என் மலர்
அமெரிக்கா
- பலர் நோய் தாக்கத்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- வெயில் கொடுமையால் பொதுமக்கள் வீடுகளில் ஏ.சி. அறையில் முடங்கி கிடக்கிறார்கள்.
நியூயார்க்:
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. தினமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெப்பஅலையில் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பலர் நோய் தாக்கத்தால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று அமெரிக்காவில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து கடும் வெப்ப அலை வீசும் என்றும் இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
வெயில் கொடுமையால் பொதுமக்கள் வீடுகளில் ஏ.சி. அறையில் முடங்கி கிடக்கிறார்கள். இந்த வெயிலில் இருந்து தப்பிக்க சிகாகோ, நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்காக குளிரூட்டும் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
- சமீபத்தில் அதன் லோகோவான பறவை சின்னத்தை "X" என மாற்றினார்
- வருவாயை பெருக்க எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கலாம் என தெரிகிறது
அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதனை அவர் "எக்ஸ்" என பெயர் மாற்றமும் செய்திருக்கிறார்.
முகநூல் நிறுவனத்தினரின் "திரெட்ஸ்" எனும் புதிய சமூக வலைதளமும் X-க்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
சமீப காலங்களில் எக்ஸின் வருவாய் குறைந்திருப்பதாக செய்திகள் வரத் தொடங்கின. கடன் சுமையினாலும், 50% விளம்பர வருவாய் குறைந்திருப்பதனாலும், அதன் வருவாய் மிகவும் பின்னடைந்திருப்பதாக மஸ்க் இம்மாதம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். வருவாயை அதிகரிக்கும் முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
விலைக்கு வாங்கியதிலிருந்தே தனது நிறுவனத்தை மேம்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மஸ்க், பல பணியாளர்களை நீக்கினார். விளம்பர துறையில் வல்லுனரான லிண்டா எக்கேரினோ என்பவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தார்.
சமீபத்தில் அதன் லோகோவான பறவை சின்னத்தை "X" என மாற்றினார். மேலும், "இது தற்காலிகமான லோகோதான். இதுவும் விரைவில் மாற்றப்படலாம்" எனவும் அறிவித்தார்.
இந்நிலையில், X-ன் மாதாந்திர பயனர் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தற்போது அதன் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 5.4 கோடி (540 மில்லியன்) என உறுதிப்படுத்தும் விதமாக சில புள்ளி விவரங்களையும், விளக்கப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார். வருவாயை பெருக்க மஸ்க் எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கலாம் என தெரிகிறது.
மே 2022-ல் டுவிட்டருக்கு சுமார் 2.3 கோடி (229 மில்லியன்) பயனாளிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை தங்கள் மத சம்பந்தமான உடல் அலங்கார கடமைகளை பின்பற்ற அனுமதிக்க வேண்டும்
- ஒழுங்கு கட்டுப்பாடுகளின்படி, அதிக நீளத்தில் முடி வளர்ப்பதும், தாடி வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது
அமெரிக்காவில் காவல்துறையினரும் ராணுவத்தினரை போன்றே தோற்றம் தரும் விதத்தில் இருக்கும்படி 20-ம் நூற்றாண்டில் சட்டங்கள் கடுமையாக இருந்தன. இவற்றை மீறியவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படி நேர்ந்தது.
சமீப ஆண்டுகளில் இத்தகைய சட்டங்களில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் சீக்கியர் ஒருவரை தனது தாடியை அதிகம் வளர்க்க அமெரிக்காவின் நியூயார்க் காவல்துறை அனுமதி மறுப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அமெரிக்காவில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை தங்கள் மத சம்பந்தமான உடல் அலங்கார கடமைகளை பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டம் கூறுகிறது.
சரன்ஜோத் டிவானா எனும் சீக்கியர் தனது திருமணத்திற்காக தனது தாடியை அரை அங்குலம் அதிகம் வளர்க்க முயன்றார். பாதுகாப்பு காரணங்களால் இதற்கான அனுமதி அவருக்கு மறுக்கப்பட்டது.
