என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் விளையாட ஆர்வமாக இருப்பதாக இந்திய அணி வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
    இந்தூர்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    அடுத்து இரு அணிகள் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந் தேதி இந்தூரில் தொடங்குகிறது.

    2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஆட்டம் பகல்-இரவு டெஸ்டாக நடத்தப்படுகிறது. இதில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

    இந்திய அணி முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இப்போட்டி குறித்து இந்திய அணி வீரர் புஜாரா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்தில் விளையாடும் போது பெரிய வித்தியாசம் இருக்கும் என்று நான் கருதவில்லை. நான் எஸ்.ஜி.பிங்க் நிற பந்துகளுக்கு எதிராக விளையாடியதில்லை.

    ஆனால் எனது கணிப்புக்கு எஸ்.ஜி. பிங்க் நிற பந்துகள் டெஸ்டில் பயன்படுத்தப்படும் சிவப்பு நிற பந்துகள் போல்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் எஸ்.ஜி.பிங்க் நிற பந்துகளின் தரம் மேம்பட்டுள்ளதாக கருதுகிறேன்.

    சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பந்துகளின் தரம் மற்றும் பந்து வடிவத்தை பராமரித்த விதம் ஆகியவற்றில் வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. அதுபோல் பிங்க் நிற பந்துகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சிவப்பு நிற பந்தில் இருந்து பிங்க் நிற பந்தில் சிறிய வித்தியாசம் இருக்கும். ஆனால் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது.

    இருள் சூழ்ந்த நேரத்தில் பிங்க் நிற பந்தில் விளையாடுவதில் சவால்கள் இருக்கும். இதற்கு உங்களுக்கு இன்னும் கூடுதலாக பயிற்சி தேவைப்படும்.

    பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்காக காத்து கொண்டு இருக்கிறோம். அதில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். அந்த சமயத்தில் சிறந்த அனுபவமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.
    லண்டன்:

    டாப்-8 டென்னிஸ் வீரர்கள் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

    இன்று நடந்த ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் 7-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ்விடம் 2-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    தனது முதல் ஆட்டத்தில் தோற்றுள்ள நடால் நாளை ரஷிய வீரர் மெட்வெகேவுடன் மோதுகிறார்.
    பனியை சமாளித்து பந்து வீசுவது எப்படி என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகையில் கற்றுக்கொண்டேன் என்று தீபக் சாஹர் தெரிவித்தார்.
    நாக்பூர்:

    வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 3.2 ஓவர்கள் பந்து வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையும் அடங்கும். சாதனை படைத்த தீபக் சாஹர், இந்திய கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்காக யுஸ்வேந்திர சாஹலின் கேள்விக்கு பதிலளித்து கூறியதாவது:-

    இரவு நேரத்தில் பனிப்பொழிவில் பந்து வீசுவது எப்படி என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அதன் கேப்டன் டோனியும் தான். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகையில் பனிப்பொழிவையும், வியர்வையையும் எவ்வாறு எதிர்கொண்டு விளையாடுவது என்பதை கற்றுக்கொண்டேன். எப்பொழுதும் கையை சுத்தமாக வைத்து இருப்பேன். உலர்ந்த மண்ணை அடிக்கடி கையில் தேய்த்து கொண்டு தான் பந்து வீசுவேன். இதனால் பந்து கையில் இருந்து நழுவாது. இறுக்கமாக பிடித்து பந்து வீச முடியும். நாக்பூர் மைதானத்தில் சைடு பகுதியில் பவுண்டரி எல்லை மிகவும் தூரமாகும். எனவே அந்த திசையில் பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்கும் வகையில் பந்து வீச முடிவு செய்தேன். பந்து வீசும் வேகத்திலும் வித்தியாசம் காட்டினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    போட்டி முடிவில் தான் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தியது எனக்கு தெரியும். ஏனெனில் முந்தைய ஓவரில் கடைசி பந்தில் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தேன். வீட்டில் அமர்ந்து கனவு கண்டால் கூட 3.2 ஓவர்களில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்துவது என்பதை நினைத்து பார்க்க முடியாது. நான் கடினமாக உழைத்து வருகிறேன். கடவுளின் உதவியால் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். முக்கியமான தருணத்தில் பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படும் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனக்கு இந்த பொறுப்பை அளித்த அணி நிர்வாகத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு தீபக் சாஹர் கூறினார்.

