search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    வெள்ளை மாளிகையை கலக்கிய ஒபாமாவின் பிரத்யேக சமையல்காரர் கடலில் மூழ்கி பலி
    X

    வெள்ளை மாளிகையை கலக்கிய ஒபாமாவின் பிரத்யேக சமையல்காரர் கடலில் மூழ்கி பலி

    • நீர் சறுக்கு விளையாட்டின்போது திடீரென அலையில் அடித்து செல்லப்பட்டார்
    • வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் பிடித்தமான சமையல்காரராக இருந்தவர்

    8 வருடம் அமெரிக்க அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. அவரின் பதவிக்காலம் முடிவடைந்ததும், ஒபாமா அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிரபலமான மார்தா'ஸ் வைன்யார்ட் (Martha's Vineyard) எனும் தீவில் ஒரு மாளிகையை வாங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

    ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்தபோது, அவரின் தலைமை சமையல்காரராக இருந்தவர் டஃபாரி கேம்ப்பெல் (Tafari Campbell). ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததும், அவரின் இல்லத்து பிரத்யேக சமையற்கார குழுவுடன் டஃபாரியும் இணைந்து கொண்டார்.

    டஃபாரி நீரில் துடுப்பு பலகையில் நின்று சறுக்கி விளையாடும் நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபாடுடையவர்.

    நேற்று முன்தினம் ஒபாமா இல்லத்தருகில் உள்ள எட்கார்டவுன் கிரேட் பாண்ட் எனும் நீர்நிலையில், நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். திடீரென அவர் காணாமல் போனதாக அங்கு நீர் சறுக்கில் ஈடுபட்டு வந்த மற்றொரு நபர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

    அவசர குழுவினரின் நேரடி தேடுதலில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகள் மூலம் கண்டறியும் சோனார் கருவி மூலம் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. இறுதியில், கரையிலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

    விபத்தின்போது ஒபாமாவும் அவரது மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான மிச்செல் ஒபாமாவும் வீட்டில் இல்லை. ஒபாமா ஜனாதிபதியாக இருந்த 8 வருட காலம் காம்ப்பெல், வெள்ளை மாளிகையில் புகழ்பெற்ற சமையல்காரராக திகழ்ந்தார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் பயிரிடப்பட்ட பொருட்களை கொண்டு ஒரு வித்தியாசமான பீர் உட்பட பல உணவு வகைகளை பிரபலப்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்துயர சம்பவம் குறித்து ஒபாமாவும் அவர் மனைவியும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் அவரை முதல்முறை சந்திக்கும் போதே மிகவும் திறமை வாய்ந்த சமையல் கலைஞராக திகழ்ந்தார். மக்களை ஒன்றிணைக்கும் ருசியான உணவுகளின் குணங்கள் மீது அவர் ஆழ்ந்த ஈடுபாடுடையவராக இருந்தார். எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே டஃபாரி இருந்தார். அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு எங்கள் இதயங்கள் உடைந்தன.

    இன்று ஒரு உண்மையான, அற்புதமான மனிதரான டஃபாரியை நன்கு அறிந்த மற்றும் நேசிக்கும் அனைவருடனும், குறிப்பாக அவரது மனைவி ஷெரிஸ் மற்றும் அவர்களது இரட்டை மகன்களான சேவியர் மற்றும் சவின், ஆகியோருடன் அவரை இழந்த துக்கத்தில் பங்கு கொள்கிறோம்.

    இவ்வாறு ஒபாமாக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒபாமா குடும்பம், 2021-ம் ஆண்டில் பாஸ்டன் செல்டிக்ஸ் கூடைப்பந்து அணியின் உரிமையாளர் விக்லிஃப் க்ரூஸ்பெக்கிடம் இருந்து மார்தா'ஸ் வைன்யார்டு தீவில், கிட்டத்தட்ட 7,000 சதுர அடி கொண்ட இந்த மாளிகையை வாங்கியது. இந்த வீடு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து ஒரு குறுகிய தடுப்பு கடற்பகுதியால் பிரிக்கப்பட்ட கடற்கரை குளத்தை ஒட்டி உள்ளது.

    Next Story
    ×