என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் நடக்கிறது.
    • பாகிஸ்தானில் நடக்கும் இத்தொடரில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    லாகூர்:

    ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் நடக்கும் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா தெரிவித்துள்ளது.

    எல்லைப் பிரச்சனையால் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் விளையாடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. மேலும், ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் பொது இடத்தில் இந்தியா விளையாடி வருகிறது.

    இதற்கிடையே, சாம்பியன்ஸ் டிராபிக்கான தங்களது போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்தும்படி ஐ.சி.சி.யிடம் பி.சி.சி.ஐ. கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

    சமீபத்தில் பெஷாவரில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சம்பவங்கள் நடந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். எனவே இந்தியா சொல்வது போல் பாதுகாப்பு பிரச்சனைகளை பாகிஸ்தான் சரிசெய்யவில்லை என கவலை தெரிவித்துள்ளார். வங்காளதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களின் போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடப்பது சந்தேகம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, பசித் அலி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு:

    வங்காளதேச தொடருக்குப்பின் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. எனவே நாம் பாதுகாப்புக்கு கவனம் கொடுக்க வேண்டும்.

    இந்த சுற்றுப்பயணங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி கண்டிப்பாக இங்கு நடக்காது. ஆனால் பலுசிஸ்தானிலும் பெஷாவரிலும் நமது ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்து வருகின்றனர்.

    அது ஏன் நடக்கிறது என்பதற்கு அரசாங்கம் மட்டுமே பதிலளிக்க முடியும். அது மிகவும் தவறு. இந்த நேரத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறு விஷயங்கள் நடந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி நடக்காது.

    நமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கொடுக்கப்படும் அதே பாதுகாப்பை வெளிநாட்டு அணிகளுக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • ஃபைஸ் ஹமீத்தின் உத்தரவின் பேரில் டாப் சிட்டி உரிமையாளர் இடத்தில் சோதனை.
    • மிரட்டி 4 கோடி ரூபாய் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு.

    பாகிஸ்தான் இதுவரை இல்லாத சம்பவமாக முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஃபைஸ் ஹமீத்தை ராணுவம் கைது செய்துள்ளது.

    டாப் சிட்டி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, பாகிஸ்தான் ராணுவத்தின் விரிவான விசாரணையின் விளைவாக முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் ஃபைஸ் ஹமீத் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதன் விளைவாக பாகிஸ்தான் ராணுவச் சட்டத்தின் விதிகளின் கீழ் லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் (ஓய்வு) மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என ஐஎஸ்பிஆர் (Inter-Services Public Relations) தெரிவித்துள்ளது.

    ஓய்வுக்குப்பின் பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மீறும் வகையில் பல செயல்களில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை தொடங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஃபைஸ் ஹமீத் 2019 முதல் 2021 வரை உளவுத்துறையின் தலைவராக இருந்தார். அப்போது மிகவும் அதிகமான அதிகாரம் படைத்த நபராவ கருதப்பட்டார்.

    அப்போதைய ஐஎஸ்ஐ தலைவரும் தற்போதைய ராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் பதவியில் இருந்து முன்கூட்டியே நீக்கப்பட்டபோது ஃபைஸ் ஹமீத் உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது பிரதமர் இம்ரான் கானுக்கு முனீர் ஐஎஸ்ஐ தலைவராக இருப்பதில் விருப்பம் இல்லை என்பதால் மாற்றப்பட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    பின்னர் ராணுவம் ஹமீத் மாற்ற முடிவ செய்தது. இதற்கு இம்ரான் கான் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். இதுதான் ராணுவத்துடன் உள்ள தொடர்பு வலுவிழக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

    2023 நவம்பர் 8-ந்தேதி டாம் சிட்டி உரிமையாளர் மொயீஸ் அகமத் கான், உச்சநீதிமன்றத்தில் ஹமீத் அவரது பதவியை தவறாக பயன்படுத்துகிறார் என வழக்கு தொடர்ந்தார். அதன்காரணமாக டாப் சிட் வழக்கு உருவானது.

