என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் இந்திய வீரர் ரகானே ஒரு நாள் போட்டிக்கும் திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    இந்தூர்:

    20 ஓவர் கிரிக்கெட் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்து இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை (காலை 9.30 மணி) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். 2-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக நடத்தப்படுவதால் அதை கருத்தில் கொண்டு பயிற்சியின் போது இளஞ்சிவப்பு நிற பந்தும் (பிங்க்) பயன்படுத்தப்பட்டது. மேலும் வலை பயிற்சி பவுலர்களான ராகவேந்திரா, இலங்கையின் நுவான் செனவிரத்னே ஆகியோர் பந்தை வேகமாக எறிய அதை கேப்டன் கோலி உள்ளிட்டோர் எதிர்கொண்டு பயிற்சி எடுத்தனர். மாற்று தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் மீது எகிறி வந்த ஒரு பந்து தாக்கியது. ஆனால் காயம் பயப்படும்படி இல்லை.

    பகல்-இரவு டெஸ்டுக்கு போதிய காலஅவகாசம் இல்லாததால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டின் பேரில் அஜிங்யா ரகானே, மயங்க் அகர்வால், புஜாரா, முகமது ஷமி ஆகிய இந்திய வீரர்கள் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ராகுல் டிராவிட்டின் மேற்பார்வையில் மின்னொளியில், பிங்க் பந்தில் தீவிர பயிற்சி பெற்றனர்.

    இது குறித்து இந்திய துணை கேப்டன் 31 வயதான அஜிங்யா ரகானே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய ஒரு நாள் போட்டி அணிக்கு மீண்டும் திரும்ப முடியுமா? என்று கேட்கிறீர்கள். நான் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ரன்கள் குவித்து சிறந்த பங்களிப்பை அளித்தால், அதன் மூலம் ஒரு நாள் போட்டிக்கு (கடைசியாக 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் ஒரு நாள் போட்டியில் ஆடியிருந்தார்) திரும்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். எல்லாமே தன்னம்பிக்கையில் தான் இருக்கிறது.

    வங்காளதேசம், மிகச்சிறந்த அணி. ஒரு குழுவாக ஒருங்கிணைந்து விளையாடுகிறார்கள். எதிரணி பற்றி அதிகம் சிந்திப்பதை விட எங்களது பலம் என்னவோ அதில் கவனம் செலுத்துகிறோம். இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானதாகும்.

    முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பது பரவசமூட்டுகிறது. இது புதிய சவாலாகும். பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பிங்க் பந்தில் பகலிலும், இரவிலும் பயிற்சி பெற்றபோது, பந்து எப்படி ஸ்விங் ஆகிறது, ஆடுகளத்தில் பட்டு எப்படி திரும்புகிறது அதை எப்படி திறம்பட சமாளிப்பது என்பதில் கவனம் செலுத்தினோம். சிவப்பு நிற பந்தை விட புதிய பிங்க் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் என்பதை பயிற்சிக்கு பிறகு கண்டுபிடித்தோம். நிச்சயம் இது சிவப்பு நிற பந்து ஆட்டத்தில் இருந்து வேறு பட்டது தான். அதற்கு ஏற்ப எங்களது வீரர்கள் தங்களை சீக்கிரமாகவே மாற்றிக்கொள்வார்கள். மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் நாங்கள் விளையாடி பழக்கப்பட்டவர்கள்.

    மனநிலையும், தொழில்நுட்பமும் தான் இதில் முக்கிய பங்கு வகிக்கும். மனரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டால், பிங்க் பந்தை எதிர்கொள்வதில் கஷ்டம் இருக்காது. அது மட்டுமின்றி இத்தகைய சூழலில் பந்தை சற்று தாமதமாக அதாவது உடல் அருகே பந்தை வரவிட்டு ஆடுவதும், பேட்டை உடலோடு நெருக்கமாக கொண்டு வந்து பந்தை அடிப்பதும் முக்கிய அம்சமாக இருக்கும். கொல்கத்தாவில் இரவில் பயிற்சியில் ஈடுபடும் போது, பனிப்பொழிவின் தாக்கத்தில் பந்தின் தன்மை எப்படி மாறும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு ரகானே கூறினார்.

