என் மலர்
அமெரிக்கா
- லட்சக்கணக்கான இந்தியர்கள் ஹெச்-1பி விசாவை நம்பியுள்ளனர்
- விவேக் ராமசாமியின் பெற்றோர் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியாளராக முன்னிலையில் உள்ளார். அவர் மீதுள்ள வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது தகுதி உறுதிப்படுத்தப்படும் என்பதால் அவர் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையிலுள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி தீவிரமாக தன்னை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்ய லட்சக்கணக்கான இந்தியர்கள் அந்நாடு வழங்கும் ஹெச்-1பி விசா எனும் நடைமுறையை நம்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்த விசா நடைமுறை குறித்து விவேக் தெரிவித்திருப்பதாவது:
ஹெச்-1பி விசா அதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே தீங்கை விளைவிக்கிறது. லாட்டரி திட்டம் பணியாளருக்கு பயனை அளிக்காது. நிபந்தனைக்குட்பட்ட அடிமை முறையாக பணியாளருக்கு இருப்பதனால் பணியமர்த்தும் நிறுவனத்திற்குத்தான் இது பலனளிக்கிறது. பணியாளருடன் வரும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் நாட்டிற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான பயனும் இல்லை. நான் இந்த விசா முறையை நீக்கி விடுவேன்.
இவ்வாறு விவேக் கூறினார்.
2018 தொடங்கி 2023 வரை, விவேக் அவரது முன்னாள் நிறுவனமான ரொய்வான்ட் சர்வீசஸ் சார்பாக இந்தியாவிலிருந்து பணியாளர்களை 29 முறை அமெரிக்காவிற்கு அழைத்துவர விண்ணப்பித்து இத்திட்டத்தால் பயனடைந்தவர். மேலும், அவரது பெற்றோர் இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள்.
இப்பின்னணியில், விவேக் ராமசாமியின் கருத்து, இந்திய எதிர்ப்பு பேச்சாக சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகிறது.
- தேர்தல் நேரத்தில் பைடன் 82 நெருங்குவார்; டிரம்ப் 78 நிறைவு செய்வார்
- எனது பெற்றோர் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தனர் என்றார் டிரம்ப்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பைடன் 82 வயதை நெருங்குவார் என்பதும் டிரம்ப் 78 வயதை நிறைவு செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவில் வாக்காளர்களிடம் ஆங்காங்கே நடத்தப்படும் கருத்து கணிப்புகளில் பேட்டி காணப்படும் 3 பேரில் ஒருவர், ஜோ பைடனின் அதிக வயது குறித்தும், அதனால் அவரால் மீண்டும் அதிபராக திறம்பட செயல்பட முடியுமா என்பது குறித்தும் ஆழ்ந்த சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என தெரிய வந்துள்ளது.
"ஜோ பைடன் மிகவும் வயதானவராகி விட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் அப்பதவிக்கு திறனில்லாதவர்; அதுதான் மிக பெரிய பிரச்சனை என நான் நினைக்கிறேன். எனது பெற்றோர் நீண்ட வயது உயிர் வாழ்ந்தனர். எனது மரபணுவில் அது உள்ளது. எனவே நான் வயதை ஒரு பொருட்டாக கருதவில்லை" என இது குறித்து ஒரு பேட்டியில் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இரண்டு போட்டியாளர்களும் மது அருந்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- சியாட்டில் நகரில் சாலையை கடந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த போலீஸ் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
- மாணவியின் இறப்பை கிண்டல் செய்த போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்யுமாறு புகார்கள் குவிந்து வருகின்றன.
சியாட்டில்:
ஆந்திராவை சேர்ந்த ஜானவி கண்டுலா (வயது 23) என்ற மாணவி அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்புகள் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த ஆண்டுடன் படிப்பு முடிந்து, வருகிற டிசம்பர் மாதம் பட்டம் பெற இருந்தார்.
ஆனால் கடந்த ஜனவரி 23-ந்தேதி இரவு சியாட்டில் நகரில் சாலையை கடந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த போலீஸ் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவத்தின்போது காரில் இருந்த டேனியல் ஆடரர் என்ற போலீஸ் அதிகாரி, விபத்து தொடர்பாக உயர் அதிகாரியிடம் தெரிவித்தபோது நடந்த உரையாடல் அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.