    மே 12, 2017 அன்று, ஜெனரல் ஹமீத்தின் உத்தரவின் பேரில், ஐஎஸ்ஐ அதிகாரிகள் உயர்மட்ட நகர அலுவலகம் மற்றும் அகமத் வீட்டில் சோதனை நடத்தி தங்கம், வைரங்கள் மற்றும் பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களைக் கைப்பற்றியதாக அகமது கான் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    பின்னர் ஹமீத் சகோதரர் சர்தார் நஜப், தன்னை தொடர்பு கொண்டு இந்த பிரச்சனை முடித்து கொடுப்பதாக அணுகியதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஹமீத்தை தன்னை சந்தித்தார். தன்னிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணம் பறித்ததாகவும் அதில் தெரிவித்திருந்தார். ஹமீத் கடந்த 2022-ம் ஆண்டு நான்கு மாதத்திற்கு முன்னதாக ராணுவ தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    • ஈட்டி எறிதலில் 92.97 மீட்டர் தூரம் வீசி பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார்.
    • ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நதீமுக்கு எருமை மாட்டை பரிசாக வழங்கிய மாமனார்.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார்.

    இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62 ஆம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.

    ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.

    மேலும் அவரது சொந்த ஊரான கானேவாலில் அவரது பெயரில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்றும் நவாஸ் தெரிவித்தார்.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனார் முகமது நவாஸ் எருமை மாட்டை பரிசாக வழங்கினார்.

    அவர்களின் ஊரில் எருமை மாடு என்பது மதிப்பு மற்றும் கௌரவமிக்க ஒன்றாக கருதப்படுகிறது.

    'மாபெரும் வெற்றி பெற்ற பிறகும் நதீம் தனது கிராமம் மற்றும் அவர் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்கிறார்' என அவரது மாமனார் பெருமிதமாக தெரிவித்தார்.

    நவாஸின் மகளான ஆயீஷாவை தான் நதீம் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

    • பாகிஸ்தானில் உள்ள ஒகாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • சத்தம் கேட்டு முழித்த தாய் தனது மகனிடம் சண்டையை நிறுத்துமாறு கோரியுள்ளார்.

    9-ம் வகுப்பில் கணித தேர்வில் தூவியடைந்த தங்கையை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள ஒகாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இரவுநேரத்தில் தாய் உறங்கியபின்பு தேர்வில் தோல்வியடைந்தத்த்து குறித்து தங்கை சஜிதாவிடம் அவரது அண்ணன் அதில் உசைன் கேள்வி கேட்டுள்ளார். அது பின்பு வாக்குவாதமாக மாறியுள்ளது.

    சத்தம் கேட்டு முழித்த தாய் தனது மகனிடம் சண்டையை நிறுத்துமாறு கோரியுள்ளார். ஆனால் தாயின் பேச்சை கேட்காத உசைன் தனது துப்பாக்கியை எடுத்து தங்கையை சுட்டுள்ளார். பின்பு துப்பாக்கியுடன் அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.

    துப்பாக்கி சூட்டால் பலத்த காயமடைந்த சஜிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தாயார் கொடுத்த புகாரின் பேரில் அவரது மகன் மீது கொலைவழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகிறது. 

    • ஈட்டி எரித்தலில் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கம் வென்றார்
    • ஈட்டி எரிதலில் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கம் வென்றார்

    பாரீஸ் ஒலிம்பிக்சில் நேற்று முன் தினம் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    நீரஜின் தாய் சரோஜா தாய் மகனின் வெற்றி குறித்து பேசுகையில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், எங்களுக்கு இந்த வெள்ளி தங்கத்துக்கு நிகரானது, நீரஜுக்கு காயம் ஏற்பட்டிருந்தது, எனவே இந்த அளவு விளையாடியதே மகிழ்ச்சிதான். [பாகிஸ்தான் வீரர்] நதீம் தங்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சியே. அவரும் மகன் போலத்தான். அர்சத் நீரஜின் நண்பனும் சகோதரனும் போன்றவர். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். அனைவரும் [வீரர் வீராங்கனைகளும்] எனது பிள்ளைகள்தான் என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள அர்ஷத் நதீமின் தாயும் நீரஜ் சோப்ராவும் தனது மகன் போலத்தான் என்று கூறியிருக்கிறார்.

    பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று பாகிஸ்தான் திரும்பிய ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது பேசிய நதீம், "ஒரு தாய் அனைவருக்கும் தாயாகவும் தான் உள்ளார். எனவே அவர் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறார். நீரஜ் சோப்ராவின் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். அவர் எனக்காக வேண்டிக்கொண்டார். அதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

    • கடந்த வருடம் மே 9-ந்தேதி இம்ரான் கான் கட்சி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது வன்முறை வெடித்தது.
    • தனது கட்சி ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டியதாக அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். 71 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாப் (PTI-Pakistan Tehreek-e-Insaf) கட்சியை தொடங்கி பிரதமரானார். பின்னர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

    இவர் மீது பயங்கரவாதம் தொடர்பான 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் ஜாமின் வழங்கும்படி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

    கடந்த வாரம், லாகூர் உயர் நீதிமன்றம் இந்த வழக்குகளில் நீதிமன்ற காவல் வழங்குவதற்கான பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தின் முடிவை ரத்து செய்தது. இம்ரான் கான் வன்முறைப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கவில்லை என்றால் அவருக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டது.

    கடந்த ஜூலை 14-ந்தேதி இது தொடர்பான வழக்குகளில் (லாகூரில் பதியப்பட்ட) பஞ்சாப் போலீசார் இம்ரான் கானை கைது செய்தனர். ராணுவ அதிகாரி வீடு மீது தாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இம்ரான் கான் முன்ஜாமின் கேட்ட நிலையில் நிதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.

    தன் மீதான ஒரே குற்றச்சாட்டு ஆதரவாளர்களை வன்முறைக்கு தூண்டியதாக கூறப்படுவது மட்டும்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    2023 மே 9-ந்தேதி நான் என்ஏபி (National Accountability Court) காவலில் இருந்தேன். வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த அற்பமான எஃப்.ஐ.ஆரில் என்னைச் சிக்க வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

    2023-ம் ஆண்டு மே 9-ந்தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது நாடு தழுவிய போராட்டத்தின்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஜெயிலில் இருக்கும் இம்ரான் கான் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்து வருகிறார்.

    ராவல்பிண்டியில் உள்ள உயர்பாதுகாப்பு அடியாலா ஜெயலில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி புஷ்ரா பிபியும் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தால் பதியப்பட்ட தோஷாகானா ஊழல் வழக்கில் கடந்த வருடம் ஆகஸ்ட் 5-ந்தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளில் ஜாமின் கிடைத்த போதிலும் ஜெயிலில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில் உள்ளார்.

    • ஆப்கனிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் இந்த போஷேரா கிராமம் அமைந்துள்ளது.
    • துப்பாக்கிகள், ராக்கெட் லான்சர்கள் என நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி இரண்டு தரப்பும் சண்டையிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களுக்கிடையே வெடித்த மோதலில் 36 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வாழும் மேல் குர்அம் [Upper Kurram] மாவட்டத்தில் உள்ள போஷேரா [Boshera] கிராமத்தில் கடந்த 5 நாட்களாக மோதல்கள் நடந்துவருகின்றன. ஆப்கனிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் இந்த போஷேரா கிராமம் அமைந்துள்ளது.

    போஷேரா, மலிகேல் [Malikhel], தண்டர் [Dandar] உள்ளிட்ட கிராமங்களில் வசித்துவரும் இஸ்லாமின் ஷியா பிரிவை பின்பற்றும் பழங்குடியினருக்கும் சன்னி பிரிவைப் பின்பற்றும் பழங்குடியினருக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்துவந்துள்ளன. சமீபத்தில் அரசு நடத்திய பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் திரும்பிய நிலையில் போஷேரா கிராமத்தில் கடந்த 4 நாட்கள் முன் நிலத்தகராறு காரணமாக மீண்டும் இரு குழுக்களிடையிலும் வன்முறை வெடித்துள்ளது.