"காவல் அதிகாரிகள் உட்பட அனைத்து நியூயார்க்கர்களும் தங்கள் மத சம்பிரதாயங்களை கடைபிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்," என நியூயார்க் மாநில ட்ரூப்பர்ஸ் பெனவலண்ட் அசோசியேஷன் எனும் காவலர் நலச்சங்க தலைவர் சார்லி மர்பி தெரிவித்துள்ளார்.
சீக்கிய மத கோட்பாடுகளின்படி, ஆண்கள் கட்டாயம் தலைப்பாகை அணிய வேண்டும். அவர்கள் தங்கள் தலைமுடியையும் தாடியையும் எடுக்கக்கூடாது. ஆனால், நியூயார்க் காவல்துறையில் உள்ள ஒழுங்கு கட்டுப்பாடுகளின்படி, அதிக நீளத்தில் முடி வளர்ப்பதும், தாடி வளர்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
"பணியாளர்களின் பன்முகத்தன்மையை மதிக்கிறோம். தலைப்பாகை அணிவது தொடர்பாக கொள்கை வகுக்க செயல்பட்டு வருகிறோம்", என காவல்துறை செய்தித்தொடர்பாளர் டியன்னா கோஹன் கூறினார்.
2022-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கில் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம், தாடி வைத்திருப்பதாலோ, தலைப்பாகை அணிவதாலோ சீக்கியர்களுக்கு கடற்படையில் சேருவதை தடுக்க கூடாது என தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
- பல ஆயிரம் ஆண்டுகளாக புவியின் வெப்ப நிலை உள்ளிட்டவை ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
- மனிதர்களால் அதிக அளவு பசுமை இல்லாவாயுக்களை தொடர்ந்து வெளியிடுவதே வெப்ப நிலை உயர்வுக்கு காரணம்.
நியூயார்க்:
பருவ நிலை மாற்றம் காரணமாக பூமியின் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறது.
தற்போது ஐரோப்பா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீயும் பரவி வருகிறது.
நிலக்கரி, எண்ணெய், எரிவாயு மற்றும் பிற மனித செயல்பாடுகளால் பூமி வெப்ப நிலை 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஐ.நா.வில் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பனிக்கட்டிகள், மரங்களின் வயது, பல ஆயிரம் ஆண்டுகளாக புவியின் வெப்ப நிலை உள்ளிட்டவை ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் அதிகபட்சமாக சீனாவின் 126 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி இருந்ததையும், கனடாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதையும் ஆராயப்பட்டது.
இந்த வெப்ப நிலை தொடர்ந்து நீடிக்கும்போது பனிப்பாறைகள் மேலும் உருவாகி கடல்நீர் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் மூழ்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். மேலும் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து உள்ளதாகவும், உலகின் மிகவும் குளிர் நிலவக்கூடிய அண்டார்டிகா பகுதியிலும் வெப்ப காற்றை உணர முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே 1.20 லட்சம் ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாக இந்த ஜூலை இருக்கும் என்று கால நிலை விஞ்ஞானி கார்ஸ்டன் ஹவுஸ்டீன் தெரிவித்தார்.
ஜெர்மனியின் லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஹவுஸ்டீன் நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்த வெப்பத்தை விட இந்த ஜூலை மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது. முழுமையான உலகளாவிய சராசரி வெப்ப நிலையின் அடிப்படையில் எப்போதும் வெப்பமான மாதமாக இது இருக்கும்.
மனிதர்களால் அதிக அளவு பசுமை இல்லாவாயுக்களை தொடர்ந்து வெளியிடுவதே வெப்ப நிலை உயர்வுக்கு காரணம். எல் நினோவின் விளைவுகள் ஆண்டின் 2-ம் பாதியில் ஜூன் மற்றும் ஜூலையில் மட்டுமே முழுமையாக வெளி வருவதால் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை அதிக வெப்பம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
- விவேக் ராமசாமி நன்றாக தமிழ் பேசுவாராம்.