அதில் அவர், இளம்பெண்ணை வழக்கமான ஒரு நபர்தான் என்றும், அவரது உயிருக்கு குறைந்த மதிப்புதான் எனவும் கூறுகிறார். மேலும் வெறும் 11 ஆயிரம் டாலருக்கான ஒரு காசோலையை உடனே எழுதுங்கள் என்றும் கூறும் அவர், இளம்பெண்ணுக்கு ஒரு 26 வயது இருக்கும் என்றும் அலட்சியமாகவும், கிண்டலாகவும் கூறுகிறார்.
இந்த வீடியோ பதிவு சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவிடம் மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளதுடன், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியது.
அதன்படி, இது குறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா உறுதியளித்து உள்ளது.
இந்த நிலையில் விபத்தில் பலியான மாணவி ஜானவிக்கு வருகிற டிசம்பர் மாதம் பட்டம் வழங்கப்படும் (இறப்புக்குப்பின்) என பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கென்னத் ஹெண்டர்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜானவியின் இழப்பை மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆழமாக உணருவார்கள். ஜானவிக்கு மரணத்திற்குப் பின் பட்டம் வழங்கி அதை அவரது குடும்பத்தினரிடம் வழங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது' என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் மாணவியின் இறப்பு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே மாணவியின் இறப்பை கிண்டல் செய்த போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்யுமாறு புகார்கள் குவிந்து வருகின்றன.
ஆனால் இந்த குற்றச்சாட்டை போலீஸ் அதிகாரிகள் சங்கம் மறுத்து உள்ளது. அந்த வீடியோவில் உரையாடலின் ஒரு பகுதி மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், மேலும் பல விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் அந்த சங்கம் கூறியுள்ளது.
- டைமண்ட் லீக் தடகளத்தின் இறுதிச்சுற்று போட்டி அமெரிக்காவின் யூஜின் நகரில் நடந்தது.
- இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்தார்.
வாஷிங்டன்:
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகளத்தின் இறுதிச்சுற்று போட்டி அமெரிக்காவில் உள்ள யூஜின் நகரில் இன்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
இதில் நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.
செக் குடியரசின் ஜாகுப் வால்டிச் முதல் இடம் பிடித்தார். பின்லாந்து வீரர் ஹாலெண்டர் 3ம் இடம் பிடித்தார்.
- மத்திய அரசாங்கத்தின் 75 சதவீத ஊழியர்களை நீக்கி விடுவேன் என்றார் விவேக்
- கடும் சட்டதிட்டங்களை பணியாளர்களுக்கு வகுப்பவர் என்கின்றனர் முன்னாள் ஊழியர்கள்
2024 தேர்தலுக்காக குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிட முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்தாலும் அவர் மீது பல கிரிமினல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் பதவியில் அமர்வது சிக்கலாக இருக்கும் என தெரிகிறது. அக்கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 38-வயதான விவேக் ராமசாமி எனும் இளம் தொழிலதிபர் முன்னிலை வகிக்கிறார். தனது அதிரடி கருத்துக்களுக்காகவும், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் செயல்படுத்த போவதாக கூறும் சில துணிச்சலான திட்டங்களுக்காகவும் அவர் மிகவும் பாராட்டப்படுகிறார்.
தான் அதிபரானால் மத்திய அரசாங்கத்தின் பணியாளர்களை 75 சதவீதத்திற்கும் மேலாக குறைக்க போவதாகவும் தற்போது முக்கிய துறைகளாக கருதப்படும் பல துறைகளை கலைத்து விட போவதாகவும் விவேக் தெரிவித்தார். பல துறைகளிலும் சுமார் 21 லட்சம் (2.25 மில்லியன்) பணியாளர்கள் உள்ள அமெரிக்க மத்திய அரசாங்கத்தில், விவேக் ராமசாமி 16 லட்சம் பேர்களை (1.6 மில்லியன்) நீக்கி விட்டு அதன் மூலம் மிக பெரும் தொகை செலவாவதை தவிர்க்க போவதாக அறிவித்தார்.
