என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 3-வது நாள் உணவு இடைவெளி வரை ஆஸ்திரேலியா 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
    • உஸ்மான் கவாஜா 0, மார்னஸ் லபுஸ்ஷேன் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி 26-ம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா கடுமையாகப் போராடி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 63 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அப்துல்லா ஷபிக் 62 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    அதைத்தொடர்ந்து 54 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 0, மார்னஸ் லபுஸ்ஷேன் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இந்நிலையில் 3-வது நாள் உணவு இடைவெளி வந்தது. இந்த இடைவெளி முடிந்து போட்டி மீண்டும் துவங்குவம் நேரத்தில் பெவிலியனில் இருந்த 3-வது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்ஒர்த் திடீரென காணவில்லை. அதன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. நடுவர் எங்கே என்று அனைவரும் தேடிப் பார்த்தனர்.

    சில நிமிடங்கள் கழித்து மிகவும் சோர்வாக வந்த அம்பயர் நாற்காலியில் அமர்ந்து தாம் லிஃப்டில் மாட்டிக் கொண்டதாக வேடிக்கையாக தெரிவித்தார். மைதானத்தின் மற்றொரு தளத்திற்கு சென்று வரும் வழியில் அவர் லிஃப்டில் மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. அதன் பின் அதிலிருந்து வந்த அவர் நாற்காலியில் அமர்ந்து "நான் நன்றாக இருக்கிறேன்" என்பது போல் கையை சிக்னல் கொடுத்தது ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.


    குறிப்பாக பேட்டிங் செய்வதற்காக களத்தில் இருந்த டேவிட் வார்னர் மற்றும் எஞ்சிய 2 அம்பயர்களும் 3வது அம்பயர் லிஃப்டில் மாட்டிக் கொண்டார் என்பதை அறிந்து வாய்விட்டு சிரித்தார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஸ்மிருதி மந்தனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
    • பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

    மும்பை:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

    27 வயதான மந்தனா மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் 'இன்ஸ்டாகிராமில் உங்களை நிறைய ஆண்கள் பின்தொடர்கிறார்கள். உங்களது கணவர் எப்படி இருக்க வேண்டும், எந்தவிதமான குணாதிசயங்களை கொண்டவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார்.


    அதற்கு சிரித்தபடி மந்தனா அளித்த பதிலில், 'இதுபோன்ற கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் நல்ல பையனாக இருக்க வேண்டும். என் மீது அக்கறை உடையவராக, என் விளையாட்டை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும்.

    நான் விரும்பும் இரண்டு குணங்கள் இது தான். நான் விளையாட்டில் இருப்பதால் அவரிடம் அதிக நேரம் செலவிட முடியாது. அதை புரிந்துகொண்டு என் மேல் மிகுந்த அன்பு காட்டுபவராக இருக்க வேண்டும். இது தான் நான் முக்கியமாக பார்க்கக்கூடியது' என்று கூறினார்.

    • மும்பையில் இன்று நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • ஆஸ்திரேலியா டெஸ்டில் தடுமாற்றம் கண்டாலும் குறுகிய வடிவிலான போட்டிகளில் அசுர பலமிக்கது.

    மும்பை:

    அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது.

    அடுத்ததாக 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் மும்பையில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

    ஆஸ்திரேலியா டெஸ்டில் தடுமாற்றம் கண்டாலும் குறுகிய வடிவிலான போட்டிகளில் அசுர பலமிக்கது. 50 ஓவர் உலகக் கோப்பையை 7 முறை கைப்பற்றி வாகை சூடியுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 50 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ள இந்தியா அதில் 40-ல் தோல்வியை சந்தித்துள்ளது. 10-ல் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது. அதுவும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக ஆடிய 7 ஆட்டங்களில் இந்தியாவுக்கு சோகமே மிஞ்சியிருக்கிறது.

    ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இந்த முறை முட்டுக்கட்டைபோடும் உத்வேகத்துடன் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஆல்-ரவுண்டர்கள் தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா தாக்குர், சுழற்பந்து வீச்சாளர்கள் சினே ராணா, ஸ்ரேயங்கா பட்டீல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தயாராகி வருகிறார்கள்.

