என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • ஐ.நா. பொது சபையின் 78-வது அமர்வு நியூயார்க் நகரில் நடைபெறுகிறது
    • பிற நாட்டின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்று கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்தது

    ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் கொள்கைகளை வகுக்கும் முக்கிய அங்கம், பொது சபை (General Assembly). ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் உறுப்பினர் நாடுகளுக்கான சந்திப்புக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இச்சபையின் கூட்டம் நடைபெறும்.

    இதன் 78-வது அமர்வு இம்மாதம் 5 அன்று தொடங்கியது. இது இம்மாதம் 26 வரை நடைபெறும். நேற்று தொடங்கி வரும் 23 வரையிலும், பிறகு இரண்டு நாட்கள் கழித்து 26 அன்றும், பல்வேறு பிரச்சனை குறித்து உறுப்பினர் நாடுகள் கலந்து கொள்ளும் விவாதங்கள் நடைபெறும்.

    இதில் உறுப்பினர் நாடான துருக்கியின் சார்பில் அதன் அதிபர் ரிசெப் டாயிப் எர்டோகன் கலந்து கொண்டார்.

    "பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி நிலைபெற இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் துருக்கி வழங்க தயாராக உள்ளது." என விவாதத்தில் பேசிய போது அவர் தெரிவித்தார்.

    கடந்த வருடம் நடைபெற்ற பொது சபை சந்திப்பிலும் எர்டோகன் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்.

    "பிற நாட்டின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்று கொள்ள வேண்டும்" என பதிலளித்து அதற்கு அப்பொழுதே இந்தியா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் துருக்கி இந்த சிக்கலை கிளப்பியிருப்பதால், இந்தியாவின் நகர்வை அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.

    • தம்பதி மற்றும் அவர்களின் இரு குழந்தைகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழப்பு
    • அவர்கள் வளர்த்த மூன்று நாய்களும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

    அமெரிக்காவின் சிகாகோ நகரில், பூட்டிய வீட்டிற்குள் ஒரு தம்பதி, அவர்களின் இரண்டு குழந்தைகள், அவர்கள் வளர்த்த மூன்று நாய்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அவர்கள் ஒருநாள் முழுவதும் வீட்டில் இருந்து வெளியே வராததாலும், வீடு பூட்டியே கிடந்ததாலும் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனைத்தொடர்ந்து சிகாகோ போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டுக்கதவை உடைத்து பார்த்தபோது துப்பாக்கி குண்டு பாய்ந்த இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த தம்பதி தங்களது குழந்தைகள், வளர்த்த நாய்களை சுட்டுக்கொலை செய்து, தாங்களும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்தவர்கள் ஆல்பர்ட்டோ ரோலன், ஜோரைடா பார்டோலோமெய், அவர்களின் குழந்தைகள் ஆட்ரியல் (10 வயது), டியாகோ (7) எனத் தெரியவந்துள்ளது.

    போலீஸ் அதிகாரி ஒருவர், ''சம்பவம் நடைபெற்ற இடத்தில் சந்தேக்திற்குரிய வகையில் யாரும் தங்கியதாகவும், நடமாடியதாகவும் எந்த தகவலும் கிடைக்கவில்லை, எங்களுடைய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தடயங்களை ஆராய்ந்து வருகிறார்கள்'' என்றார்.

    • கொரோனா தொற்றால் ஏற்பட்ட உணவு, எரிபொருள் உள்ளிட்டவையின் விலைவாசி உயர்வை உக்ரைன் மீதான போர் மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
    • உக்ரைனில் இருந்து சுமார் 10 ஆயிரம் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா. பொதுச்சபையில் வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு நாட்டிற்கு எதிராக வெறுப்பு ஆயுதமாகும்போது, அது அந்த நாட்டுடன் நிற்காது. தற்போது உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரின் இலக்கு எங்கள் நிலங்கள், எங்கள் மக்கள், எங்கள் உயிர், எங்கள் வளங்கள் ஆகியவற்றை சர்வதேச விதிமுறை உத்தரவுக்கு எதிராக உங்களுக்கு (உலக நாடுகள்) எதிராக ஆயுதமாக மாற்றுவதற்காகத்தான்.

    கொரோனா தொற்றால் ஏற்பட்ட உணவு, எரிபொருள் உள்ளிட்டவையின் விலைவாசி உயர்வை உக்ரைன் மீதான போர் மேலும் அதிகப்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் கஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.