    6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தீபக் சாஹர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 88-வது இடத்தில் இருந்து 42-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடத்தில் இருக்கிறார்.

    தீபக் சாஹரின் சாதனை குறித்து அவரது தந்தை லோகேந்திர சிங் சாஹர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் இருவரும் வளர்த்தெடுத்த கனவு தற்போது நனவாகி இருப்பதாக நான் உணர்கிறேன். 12 வயதில் எனது மகன் விளையாடுகையில் அவனிடம் இயற்கையாகவே திறமை இருப்பதை அறிந்தேன். நான் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனது பெற்றோர் விளையாட அனுமதிக்கவில்லை. எனது மகனை கிரிக்கெட் வீரராக உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். நான் முறையான பயிற்சி படிப்பை படிக்காவிட்டாலும் தீபக் சாஹருக்கு வழிகாட்டுவதற்காக பயிற்சி முறைகளை கற்றுக்கொண்டேன். தீபக் சாஹர் பயிற்சிக்காக நான் 2 பிட்ச்களை உருவாக்கினேன். அதிக நேரம் பயிற்சிக்கு செலவிட்டதால் பள்ளிக்கூடம் சரியாக செல்லமாட்டான். எனக்கு பிடித்தமான மார்ஷல், ஸ்டெயின் ஆகியோரின் பந்து வீச்சு வீடியோக்களை பார்த்து சொல்லி கொடுப்பேன். இதுவரை தீபக் சாஹர் பயிற்சியின் போது குறைந்தபட்சம் ஒரு லட்சம் முறைக்கு மேல் பந்து வீசி இருப்பார். டெஸ்ட் போட்டியில் எனது மகன் ஆடுவதை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
    உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுந்தர் சிங் தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    துபாய்:

    உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் 61.22 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை தக்கவைத்தார். மற்றொரு இந்திய வீரர் அஜீத் சிங் 59.46 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கம் பெற்றார்.

    இன்னொரு இந்திய வீரர் ரிங்கு 4-வது இடம் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் சுந்தர் சிங் குர்ஜார், அஜீத் சிங் மற்றும் ரிங்கு ஆகியோர் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்று ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
    லக்னோ:

    வெஸ்ட்இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அஸ்ஹார் ஆப்கன் 86 ரன்னும், ஹஸ்ரத்துல்லா ஜஜாய் 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். முகமது நபி 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் 145 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 109 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 32 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 42 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஷாய் ஹோப் ஆட்டநாயகன் விருதையும், ரோஸ்டன் சேஸ் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டியில் முதலாவது போட்டி லக்னோவில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.
    ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோஜர் பெடரர் 5-7, 5-7 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மிடம் தோல்வி அடைந்தார்.
    லண்டன்:

    டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி.இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் நாளில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் 6 முறை சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 5-ம் நிலை வீரரான டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) எதிர்கொண்டார். 1 மணி 40 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 5-7, 5-7 என்ற செட் கணக்கில் டொமினிக் திம்மிடம் தோல்வி அடைந்தார்.

    நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஸ்டெப்னாஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), 4-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெட்விடேவை சந்தித்தார். 1 மணி 42 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் டேனில் மெட்விடேவை வீழ்த்தினார்.
    இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இடமாற்றத்தை மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு முறைப்படி அப்பீல் செய்துள்ளது.
    கராச்சி:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 29, 30-ந் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் வற்புறுத்தியது. இதனை ஏற்று இந்த போட்டி பொதுவான இடத்தில் நடைபெறும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சமீபத்தில் அறிவித்தது. ஆனால் எந்த இடத்தில் போட்டி நடைபெறும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் இருந்து டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளனம், இந்த முடிவை கைவிடும்படி சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு முறைப்படி அப்பீல் செய்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் டென்னிஸ் சம்மேளன தலைவர் சலீம் சைபுல்லா அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியை நடத்த முழு தயாருடன் நாங்கள் இருக்கிறோம். பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை எதுவும் இல்லை. போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எனவே போட்டியை இஸ்லாமாபத்தில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். எங்கள் வேண்டுகோள் ஏற்கப்படும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தார். பாகிஸ்தானின் அப்பீலுக்கு தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்கும்படி அகில இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் தீர்ப்பாயம் வருகிற 18-ந் தேதி இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

    வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்தார்.
    நாக்பூர்:

    நாக்பூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 62 ரன்னும், லோகேஷ் ராகுல் 52 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய வங்காளதேச அணி 19.2 ஓவர்களில் 144 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி தோல்வியை சந்தித்தது. 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த வங்காளதேச அணி அதன் பிறகு பெருத்த சரிவை சந்தித்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற 27 வயது வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 12-வது ‘ஹாட்ரிக்’ சாதனை இதுவாகும். அத்துடன் அவர் ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் முகமது நைம் 81 ரன்கள் குவித்தும் அது அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

    வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பந்து வீச்சாளர்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. மிடில் ஓவரில் பனித்துளியால் பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்பதை நான் அறிந்து இருந்தேன். ஒரு கட்டத்தில் வங்காளதேச அணி வலுவான நிலையில் இருந்தது. கடைசி 8 ஓவர்களில் அந்த அணி வெற்றிக்கு 69 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை முன்னேற்ற பாதையில் பயணிக்க வைத்தனர். நான் வீரர்களிடம் நாட்டுக்காக விளையாடுவதை நினைவில் வைத்து செயல்படும்படி அறிவுறுத்தினேன். இந்த போட்டியில் எல்லா பாராட்டுகளும் பந்து வீச்சாளர்களையே சாரும்.

    பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் சிறப்பாக செயல்பட்டார்கள். அணியில் தங்களது பொறுப்பை உணர்ந்து எல்லா வீரர்களும் செயல்பட்டனர். உலக கோப்பை போட்டிக்கு முன்பு சில ஆட்டங்கள் தான் நமக்கு இருக்கிறது. நமது அணியின் கலவை நன்றாக உள்ளது. சில வீரர்கள் வாய்ப்பை தவற விட்டுள்ளனர். அவர்களும் அணிக்கு திரும்புவார்கள். அணியில் உள்ள எல்லா வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதனால் வீரர்களை தேர்வு செய்வது தேர்வாளர்களுக்கும், கேப்டன் விராட்கோலிக்கும் தலைவலியாக இருக்கும்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    தோல்வி குறித்து வங்காளதேச அணியின் கேப்டன் மக்முதுல்லா கூறுகையில், ‘20 ஓவர் போட்டியில் நாங்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது இருக்கிறது. எங்களிடம் அதிரடியாக ரன் குவிக்கக்கூடிய வீரர் இல்லை. சாதுர்யமாகவும், மனரீதியாகவும் நிலையாக செயல்பட்டால் தான் நாங்கள் முன்னேற்றம் காண முடியும். பேட்டிங்கில் நாங்கள் முன்னேற்றத்தை எட்டினால் அதிக வெற்றிகளை பெற முடியும். சமீபகாலமாக பல ஆட்டங்களில் நாங்கள் இதே மாதிரியான தவறை தான் செய்கிறோம். எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை 174 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்கள். ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமாக இருந்தாலும் நாங்கள் எங்கள் பணியை சரியாக செய்யவில்லை.