    இந்திய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜூம்தர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'ஆஸ்திரேலியா சிறந்த ஒரு அணி. நீண்ட காலமாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதனால் தான் அவர்கள் 50 ஓவர் போட்டியிலும் சரி, 20 ஓவர் போட்டியிலும் சரி நிறைய உலகக் கோப்பைகளை வென்று இருக்கிறார்கள். அதே சமயம் நாங்கள் எங்களது பலத்துக்கு தக்கபடி கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். மேலும் உலகின் மிகச்சிறந்த ஒரு அணிக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு நாளிலும் நாங்கள் முன்னேற்றம் காண்பதை எதிர்நோக்கி உள்ளோம். அதை செய்தாலே எனக்கு மகிழ்ச்சி தான்' என்றார்.

    ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் அலிசா ஹீலி, கிம் கார்த், லிட்ச்பீல்டு, தாலியா மெக்ராத், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, அனபெல் சுதர்லாண்ட், ஆஷ்லி கார்ட்னெர், மேகன் ஸ்கட் என்று தரமான வீராங்கனைகளுக்கு பஞ்சமில்லை. டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் வரிந்து கட்டுவார்கள். பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் மத்திய அரசு வழங்கிய விருது, பதக்கங்களை திருப்பி அளிப்பதாக அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    • இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அமைத்தது.

    புதுடெல்லி:

    பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர், விராங்கனைகள் டெல்லியில் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து மல்யுத்த சம்மேளன நடவடிக்கைகளில் இருந்து பிரிஜ் பூஷன் ஒதுங்கினார். கோர்ட்டு உத்தரவுப்படி அவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடக்கிறது.

    கடந்த 21-ந்தேதி டெல்லியில் நடந்த இந்திய மல்யுத்த சமமேளன புதிய நிர்வாகிகள் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த கனமே, மல்யுத்தத்தில் மீண்டும் பிரச்சினை வெடித்தது. பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் யாரும் மல்யுத்த சம்மேளனத்தில் இருக்கக்கூடாது என்பது தான் வீரர்களின் பிரதான கோரிக்கை. தாங்கள் நினைத்தபடி நடக்காததால் வீராங்கனைகள் மறுபடியும் கோதாவில் குதித்துள்ளனர். பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் மத்திய அரசு வழங்கிய விருது, பதக்கங்களை திருப்பி அளிப்பதாக அறிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, புதிய தலைவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கடந்த 24-ந்தேதி மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. மேலும், வீரர்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பை இந்த மாத இறுதிக்குள் நடத்தப்போவதாக புதிய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்றும் விளையாட்டு அமைச்சகம் சுட்டிக்காட்டியது. அத்துடன் மல்யுத்த நிர்வாகத்தை தற்காலிகமாக கவனிக்க இடைக்கால கமிட்டியை அமைக்கும்படி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கேட்டுக் கொண்டது.

    இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அமைத்தது. இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா கமிட்டியின் தலைவராகவும், முன்னாள் ஆக்கி வீரர் எம்.எம். சோமயா, முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை மஞ்ஜூஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்த கமிட்டியில் இருப்பார்கள்.

    வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது, இதன் இணையதளத்தை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை எல்லாம் இடைக்கால கமிட்டி மேற்கொள்ளும்.

    ஏற்கனவே நிர்வாகிகள் தேர்தலுக்கு முன்பாக சில மாதங்கள் இடைக்கால கமிட்டி தான் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாக பணிகளை கவனித்தது. அதில் பூபிந்தர் சிங் பஜ்வாவும் ஒரு உறுப்பினராக இருந்தார். அந்த அனுபவம் அவருக்கு நிர்வாகத்தை திறம்பட வழிநடத்த உதவிகரமாக இருக்கும்.

    பஜ்வா கூறுகையில், '2024-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. அதற்கு தயாராவதை உடனடியாக தொடங்க வேண்டும். பயிற்சி முகாமுடன் சீனியர் மற்றும் ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளை விரைவில் நடத்துவோம். நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக மல்யுத்தம் திகழ்கிறது. முடிந்த அளவுக்கு ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வெல்லும் வாய்ப்பை உருவாக்குவதே எங்களது இலக்கு' என்றார்.

    • பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் (62), ஷான் மசூத் (54) நல்ல தொடக்க கொடுத்தனர்.
    • கம்மின்ஸ் 5 விக்கெட்டும், லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தி பாகிஸ்தான் கட்டுப்படுத்தினர்.

    மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா ஷபிக் (62), ஷான் மசூத் (54) நல்ல தொடக்க கொடுத்தனர். இருந்த போதிலும் பாபர் அசாம் (1), சாத் ஷஹீல் (9) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரிஸ்வான் பொறுப்புடன் நின்று விளையாட நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. ரிஸ்வான் 29 ரன்களுடனும், ஆமிர் ஜமால் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஸ்வான் மேலும் 13 ரன்கள் சேர்த்து 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜமால் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுக்க பாகிஸ்தானில் முதல் இன்னிங்சில் 264 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், நாதன் லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தென் ஆப்பிரிக்கா அணி 2வது நாள் முடிவில் 11 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதமடித்து 101 ரன்களில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 5 ரன்னில் அவுட்டானார். சோர்சி 28 ரன்னிலும், பீட்டர்சன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    4வது விக்கெட்டுக்கு டீன் எலருடன் ஜோடி சேர்ந்த டேவட் பெடிங்காம் அரை சதம் கடந்து 56 ரன்னில் வெளியேறினார். டீன் எல்கர் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. டீன் எல்கர் 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    நேப்பியர்:

    வங்காளதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 2-1 என தொடரைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நீஷம் 48 ரன்கள் எடுத்தார்.

    வங்காளதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன், முஸ்தபிசுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி 42 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வங்காளதேசம் 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு137 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக மெஹிதி ஹசன் தேர்வு செய்யப்பட்டார்.

    • 2-வது விக்கெட்டுக்கு எல்கர் - டோனி ஜோடி 93 ரன்கள் சேர்த்தது.
    • டோனி டி ஜோர்ஜி 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 101 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக மார்க்ரம் - எல்கர் களமிறங்கினார். மார்க்ரம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து எல்கருடன் டோனி டி ஜோர்ஜி ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை அருமையாக எதிர் கொண்டு விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்கர் அரைசதம் விளாசினார். பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடி 93 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தது.

    இந்நிலையில் விராட் கோலி ஸ்டெம்பிள் இருந்த பெய்ல்சை மாற்றி வைத்தார். மாற்றி வைத்த முதல் பந்து பவுண்டரி போனது. 2 பந்தில் பும்ரா பந்து வீச்சில் டோனி டி ஜோர்ஜி அவுட் ஆனார். இதற்கு முன்பு ஸ்டூவர்ட் பிராட் இரண்டு பெய்ல்ஸை எடுத்து சற்று பார்த்த பின், இரண்டையும் மாற்றி வைத்தார். அடுத்த பந்தே ஆட்டமிழந்தார். அதுபோல கோலி முயற்சிக்கு 2 பந்துகள் கடந்து விக்கெட் கிடைத்தது. தற்போது இந்த 2 வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அரையிறுதியில் உலகின் 3-ம் நிலை வீரரான ஃபேபியானோ கருணாவை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.
    • மேக்னஸ் கார்ல்சனுடன் பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் பல இந்தியர்கள் விளையாடியுள்ளனர்.

    உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.

    அரையிறுதி சுற்றில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று இருந்ததால், சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

    மேக்னஸ் கார்ல்சனுடன் பல ஆண்டுகளாக செஸ் உலகக்கோப்பை போட்டியில் பல இந்தியர்கள் விளையாடியுள்ளனர். ஆனால் 2000 மற்றும் 2002ல் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே இறுதிச்சுற்றில் விளையாடி முதல் இடத்தை பிடிக்கமுடிந்தது. அதன்பின்னர், கடந்த 20 ஆண்டுகளில், இறுதிச் சுற்றுக்கு இந்தியர்கள் யாரும் செல்லவில்லை.

    எட்டு சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பெரும்பாலான இந்திய வீரர்களால் முதல்-இரண்டாம் சுற்றுக்கு அப்பால் செல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டு, உலகக் கோப்பையின் காலிறுதி போட்டியில், எட்டு நபர்கள் தேர்வானார்கள். அதில் நான்கு இந்தியர்கள் இருந்தனர். அதாவது இறுதி எட்டு வீரர்களில் பாதி பேர் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள். சீனா, ரஷ்யா அல்லது போலந்து மற்றும் இங்கிலாந்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை. அதனால் இந்த போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதை நம்மால் உணர முடிந்தது.

     

    மேலும், இந்த போட்டியில் பங்குபெற்ற வீரர்கள் பெரும்பாலும், இருபதுகள் மற்றும் இருபதுகளின் தொடக்கத்தில் உள்ள வீரர்கள். இந்தியாவின் இளம் தலைமுறை செஸ் விளையாட்டை எப்படி உள்வாங்கி உள்ளது என்பதற்கு இந்த இளம் முகங்களே சாட்சி.

