என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அப்பணிக்கு தேவையான தகுதி சான்றிதழ்களை பெற்றவர், மேத்யூ
    • லகுனா பீச் பகுதி தம்பதியினர் முதல் முதலாக புகார் அளித்தனர்

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ளது கோஸ்டா மேஸா (Costa Mesa). இப்பகுதியை சேர்ந்தவர் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி (Matthew Zakrzewski).

    மேத்யூ, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பல இல்லங்களில் பல்வேறு சமயங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பில் இருந்து வந்தார். இவ்வேலைக்காக பெற்றோர்கள் தேடும் நபர்களில் முக்கியமானவராக இருந்து வந்தவர் மேத்யூ. அவரது அதிகாரபூர்வ வலைதளத்தில் தன்னை "அசல் குழந்தை பராமரிப்பாளர்" (original babysitter) என விளம்பர படுத்தி கொண்ட மேத்யூ, தன்னை குழந்தைகளுக்கு ஆலோசகராகவும், மூத்த சகோதரனாகவும், விடுமுறை காலங்களில் குழந்தைகளை பார்த்து கொள்பவராகவும் முன்னிலை படுத்தி கொண்டார்.

    அந்த பணிக்கு அந்நாட்டில் தேவைப்படும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

    2019 மே மாதம் அம்மாநில லகுனா பீச் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது குழந்தையை பார்த்து கொள்ளும் பொறுப்பில் இருந்த மேத்யூ, அக்குழந்தையுடன் தகாத உறவில் ஈடுபட முயற்சித்ததாக குற்றம் சாட்டி புகாரளித்தனர்.

    உடனடியாக விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், மேத்யூ முன்னர் பணி செய்த இடங்களில் உள்ள குழந்தைகளையும் அவர்களின் பெற்றொர்களிடமும் விசாரணையை தீவிரமாக்கிய போது அவர் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் மற்றொரு 7 வயது சிறுவனிடமும் தெற்கு கலிபோர்னியாவில் பல வீடுகளில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்களிடமும் இக்குற்றத்தை புரிந்திருப்பதையும் கண்டு பிடித்தனர்.

    மேலும், 2014 ஜனவரி 1லிருந்து 2019 மே 17 வரை மேத்யூ 16க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுவர்கள் அளித்த சாட்சியங்களின் பேரில் ஆரஞ்ச் கவுன்டி அரசு வழக்கறிஞர் அலுவலகம் பதிவு செய்த வழக்கில் அந்நாட்டு ஜூரி அமைப்பு அவர் குற்றத்தை உறுதி செய்துள்ளது.

    குறைந்தபட்சமாக அவருக்கு 690 வருடங்களுக்கும் மேல் சிறை தண்டனை கிடைக்க இருக்கிறது.

    இவ்வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர உதவிய காவல்துறையையும், சாட்சியம் அளித்த குழந்தைகளையும், தயக்கமின்றி புகாரளித்த பெற்றோர்களையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    • பொருளாதார கட்டுப்பாடுகள், விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை அமல்படுத்தின.
    • பொருளாதாரம் உள்ளிட்ட நிலைப்பாடுகளில் ஆப்கானிஸ்தான் பின்தங்கியது.

    வாஷிங்டன்:

    ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் தலிபான்கள் ஆட்சி நடக்கின்றது. தற்போதைய ஆட்சியில் மிக கடுமையான சட்டங்களை அமல்படுத்தி அதனை பின்பற்றும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆட்சியாளர்களின் உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதனால் ஆப்கானிஸ்தானை சமூக அரசியல் கொள்கை அங்கீகாரத்தில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் விலக்கி வைத்தன. அதன்மீது பொருளாதார கட்டுப்பாடுகள், விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை அமல்படுத்தின. இதன் காரணமாக பொருளாதாரம் உள்ளிட்ட நிலைப்பாடுகளில் ஆப்கானிஸ்தான் பின்தங்கியது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், "தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தானை ஆளும் சக்தியாக அங்கீகரிக்க முடியாது. இருப்பினும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை பெற ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள் தகுந்த வரைமுறைகளை பின்பற்ற வேண்டும், திறம்பட்ட ஆட்சிக்கு பெண்கள், குடிமக்களை கொண்டு பொருளாதாரத்தை உயர்ந்த வேண்டும். மேலும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்" என்றார்.

    • மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பல்கலைக் கழகத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் நிலைமை குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டனர்.

