search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அரியவகை நோய் என பெற்ற மகளுக்கு சிகிச்சை: 3 வயது சிறுமியின் தாயார் கைது
    X

    அரியவகை நோய் என பெற்ற மகளுக்கு சிகிச்சை: 3 வயது சிறுமியின் தாயார் கைது

    • நலமாக உள்ள குழந்தை உடல்நலம் சரியில்லை எனக்கூறி மருத்துவம் பார்க்க வற்புறுத்தல்
    • ஒருவகை நோயால் மனநோய்க்கு உள்ளாகி இவ்வாறு செய்திருக்கக் கூடும்

    பல அரிய மனநல குறைபாடுகளில் ஒன்றாக கருதப்படுவது முன்சாஸன் சிண்ட்ரோம் (Munchausen's syndrome) மற்றும் அதன் ஒரு வகையான முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி (Munchausen Syndrome by proxy).

    இது ஒரு அரிய உளவியல் நடத்தை நிலை.

    முதல் வகையில் ஒருவர், இல்லாத நோய் அறிகுறிகளை தனக்குள்ளேயே கற்பனையாக உருவாக்கிக் கொண்டு, தான் நோய்வாய்பட்டதாக தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பார்.

    இரண்டாவது வகை "முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி" என்பது ஒரு குழந்தை துஷ்பிரயோக குற்றமாக கருதப்படுகிறது. இதில் ஒரு குழந்தையின் பராமரிப்பாளர் (பெரும்பாலும் தாய்) போலியான நோய் அறிகுறிகளை தன் குழந்தைக்கு இருப்பதாக கூறி அக்குழந்தை உண்மையிலேயே நோய்வாய்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆட்படுத்துவார்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசிப்பவர் 27 வயதான ஜெசிகா கேஸர். இவர் சமூக ஊடக பிரபலமானவர். இவர் தற்போது முன்சாஸன் பை பிராக்ஸி என மனநோய்க்கு உள்ளாகியிருக்கிறார்.

    டெக்சாஸ் மாநில சட்ட அமலாக்க மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி, கேஸர் தனது 3 வயது மகளுக்கு இல்லாத அரிய நோய்களை இருப்பதாக கூறி தேவையற்ற மருத்துவ நடைமுறைக்கு உட்படுத்தும்படி கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

    டார்ரன்ட் கவுன்டி ஷெரீப் அலுவலகம் தனது முகநூல் பதிவில், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜெசிகாவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

    டார்ரன்ட் கவுன்டி ஷெரீப் அலுவலகம் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

    இந்த வழக்கு இந்த அரிய மனநோய்க்கான ஒரு நல்ல உதாரணம். இது தொடர்பாக நீங்கள் ஜெசிகாவுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்தால், மைக்கேல் வெபர் எனும் காவல்துறை அதிகாரியை தொடர்பு கொள்ளவும் எனத் தெரிவித்துள்ளது.

    ஜெசிகா தனது குழந்தைக்கு பல தேவையற்ற சிகிச்சைகளை அளிக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். இந்த துஷ்பிரயோகம் எவ்வளவு காலம் தொடர்ந்தது என்பது இன்னும் உறுதியாகவில்லை.

    கேஸர் தனது குழந்தையின் உடல்நலம் குறித்த தனிப்பட்ட செய்திகள் உட்பட முகநூலில் உள்ள தனது அனைத்து தரவுகளையும் நீக்கப்போவதாக தனது நண்பருக்கு செய்திகள் அனுப்பியுள்ளார்.

    காவல்துறையினர் கடந்த வாரம் ரஸ்க் கவுண்டியில் ஜெசிகாவை கைது செய்து டாரன்ட் கவுண்டி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×