    இந்த போட்டி தொடரில் 3 ஆட்டங்களிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாகவே நினைக்கிறேன். 20 ஓவர் போட்டியை பொறுத்தமட்டில் உத்வேகத்தை இழந்து விட்டால் அதனை மீட்டு எடுப்பது என்பது மிகவும் கடினமானதாகும். இந்த போட்டியில் நாங்கள் வெற்றிக்கு நெருக்கமாகவே வந்தோம். 6-7 பந்துகளில் 3-4 விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. முஷ்பிகுர் ரஹிமை நான் குறை சொல்லமாட்டேன். டெல்லி போட்டியில் அவர் தான் எங்களுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அல் அமின் ஹூசைன் நன்றாக பந்து வீசினார். முகமது நைம் பேட்டிங் அருமையாக இருந்தது. நாங்கள் பேட்டிங்கை சரியாக நிறைவு செய்யவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

    முஸ்தாபிஜூர் ரகுமான் சிறந்த பவுலர். ஆனால் அவர் இந்த தொடரில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. எல்லா வீரருக்கும் இதுபோல் நிலைமை வரத்தான் செய்யும். அதற்காக அவரை அணியில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை. அவர் நல்ல பார்முக்கு திரும்புகையில் வங்காளதேச அணி வெற்றி பெறும்’ என்றார்.
    திருவனந்தபுரத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் தமிழ்நாடு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் உத்தர பிரதேச அணி வீழ்த்தியது.
    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் தமிழ்நாடு அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் உத்தர பிரதேசம் அணியை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற உத்தர பிரதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தமிழ்நாடு அணியின் முரளி விஜய் - என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    ஜெகதீசன் 2 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விஜய் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் 42 பந்தில் 51 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 41 பந்தில் 61 ரன்கள் சேர்த்தார். விஜய் சங்கர் 14 பந்தில் 28 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உத்தர பிரதேச அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் உபேந்த்ரா யாதவ் ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 70 ரன்கள் அடிக்க 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியின் மூலம் தமிழ்நாடு குரூப் ‘பி’-யில் 2-வது இடத்தில் உள்ளது.
    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழந்த ஆத்திரத்தில் கத்தியதால் பெர்ஸ்டோவ்-க்கு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
    நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது, பேர்ஸ்டோவ் 18 பந்தில் 47 ரன்கள் அடித்து நீசம் பந்தில் ஆட்டமிழந்தார்.

    ஆட்டமிழந்த ஆத்திரத்தில் கோபமாக கத்தினார். இது ஐசிசி-யின் நன்னடத்தை விதியை மீறிய செயலாகும் என தெரிவித்த ஐசிசி, சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியை வழங்கியது. ஏற்கனவே பேர்ஸ்டோவ் இதுபோன்று கடந்த மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது ஒரு புள்ளி வாங்கியுள்ளார்.

    இரண்டு வருட காலத்திற்குள் நான்கு புள்ளிகள் பெற்றால் தானாகவே, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடைவிதிக்கப்படும்.
    ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம், ஆசாத் ஷபிக் சதம் விளாசினர்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 21-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. அடிலெய்டில் 29-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டி பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.

    இந்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் மூன்று நாட்கள் கொண்ட பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிராக பாகிஸ்தான் பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த பயிற்சி ஆட்டம் பெர்த் நகரில் இன்று தொடங்கியது.  டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் ஷான் மசூத், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    மசூத் 22 ரன்னிலும், அசார் அலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல் 18 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    60 ரன்களுக்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்திருந்த நிலையில் 4-வது விக்கெட்டுக்கு ஆசாத் ஷபிக் உடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    குறிப்பாக பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது போன்று அதிரடி காட்டினார். இரண்டு பேரும் அடுத்தடுத்து சதம் அடித்தனர். இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் ஆட்டமிழக்கவில்லை.

    பாகிஸ்தான் 90 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் அடித்துள்ளது. ஆசாத் ஷபிக் 119 ரன்னுடனும், பாபர் அசாம் 157 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஐலெட்டில் இந்திய நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களே எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளில் மேத்யூஸ் 23 ரன்களும், நேஷன் 32 ரன்களும், மெக்லி்ன் 17 ரன்களும் அடித்த்னர்.

    பின்னர் 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீராங்கனைகள் ஷஃபாலி் வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தொடக்கும் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் இந்தியா விக்கெட் இழப்பின்றி 10.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷஃபாலி வர்மா 35 பந்தில் 69 ரன்களும், மந்தனா 28 பந்தில் 30 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ஏற்கனவே நடைபெற்ற முதல் ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×