இந்நிலையில், விவேக் நடத்தி வரும் ரொய்வன்ட் சயின்ஸ் மற்றும் ஸ்ட்ரைவ் அசட் மேனெஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களில் பணி புரிந்த சில முன்னாள் ஊழியர்களில் 7 பேர் அவரது மனநிலை குறித்து கருத்து தெரிவித்தனர். அவர்கள் அனைவரும், விவேக் "ஆதிக்க மனோபாவம்" உடையவர் என குறிப்பிட்டுள்ளனர்.
தனக்கு பணி செய்வதற்காகவே ஊழியர்கள் உள்ளதாக அவர் நினைப்பவர் என்றும், கடுமையான சட்டதிட்டங்களை வகுப்பவர் என்றும், அறையின் வெப்பத்தை மிகவும் குளிரான நிலையிலேயே வைப்பவர் என்றும், பயணத்தின் போது ஒரு விமானம் ரத்தானால் மற்றொன்றில் உடனடியாக பயணிக்கும் வகையில் இன்னொரு விமானத்திற்கான ஏற்பாட்டை முன்னரே செய்து கொள்பவரகவும், முன்னாள் ராணுவ ரேஞ்சர் ஒருவரை தன்னுடனேயே மெய்காப்பாளராக வைத்து கொண்டவராகவும் விமர்சிக்கின்றனர்.
மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்டவராக சித்தரிக்கபட்டாலும், விவேக் தற்போது தீவிர பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
- நிகோல் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆவார்.
- 2021ல் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.
1998ல் அமெரிக்காவில், கணினி மென்பொருள் பொறியியல் வல்லுனர்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகிய இருவர் கூட்டாக உருவாக்கிய சமூக வலைதள நிறுவனம், கூகுள்.
2015ல் செர்ஜி ப்ரின், நிகோல் ஷானஹான் எனும் கலிபோர்னியா மாநில பெண் வழக்கறிஞரை காதலித்து வந்தார். அந்த வருடமே தனது அப்போதைய மனைவியான ஆன் வோஜ்சிக்கியை விவாகரத்து செய்தார் செர்ஜி ப்ரின்.
2018ல் நிகோலை செர்ஜி ப்ரின் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், 2021ல் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்தனர்.
உலகின் நம்பர் ஒன் கோட்டீஸ்வரரும், அமெரிக்காவின் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் (முந்தைய டுவிட்டர்) ஆகிய நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், செர்ஜி ப்ரின் ஆகிய இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது நண்பரான எலான் மஸ்க், மனைவி நிகோல் ஷானஹான் ஆகிய இருவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாகவும் அதனால் செர்ஜி ப்ரின் விவாகரத்து கோரியிருப்பதாக அப்போது செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதனை நிகோல் மற்றும் எலான் மஸ்க் இருவரும் திட்டவட்டமாக மறுத்தனர்.
இந்நிலையில், 2022 ஜனவரியில் "தீர்க்க முடியாத கருத்து வேறுபாடுகள்" ஏற்பட்டதன் காரணமாக மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி செர்ஜி ப்ரின் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். கடந்த மே மாதம் இருவருக்குமான விவாகம் நீதிமன்றம் மூலமாக ரத்தானது.
விவாகரத்திற்கு எதிராக நிகோல் முறையிடவில்லை. மணத்துணை பாதுகாப்பு தொகையை மட்டுமே நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். பிற சொத்துக்களின் பிரிவினையையும், தங்களது 4-வயது ஒரே மகளின் நிலை குறித்தும் இரு தரப்பு வழக்கறிஞர்களின் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்து கொண்டனர்.
உலகின் நம்பர் 9. பணக்காரர் எனும் இடத்தை சுமார் ரூ.1000 கோடி ($118 பில்லியன்) சொத்து மதிப்புடன் செர்ஜி ப்ரின் தக்க வைத்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா வருகிறார்.
- வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார்.
வாஷிங்டன்:
உக்ரைன் மீதான ரஷியா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அதேபோல், அதிபர் ஜோ பைடன் உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா வருகிறார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறுகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செப்டம்பர் 21ம் தேதி அமெரிக்கா வருகிறார். வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை அதிபர் ஜெலன்ஸ்கி சந்திக்கிறார். அப்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் அளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு அதிபர் ஜோ பைடன், அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
- சில மனித செல்கள் பன்றிகளின் மூளைகளில் காணப்படுவதாக நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர்.