    ரஷியா மீதான தடையால் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் எரிசக்தி வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் மாற்று வழியை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ரஷியா மற்றும் உக்ரைன் ஆகியவை தானியங்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடுகளாக திகழ்கிறது. தற்போது ரஷியா கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

    உக்ரைனில் இருந்து சுமார் 10 ஆயிரம் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நிலை என்ன?. அவர்களுக்கு உக்ரைனுக்கு எதிராக வெறுப்பு கற்றுக் கொடுக்கப்படும். இது இனப்படுகொலை என்பது தெளிவாகத் தெரிகிறது.

    சர்வதேச கிரிமினல் கோர்ட், கடந்த மார்ச் மாதம் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. உக்ரைனில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

    • காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்புள்ளது என கனடா குற்றம்சாட்டியது.
    • கனடா பிரதமரின் குற்றச்சாட்டு கவலை அளிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியது.

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் தலைவர் கொலை சம்பவத்தை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கிய காரணமாக இருக்கலாம் என குற்றம்சாட்டினார்.

    இதனால் இந்தியா, கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரியை வெளியேற கனடா உத்தரவிட, அதற்கு பதிலடியாக கனடா தூதரக உயரதிகாரியை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரினே வாட்சன் கூறுகையில், ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலை அளிக்கின்றன. கனடா கூட்டாளிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். கனடாவின் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவது மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.

    • டெல்லி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்
    • இந்தியாவிற்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் கடமைப்பட்டிருப்பதாக கிர்பி தெரிவித்தார்

    ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இம்மாதம் 9, 10 தேதிகளில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உட்பட பல உறுப்பினர் நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் ராஜாங்க பேச்சுவார்த்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பொது சபைக்கான 78-வது அமர்வில் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவில் ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு உலகம் பயணிக்க வேண்டிய திசை குறித்து தன்னம்பிக்கையுடனும், நேர்மறையான எண்ணங்களுடனும் செயல்பட்டு வருகிறார். பெரும் செயல்கள் ஜி20 மாநாட்டில் செய்து முடிக்கப்பட்டன. இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தலைமையேற்ற இந்தியாவிற்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். திட்டமிடுதல் மட்டுமல்லாது செயல்படுத்தலிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. இந்தியாவில் இருந்த 2 நாட்களும் மிக மிக ஆக்கபூர்வமான நாட்களாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜி20 உச்சி மாநாட்டிற்கு வருகை தந்த போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமரும் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டொனால்ட் டிரம்ப் மீது பல மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது
    • 33-வயதில் தாமஸ் ஜெபர்ஸன் சுதந்திர பிரகடனத்தை எழுதினார்

    அமெரிக்காவில், அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இத்தேர்தலில் வெற்றி பெற ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக போட்டி போட்டு வருகின்றனர். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது பதிவாகியுள்ள கிரிமினல் வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது தகுதி நிர்ணயிக்கப்படும் எனும் நிலை உள்ளது.

    இதனால் குடியரசு கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான 38-வயதான விவேக் ராமசாமிக்கு ஆதரவு நாளுக்கு நாள் கூடி வருகிறது. பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் தெரிவித்து வரும் ஆணித்தரமான, துணிச்சலான கருத்துக்களால் அவருக்கு எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தனது மீதான விமர்சனங்களை குறித்து விவேக் ராமசாமி கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    எனது வளர்ச்சி பலருக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. எனது குறைந்த வயது காரணமாக நான் இந்த பதவிக்கு தகுதியானவன் அல்ல என சிலர் நினைக்கின்றனர். சுதந்திர பிரகடனத்தை (Declaration of Independence) எழுதும் போது அப்போதைய அதிபர் தாமஸ் ஜெபர்ஸன், 33 வயதே ஆனவர் என்பதை நாம் அறிவோம். குறைந்த வயதுள்ளவர்கள் அவர்களது வாழ்நாளில் இனிமேல்தான் சிறப்பான நாட்களை எதிர்கொள்ள போகிறார்கள். எனவே, தனது வாழ்நாளின் சிறப்பான நாட்களை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள ஒருவர்தான் ஒரு நாட்டிற்கு கிடைக்க போகும் சிறப்பான எதிர்கால நாட்களையும் உருவாக்கி தர முடியும். சிறப்பான தகுதி, மேன்மையை தேடுதல், பொருளாதார வளர்ச்சி, கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்படையான விவாதம் போன்ற அடிப்படை விஷயங்களைத்தான் அமெரிக்கர்கள் இன்னமும் மதிக்கிறார்கள். இதனை நிலைநிறுத்துவதே எனது லட்சியம். வெறும் விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து அரசியல் செய்வதை நான் விரும்பவில்லை.

    இவ்வாறு விவேக் தெரிவித்தார்.