    மற்றொரு இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா அளித்த பேட்டியில், ‘துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது எனக்கு பிங்க் பந்தில் விளையாடிய அனுபவம் உண்டு. பிங்க் பந்தை பகலில் பார்ப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் சூரியன் மறையும் சமயத்தில் ஒரு முனையில் பந்தை எதிர்கொள்வதில் கொஞ்சம் சிரமம் ஏற்படலாம். இந்த பகுதி தான் முக்கியமானதாக இருக்கும். பெரும்பாலான வீரர்கள், மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பவுலிங் செய்யும் சுழற்பந்து வீச்சாளர்களின் கூக்ளி வகை பந்தை சந்திப்பது சற்று சவாலாக இருக்கும் என்று கூறியுள்ளனர்’ என்றார்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறையை மாற்ற நிர்வாகிகள் திட்டமிட்டு இருப்பதற்கு லோதா கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    லோதா கமிட்டி சிபாரிசின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அத்துடன் சீர்திருத்தங்களை அமல்படுத்த நிர்வாக கமிட்டியையும் நியமித்தது.

    புதிய விதிமுறையின்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் நிர்வாகியாக இருக்க முடியாது. மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒருவர் 6 ஆண்டுகள் தான் தொடர்ச்சியாக பதவியில் இருக்க முடியும். அதன் பிறகு மீண்டும் பதவிக்கு வர விரும்பினால் 3 ஆண்டுகள் இடைவெளி விட்டு தான் வர முடியும். மேலும் கிரிக்கெட் வாரிய செயலாளரை விட தலைமை செயல் அதிகாரிக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது என்பது உள்பட பல அம்சங்கள் இதில் இடம் பெற்று இருந்தன. நிர்வாக சீர்திருத்தங்கள் முடிந்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த மாதம் நடந்தது.

    புதிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் டிசம்பர் 1-ந் தேதி நடக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கொண்டு வரப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றம் செய்ய புதிய நிர்வாகிகள் திட்டமிட்டு இருப்பதாகவும், அது குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இது குறித்து லோதா தலைமையிலான கமிட்டியில் செயலாளராக இருந்த கோபால் சங்கரநாராயணன் கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறைகளை மாற்றம் செய்ய பொதுக்குழுவில் அனுமதி கிடைக்கும்பட்சத்தில் உடனடியாக இத்தகைய நிர்வாக சீர்திருத்தங்களை நீர்த்து போகச்செய்யும் முயற்சிகளை எதிர்த்து நாம் செயல்படாமல் இருந்தாலோ? அல்லது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து இந்த பிரச்சினையை கவனத்தில் கொள்ளாமல் விட்டாலோ? அது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை கேலிக்கூத்தாக்கி விடும். கிரிக்கெட் வாரிய விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட்டு இன்னமும் கூட செயலாற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். சுப்ரீம் கோர்ட்டு இந்த விஷயத்தில் தலையிடவில்லை என்றால் சீர்திருத்த முயற்சிகள் அனைத்தும் விரயமாகி விடும்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முயற்சி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது தான். முக்கியமான சீர்திருத்தங்கள் எல்லாம் காணாமல் போய்விட வைப்பது தான் அவர்கள் நோக்கம். நாங்கள் விதிமுறையை மாற்ற சுப்ரீம் கோர்ட்டு தடை எதுவும் பிறப்பிக்கவில்லை. எனவே விதிமுறையை மாற்றம் செய்வதில் தவறில்லை என்று அவர்கள் வாதிடலாம். ஆனால் அது குறுகிய பார்வையாகும்’ என்றார்.
    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்குப் பிறகு பனிப்பொழிவு இருக்கும் என்பதால் முன்னதாகவே போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக ‘பிங்க்’ பந்தில் நடக்கிறது.

    பொதுவாக இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இரவு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் பனியில் பந்து ஈரமாகிவிட்டால், பந்து வீச்சாளர்களுக்கு சிரமத்தை கொடுக்கும்.

    பொதுவாக பகல்-இரவு போட்டி மதியம் 2 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நடைபெறும். கொல்கத்தாவில் இரவு 8 மணிக்கு மேல் பனிப்பொழிவு தாக்கம் அதிகமாக இருக்கு என்பதால் போட்டியை ஒரு மணியில் இருந்து இரவு 8 மணி வரை நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுத்தது.