    • அமெரிக்காவின் கடன், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி சுமார் ரூ. 2,71,36,50,08,00,00,000.00
    • ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வதாக மெக்கார்த்தி மீது குற்றம் சாட்டப்பட்டது

    அமெரிக்காவில் செனட் சபையும், பிரதிநிதிகள் சபையும் மக்களுக்கான சட்டங்களை இயற்றுகிறது. இதன் உறுப்பினர்கள் மக்களின் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இரு கட்சி ஜனநாயக முறையை கொண்டுள்ள அமெரிக்க ஜனநாயகத்தில் குடியரசு (Republic) கட்சியும், ஜனநாயக (Democratic) கட்சியும் இரு பெரும் கட்சிகள்.

    அமெரிக்காவின் கடன், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி சுமார் ரூ. 271365008,00,00,000.00 ($32.6 ட்ரில்லியன்) எனும் அளவில் இருந்தது. அந்நாட்டில் மத்திய அரசாங்கத்தின் செலவுகளுக்கு கூட பணம் இல்லாத நிலையில், செலவினங்களுக்கான உச்சவரம்பை உயர்த்தினால்தான் அரசாங்கம் இயங்கும் எனும் நிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து திவால் நிலையிலிருந்து அமெரிக்காவை காக்க செலவினங்களுக்கான உச்ச வரம்பை உயர்த்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆளும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது குடியரசு கட்சியின் ஒப்புதலும் தேவைப்பட்டதால், நீண்ட விவாதங்களுக்கு பிறகு சில தினங்களுக்கு முன் இதற்கான சம்மதம் பெறப்பட்டது.

    இந்த விவாதங்களின் போது குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy), தொடர்ந்து ஜனநாயக கட்சியுடன் இணக்கமாக செல்வதாக அவர் சார்ந்திருக்கும் குடியரசு கட்சியில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனால் அவருக்கெதிராக அவர் சார்ந்துள்ள குடியரசு கட்சியே பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் 216 வாக்குகளுடன் தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து பிரதிநிதிகள் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    234 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சபாநாயகருக்கு எதிராக அவர் சார்ந்த கட்சியினரே வாக்களித்து அவரை வெளியேற்றி இருப்பது அமெரிக்க அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது.
    • விபத்துக்கான காரணம் குறித்து தேசிய விமான போக்குவரத்து வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க வடக்கு மாகாணமான டகோட்டாவின் செனட் சபை உறுப்பினர் டக் லார்சன். இவர் உட்டா மாகாணம் கேன்யன்லாண்ட்ஸ் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டார். இதில் அவரது மனைவி ஏமி மற்றும் இரு மகன்களும் உடன் சென்றனர்.

    அமெரிக்கபெடரஷன் நிறுவனத்துக்கு சொந்தமான பி.ஏ-28 என்ற அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தேசிய விமான போக்குவரத்து வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

    • நியூயார்க் நகரில் 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன
    • ஆக்லேண்டு பகுதியில் 249 மில்லிமீட்டர் மழைபொழிவு ஏற்பட்டது

    கடந்த செப்டம்பர் 29 அன்று அமெரிக்காவின் முக்கிய பெருநகரமான நியூயார்க் நகரில் திடீரென பெய்த பெருமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் ஆங்காங்கே வெள்ள பெருக்கு ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட பல விமான சேவைகள் நிறுத்தப்பட்டு நகரின் ஒரு சில பிராந்தியங்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.

    நகரில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அவ்வப்போது புகைப்படங்களும், வீடியோக்களும் பயனர்களால் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வந்தது.

    அவ்வாறு வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் ஒரு பல்பொருள் அங்காடியில் முழங்கால் அளவு வரை நீர், நதி போல் ஓடுவதும், அதில் மிதக்கும் பொருட்களை தாண்டி அக்கடைக்கு வந்த பல வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் நடுவே மெதுவாக நடந்து செல்வதையும் காண முடிந்தது.

    மேலும் அந்த வீடியோவில், "பிரளயத்தை போன்ற வெள்ளத்தில் நியூயார்க் மக்கள் ஒரு பெரிய மளிகை கடையில், ஓடி வரும் தண்ணீரில், மிதக்கும் மளிகை பொருட்கள், மிருகங்களுக்கு நடுவே பொருட்களை வாங்கி செல்கின்றனர்" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது.

    ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது. உண்மையில், இந்த வீடியோவில் காணப்படும் சம்பவம் பல மாதங்களுக்கு முன் 2023 ஜனவரி 28 தேதியிட்ட ஒரு வீடியோவில் உள்ளது.