    கணினி மென்பொருள் துறையிலும், பிற உயர் தொழில்நுட்ப துறையிலும் இந்திய இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் பெற போராடும் அமெரிக்காவின் ஹெச்-1பி விசா எனும் அந்நாட்டின் உள்நுழையும் நடைமுறையை நீக்கி விடுவேன் என சில தினங்களுக்கு முன் விவேக் அறிவித்தார். இதற்கு இந்தியர்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

    • எப்.35 ரக விமானம் சம்பவத்தன்று தென் கரோலினா கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது.
    • விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வாஷிங்டன்:

    உலகின் மிகப்பெரிய விமான படையை கொண்டுள்ள நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இந்த படையில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளது. 80 மில்லியன் டாலர் மதிப்பிலான எப்.35 ரக விமானம் சம்பவத்தன்று தென் கரோலினா கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    திடீரென அந்த விமானத்துக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த போர் விமானம் எங்கே சென்றது என தெரியவில்லை.

    அந்த விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விமானத்தின் நிலை என்ன என்பது மர்மமாக உள்ளது. அந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    நவீனரக போர் விமானம் மாயமான சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஐ.நா. கூட்டத்தில் ரஷியா அதிகாரிகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது
    • எங்களுடைய அனைத்தையும், பார்ட்னர் நாடுகளால் கேட்கப்படுவது முக்கியம்

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலகத் தலைவர்களின் ஆதரவை ஜெலன்ஸ்கி நாடி வருகிறார். மேலும், ரஷியாவை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ராணுவ உதவிகளை செய்து வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், உறுதியான எதிர்நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நேட்டோ படையில் சேர்ப்பதாக தெரிவித்து, அதன் மாநாட்டில் அதுகுறித்து முடிவு எடுக்கப்படாமல் விடப்பட்டது.

    ஐ.நா. கண்டனம் தெரிவித்த போதிலும் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஐ.நா.வின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    எங்களை பொறுத்தவரை, எங்குடைய அனைத்து வார்த்தைகள், அனைத்து மெசேஜ்கள் என அனைத்தையும் எங்களுடைய பார்ட்னர்களால் கேட்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். இன்னும் ஐ.நா. அவையில் ரஷியா உறுப்பினர்கள் இருந்தால் அது பரிதாபத்திற்குரியது. ஆனால், இருக்கிறார்கள். ரஷிய பயங்கரவாதிகளுக்காக இங்கே இடம் இருக்கிறது. இந்த கேள்வி எனக்கானது அல்ல. ஐ.நா. அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்குமான கேள்வி என நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    • அமெரிக்காவின் ரெனோவில் விமான பந்தய போட்டி நடந்தது.
    • இறுதிப்போட்டியில் பங்கேற்ற 2 விமானங்கள் தரையிறங்கியபோது மோதி விபத்து ஏற்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடந்தது. இதில் ஏராளமான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. இதன் இறுதிப்போட்டியில் விமானங்கள் கலந்து கொண்டன.

    அப்போது தரை இறங்கும்போது 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் அந்த விமானங்கள் நொறுங்கின. இந்த விபத்தில் அதில் பயணித்த 2 விமானிகள் பரிதாபமாக இறந்தனர்.

    தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று 2 விமானிகளின் உடல்களை மீட்டனர். இறந்தவர்கள் பெயர் விவரங்கள், விபத்துக்கான காரணம் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • எலான் மஸ்க் உலகின் நம்பர் 1. கோடீசுவரரும் அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் ஆவார்
    • மஸ்கை இஸ்ரேலில் முதலீடு செய்ய அழைக்கிறார் நேதன்யாகு

    ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பொது சபையின் சந்திப்பு நாளை அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அங்கு செல்லும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்முறையாக சந்திக்கவிருக்கிறார்.

    தனது பயண திட்டத்தில் ஜோ பைடன் தவிர உலகின் நம்பர் 1. கோடீசுவரரும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) ஆகிய நிறுவனங்களின் நிறுவனருமான அமெரிக்கர் எலான் மஸ்கை சந்திக்கவுள்ளார்.

    இது குறித்து எக்ஸ் கணக்கில் நேதன்யாகு தெரிவித்திருப்பதாவது:

    கலிபோர்னியாவில் எனது பயணத்தை தொடங்க போகிறேன். இந்த நவீன காலகட்டத்திற்கான அதிசயத்தக்க மாற்றங்களின் தலைவரான எலான் மஸ்கை சந்திக்க போகிறேன். அவரிடம் செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதிக்க போகிறேன். இஸ்ரேலில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்துவேன். மனித குலத்தின் அடையாளத்தையும் இஸ்ரேலின் அடையாளத்தையும் மாற்ற கூடிய பயணத்தை மஸ்க் முன்னெடுத்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    "செயற்கை நுண்ணறிவின் அதிவேகமான வளர்ச்சி மனித குல வாழ்வியலுக்கான மிக பெரும் ஆபத்து. அத்துறையில் விளைவுகளை சிந்திக்காமல் மேம்படுத்தி கொண்டே போவது சாத்தானை வரவேற்பதற்கு சமம்" என செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