    இதை பிசிசிஐ ஏற்றுக் கொண்டதால் கொல்கத்தா டெஸ்ட் போட்டி நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியின் முதல் செசன் மதியம் ஒரு மணிக்கு தொடங்கி 3 மணிவரை நடக்கும். பின்னர் 40 நிமிட இடைவேளைக்குப் பிறகு 3.40 மணிக்கு தொடங்கி 5.40 வரை நடக்கும். அதன்பின் 20 நிமிட இடைவேளைக்குப்பின் 6 மணிக்கு தொடங்கி 8 மணி வரை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ‘பிங்க் பால்’ பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா ‘ஏ’ 122 ரன்னில் சுருண்டது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 21-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. அடிலெய்டில் 29-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டி பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.

    இந்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் மூன்று நாட்கள் கொண்ட பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிராக பாகிஸ்தான் பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த பயிற்சி ஆட்டம் பெர்த் நகரில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.  அந்த அணியின் பாபர் அசாம், ஆசாத் ஷபிக் சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 90 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் அடித்தது. ஆசாத் ஷபிக் 119 ரன்னுடனும், பாபர் அசாம் 157 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபர் அசாம், ஆசாத் ஷபிக் இருவரும் நேற்றைய ரன்களிலேயே ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினர்.

    அதன்பின் வந்த இப்திகார் அகமது, முகமது ரிஸ்வான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 53 ரன்களும், வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி 25 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் 428 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    பின்னர் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. பான் கிராஃப்ட் மட்டும் தாக்குப்பிடித்து 49 ரன்கள் அடித்தார்.

    ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி இம்ரான் கான்

    7 பேர் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா ‘ஏ’ 122 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணியின் இம்ரான் கான் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை படைத்தார்.

    பின்னர் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது.
    வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய நிலையில், இன்றும் தீபக் சாஹர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

    இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடச் சென்றார். இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் - விதர்பா அணிகள் மோதின. மழையால் ஆட்டம் 13 ஓவராக குறைக்கப்பட்டது.

    விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்தது. 13-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய தீபக் சாஹர், கடைசி மூன்று பந்திலும் தொடர்ச்சியாக விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். சாஹர் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த விதர்பா 13 ஒவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களே எடுத்தது.

    தீபக் சாஹர் 3 ஓவரில் 18 ரன்கள விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். நேற்று முன்தினம் சர்வதேச 20 கிரிக்கெட்டில் வங்காளதேச அணிக்கெதிராக ஹாட்ரிக் விக்கெட்டு வீழ்த்திய நிலையில் தற்போது இன்று செவ்வாய்க்கிழமை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
    மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால் 10 வருடம் சிறைத் தண்டனை என இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.
    கிரிக்கெட் போட்டிக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய சவாலாக இருப்பது மேட்ச் பிக்சிங்குதான். இந்த விவகாரத்தில் சிக்கி பெரும்பாலான வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை இழந்துள்ளனர்.

    மேட்ச் பிக்சிங்கை தடுக்க ஐசிசி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதேவேளையில் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் மேட்ச் பிக்சிங்சை தடுக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன.

    இலங்கை கிரிக்கெட் போர்டு மேட்ச் பிக்சிங்சை கிரிமினல் குற்றத்தின் கீழ் கொண்டு வர ஆலோசித்து வந்தது. இந்நிலையில் விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் இதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

    இந்த மசோதா  பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்டமாக நிறைவேறியது. இதன்மூலம் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றமாகும் என்ற சட்டத்தை நிறைவேற்றிய முதல் ஆசிய நாடு என்ற பெயரை பெற்றுள்ளது இலங்கை.
    சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்டில் மணிஷ் பாண்டே 10 சிக்சர், 12 பவுண்டரியுடன் 129 ரன்கள் விளாச கர்நாடகா 250 ரன்கள் குவித்தது.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கர்நாடகா - சர்வீசஸ் அணிகள் மோதின.

    சர்வீசஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோகன் கதம், தேவ்தத் படிகல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ரோகன் கதம் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து படிகல் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. படிகல் 43 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 75 ரன்கள் குவித்தார்.