உலகிலேயே மிகவும் அதிகாரமிக்க பதவி எது என்றால்? அது அமெரிக்க அதிபர் பதவிதான். வல்லரசு நாடுகளின் முதன்மையான அமெரிக்காவின் அதிபருக்கு இருக்கும் சலுகைகள், அதிகாரங்கள், பாதுகாப்புகள் போன்றவை உலகின் மற்ற எந்த நாட்டு தலைவருக்கும் இருக்காது. உதாரணமாக அமெரிக்க அதிபரை கைது செய்ய முடியாது. அமெரிக்க அதிபரின் உத்தரவை நிறைவேற்ற அந்த நாட்டு படைகள் எப்போதும் தயாராக இருக்கும்.
அப்படிப்பட்ட அமெரிக்க அதிபர் பதவிக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த அதிபர் தேர்தல் 2020-ம் ஆண்டு நடந்தது. அடுத்த தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறுகிறது. அமெரிக்கா, இந்தியாவை போல ஒரு ஜனநாயக நாடு என்றாலும், நமக்கும் அவர்களுக்குமான தேர்தல் முறைகள் முற்றிலும் மாறுப்பட்டவை..
அமெரிக்காவில் பல கட்சிகள் இருந்தாலும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் இடையேதான் அதிபர் தேர்தலில் எப்போதும் போட்டி இருக்கும். அதிபர் வேட்பாளரை தேர்தெடுக்க இந்த கட்சிகள், தங்களுக்குள் ஒரு தேர்தலை நடத்தும். அதில் யாருக்கு ஆதரவு கிடைக்கிறதோ அவர்தான் அந்த கட்சியின் அதிபர் வேட்பாளர். கடந்த முறை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஏற்கனவே அதிபராக இருந்த டெனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் ஜோபைடன் வெற்றி பெற்றார்.
அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலுக்கு இப்போதே ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோபைடன், ராபர்ட் கென்னடி, மரியன்னா வில்லியம்சன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதில் ஜோபைடனுக்கு 80 வயது ஆகி விட்டதால் அவருக்கு பதிலாக, தற்போது துணை அதிபரான கமலா ஹாரிஸ்(58) அதிபர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கி உள்ளது. இவர் போட்டியிட்டால், அவருக்குத்தான் அதிக ஆதரவு இருக்கிறது. எனவே கமலா ஹாரிஸ்தான் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
குடியரசு கட்சி சார்பில் கடந்த முறை அதிபராக இருந்த டெனால்டு டிரம்ப், பர்கம், கிறிஸ்டி, விவேக் ராமசாமி, டிசாண்டிஸ், நிக்கி ஹாலே, உள்பட 13 பேர் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர். அதில் டெனால்டு டிரம்ப், விவேக் ராமசாமி இடையேதான் கடுமையான போட்டி இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர். டெனால்டு டிரம்ப் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதால் விவேக் ராமசாமிதான் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் சொல்ல தொடங்கி உள்ளன.
அதன்படி அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் விவேக் ராமசாமியும்தான் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை வரும்பட்சத்தில் அமெரிக்க அதிபருக்கு போட்டியிடும் 2 தமிழர்கள் என்று சொல்லலாம். அதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.
கமலா ஹாரிஸ், பூர்வீகம் தமிழகம் ஆகும். இவரது முன்னோர் மன்னார்குடி அருகில் துளச்சேந்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். அதே போல் விவேக் ராமசாமி பிறந்தது அமெரிக்காதான். ஆனால் அவர்களது பூர்விகம் தமிழ்நாடு, தாய்மொழியும் தமிழ் தான். அவர்கள் கேரளா மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள வடக்கஞ்சேரியில் வசித்தவர்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், விவேக் ராமசாமி நன்றாக தமிழ் பேசுவாராம். மேலும் அவர் வயது வெறும் 37 தான். இவர் வெற்றி பெற்று அதிபர் ஆனால் மிகக்குறைந்த வயதுடைய அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் பெறுவார்.
தொழில்முனைவோராக இருக்கும் அவர், தற்போது அமெரிக்க மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிட்டதக்கது.
