என் மலர்tooltip icon

    உலகம்

    பாவமன்னிப்பு பெயரில் ஊழியர்களின் குறைகளை கண்டுபிடிக்க போலி பாதிரியார்: அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்
    X

    பாவமன்னிப்பு பெயரில் ஊழியர்களின் குறைகளை கண்டுபிடிக்க போலி பாதிரியார்: அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்

    • போலி பாதிரியாரை நியமித்த மோசடி செயல் உறுதியானது
    • பணியாளர்களுக்கு எதிரான பணியிட ஏமாற்றுதல்களை அரசாங்கம் பொறுத்து கொள்ளாது

    கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சேக்ரிமெண்டோ பகுதியில் உள்ள டகேரியா கரிபால்டி மெக்ஸிகன் (Taqueria Garibaldi Mexican) எனும் உணவகத்தை நடத்தும் சே கரிபால்டி (Che Garibaldi Inc.) நிறுவனத்திற்கு, உணவக ஊழியர்கள் 35 பேருக்கு சம்பள ஈடாகவும், நஷ்டஈடாகவும் ரூ.1.15 கோடி ($140,000) வழங்க அமெரிக்க தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.

    பணியிடத்தில் தாங்கள் செய்யும் குற்றங்களை பணியாளர்கள் ஒப்புக்கொள்ள ஒரு போலி பாதிரியாரை நியமித்த மோசடி செயல் உறுதியானதை தொடர்ந்து தொழிலாளர் துறை இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

    "ஒரு முதலாளி தனது ஊழியர்களுக்கு எதிராக எடுத்த மிக வெட்கமற்ற நடவடிக்கை" என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொழிலாளர் பிராந்திய வழக்கறிஞர் மார்க் பிலட்டின் இது குறித்து கூறியிருப்பதாவது:

    "டகேரியா கரிபால்டியின் ஊழியர் ஒருவர் இந்த குற்றத்தை எப்படி செய்தார் என ஒத்து கொண்டுள்ளார். பணியாளர்கள் ஏதேனும் புகாரளித்தால், அவர்களின் குடியுரிமை குறித்த பிரச்சனைகள் அரசாங்கத்தால் எழுப்பப்படும் என்று ஒரு மேலாளர் அவர்களை மிரட்டியிருக்கிறார். தொழிலாளர்களை எதிர்த்துக் குரல் கொடுக்காமல் வைக்கவும், விசாரணைகளை தடுக்கவும் மற்றும் வழங்கப்படாத ஊதியத்தை பணியாளர்கள் கேட்காமல் இருக்கவும், இந்த முதலாளியின் வெறுக்கத்தக்க முயற்சிகள் நடந்துள்ளன. பணியாளர்கள் வேலைக்கு தாமதமாக வருவதையும், திருட்டு நடவடிக்கைகளை கண்டறியவும், இந்த போலி பாதிரியார் அமர்த்தப்பட்டுள்ளார். தொழிலாளர் சட்டத்தை மீறும் விதமாக ஊழியர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய கூடுதல் நேர ஊதியத்தையும் அந்நிறுவனம் மறுத்திருக்கிறது. அரசாங்கத்திடம் புகாரளித்ததாக குற்றம் சாட்டி ஒரு பணியாளரை பணிநீக்கமும் செய்திருக்கிறது.

    அமெரிக்க தொழிலாளர் துறை மற்றும் அதன் வழக்கறிஞர் அலுவலகம், பணியாளர்களுக்கு எதிரான பணியிட ஏமாற்றுதல்களை பொறுத்துக் கொள்ளாது. பணியாளர்கள் சட்டபூர்வமாக குடியேறினார்களோ இல்லையோ, நியாயமான தொழிலாளர் சட்டத்தின் கீழ் அவர்கள் உரிமைகள் அவர்களுக்கு கிடைக்க அனைத்தையும் தொழிலாளர் துறை செய்யும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    டகேரியா கரிபால்டி நிறுவனம் சம்பள ஈடாகவும், நஷ்ட ஈடாகவும் ரூ.1.15 கோடி வழங்கவும், சுமார் ரூ.4 லட்சம் அபராதமாகவும் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கின்றது.

    Next Story
    ×