    ருத்ர தண்டவம் ஆடிய மணிஷ் பாண்டே 10 சிக்சர்கள், 12 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் விளாச கர்நாடகா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. சர்வீசஸ் அணி சார்பில் நரங் 3 ஓவரில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    பின்னர் 251 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சர்வீசஸ் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் கர்நாடகா 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான நசீம் ஷாவின் தாயார் மரணம் அடைந்ததால் வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையில் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. பகல்-இரவு போட்டியான இந்த ஆட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

    பாகிஸ்தான் அணியில் 16 வயதே ஆன நசீம் ஷா இடம் பிடித்திருந்தார். இவரது தாயார் நேற்றிரவு திடீரென மரணம் அடைந்தார்.  இதனால் இன்றைய போட்டியின்போது இரண்டு அணி வீரர்களும் தங்களது இரங்கலை தெரிவிக்கும் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.
    ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் இர்பான் பதான், கேப்டன் பர்வேஸ் ரசூல் ஆகியோர் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் சந்தித்து பேசினர்.
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வாங்காள கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்தவருமான சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    உள்ளூர் கிரிக்கெட்டை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணியின் ஆலோசகரான இர்பான் பதான், அந்த அணியின் கேப்டன் பர்வேஸ் ரசூல் ஆகியோர் பிசிசிஐ தலைவர் கங்குலியை சந்தித்து ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணி வளர்ச்சி குறித்து விவாதித்தனர்.

    அப்போது ஜம்மு-காஷ்மீர் மாநில கிரிக்கெட் வளர்ச்சிக்கு தேவைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என அவர்களுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி அளித்துள்ளார்.
    கொல்கத்தா ஈடன் கார்டன் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தூரில் இந்திய வீரர்கள் இரவு பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இந்தூரில் நாளைமறுநாள் (14-ந்தேதி) தொடங்குகிறது. கடந்த 10-ந்தேதி டி20 கிரிக்கெட் தொடர் முடிவடந்த நிலையில், இந்தூர் சென்ற இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    22-ந்தேதி கொல்கத்தாவில் தொடங்கும் 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. முதல் டெஸ்டிற்கும் 2-வது டெஸ்டிற்கும் இடையிலான இடைவெளி மிகக்குறைவாக இருப்பதால் இந்தூரிலேயே பிங்க் பந்தில் பயிற்சி எடுக்க இந்தியா விரும்பியது.

    இதனால் மாலை  5 மணி முதல் 6 மணி வரை வெளிச்சத்திற்கு கீழ் பயிற்சி எடுக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்து தரும்படி மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்திடம் கேட்டுக்கொண்டது. அதன்பேரில் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
    ஆஸ்திரேலிய கிரக்கெட் வீரர்களுக்கான சங்கத்தின் தலைவராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் ஆல்-ரவுண்டரான ஷேன் வாட்சன் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறுகையில் ‘‘தலைவராக நியமனம் செய்யப்பட்டதை உண்மையிலேயே மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன். மிகப்பெரிய கடமை என்முன் காத்திருக்கிறது. மீண்டும் கிரிக்கெட்டிற்குள் வர இது வாய்ப்பாக அமைந்துள்ளதால் மகிழ்சி அடைகிறேன்’’ என்றார்.
    வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் விளையாட ஆர்வமாக இருப்பதாக இந்திய அணி வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
    இந்தூர்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    அடுத்து இரு அணிகள் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி இந்தூரில் தொடங்குகிறது.

    2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஆட்டம் பகல்-இரவு டெஸ்டாக நடத்தப்படுகிறது. இதில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

    இந்திய அணி முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இப்போட்டி குறித்து இந்திய அணி வீரர் புஜாரா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்தில் விளையாடும் போது பெரிய வித்தியாசம் இருக்கும் என்று நான் கருதவில்லை. நான் எஸ்.ஜி.பிங்க் நிற பந்துகளுக்கு எதிராக விளையாடியதில்லை.

    ஆனால் எனது கணிப்புக்கு எஸ்.ஜி. பிங்க் நிற பந்துகள் டெஸ்டில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பந்துகள் போல்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் எஸ்.ஜி.பிங்க் நிற பந்துகளின் தரம் மேம்பட்டுள்ளதாக கருதுகிறேன்.

    சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பந்துகளின் தரம் மற்றும் பந்து வடிவத்தை பராமரித்த விதம் ஆகியவற்றில் வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. அதுபோல் பிங்க் நிற பந்துகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சிவப்பு நிற பந்தில் இருந்து பிங்க் நிற பந்தில் சிறிய வித்தியாசம் இருக்கும். ஆனால் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது.

    இருள் சூழ்ந்த நேரத்தில் பிங்க் நிற பந்தில் விளையாடுவதில் சவால்கள் இருக்கும். இதற்கு உங்களுக்கு இன்னும் கூடுதலாக பயிற்சி தேவைப்படும்.

    பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்காக காத்து கொண்டு இருக்கிறோம். அதில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். அந்த சமயத்தில் சிறந்த அனுபவமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×