- கடந்த 2018-ம் ஆண்டில் பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பிரான்ஸ் நாடு தடை செய்தது.
- இந்த மாதம் நெதர்லாந்து நாடு பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் தடையை அறிவித்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.
பள்ளியில் ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கல்வி செயல்திறன் குறைவதற்கும், வகுப்பறையில் மோசமான செயல்திறனுக்கும் வழிவகுக்கிறது.
தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வுக்காகவும் இருக்க வேண்டும், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டில் பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பிரான்ஸ் நாடு தடை செய்தது. பின்னர் இந்த மாதம் நெதர்லாந்து நாடு பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் தடையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- பெண் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை போலீஸ் காவலில் வைத்தனர்.
- பெண் மனநல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோ- ஓக்லாண்டு விரிகுடா பாலத்தில் நெரிசலான நேரத்தில் காரில் இருந்து திடீரென இறங்கிய பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில் அந்த வழியாக சென்ற மற்ற கார்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலில் அந்த பெண் நெடுஞ்சாலையின் நடுவே கத்தியுடன் காரில் இருந்து இறங்கி கத்த ஆரம்பித்துள்ளார். பின்னர், அந்த பெண் மீண்டும் காரில் ஏறி சிறிது தூரம் சுங்கச்சாவடி அருகே நிர்வாணமாகி துப்பாக்கியுடன் மீண்டும் காரில் இருந்து இறங்கி அவ்வழியாக சென்ற கார்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த கலிப்போர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, பெண் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை போலீஸ் காவலில் வைத்தனர்.
மேலும், அந்த பெண் மனநல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அங்கிருந்து வெளிவந்தவுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- ஸ்பீக்மேன் இத்துறையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார் என காவல்துறை அறிவிப்பு
- ஸ்பீக்மேன் நியாயமான காரணங்களின்றி நீக்கப்பட்டிருக்கிறார் என காவலர் நலச்சங்கம் அறிவிப்பு.
அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலமான ஒஹியோவின் சர்க்கிள்வில் நகரத்தில் நெடுஞ்சாலையில், ஒரு கறுப்பினத்தவர் மீது தனது நாயை கட்டவிழ்த்துவிட்ட காவல் அதிகாரியை காவல்துறை பணிநீக்கம் செய்துள்ளது.
அந்த அதிகாரியின் பெயர் ரையான் ஸ்பீக்மேன்.
"காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் வைத்திருக்கும் தரநிலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ரையான் ஸ்பீக்மேன் பூர்த்தி செய்யவில்லை. அதனால் அவர் இத்துறையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்," என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
"ஸ்பீக்மேன் நியாயமான காரணங்களின்றி நீக்கப்பட்டிருக்கிறார். அவர் சார்பாக குறைகேட்பு மனு ஒன்றை நாங்கள் தாக்கல் செய்வோம்" என காவலர் நலச்சங்கம் கூறியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையின் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு, ஒரு அறிக்கையையும், வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், "ஜூலை 4ல், 23 வயதான ஜடேர்ரியஸ் ரோஸ் என்பவர் டிராக்டர் டிரெய்லர் வாகனம் ஒன்றை ஓட்டி சென்றுள்ளார். சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தை நிறுத்தும்படி கை காட்டி உள்ளனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது.
கொலம்பஸ் பகுதியிலிருந்து தெற்கே 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் அதிகாரிகள் "ஸ்டாப் ஸ்டிக்ஸ்" எனப்படும் டயரின் காற்றை குறைத்து விடும் சாதனங்களை பயன்படுத்தி அவ்வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவில் காணப்படுவதாவது:
போலீஸ் அதிகாரிகள் ரோஸை வாகனத்தில் இருந்து இறங்க உத்தரவிட்டதால், ரோஸ் தனது கைகளை உயர்த்தி வாகனத்தின் அருகே நின்று கொண்டிருக்கிறார். "நாயை விடுவிக்க வேண்டாம்" என்று ஒரு உள்ளூர் அதிகாரி கூறியதையும் மீறி சர்க்கிள்வில் காவல்துறை அதிகாரி ஸ்பீக்மேன், காவல்துறை நாய் ஒன்றை ரோஸ் மீது கட்டவிழ்த்துவிடுகிறார். முழங்காலிட்டிருக்கும் ரோஸை நோக்கி ஓடும் அந்த நாய், அவரை கடித்து இழுக்கிறது. "தயவுசெய்து நாயை விலக்குங்கள்" என ரோஸ் அலறுகிறார்.