    நியூசிலாந்து நாட்டின் ஆக்லேண்டு நகரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 24 மணி நேர இடைவெளியில் 249 மில்லிமீட்டர் மழைப்பொழிவு ஏற்பட்ட போது அங்குள்ள கிலென்ஃபீல்டு சூப்பர் மார்கெட் (Glenfield Super Market) எனும் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்க வந்தவர்கள் சிக்கி கொண்டு மெதுவாக வெளியேறியது வீடியோ பதிவாகி வெளியிடப்பட்டது.

    அந்த சம்பவம் குறித்த வீடியோவைத்தான் நியூயார்க் நகர வெள்ளத்துடன் தொடர்புபடுத்தி தவறுதலாக வலைதளங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர்.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.


    • விவேக்கிற்கு அபூர்வா எனும் மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்
    • ஊதியமாக ரூ.83 லட்சம் என்பது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

    அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பாக உள்ள போட்டியாளர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி களத்தில் தீவிரமாக உள்ளார். அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகுகிறது.

    அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த தனது அதிரடி திட்டங்களால் போட்டியாளர்களிடையே வேகமாக முன்னேறி வரும் விவேக் ராமசாமிக்கு திருமணமாகி அபூர்வா எனும் மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

    இந்நிலையில் விவேக் தம்பதியினர் தங்கள் குழந்தைகளை கவனித்து கொள்ள ஒரு பணிப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    இது குறித்து அவர்கள் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளனர். அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    ஆர்வமும் துடிப்பும் வழிமுறையாக உள்ள ஒரு குடும்பத்துடன் இணைந்து, அவர்களின் உற்சாகமான குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அவர்களின் குழந்தைகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி பணியாற்ற இது ஒரு அரிய வாய்ப்பு. வார காலத்தில் 96 மணி நேரம் வரை வேலை இருக்கும். அதற்கு பிறகு ஒரு முழு வாரம் விடுமுறை. குழந்தைகளுக்கு தடையின்றி தினசரி நடவடிக்கைகள் அமைவதை உறுதி செய்ய இப்பணியில் சேர்பவர் எங்களின் தலைமை சமையற்காரர், பிற ஊழியர்கள், வீட்டின் பாதுகாவலர்கள் மற்றும் மெய்காப்பாளர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான விளையாட்டு இடங்கள், அவர்களின் பொம்மைகள், ஆடைகள் ஆகியவற்றை பராமரித்து குழந்தைகள் ஒரு கட்டுக்கோப்பான சூழலில் வளர்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விவேக் ராமசாமியின் பெயரோ அல்லது அவரது குடும்பத்தினர் எவரின் பெயரோ வெளியிடாமல் ஒரு வேலை வாய்ப்பிற்கான வலைதளத்தில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டாலும், இது விவேக் ராமசாமியின் குடும்ப விளம்பரம் என தகவல்கள் உறுதி செய்கின்றன.

    இந்த பணிக்கு ஊதியமாக இந்திய மதிப்பில் ரூ.83 லட்சம் ($100,000) வழங்கப்படும் என விளம்பரத்தில் வெளியிடப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் பலர் - குறிப்பாக இந்திய தாய்மார்கள் - சுவாரசியமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • 1956, அக்டோபர் 14 அன்று டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் காலமானார்
    • சர்தார் படேல் சிலையை உருவாக்கிய சிற்பி இதனை வடிவமைத்துள்ளார்

    தலித்துகள் உரிமைகளுக்காக போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவருமான 'பாபா சாகிப்' டாக்டர். பீம் ராவ் அம்பேத்கர், 1891 ஏப்ரல் 14 அன்று பிறந்தார்.

    அம்பேத்கர், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பிரதமர் ஜவகர்லால் நேருவின் தலைமையிலான முதல் அமைச்சரவையில் சட்ட மற்றும் நீதி துறை அமைச்சராக இருந்தவர். 1956, அக்டோபர் 14 அன்று டாக்டர். அம்பேத்கர் காலமானார். இந்த நாளை அவரது தொண்டர்கள் 'தம்மா சக்ரா பரிவர்தன் தினம்' என கொண்டாடுகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவில், வரும் அக்டோபர் 14 அன்று மேரிலாண்ட் மாநிலத்தில் அக்கோகீக் (Accokeek) பகுதியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகி வரும் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் (AIC) 'சமத்துவத்திற்கான சிலை' (Statue of Equality) என பெயரிடப்பட்ட 19 அடி உயர அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட இருக்கிறது. "ஒற்றுமைக்கான சிலை" (Statue of Unity) எனும் பெயரில் இந்திய மாநிலம் குஜராத்தில் இந்திய சுதந்திர போராட்ட தலைவரான சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த புகழ் பெற்ற சிற்பி ராம் சுதார் (Ram Sutar) கைவண்ணத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு உலகெங்கிலுமிருந்து பல முக்கிய பிரதிநிதிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அமெரிக்க நீதித்துறை கூகுள் மீது "ஆன்டி டிரஸ்ட்" வழக்கு பதிவு செய்துள்ளது
    • எங்களால் சந்தையில் கால் பதிக்கவே முடியவில்லை என்றார் நாதெல்லா