     

    துப்பாக்கிகள், ராக்கெட் லான்சர்கள் என நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி இரண்டு தரப்பும் சண்டையிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு மட்டும் நான்கு பெரிய தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதல்களில் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 162 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கலவரக்காரர்கள் தங்கியிருந்த பதுங்கு குழிகளை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இந்த வன்முறையானது மேல் குர்அம் மாவட்டத்தில் மற்ற பகுதிகளுக்கும் பரவி உள்ளதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முடியிலுமாக முடங்கியுள்ள நிலையில் கலவரத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர். 

     

    • சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசு குற்றச்சாட்டு.
    • பெண் தொண்டர்களை கைது செய்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதில் சில வழக்குகளில் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

    இதற்கிடையே அவரது கட்சி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசு குற்றம் சாட்டியது. இதனால் இம்ரான்கான் கட்சியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் இம்ரான்கான் கட்சியின் தலைமையகத்தில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். தலைநகர் இஸ்லாமா பாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்குள் போலீஸ் படை நுழைந்தது.

    அங்கு பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். பின்னர் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹசன் உள்பட முக்கிய தலைவர்கள் மற்றும் பெண் தொண்டர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

    போலீசாரின் இந்த திடீர் நடவடிக்கை பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இம்ரான்கான் கட்சியை தடை செய்ய அரசு முயற்சி செய்து வரும் சூழலில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்காளதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்கிறது.
    • அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும் வங்காளதேச அணி, அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது.

    முன்னதாக, கனடிய லீக் தொடர் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்க முன்னணி வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஷா அப்ரிடி உள்ளிட்டோருக்கு என்.ஓ.சி. சான்றிதழ் வழங்கப்படவில்லை.

    அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு பாலிசியின்படி சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதே என்ஓசி மறுக்கப்படக் காரணம் என கூறிய பிசிபி, வீரர்களுக்கு உடல் தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும். அளவுகோல்களுக்கு பொருந்தாத வீரர்களுக்கு இடமில்லை. ஒழுக்கத்திலும் எந்த சமரசமும் இருக்காது என தெரிவித்துள்ளது.

    வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என பிசிபி தெரிவித்துள்ளது.

    • 1996-ல் இருந்து மறைந்த பின்லேடனின் நெருங்கிய உதவியாளராக இருந்துள்ளார்.
    • பாகிஸ்தானில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

    பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு துறையின் அதிகாரிகள், அல்-கொய்தா நிறுவன தலைவரான பின்லேடனின் நெருங்கிய உதவியாளரும், அந்த இயக்கத்தின் மூத்த தலைவருமான அமின் உல் ஹக் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.

    புலனாய்வு அடிப்படையிலான தேடுதல் வேட்டையில் பயங்கரவாதியான அமின் உல் ஹக் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டிருந்தது முறியடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட அமின் உல் ஹக்கை, பஞ்சாப் மாகாணம் குஜராத் மாவட்டத்தில் உள்ள சராய் அலாம்கிர் நகரில் இருந்து காவலில் எடுத்துள்ளோம் என பயங்கரவாத தடுப்பு துறையின் டிஐஜி உஸ்மான் அக்ரம் கொனதல் தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் போலீசின் பயங்கரவாத தடுப்பு துறையின் செய்தி தொடர்பாளர் "அமின் உல் ஹக் கைது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையின் முக்கியமான திருப்புமுனை" எனத் தெரிவித்துள்ளார்.

    முக்கியமான கட்டமைப்புகள் மற்றும் பிரபலங்களை குறிவைத்து பஞ்சாப் மாகாணத்தில் சதி செயல்களில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இவர் 1996-ல் இருந்து பின்லேடனின் நெருங்கிய உதவியாளராக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.

    கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள அப்போதாபாத்தில் அமெரிக்கா நடத்திய வேட்டையில் மறைந்து இருந்த பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டார்.