இக்காட்சிகள் அந்த வீடியோவில் தெரிகின்றன.
இதனை கண்ட பலரும் கொந்தளித்து தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
ரோஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும், காவல்துறை அதிகாரி ஸ்பீக்மேன் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ஷான் பாயர் ஆகியோரை பணிநீக்கம் செய்யுமாறும் முகநூலில் ஆர்வலர்கள் கோரினர்.
இந்நிலையில் ஸ்பீக்மேனின் பணிநீக்க அறிவிப்பு வந்துள்ளது.
- அமெரிக்க அரசு இது சம்பந்தமான எல்லா ரகசிய திட்டங்களை குறித்தும் விசாரிக்க ஒரு படையை உருவாக்கியது
- இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் தெரிந்து கொள்ள நான் அனுமதிக்கபடவில்லை
'பறக்கும் தட்டுகள்' எனும் பெயரில் பல கதைகளிலும், திரைப்படங்களிலும் காட்டப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் விமானங்களின் (Unidentified Flying Objects) நடமாட்டங்களை குறித்து அமெரிக்கா தகவல்கள் சேகரிக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவில் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், தேசிய பாதுகாப்பு கண்ணோட்டத்துடனும், அமெரிக்காவின் எதிரி நாடுகளின் மறைமுக தாக்குதல் முயற்சிகளை கண்டறியவும், இவ்விமானங்கள் குறித்து நடத்தப்பட்ட ராணுவ ஆராய்ச்சிகளின் தகவல்களை வெளியிட உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பென்டகன் (Pentagon) எனப்படும் அமெரிக்க ராணுவ தலைமையகத்திடமிருந்து இதற்கான தகவல்கள் பெறப்படுகின்றன.
இந்நிலையில் அமெரிக்க விமான படையின் உளவுப்பிரிவை சேர்ந்த முன்னாள் அதிகாரி ஒருவர் இது சம்பந்தமான ஆராய்ச்சி தகவல்களை நெடுங்காலமாக ராணுவம் மறைத்து வருகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேஜர் டேவிட் க்ரூஷ் (Major David Grusch) எனும் அந்த அதிகாரி, அமெரிக்க காங்கிரஸ் முன் சாட்சியம் அளித்து கூறியதாவது:-
அமெரிக்க அரசு இது சம்பந்தமான எல்லா ரகசிய திட்டங்களை குறித்தும் விசாரிக்க ஒரு படையை உருவாக்கியது. இதன் தலைவராக 2019-ல் நான் நியமிக்கப்பட்டேன். அப்போது அமெரிக்க உளவு செயற்கைக்கோள் செயல்படுத்தும் துறையில் பணியாற்றினேன்.
அப்போது பல தசாப்தங்களாக நடைபெற்று வந்த, பூமியில் விழுந்த அடையாளம் தெரியாத பறக்கும் விமானங்களை குறித்தும், அவற்றின் பாகங்களை கொண்டு மீண்டும் அவற்றை உருவாக்க முயலும் பொறியியல் குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெறுவது எனக்கு தெரியப்படுத்தப்பட்டது.
ஆனால் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் தெரிந்து கொள்ள நான் அனுமதிக்கபடவில்லை. இதுகுறித்து எனக்கு தெரிந்திருக்கும் தகவல்களை வெளியில் கூற நான் முன் வந்தபோது என்னை பணி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கினார்கள். 1930-களிலிருந்து அமெரிக்க அரசுக்கு இதுகுறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு சபையையும் சேர்ந்த உறுப்பினர்களும் இந்த ஆளில்லா விமானங்களை குறித்தும், இதுகுறித்த ஆராய்ச்சிகள் குறித்தும் டேவிட்டிடம் தகவல்கள் கோரியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பல இடங்களிலிருந்து இத்தகைய "விமானங்களை" கண்டதாக செய்திகள் வருவதாகவும், அதனை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்த பென்டகன், டேவிட்டின் இந்த குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்துள்ளது.
