search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கமலா ஹாரிஸ் - விவேக் ராமசாமி: அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 தமிழர்களுக்கு இடையேதான் போட்டி?
    X

    கமலா ஹாரிஸ், விவேக் ராமசாமி

    கமலா ஹாரிஸ் - விவேக் ராமசாமி: அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 தமிழர்களுக்கு இடையேதான் போட்டி?

    • அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
    • விவேக் ராமசாமி நன்றாக தமிழ் பேசுவாராம்.

    உலகிலேயே மிகவும் அதிகாரமிக்க பதவி எது என்றால்? அது அமெரிக்க அதிபர் பதவிதான். வல்லரசு நாடுகளின் முதன்மையான அமெரிக்காவின் அதிபருக்கு இருக்கும் சலுகைகள், அதிகாரங்கள், பாதுகாப்புகள் போன்றவை உலகின் மற்ற எந்த நாட்டு தலைவருக்கும் இருக்காது. உதாரணமாக அமெரிக்க அதிபரை கைது செய்ய முடியாது. அமெரிக்க அதிபரின் உத்தரவை நிறைவேற்ற அந்த நாட்டு படைகள் எப்போதும் தயாராக இருக்கும்.

    அப்படிப்பட்ட அமெரிக்க அதிபர் பதவிக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த அதிபர் தேர்தல் 2020-ம் ஆண்டு நடந்தது. அடுத்த தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறுகிறது. அமெரிக்கா, இந்தியாவை போல ஒரு ஜனநாயக நாடு என்றாலும், நமக்கும் அவர்களுக்குமான தேர்தல் முறைகள் முற்றிலும் மாறுப்பட்டவை..

    அமெரிக்காவில் பல கட்சிகள் இருந்தாலும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் இடையேதான் அதிபர் தேர்தலில் எப்போதும் போட்டி இருக்கும். அதிபர் வேட்பாளரை தேர்தெடுக்க இந்த கட்சிகள், தங்களுக்குள் ஒரு தேர்தலை நடத்தும். அதில் யாருக்கு ஆதரவு கிடைக்கிறதோ அவர்தான் அந்த கட்சியின் அதிபர் வேட்பாளர். கடந்த முறை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஏற்கனவே அதிபராக இருந்த டெனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் ஜோபைடன் வெற்றி பெற்றார்.

    அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலுக்கு இப்போதே ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோபைடன், ராபர்ட் கென்னடி, மரியன்னா வில்லியம்சன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதில் ஜோபைடனுக்கு 80 வயது ஆகி விட்டதால் அவருக்கு பதிலாக, தற்போது துணை அதிபரான கமலா ஹாரிஸ்(58) அதிபர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கி உள்ளது. இவர் போட்டியிட்டால், அவருக்குத்தான் அதிக ஆதரவு இருக்கிறது. எனவே கமலா ஹாரிஸ்தான் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

    குடியரசு கட்சி சார்பில் கடந்த முறை அதிபராக இருந்த டெனால்டு டிரம்ப், பர்கம், கிறிஸ்டி, விவேக் ராமசாமி, டிசாண்டிஸ், நிக்கி ஹாலே, உள்பட 13 பேர் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர். அதில் டெனால்டு டிரம்ப், விவேக் ராமசாமி இடையேதான் கடுமையான போட்டி இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர். டெனால்டு டிரம்ப் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதால் விவேக் ராமசாமிதான் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் சொல்ல தொடங்கி உள்ளன.

    அதன்படி அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் விவேக் ராமசாமியும்தான் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை வரும்பட்சத்தில் அமெரிக்க அதிபருக்கு போட்டியிடும் 2 தமிழர்கள் என்று சொல்லலாம். அதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.

    கமலா ஹாரிஸ், பூர்வீகம் தமிழகம் ஆகும். இவரது முன்னோர் மன்னார்குடி அருகில் துளச்சேந்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். அதே போல் விவேக் ராமசாமி பிறந்தது அமெரிக்காதான். ஆனால் அவர்களது பூர்விகம் தமிழ்நாடு, தாய்மொழியும் தமிழ் தான். அவர்கள் கேரளா மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள வடக்கஞ்சேரியில் வசித்தவர்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், விவேக் ராமசாமி நன்றாக தமிழ் பேசுவாராம். மேலும் அவர் வயது வெறும் 37 தான். இவர் வெற்றி பெற்று அதிபர் ஆனால் மிகக்குறைந்த வயதுடைய அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் பெறுவார்.

    தொழில்முனைவோராக இருக்கும் அவர், தற்போது அமெரிக்க மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிட்டதக்கது.

    Next Story
    ×