- தொடர்ந்து 61 நாட்கள் நடந்த பரிசோதனையின் மூலம் இந்த மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் 1 லட் சத்து 3ஆயிரம் பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்து இருக்கின்றனர். இதில் 88 ஆயிரம் பேருக்கு சிறுநீரகம் தேவைப்படுகிறது.
இதையடுத்து உறுப்பு மாற்று அறுவை சிசிச்சை தொடர்பாக அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தானமாக வழங்கப்பட்ட உடல்கள் மற்றும் விலங்குகள் மூலம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில மனித செல்கள் பன்றிகளின் மூளைகளில் காணப்படுவதாக நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உயிருடன் இருக்கும் நோயாளிக்கு உலகில் முதல்முதலாக பன்றியில் இருந்து இதயம் சம்பந்தமான மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருந்த போதிலும் 2 மாதங்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனாலும் தொடர்ந்து அமெரிக்க நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சியினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து 61 நாட்கள் நடந்த பரிசோதனையின் மூலம் இந்த மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததாக டாக்டர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- காரை போலீஸ் அதிகாரி கெவின் டேவ் என்பவர் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டி வந்துள்ளார்.
- அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் ஜானவி கண்டூலா மரணம் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது.
வாஷிங்டன்:
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜானவி கண்டூலா (வயது 23). இவர் அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணம் சியாட்டி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தகவல் அமைப்பு தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் இவர் சவுத் லேக் யூனியன் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக வந்த போலீஸ் வாகனம் மாணவி ஜானவி கண்டூலா மீது பயங்கரமாக மோதியது. இதில் 100 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அந்த காரை போலீஸ் அதிகாரி கெவின் டேவ் என்பவர் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டி வந்ததாக அவருடன் பயணித்த மற்றொரு போலீஸ் அதிகாரி டேனியல் ஆடரர் தெரிவித்துள்ளார். விபத்து நடந்ததும் அவர் உயர் அதிகாரி மைக்கோலன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
விபத்து நடந்தது குறித்து எடுத்துக்கூறிய டேனியல் ஆடரர் விபத்தில் இறந்தது வழக்கமான பெண்தான் 11ஆயிரம் டாலர் காசோலையை தயார் செய்து வையுங்கள். அவருக்கு 26 வயது தான் இருக்கும், எனவே பெரிய மதிப்பு இல்லை என்று சொல்லி விட்டு பலத்த சத்தத்துடன் சிரிக்கிறார். மைக்கோலனும் கேலி செய்து சிரிக்கிறார்.
இந்த பேச்சுகள் அனைத்தும் போலீஸ் அதிகாரியின் சீருடையில் பொருத்தபட்டு இருந்த கேமராவில் (பாடிகேம்) வீடியோவாக பதிவாகி இருந் தது.
விபத்தில் இறந்த இந்திய வம்சாவளி மாணவியை பற்றி 2 போலீஸ் அதிகாரிகளும் கேலி, கிண்டல் செய்யும் வீடியோவினை தற்போது போலீசார் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் ஜானவி கண்டூலா மரணம் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த மோசமான வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது முழுமையான விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சியாட்டிலில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளது. மேலும் வாஷிங்டனில் உள்ள மூத்த அதிகாரிகளிடமும் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருப்பதாக இந்திய துணை தூதரகம் தெரிவித்து உள்ளது.
- 2009-லிருந்து 2017 வரை உதவி ஜனாதிபதியாக பைடன் பதவி வகித்தார்
- பரிஸ்மா எனும் உக்ரைன் நிறுவனம் மூலம் சட்டவிரோதமாக லாபம் அடைந்தனர்
ஆட்சியமைப்பிலும், நீதித்துறையிலும் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டிருந்தாலும் அவர்களை உடனடியாக ஒரு உத்தரவின் மூலம் பதவியிலிருந்து நீக்க முடியாது. குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அது உறுதியானதும் சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு விவாதங்கள் நடைபெற்று ஒருமித்த சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளின் அடிப்படையில்தான் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
இது அரசியலமைப்பில் இம்பீச்மென்ட் (impeachment) எனப்படும்.