- பணவீக்கத்தை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை
- 5.25 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதமாக அதிகரிப்பு
அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு காலாண்டும் அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும். அமெரிக்காவின் பணவீக்கம் 3 சதவீதம் என்ற அளவில் இருந்து வருகிறது. இதனை 2 சதவிகிதத்திற்கும் கீழே கொண்டு வரும் நோக்கில் அமெரிக்க மத்திய வங்கி பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கியின் அடிப்படை வட்டி புள்ளிகளை 0.25% புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலம் 2001-ம் ஆண்டிற்கு பிறகு, 22 வருடங்களாக எப்போதும் இல்லாத வகையில் இந்த வட்டி விகிதம் அமைந்திருக்கிறது.
கால் சதவிகித உயர்வு என்பது வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தை 5.25%லிருந்து 5.5% வரை கொண்டு செல்லும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவல் (Jerome Powell) கூறியிருப்பதாவது:-
வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் மத்திய ஓபன் மார்கெட் கமிட்டி (Federal Open Market Committee) வழங்கிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. பொருளாதார நிலைமையையும், விலைவாசியின் ஏற்ற இறக்கங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறோம்.
பொருளாதார வளர்ச்சியின் வேகம் சற்று குறைந்திருந்தாலும் அமெரிக்க பொருளாதாரத்தில் உள்ள அடிப்படை வலிமை காரணமாக, பின்னடைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
இவ்வாறு பவல் கூறியிருக்கிறார்.
வரும் செப்டம்பர் மாதம் வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படலாம் என தெரிகிறது.
வட்டி விகித உயர்வின் விளைவாக வங்கி துறை பல பொருளாதார அழுத்தங்களை தாங்க வேண்டியுள்ளது. அவை நிறுவனங்களுக்கு வழங்கும் கடன் வட்டி விகிதத்தை ஏற்றினால் பணப்புழக்கம் குறையலாம். அது வேலைவாய்ப்பின்மை உட்பட பல சிக்கலகளை உருவாக்கும்.
அதன் விளைவாக சந்தையில் அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற பொருட்கள் விற்காமல், தேக்க நிலை உருவாகலாம்.
வட்டி விகிதங்கள் உயர்வதால் ஏற்படும் இதுபோன்ற தாக்கங்கள் பெரிய அளவில் இல்லாத வகையில் மிதமான விளைவுகளோடு அடுத்த நிலைக்கு பொருளாதாரத்தை கொண்டு செல்வதை சாஃப்ட் லேண்டிங் என்று கூறுவார்கள். இந்த வழிமுறையைத்தான் அமெரிக்க ரிசர்வ் வங்கி கையாள முயல்கிறது.
வரப்போகும் நாட்களில் இந்த வட்டி விகித உயர்வின் தாக்கம் அமெரிக்க பங்கு சந்தையிலும், தொடர்ச்சியாக இந்திய பங்கு சந்தையிலும் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை பொருளாதார நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
- குழந்தைகளில் ஒருவர் டிராவிஸால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதால், அக்குழந்தை இறந்துவிட்டதாக டிராவிஸ் நினைத்திருக்கிறார்.
- எனக்கும், எனது 6 வளர்ப்பு பிள்ளைகளுக்கும் எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்தது.
அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், பெற்ற குழந்தைகளையே சித்ரவதை செய்த குற்றத்திற்காக டிராவிஸ் டாஸ் (31) மற்றும் அவர் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அக்குழந்தைகள் கடுமையாக தாக்கப்பட்டு, உணவளிக்கப்படாமல், நாய் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டனர்.