    அமெரிக்க வியாபார நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, நேரடியாகவோ மறைமுகமாகவோ சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தால், பிற நிறுவனங்களின் எதிர்காலம் அதனால் பாதிக்கப்படலாம் என்பதால் அத்தகைய நிறுவனங்களின் மீது அந்நாட்டில் "ஆன்டி டிரஸ்ட்" (antitrust) எனப்படும் வழக்குகள் பதிவு செய்யப்படும்.

    உலகின் முன்னணி இணையவழி வலைதள தேடுதல் இயந்திரமான கூகுள் (Google) எனும் பிரபல நிறுவனத்தின் மீது அத்தகைய ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

    தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட, ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு கூகுள் பல கோடிகள் சட்ட விரோதமாக தந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நீதித்துறையால் வழக்கு தொடரப்பட்டு தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    உலகின் மற்றொரு முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    வலைதள தேடுதல் இயந்திரங்களுக்கான சந்தையில் கூகுள் வலைதளத்தின் ஆதிக்கம் பிற போட்டியாளர்களை தலைதூக்கவே அனுமதிப்பதில்லை. அந்நிறுவனத்தின் வியாபார தந்திரங்கள் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள், ஆப்பிள் நிறுவனத்தினரோடு போட்டிருக்கும் ஒப்பந்தங்களினால் எங்கள் வலைதள தேடுதல் இயந்திரமான 'பிங்' (Bing) 2009லிருந்து சந்தையில் ஒரு இடம் பிடிக்க எவ்வளவு முயன்றும் இயலவில்லை. கூகுள் தேடுதல் இயந்திரத்திலிருந்து பெறும் பயனர்களின் விவரங்களை கூகுள் நிறுவனம், தங்களின் தேடுதல் இயந்திரத்தின் விளம்பரத்திற்கே பயன்படுத்தி பெரும் வருமானம் ஈட்டுகிறது. அந்த தொகையை ஆதிக்கத்தை நிலைநாட்ட மீண்டும் செலவிடுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் எங்களின் பிங் சேவையை பயன்படுத்த அனுமதித்தால் அதற்குண்டான செலவினை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், கூகுளின் ஆதிக்கத்திலிருந்து ஆப்பிள் வெளிவர முடியாததால், மைக்ரோசாப்ட், சந்தையிலேயே நுழைய முடியாமல் தவிக்கிறது.

    இவ்வாறு நாதெல்லா சாட்சியம் அளித்தார்.

    3 தசாப்தங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது விண்டோஸ் எனும் இயக்கமுறை மென்பொருளுக்கு  (Operating System) இதே போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி சந்தையில் முதலிடம் பிடித்ததை இப்போது கூறி தற்போது அதே நிலைமை தங்களுக்கு வந்ததும் மைக்ரோசாப்ட் புலம்புவதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    • பூங்காவிற்கு வருபவர்களில் பலர் தற்காலிக கூடாரம் அமைத்து தங்குவது வழக்கம்
    • சார்லோட் கடைசியாக ஆரஞ்சு நிற சட்டை, கருநீல பேண்ட், கருப்பு நிற க்ராக் காலணி அணிந்திருந்தாள்

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது சரடோகா கவுன்டி பகுதி.

    இங்கு சுமார் 6250 ஏக்கர் பரப்பளவில் உள்ளது மோரு ஏரி மாநில பூங்கா (Moreau Lake State Park) எனப்படும் இயற்கை எழில் மிகுந்த சிறிய வனப்பகுதி. இயற்கை காட்சிகளும், பெரிய ஏரியும், அழகான மரங்களை கொண்ட அடர்ந்த காடுகளும் உள்ளதால் இப்பகுதிக்கு பொழுதுபோக்கவும், அங்கேயே தற்காலிக கூடாரம் அமைத்து சுற்றி பார்க்கவும் மக்கள் வருவது வழக்கம்.

