என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
- முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இப்போட்டி வரும் 28-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி வரும் 28-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேன்-எட்வர்ட் வின்டர் ஜோடியுடன் மோதியது.
இதில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் போபண்ணா ஜோடி ஆஸ்திரேலிய ஜோடியை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறியது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆண்ட்ரே ரூப்லெவ்- செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.
- 3-வது சுற்று ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்- தாமஸ் மார்ட்டின் எட்செவரியுடன் மோதினார்.
மெல்போர்ன்:
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ரூப்லெவ் 6-2, 7-6 ( 8-6), 6-4 என்ற செட் கணக்கில் செபாஸ்டியன் கோர்டாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். வரும் 21ம் தேதி நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை ரூப்லெவ் எதிர்கொள்ள உள்ளார்.
மற்றொரு 3-வது சுற்று ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), தாமஸ் மார்ட்டின் எட்செவரி (அர்ஜென்டினா) உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-3 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சின் 100-வது போட்டியாக அமைந்துள்ளது. 100 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோகோவிச் அதில் 92-ல் வெற்றி பெற்றுள்ளார்.
- இந்திய மகளிர் அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.
- 3-வது இடத்துக்கான போட்டியில் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த ஆண்டில் பாரிசில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறுவதற்கான எஃப்எச் மகளிர் ஒலிம்பிக் குவாலிபயர் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இதில், இந்தியா - ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தில், இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்த நிலையில் போட்டியானது 2-2 என சமநிலை அடைந்தது. இதனால் பெனால்டி முறை பின்பற்றப்பட்டது. இதில் 4-3 என்ற கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவுடன் இணைந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றது.
தோல்வியடைந்தாலும் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற இந்திய அணிக்கு மற்றொரு வாய்ப்பு இருந்தது. அது என்னவென்றால் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜப்பானை இந்தியா வீழ்த்த வேண்டும்.
இந்நிலையில் இந்தியா- ஜப்பான் அணிகள் இன்று மோதியது. இதில் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஒலிம்பிக் கனவு இதோடு முடிவுக்கு வந்தது.
- எப்போதும் நீங்கள் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவீர்கள்.
- கோலி மிகப்பெரிய ஈகோவை கொண்டுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் வருகிற 25-ம் தேதி தொடங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அந்த தொடரில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடித்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது.
இந்நிலையில் விராட் கோலியை அவுட்டாக்க ஆர்வமாக இருப்பதாக இங்கிலாந்து வீரர் ராபின்சன் சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எப்போதும் நீங்கள் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவீர்கள் அல்லவா? நீங்கள் எப்போதுமே சிறந்த வீரர்களை அவுட் செய்ய விரும்புவீர்கள். விராட் கோலி அது போன்ற ஒரு வீரர். அவர் மிகப்பெரிய ஈகோவை கொண்டுள்ளார். குறிப்பாக இந்தியாவில் எதிரணி பவுலர்களை நம்முடைய சொந்த மண்ணில் அதிரடியாக எதிர்கொண்டு பெரிய ரன்கள் குவிக்கலாம் என்று அவர் நினைப்பார்.
இதற்கு முந்தைய தொடர்களிலும் நாங்கள் மோதியுள்ளோம். எனவே இம்முறையும் அதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த சில வருடங்களில் எங்களுடைய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு நான் தலைவராக இருப்பேன் என்பதை உணர்ந்து அதற்கேற்றார் போல் பயிற்சிகளை செய்து வருகிறேன். தற்போது நல்ல முதிர்ச்சியடைந்துள்ள நான் இத்தொடரை மற்றுமொரு சாதாரண தொடராக நினைத்து பயிற்சி எடுக்கிறேன்.
இவ்வாறு ராபின்சன் கூறினார்.
- ஆந்திர பிரதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ரகானே கோல்டன் டக் அவுட் ஆனார்.
- கேரளா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் ரகானே கோல்டன் டக் அவுட் ஆனார்.
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் முதல் 2 போட்டிகளில் விளையாடப் போகும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் நட்சத்திர சீனியர் வீரர்கள் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளார்கள்.
ரஞ்சி கோப்பையில் கடினமாக போராடி மீண்டும் கம்பேக் கொடுத்து இந்தியாவுக்காக 100-வது போட்டியில் விளையாடி சாதனை படைப்பதை லட்சியமாக வைத்திருப்பதாக ரகானே சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஞ்சிக்கோப்பையில் ஆந்திர பிரதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ரகானே கோல்டன் டக் ஆனார். இதனையடுத்து இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் மும்பை- கேரளா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணி 0 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரரான ஜெய் கோகுல் பிஸ்தா முதல் பந்திலும் ரகானே 2-வது பந்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 10 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது.
கடைசி 2 இன்னிங்சில் 0 (1), 0 (1) என அடுத்தடுத்து டக் அவுட்டான அவர் இன்னும் 2024 ரஞ்சி கோப்பையில் 1 ரன் கூட எடுக்கவில்லை. அதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் இப்படி செயல்பட்டால் எப்படி கம்பேக் கொடுக்க முடியும்? என்றும் 100 போட்டிகளில் விளையாடி சாதனை படைக்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள் என்றும் ரகானே மீது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
- பெங்களூரு போன்ற கடினமான மைதானத்தில் நல்ல பந்து வீச்சை வீசும் அளவுக்கு அவர் கற்றுள்ளார்.