வேலி வியூ பவுல்வர்டு மற்றும் ஃபிளமிங்கோ சாலைக்கு அருகிலுள்ள ஒரு மருந்துக்கடையில் இருந்து அமண்டா ஸ்டாம்பர் அவசர உதவி எண்ணான 911ஐ அழைத்திருக்கிறார். போலீசார் அங்கு சென்று, பல நாய்களுடன் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன் பின்னர் நடந்த விசாரணையில், பெற்றோரின் குற்றம் தெரிய வந்ததால், 2 வயது முதல் 11 வயது வரையுள்ள 7 குழந்தைகளுக்கு பெற்றோரான இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைகளில் ஒருவர் தந்தையால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதால், அவர் இறந்துவிட்டதாக டிராவிஸ் நினைத்திருக்கிறார்.
கூண்டிற்குள் இருந்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தையின் கண்கள் வீங்கி மூடப்பட்டு இருந்தது. அக்குழந்தை உடல் முழுவதும் காயங்களுடன் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
ஃபிளமிங்கோ சாலைக்கு அருகில், ஒரு படுக்கையறை மற்றும் ஒரு குளியலறை கொண்ட ஒரு அபார்ட்மெண்டில் அத்தம்பதியினர் தங்கள் 7 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
முன்கூட்டியே காவல்துறையை ஏன் அழைக்கவில்லை? என போலீசார் கேட்டனர். இது குறித்து காவல்துறையிடம் அமண்டா தெரிவித்திருப்பதாவது:
"நானும் அவரால் பாதிக்கப்பட்டேன். கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், எனது 6 வளர்ப்பு பிள்ளைகளுக்கும் எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்தது. எனது உயிருக்காகவும் எனது மற்ற குழந்தைகள் மற்றும் எனது குடும்பத்திற்காகவும் நான் பயந்ததனால் முன்னதாகவே காவல்துறையை நான் அழைக்கவில்லை. என் கணவர், பெல்டாலும், கயிறுகளாலும் மற்றும் கனம் வாய்ந்த பாத்திரங்களாலும் குழந்தைகளை அடிப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 90 நிமிடங்கள் விண்வெளி நிலையம் உடனான தொடர்பு துண்டிப்பு
- ரஷியாவின் தகவல் தொடர்பு அமைப்பு மூலம் 20 நிமிடத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விண்வெளி மையம், விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பின்னர் பேக்அப் கன்ட்ரோல் சிஸ்டம் மூலம் விண்வெளி மையத்துடன் தொடர்பை ஏற்படுத்தினர். மின்தடையால் சுமார் 90 நிமிடங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நாசாவில் ஏற்பட்ட மின்தடை குறித்து ரஷியாவின் தகவல் தொடர்பு அமைப்பு மூலமாக 20 நிமிடத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளி மையத்துடன் தொடர்பு கொள்ள நாசாவில் தனியாக கட்டுப்பாட்டு மையம் உள்ளது. ஒருவேளை இந்த மையம் வேலை செய்யவில்லை என்றால், இதற்கு மாற்று திட்டம் வகுத்துள்ளது. முதன்முறையாக விண்வெளி மையத்தை தொடர்பு கொள்ள நாசா இந்த மாற்று ஏற்பாட்டை பயன்படுத்தியுள்ளது.
ஒருவேளை இயற்கை பேரழிவு ஏற்பட்டால் மாற்று ஏற்பாட்டிற்காக ஹூஸ்டனில் இருந்து சில மைல் தூரத்தில் மாற்று கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து பராமரித்து வருகிறது. ஆனால் தற்போது விளக்குகள் மற்றும் ஏ.சி. வேலை செய்ததால் நாசா மையத்தில் இருந்தே தொடர்பு கொண்டுள்ளது.
இதுகுறித்து விண்வெளி நிலைய திட்ட மேலாளர் ஜோல் கூறுகையில் ''விண்வெளி வீரர்களுக்கோ, நிலையத்திற்கோ எந்தவொரு ஆபத்தும் இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டி வருகிறது. இதற்காக விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளன. அவர்கள் விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.