    இத்துறையில் முன்னணியில் உள்ள ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு போட்டியாக மஸ்க், எக்ஸ்ஏஐ எனும் நிறுவனத்தை கடந்த ஜூலையில் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார்.
    • தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கலிபோர்னியா:

    மீன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என சொல்வார்கள். ஆனால் அதனை சாப்பிட்ட பெண் ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடி வருகிறார். அவரது பெயர் லாரா பராசாஸ் (வயது 40) அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டது. கை விரல்கள் கறுப்பாக மாறியது. பாதங்கள் மற்றும் கீழ் உதடு கறுப்பானது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனாலும் அவர் கோமா நிலைக்கு சென்றார். சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. மேலும் கை, கால்களும் முற்றிலும் செயல் இழந்ததால் உயிருக்கு போராடி வருவதாக லாரா பராசாஸ் தோழி மெசினா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.லாரா கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டார். அவருக்கு சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கடல் உணவுகளில் பொதுவாக கொடிய பாக்டீரியாக்கள் காணப்படும். இந்த உணவுகளை முறையாக தயார் செய்து சாப்பிடாவிட்டால் உடலுக்கு தொந்தரவு கொடுக்கும்.

    சந்தையில் இருந்து வாங்கி வந்த மீனை சரியாக வேக வைக்காமல் அப்படியே சாப்பிட்டதால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • ஆண்ட்ரியா உடற்பயிற்சிக்காக காலை சைக்கிளில் சென்றார்
    • "அவனை பின்புறமாக மோதி தாக்கு" என நண்பன் பதிலளிக்கிறான்

    அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள மாநிலம் நிவேடா. இதன் தலைநகரம் கார்ஸன் சிட்டி.

    இம்மாநிலத்தில் உள்ள பிரபலமான லாஸ் வேகஸ் நகரில் வசித்தவர் 64 வயதான ஆண்ட்ரியா ப்ரோப் (Andreas Probst). இவர் காவல்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    நான்கு நாட்களுக்கு முன் இவர் தனியாக காலை சுமார் 06:00 மணியளவில் தனது சைக்கிளில் உடற்பயிற்சிக்காக புறப்பட்டார். அவர் மேற்கு சென்டினியல் பார்க்வே (West Centennial Parkway) சாலையின் அருகில் வடக்கு டெனாயா சாலை (North Tenaya Way) சாலை வழியாக சைக்கிளை செலுத்தி கொண்டிருந்தார்.

    அப்போது சற்று தொலைவில் ஹுண்டாய் காரில் அமர்ந்திருந்த 18 வயதிற்குட்பட்ட ஒரு சிறுவன் நண்பர்களுடன் உற்சாகமாக பேசிக்கொண்டே "தயாரா?" என கேட்க, அவனது நண்பர்களில் ஒருவன் "ஆமாம், அவனை பின்புறமாக தாக்கு" என பதிலளிக்க, உடனே அந்த சிறுவன் காரை வேகமாக அந்த காவல் அதிகாரி ஓட்டி செல்லும் சைக்கிளின் பின்புறத்தில் இடிக்க, அவர் தூக்கி வீசப்பட்டார். காரில் இருந்த நண்பன் அந்த அதிகாரி தரையில் பரிதாபமாக கிடப்பதை படமாக்கி கொண்டான். காரில் உள்ள மற்றொரு நண்பன், "அவன் தொலைந்தான்" என கூற, அவர்கள் அங்கிருந்து விரைவாக தப்பி செல்கின்றனர்.

    அவ்வழியாக சென்றவர்கள் அடிபட்டவரை காப்பாற்ற அவசர சேவைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மருத்துவ சேவையினர் அந்த காவல் அதிகாரியை யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இந்த நிகழ்ச்சி முழுவதையும் தொடக்கம் முதலே படமெடுத்த அந்த சிறுவனும் அவன் நண்பர்களும் அந்த முழு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். இறுதியாக, அந்த காரை ஓட்டிய சிறுவனையும், அவன் நண்பர்களையும் காவலில் எடுத்துள்ளனர்.

    அச்சிறுவனின் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுவனும் அவன் நண்பர்களும் எதற்காக இந்த கொலையை செய்தனர் எனும் காரணம் தற்போது வரை தெரியவில்லை.

    கொலையை செய்யும் முன்பு, அதனை படமாக்கவும் திட்டமிட்டு, இரக்கமின்றி காரால் சைக்கிளை மோதிய அந்த சிறுவனின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

    ×