இரு நாட்களுக்கு முன், அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy) அந்நாட்டில் இம்பீச்மென்ட் நடவடிக்கையை தொடங்க முன்மொழிந்துள்ளார்.
உதவி ஜனாதிபதியாக 2009-லிருந்து 2017 வரை பதவி வகித்தபோது ஜோ பைடன், தனது மகன் ஹன்டர் பைடன் (Hunter Biden) செய்து வரும் பல தொழில்களிலிருந்து, குறிப்பாக உக்ரைன் நாட்டின் பரிஸ்மா (Burisma) எனும் நிறுவனத்திலிருந்து சட்டவிரோதமாக லாபம் அடைந்தார் என பைடன் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து சுமார் ரூ.165 கோடிகள் ($20 மில்லியன்) அளவிற்கு பைடன் குடும்பத்தினர்கள் ஆதாயம் அடைந்துள்ளனர் என தெரிய வந்திருக்கிறது. இருப்பினும், பயனாளிகளில் பைடனின் பெயர் இருப்பதை உறுதி செய்ய தற்போது வரை எந்த நேரடி ஆவணங்களும் கிடைக்கவில்லை என தெரிகிறது.
குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இதற்கான கமிட்டியின் தலைவர் ஜேம்ஸ் கோமர் (James Comer) தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாக ஜோ பைடன் மீது சுமத்தி வருகிறார்.
இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் இந்திய ஜனாதிபதி ஆகியோர் இம்பீச்மென்ட் முறையில்தான் பதவியிலிருந்து நீக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்நிறுவனம் "பக்வி ஒன் சிப் சேலஞ்ச்" எனும் பெயரில் ஒரு போட்டியை நடத்தி வருகிறது
- பள்ளிக்கு சென்ற சிறுவனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது
பிரபல அமெரிக்க பன்னாட்டு சாக்லெட் தயாரிப்பு நிறுவனமான ஹெர்ஷே நிறுவனத்தால் நடத்தப்படுவது ஆம்ப்ளிஃபை ஸ்னாக் பிராண்ட்ஸ்.
ஆம்ப்ளிஃபை, டார்டில்லா எனப்படும் சோளமாவு மற்றும் கோதுமை மாவினால் செய்யப்பட்ட சிப்ஸ் மற்றும் பாப்கார்ன் வகை உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் "பக்வி ஒன் சிப் சேலஞ்ச்" (Paqui One Chip Challenge) எனும் பெயரில் ஒரு போட்டியை நடத்தி வருகிறது.
பெரியவர்களுக்கும், நல்ல உடல்நிலையும் ஆரோக்கியமும் உள்ளவர்கள் மட்டுமே இந்த போட்டியில் பங்கு பெற அந்நிறுவனம் வலியுறுத்துகிறது. இந்த போட்டியில், அந்நிறுவனம் தயாரிக்கும் கரோலினா ரீபர் மற்றும் நாகா வைபர் எனும் காரமான மிளகுப்பொடி தூவப்பட்ட ஒரே ஒரு சிப்ஸ், ஒன்றை மட்டுமே ஒருவர் உண்டு எவ்வளவு நேரம் ஏதும் குடிக்காமலும், உண்ணாமலும் இருக்க முடியும் என்பது கணக்கெடுக்கப்படும். அதன்படி வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவர்.
இந்த ஒரே ஒரு சிப்ஸ், மண்டை ஓட்டு அடையாளமிடப்பட்ட சவப்பெட்டி போன்ற தோற்றமுடைய ஒரு சிறு அட்டைபெட்டியில் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தை சேர்ந்த 10-வது படிக்கும் ஹாரிஸ் வோலோபா எனும் 14-வயது சிறுவன் இப்போட்டியில் தானாக பங்கு பெற விரும்பி இதனை இணையதளம் வழியாக ஆர்டர் செய்தான். ஆர்வத்துடன் அதை உண்ட அச்சிறுவனுக்கு பள்ளிக்கு சென்றதும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள செவிலியர் ஒருவரை அவன் தொடர்பு கொண்டதும், அவர் அவனை பரிசோதித்து முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்த அவன் சிறிது நேரத்தில் நினைவிழந்தான். அவசர உதவி அழைக்கப்பட்டு, காவல்துறையினரும் வந்த போது அவன் சுவாசமின்றி கிடந்ததை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மருத்துவர்கள் முயன்றும் நினைவு திரும்பாமல் ஹாரிஸ் உயிரிழந்தான்.