- 2024 உலகக்கோப்பை அணி தேர்வுக்கு அவரின் பெயரையும் பரிசீலனையில் வைத்துள்ளோம்.
பெங்களூரு:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய ஷிவம் துபே தொடர் நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் முன்பை விட தற்போது ஷிவம் துபே நன்கு முன்னேறியுள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிராவிட் கூறியதாவது:
இந்த தொடரில் துபே தன்னுடைய கையை உயர்த்தி, பாருங்கள் என்னிடம் திறமைகள் இருக்கின்றன. நீங்கள் எதிர்பார்ப்பதை செய்யக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது என்பதை எங்களுக்கு காண்பித்துள்ளார். குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை அவர் எங்களுக்கு காண்பித்தார்.
அதேபோல பந்து வீச்சிலும் அவர் ஒரு சில நல்ல ஓவர்களை வீசினார். குறிப்பாக பெங்களூரு போன்ற கடினமான மைதானத்தில் நல்ல பந்து வீச்சை வீசும் அளவுக்கு அவர் கற்றுள்ளார். அதனால் 2024 உலகக்கோப்பை அணி தேர்வுக்கு அவரின் பெயரையும் பரிசீலனையில் வைத்துள்ளோம்.
என்று அவர் கூறினார்.
- நியூசிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ரிஸ்வான் 90 ரன்கள் எடுத்திருந்தார்.
- நியூசிலாந்து தரப்பில் மிட்செல் 72 ரன்னிலும் பில்ப்ஸ் 70 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தான் அணி 5 டி20 போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் முதல் 3 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயூப்- ரிஸ்வான் களமிறங்கினர். சைம் அயூப் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பாபர் அசாம்- ரிஸ்வானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை மில்னே பிரிந்தார். பாபர் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது. அடுத்த வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் குவித்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பெர்குசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு தொடக்கமே தடுமாற்றமாக இருந்தது. 8 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து 20 ரன்களுக்கு முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் ஆலன் 8, டிம் சீஃபர்ட் 0, வில் யங் 4 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இந்த நிலையில் மிட்செல் - பில்ப்ஸ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து தடுத்தது. இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி சர்வதேச அளவில் தொடர்ச்சியாக 8 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. உலகக் கோப்பை தொடரில் கடைசி லீக் சுற்றில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து நடந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டியிலும் தோல்வியடைந்தது. அதனையடுத்து நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிராக 4 டி20 போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது.
- 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் சபலென்சா-உக்ரைனின் சுரென்கோ மோதினர்.
- மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அனிசிமோலா வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மெல்போர்ன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் சபலென்சா-உக்ரைனின் சுரென்கோ மோதினர்.
இதில் சபலென்கா 6-0, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அனிசிமோவா வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் இத்தாலியின் சின்னர் 6-0, 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் பேசை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- கான்வே ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
- நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆண்ட்ரே ஆடம்சுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் மோதும் நான்காவது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி வீரர் கான்வேவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அணியில் அவருக்கு பதில் சாட்போவ்ஸ் சேர்க்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. அதே போல் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆண்ட்ரே ஆடம்சுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கஜகஸ்தான் வீராங்கனையை ரஷிய வீராங்கனை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ரிபாகினா 2-வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானைச் சேர்ந்த 3-ம் நிலை வீராங்கனையான எலினா ரிபாகினா, தரவரிசையில் 57-வது இடம் வகிக்கும் ரஷியாவின் அன்ன பிளின்கோவாவுடன் மோதினார்.
இருவரும் தலா ஒரு செட்டை வசப்படுத்தினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட் டைபிரேக்கர் வரை சென்றது. இருவரும் சளைக்காமல் மல்லுக்கட்டினர்.
இறுதியில் எதிராளி பந்தை வெளியே அடித்ததன் மூலம் வெற்றிக்குரிய புள்ளியை ஈட்டிய பிளின்கோவா ஒரு வழியாக டைபிரேக்கர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
ஆட்டத்தின் முடிவில் பிளின்கோவா 6-4, 4-6, 7-6 (22-20) என்ற செட் கணக்கில் ரிபாகினாவை தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக 3-வது சுற்றை எட்டினார்.
- வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அடிலெய்டு:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட தொடர் அடிலெய்டுவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவரில் 188 ரன்னில் சுருண்டது. மெக்கன்சி அரை சதம் அடித்தார். ஷமர் ஜோசப் 36 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய சார்பில் கேப்டன் கம்மின்ஸ், ஹசில்வுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டிராவிஸ் ஹெட் சதமடித்து 119 ரன்னில் ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமர் ஜோசப் 5 விக்கெட்டும், ரோச், கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 35.2 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் ஹசில்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், லயான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 6.4 ஓவரில் இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
மூன்றாவது நாளில் உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்தப் போட்டி முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 82 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே அணி- இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே தடுமாறியது. 1 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த ஜிம்பாப்வே அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து. 34 ரன்கள் வரை அடுத்த விக்கெட்டை இழக்காமல் விளையாடிய அந்த அணி 35 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் அந்த அணி அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 29 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும் மேத்யூஸ், தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனையடுத்து எளிதான இலக்கை நோக்கி இலங்கை அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா- குசல் மெண்டிஸ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் குவித்தது. குசல் மெண்டீஸ் 33 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இலங்கை அணி 10.5 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 88 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியது. முன்னதாக நடந்த ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.