    அமின் உல் ஹக் 2021-ல் ஆப்கானிஸ்தானில் காணப்பட்டதாகவும் அவரிடம் பாகிஸ்தான் ஐடி கார்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் கட்சி இடஒதுக்கீடு மூலம் 20 இடங்களை பெற தகுதியானது- உச்சநீதிமன்றம்
    • நாட்டுக்கு எதிரான செயலில் இம்ரான் கான் கட்சி ஈடுபட்டதற்கான சாட்சி தெளிவாக உள்ளது- அரசு

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மூன்று வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று முக்கிய வழக்குகளில் இரண்டில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இந்த நிலையில் இம்ரான் கான் கட்சியான பாகிஸ்தான் தெரீக்-இ-இன்சாஃப் கட்சி நாட்டுக்கு எதிரான செயலில் ஈடுபட்டுள்ளது. இதனால் தடைவிதிக்க முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் தகவல்தொடர்பு துறை மந்திரி அட்டாயுல்லா டரார் தெரிவித்துள்ளது.

    அக்கட்சியை தடை செய்வதற்கு போதுமான தெளிவான சாட்சிகள் உள்ளது. தடைக்கான வேலைகளை அரசு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    இம்ரான் கட்சிக்கு குறைந்தபட்சம் இடங்கள் நாடாளுமன்றத்தில் சட்டவிரோதமாக மறுக்கப்பட்டது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இது ஆளும் கூட்டணி ஆட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இம்ரான் கான் கட்சி பிப்ரவரி 8-ந்தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டது. இதனால் இம்ரான் கான் கட்சி வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர்.

    • விவாகரத்து அல்லது கணவர் இறந்த நான்கு மாதத்திற்கு பிறகுதான் மறுதிருமணம் செய்து கொள்ள முடியும்.
    • இம்ரான் கானின் மனைவியின் முன்னாள் கணவர் திருமணம் செல்லாது என வழக்கு தொடர்ந்திருந்தார்.

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் புஷ்ரா பிபியை திருமணம் செய்து கொண்டார். இம்ரான் கானின் 3-வது திருமணம் இதுவாகும்.

    ஆனால் இஸ்லாத்திற்கு எதிராக அதாவது விவாகரத்து அல்லது கணவன் இறந்த பிறகு நான்கு மாதங்கள் காத்திருக்காமல் அதற்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டதாக புஷ்ரா பிபியின் கணவன் வழக்கு தொடர்ந்தார். மேலும் இம்ரான் கான்- புஷ்ரா பிபி திருமணம் செல்லாது என உத்தரவிடக்கோரியும் கேட்டுக்கொண்டார்.

    இந்த வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி இம்ரான் கான்- புஷ்ரா பிபி ஜோடிக்கு கடந்த பிப்ரவரி மாதம் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை எதிர்த்து கூடுதல் மாவட்ட செசன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    அஃப்சல் மஜோகா என்ற நீதிபதி தலைமையில் இந்த வழக்கு நடைபெற்றது. இன்று காலை இந்த வழக்கின் தீர்ப்பை மதியம் தெரிவிப்பதாக தெரிவித்தார். அதன்படி இன்று மதியம் தீர்ப்பை வாசித்தார். அப்போது இம்ரான் கான்- புஷ்ரா பிபியை விடுவித்து உத்தரவிட்டார்.

    மேலும், மற்ற வழக்குகளில் இவர்கள் தேடப்படவில்லை என்றால் உடனடியாக ஜெயிலில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    தோஷாகானா ஊழல் வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிப்ஹெர் வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இஸ்லாத்திற்கு எதிரான திருமண வழக்கில் மட்டும் சிறைத்தண்டனை பெற்றிருந்தார். தற்போது இந்த வழக்கிலும் விடுதலை பெற்றுள்ளதால் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது.

    புஷ்ரா பிபி தனது முன்னாள் கணவர் மனேகாவை விவாகரத்து செய்து 2018-ல் இம்ரான் கானை திருமணம் செய்து கொண்டார். புஷ்ரா பிபி- மனேகாவின் 28 வருட திருமண வாழ்க்கையில் ஐந்து குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் புஷ்ரா பிபியின் முன்னாள் கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×