செய்தி பரவியுடன் அந்த சிப்ஸ் பாக்கெட்டுகள், விற்பனை கூடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- உலகில் பிங்க், டக்டக்கோ என பல தேடுதல் எந்திரங்கள் உள்ளன
- செலவிடும் தொகைக்கு மேல், கூகுள் வருவாயை ஈட்டுகிறது
வணிக நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று நேர்வழியில் போட்டியிடவும், முறையற்ற வழியில் ஏகபோக முன்னிடத்தை ஒரு நிறுவனம் பெறுவதை தடுக்கவும், அமெரிக்காவில் "ஆன்டி-டிரஸ்ட்" சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இச்சட்டத்தை மீறியதாக உலகின் முன்னணி மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான அல்ஃபாபெட் (Alphabet) மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நேற்று தொடங்கியது.
இணையத்தில் தகவல்களை தேட விரும்புபவர்களுக்கு, அவர்கள் தேடும் தகவல்ளை உள்ளடக்கிய இணைய பக்கங்களை உடனடியாக எடுத்து தருவது "ஸெர்ச் எஞ்சின்" எனப்படும் மென்பொருள். தேடுதல் எந்திரமாக பயன்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங்க் (Bing), டக்டக்கோ (DuckDuckGo) உட்பட பல மென்பொருள்கள் இருந்தாலும், பலரும் நாடுவது அமெரிக்காவின் அல்ஃபாபெட் நிறுவனத்தின் கூகுள் (Google) ஆகும்.
இத்துறையில் உலக சந்தையில் 90 சதவீதம் கூகுளின் வசம் உள்ளது. இதன்மூலம் உலகிலேயே முன்னணி தேடுதல் எஞ்சினாக இருப்பதுடன், அத்தேடுதலின் போது வெளியிடப்படும் விளம்பரங்களினால் தினமும் பல கோடிகளை வருமானமாக ஈட்டுகிறது. ஆனால், இந்நிறுவனம் குறுக்கு வழியில் முறையற்று ஏகபோக நிலையை அடைந்ததாக வழக்கு நடக்கிறது.
"ஆண்ட்ராய்டு (கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது) மற்றும் ஐஓஎஸ் (ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமானது) ஆகியவை எப்போதும் பயனர்களுக்கு கூகுளையே முன்னிறுத்தும் வகையில் ஆல்ஃபாபெட் நிறுவனம் வருடந்தோறும் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் செலவிட்டு வருகிறது.
இதனால் எளிதாக அந்நிறுவனம் சந்தையில் தங்களை நிலைநிறுத்தி கொள்ள முடிகிறது. இதில் கிடைக்கும் ஏகபோக அந்தஸ்தினால், அது செலவிடும் தொகையை விட பெரும் வருவாயை ஈட்ட முடிகிறது. இது சங்கிலித்தொடர் போல் கூகுள் நிறுவனத்திற்கே சாதகமாக இருப்பதால் மற்ற நிறுவனங்களின் தேடுதல் எஞ்சின்கள் களத்திலேயே இறங்க முடிவதில்லை," என கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வாதிடும் அமெரிக்க நீதித்துறை வழக்கறிஞர் கென்னத் டின்சர் தெரிவித்தார்.
இக்குற்றச்சாட்டுகளை மறுக்கும் கூகுள், "எங்கள் உயர்ந்த தரத்தினாலும், நாங்கள் செய்துள்ள அவசியமான முதலீடுகளினாலும்தான் இத்துறையில் முன்னணியில் உள்ளோம்" என தெரிவித்துள்ளது.
இவ்வழக்கு விசாரணை முடிய 3 மாதங்களுக்கு மேலாகலாம் என்றும் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் இரு தரப்பினரும் மேல்முறையீட்டுக்கு செல்ல வாய்ப்புள்ளதால் பல வருடங்கள் இவ்வழக்கு தொடரும் என்றும் இணைய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.