    FIDE புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் உலக கோப்பை போட்டிக்கு சென்றனர். அதில் 10 ஆண்களும், 7 பெண்களும் அடங்குவர். கடந்த முறை, ரஷியாவில் 2021ல் FIDE உலக கோப்பை போட்டிக்கு நான்கு பெண்கள் உள்பட இந்திய வீரர்கள் பங்குபெற்றனர்.

    18 வயதிலேயே தன்னுடைய பெயரை வரலாற்றில் மிக தீர்க்கமாக பதித்துள்ளார் பிரக்ஞானந்தா. மிகவும் இளம் வயதில் செஸ் உலக்கோப்பை இறுதிப்போட்டியில் நுழைந்த முதல் வீரர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். உலக சாம்பியனை கடைசி வரை போராட விட்ட பிரக்ஞாந்தாவை முதலமைச்சர் உள்பட பல சினிமா பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

    • சென்சூரியன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற சாதனையை ராகுல் படைத்துள்ளார்.
    • கடந்த 2021-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் 123 ரன்கள் குவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் கடுமையாக போராடி 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். -

    இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 101 ரன்களில் ராகுல் ஆட்டமிழந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையையும் அவர் படைத்தார்.

    அதை விட கடைசியாக இதே மைதானத்தில் கடந்த 2021-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 123 ரன்கள் குவித்த அவர் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். அந்த வரிசையில் தற்போது இப்போட்டியிலும் சதமடித்துள்ள அவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சென்சூரியன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற தனித்துவமான சாதனையும் படைத்துள்ளார்.

    இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் அனைவரும் சென்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் அதிகபட்சமாக தலா 1 டெஸ்ட் சதம் மட்டுமே அடித்துள்ளனர். தற்போது கேஎல் ராகுல் மட்டுமே 2 சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு வீரராக சாதனை படைத்துள்ளார்.

    • பாகிஸ்தான் அணி 2-ம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்தது.
    • இந்த போட்டியில் பாபர் அசாம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்து இருந்தது. லபுஷேன் 44 ரன்னுடனும், டிரெவிஸ் ஹெட் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்த னர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது.

    தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 96.5 ஓவரில் 318 ரன்னில் ஆல் அவுட் ஆனது. லபுஷேன் 63 ரன்னும், மிச்சேல் மார்ஷ் 41 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் அமீர் ஜமால் 3 விக்கெட்டும், ஷகீன்ஷா அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-ம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் பாபர் அசாம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் எக்ஸ் தளத்தில் AUSvPAK மற்றும் பாபர் அசாம் பெயர் ட்ரெண்டானது. அவர் அறிமுகமானது முதல் இப்படி ஒரு மோசமான சாதனையை படைத்ததில்லை. ஒரு காலண்டர் ஆண்டில் டெஸ்ட் தொடரில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் இருப்பது இதுவே முதல் முறை. இந்த ஆண்டில் பாகிஸ்தான் அணி 5 டெஸ்ட் தொடர்களில் விளையாடி உள்ளது.

    மேலும் கடந்த 10 போட்டிகளில் ஒரு சதம் மட்டுமே விளாசிய இவர் அடுத்து தொடர்ச்சியாக 9 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதனை வைத்து ரசிகர்கள் அவரை டிரோல் செய்து வருகின்றனர்.

    • 101 ரன்களில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார்.
    • தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், பர்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    செஞ்சூரியன்:

    தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் 5 ரன், ஜெய்ஸ்வால் 17 ரன், சுப்மன் கில் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவு ஆடிய விராட் 38 ரன், ஸ்ரேயாஸ் 31 ரன், ஷர்துல் 24 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 59 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கே.எல்.ராகுல் 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    இதனையடுத்து 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிராஜ் 5 ரன்னில் அவுட் ஆனார். சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கேஎல் ராகுலுக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து வந்த பிரசித் கிருஷ்ணா அவுட் ஆனால் கேஎல் ராகுல் சதத்தை தவறவிடுவார். இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா சந்தித்த 2-வது பந்து கீப்பரிடம் சென்றது. உடனே ராகுல் 1 ரன் எடுத்தார். அதே ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பி தனது அசத்தலான சதத்தை பதிவு செய்தார்.

    சதம் அடித்த அடுத்த ஓவரிலேயே விக்கெட்டையும் பறிகொடுத்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 101 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், பர்கர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×