைதளங்களின் அசூர வளர்ச்சி காரணமாக தபால் அட்டைகள் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில் 1969-ம் ஆண்டு பாரீஸ் நகரில் இருந்து அமெரிக்காவில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட தபால் கார்டு 54 வருடங்கள் கழித்து வினியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த தபால் அட்டை 1969-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி பாரீஸ் நகரில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 12-ந்தேதி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள போர்ட்லென்ட் பகுதியில் வசிக்கும் ஜெசிகா மீன்ஸ் என்ற பெண்ணின் வீட்டில் உள்ள அஞ்சல் பெட்டியில் இருந்துள்ளது.

    இதை பார்த்த அவர் தவறாக தனது முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என கருதினார். ஆனாலும் 54 வருடங்கள் கழித்து கிடைத்தது எப்படி? என்பதும், அந்த போஸ்ட் கார்டில் புதிய முத்திரை இருந்தது எப்படி? என்பதும் மர்மமாக இருப்பதாக கூறி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

    • 1985-ம் வருடம் கப்பற்படையில் தனது முதல் பொறுப்பை ஏற்றார்
    • கடந்த செப்டம்பர் மாதம் கப்பற்படையின் துணைத்தலைவராக பொறுப்பேற்றார்

    அமெரிக்காவின் கப்பற்படையில் மிக உயர்ந்ததாகவும், பெருமைக்குரியதாகவும் கருதப்படுவது, அமெரிக்க கப்பற்படை செயலரின் கீழ் வரும் அமெரிக்க கப்பற்படை நடவடிக்கைகளின் தலைவர் (Chief of Naval Operations) பதவி.

    இப்பதவிக்கு இதுவரை அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத ஒரு நிகழ்வாக அதிபர் ஜோ பைடன், லிஸா ஃப்ரான்செட்டி எனும் ஒரு பெண்மணியை நியமித்திருக்கிறார். இதன்மூலம் லிஸா அமெரிக்க படைகளின் கூட்டு தலைவர்களில் (Joint Chiefs of Staffs) இடம் பெறும் முதல் பெண்மணியும் ஆகிறார்.

    தற்போது அமெரிக்க கடற்படையின் துணைதலைவராக பணியாற்றும் லிஸா, தனது பணிக்காலத்தில் இதுவரை பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கிறார்.

    1985-ம் வருடம் கப்பற்படையில் தனது முதல் பொறுப்பை ஏற்ற லிஸா, பல முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.

    கொரியாவிற்கான அமெரிக்காவின் கடற்படையின் ஆணையர், கடற்படை போர்முறை மேம்பாட்டு நடவடிக்கைகளின் துணைதலைவர் மற்றும் ராணுவ கூட்டுபடையின் மூலோபாயம், திட்டம் மற்றும் நோக்கங்களின் இயக்குனர் என முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.

    கடந்த செப்டம்பர் மாதம் கப்பற்படையின் துணைத்தலைவராக பொறுப்பேற்ற லிஸா, 2 தாக்குதல் நடவடிக்கைகளுக்கு துணை கடற்படை ஆணையராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது நியமனம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பதாவது:-

    தற்போதைய கப்பற்படையின் துணைத்தலைவர் பொறுப்பு உட்பட மிகச்சிறப்பான 38-வருட பணி அனுபவம் கொண்டவரான லிஸா மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். நாட்டிற்காக அவரின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. கொள்கை முடிவுகளில் மட்டுமல்லாமல் செயலாக்கங்களிலும் அவர் தனது திறனை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

    அவரது சாதனைகளுக்காக, பெருமை வாய்ந்த 4 நட்சத்திர குறியீட்டை பெற்றவர். அமெரிக்க ராணுவ வரலாற்றில் இந்த பெருமையை பெறும் இரண்டாம் பெண்மணி இவர். அவர் இப்பொழுது இந்த தலைமை பதவியிலும் தனது பெயரை பதிவு செய்யும் விதமாக திறமையாக செயல்படுவார் என நான் நம்புகிறேன். இவரது நியமனம் அமெரிக்க ராணுவத்தில் பாலின பிரதிநிதித்துவத்துக்கான ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

    இவ்வாறு பைடன் தெரிவித்தார்.

    நேற்று பைடன் அமெரிக்க ராணுவத்தில் பல முக்கிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை நியமித்துள்ளார். ஜோ பைடனின் நியமனங்களை அமெரிக்க ராணுவ செயலர் லாயிட் ஆஸ்டின் பாராட்டியிருக்கிறார்.

    • கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
    • தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது.

    நியூயார்க்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் போர் காரணமாக தடைப்பட்டது.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் கருங்கடல் தானிய ஒப்பந்தம் செய்தது. அதன்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி செய்ய ரஷியா சம்மதித்தது.

    இந்நிலையில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

    இந்நிலையில், தானிய ஒப்பந்ததில் இருந்து ரஷியா விலகியதால் தானியங்களின் விலை உயர்வு, கோடிக்கணக்கான மக்களுக்கு பசி மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஐ.நா.வின் அவசர கால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறும்போது, "தற்போது 69 நாடுகளில் சுமார் 36 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது. பசி-பட்டினியால் வாடுவார்கள். இதன் காரணமாக பலர் இறக்கக் கூடும் என்றார்.

    போதுமான உக்ரேனிய தானியங்கள் ஏழை நாடுகளை சென்றடையவில்லை என்று ரஷியா புகார் தெரிவித்து, ஒப்பந்தத்தில் இருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.

    உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களுக்கு செல்லும் எந்த கப்பலையும் ராணுவ பொருட்கள் ஏற்றி செல்லும் கப்பலாக கருதப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

    • கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்கிருந்த ஏரியில் விழுந்தது.
    • விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அலாஸ்கா மாகாண இயற்கை வனத்துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

    அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் 4 பேர் பயணம் செய்தனர்.

    அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்கிருந்த ஏரியில் விழுந்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அலாஸ்கா மாகாண இயற்கை வனத்துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. பலியானவர்களில் ஒரு விமானி, 3 அரசு ஊழியர்கள் ஆவார்கள். விபத்து நடந்த பகுதியில் மீட்புப்பணி நடந்தது.

    • கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
    • முதல் பெண் என்ற பெருமையை லிசா பிரான்செட்டி பெறுவார்.

    அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய தளபதியாக லிசா பிரான்செட்டியை அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். அவரது நியமனத்துக்கு சென்ட்சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அது உறுதி செய்யப்பட்டால் அமெரிக்க ராணுவ தளபதியாக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை லிசா பிரான்செட்டி பெறுவார்.

    தற்போது கடற்படையின் துணை தலைவராக உள்ள லிசா, பணியாளர்களின் தலைமையில் முதல் பெண் உறுப்பினர் ஆவார். கடல் மற்றும் கரையோர அனுபவத்தின் அடிப்படையில் லிசா பிரான்செட்டியை கடற்படை தளபதியாக அதிபர் ஜோபைடன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×