    அவ்வாறு சில தினங்களுக்கு முன் பொழுது போக்க ஒரு குடும்பத்தினர் தங்கள் மகளுடன் வந்திருந்தனர். சார்லோட் சேனா எனும் அவர்களின் 9 வயது மகள் நேற்று முன் தினம் தனது சைக்கிளில் சுற்றி வர கிளம்பினார். கிளம்பி சென்றும் நீண்ட நேரம் திரும்பி வராததால் அவள் பெற்றோர் கவலையடைந்தனர்.

    அச்சிறுமியின் தாய் த்ரிஷா, அவசர சேவை எண் 911-ஐ தொடர்பு கொண்டு தெரிவித்ததின் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையினை தொடங்கினர்.

    விசாரணையில் அச்சிறுமியை அங்குள்ள லூப் ஏ (Loop A) பகுதியில் கடைசியாக அவள் அணிந்திருந்த ஆரஞ்சு நிற சட்டை, கருநீல பேண்ட், கருப்பு நிற க்ராக் (Croc) காலணியுடன் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு பிறகு என்னவானார் என தெரியவில்லை.

    இது குறித்து நியூயார்க் நகர கவர்னர் கேதி ஹோசல் தெரிவித்ததாவது:

    அச்சிறுமியை தேடும் பணியில் 75 காவல்துறை அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18 மணி நேரத்திற்கும் மேலாக நியூயார்க் காவல்துறை அதிகாரிகள், மோப்ப நாய்கள், விமான சேவை, வேட்டை நாய்கள் என அனைத்துவிதமான வளத்தையும் இந்த தேடுதலில் ஈடுபடுத்தியுள்ளோம். பல்வேறு சிறப்பு அதிகாரிகளும் இதில் பங்கு பெற்றுள்ளனர். டிரோன் சேவை, மற்றும் நீருக்கடியில் சென்று மீட்கும் படை சேவை உட்பட எல்லாவித வளங்களையும் உபயோகபடுத்தியுள்ளோம். பூங்காவில் அச்சிறுமி காணாமல் போன போது பரிமாறி கொள்ளப்பட்ட செய்திகள் குறித்தும் ஆராய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எந்த சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்தாமல் தேடி வருகிறோம்.

    இவ்வாறு கவர்னர் தெரிவித்தார்.

    5 அடி 1 அங்குலம் உயரமும் 40 கிலோ எடையும் உள்ள அச்சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை, பொது மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளது. அப்பகுதி முழுவதும் ஆம்பர் எச்சரிக்கை (Amber Alert) எனப்படும் குழந்தைகள் கடத்தல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், ஊழியர்கள் ரெயில் போக்குவரத்தை தான் முழுமையாக நம்பி உள்ளனர்.
    • நியூயார்க் நகர சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்நகரமே முடங்கி போய்விட்டது. மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறு போல ஓடியது. விமான நிலையம் மற்றும் ரெயில் நிலைய சுரங்க பாதைகளை வெள்ளம் சூழ்ந்தது.

    நியூயார்க் நகரை பொறுத்தவரை ரெயில் போக்குவரத்து மிக முக்கியமாக உள்ளது. சுமார் 420 ரெயில் நிலையங்களுடன் உலகின் மிகப்பெரிய வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், ஊழியர்கள் ரெயில் போக்குவரத்தை தான் முழுமையாக நம்பி உள்ளனர்.

    இந்த ரெயில் நிலையங்களில் பயணிகள் செல்வதற்காக சுரங்கபாதைகள் உள்ளன. பலத்த மழையால் இந்த சுரங்க பாதைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளநீரில் பயணிகள் நடந்து சென்றனர். ரெயில் நிலையங்களில் உள்ள நகரும் படிக்கட்டு மற்றும் மேற்கூரைகளில் இருந்து அருவி போல தண்ணீர் கொட்டியது. இதனால் ரெயில் நிலைய சுரங்கபாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பல மணி நேரம் பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள். விமான நிலையமும் மூடப்பட்டதால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள்.

    நியூயார்க் நகர சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள்.பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காலிஸ்தான் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
    • கருத்து சுதந்திரம் வன்முறையை தூண்டும் வகையில் இருக்க கூடாது.

    வாஷிங்டன்:

    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நம் நாடு ஒரு ஜனநாயக நாடு. பேச்சு சுதந்திரம் என்ன என்பதை நாம் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கருத்து சுதந்திரம் வன்முறையை தூண்டும் வகையில் இருக்க கூடாது. அது சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது ஆகும். அது சுதந்திரத்தை பாதுகாப்பது அல்ல.

    கனடா விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோருடன் விவாதித்தோம். நாங்கள் இதைப்பற்றி விவாதித்தோம் என்பதை சொல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் மற்ற விஷயங்கள் குறித்தும் விவாதித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×