என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழக அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்-ஐ வீழ்த்தியது.
    சையத் முஷ்டாக் அலி டிராபி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் லீக் சுற்று ஆட்டம் குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்து வருகிறது. இதற்கு முன்னேறிய 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

    இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

    இதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, தமிழக வீரர்களின் மாயாஜால சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியதுடன், விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக மயங்க் மார்கண்டே 26 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். குர்கீரத் சிங் 25 ரன்னில் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். தமிழக அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய் கிஷோர், சித்தார்த் தலா 3 விக்கெட்டும், பாபா அபரஜித் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹரி நிஷாந்த் 16 ரன்னிலும், ஷாருக்கான் 7 ரன்னிலும், அடுத்து வந்த பாபா அபராஜித் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    இதனால் தமிழக அணி 48 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 3-வது வீரராக களம் கண்ட ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். விஜய் சங்கர் 20 ரன்னிலும், முகமது ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.

    தமிழக அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 44 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்னும், சித்தார்த் 2 பந்துகளில் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்பிரீத் பிரார், மயங்க் மார்கண்டே, அபிஷேக் ஷர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
    ஆஸ்திரேலியாவில் கார் வாடகை கட்டணத்தை வாங்க மறுத்த இந்திய டிரைவரை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இரவு உணவு விருந்திற்கு அழைத்து சென்றுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
    ஆஸ்திரேலியால் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 29-ந்தேதி அடிலெய்டில் பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. இந்நிலையில், ஏபிசி வானொலி தொகுப்பாளர் அலிசன் மிட்செல் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சனிடம் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் வீரர்களான ஷாஹீன் ஷா அப்ரிடி, யாசிர் ஷா மற்றும் நசீம் ஷா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய ஓட்டல் ஒன்றிற்கு உணவருந்த காரில் சென்றுள்ளனர்.

    ஓட்டல் வந்தடைந்ததும் கார் டிரைவராக  இருந்த இந்தியருக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பணம் கொடுத்தனர். அவர் பணம் வாங்க மறுத்துள்ளார். உடனே அந்த வீரர்கள் தங்களுடன் உணவருந்துமாறு அந்த டிரைவரை விருந்துக்கு அழைத்து சென்று உள்ளனர்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஐந்து வீரர்களுடன்  இந்திய டிரைவர் உணவகத்தின் மேஜையில் அமர்ந்திருந்த புகைப்படம்  அவரது தொலைபேசியில் இருப்பதை  காட்டினார்.

    இதுகுறித்து யாசிர் ஷா கூறுகையில் ‘‘நாங்கள் இரவு உணவு அருந்த விரும்பினோம். எங்களுக்கு ரெஸ்டாரன்ட் எங்கு இருக்கிறது என்பது தெரியாததால், பாகிஸ்தான் அல்லது இந்தியா ரெஸ்டாரன்டிற்கு செல்லுமாறு கூறினோம். டாக்சி டிரைவர் இந்திய ரெஸ்டாரன்டிற்கு அழைத்துச் சென்றார்.

    ரெஸ்டாரன்ட் வந்ததும் வாடகை பணத்தை கொடுத்தோம். அவர் வாங்க மறுத்து விட்டார். அப்படி என்றால் எங்களுடன் உணவு அருந்த வாருங்கள் என்றோம். அவர் சம்மதம் தெரிவித்து எங்களுடன் வந்து உணவு அருந்தினார்’’ என்றார்.
    டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு பஜ்ரங் புனியா- சங்கீதா போகட் திருமணம் நடைபெறுகிறது.
    சோனிபட்:

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் பஜ்ரங் புனியா. ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை இலக்காக கொண்டுள்ளார்.

    அரியானாவை சேர்ந்த பஜ்ரங் புனியா, சக மல்யுத்த வீராங்கனையான சங்கீதா போகட்டை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இருவரது குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதித்தனர்.

    இந்த நிலையில் பஜ்ரங் புனியா-சங்கீதா போகட் திருமண நிச்சயதார்த்தம் அரியான மாநிலம் சோனிபட்டில் உள்ள பஜ்ரங் புனியா வீட்டில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு பஜ்ரங் புனியா- சங்கீதா போகட் திருமணம் நடைபெறுகிறது.

    சங்கீதா பிரபல முன்னாள் மல்யுத்த வீரர் மகாவீர் போகட்டின் மகள் ஆவார். மகாவீரின் வாழ்க்கையை மையப்படுத்திதான் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த ‘தங்கல்’ படம் உருவாக்கப்பட்டது. சங்கீதாவின் சகோதரி கீதாவும் மல்யுத்த வீரர் ஆவார்.

    இந்த திருமண நிச்சயதார்த்தம் குறித்து சங்கீதாவின் தந்தையான மகாவீர் கூறும்போது, “எனது மகள்கள் தங்களது வாழ்க்கை துணையை தேர்வு செய்திருப்பதை நான் தடுக்கவில்லை. அவர்கள் விருப்பபடி வாழ சம்மதித்தேன்” என்றார்.
    நியூசிலாந்து பயணத்தில் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுமா? என்று கேள்விக்கு கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி பதில் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. சொந்த மண்ணில் நடந்த முதல் பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணி வங்காளதேசத்தை வீழ்த்தியது.

    பிங்க் நிற பந்து என்று அழைக்கப்படும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் முதல்முறையாக நடைபெறுவதற்கு சவுரவ் கங்குலி காரணமாக இருந்தார்.

    முன்னாள் கேப்டனான அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் பகல்-இரவு டெஸ்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியை ஏராளமான ரசிகர்கள் நேரில் வந்து கண்டு களித்தனர். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகப்பெரிய முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.

    சொந்த மண்ணில் பகல்- இரவு டெஸ்டில் இந்திய அணி வங்காளதேசத்தை 3 நாட்களில் எளிதில் வீழ்த்தியது. இதே போல வெளிநாட்டு பயணத்திலும் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுமா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரி 24-ந் தேதி முதல் மார்ச் 4-ந் தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர் ஆட்டம், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

    நியூசிலாந்து பயணத்தில் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுமா? என்று கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இதுகுறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. நியூசிலாந்து தொடருக்கு இன்னும் கால அளவு இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள்.

    எதிர்காலத்தில் அதிக அளவு பகல்-இரவு டெஸ்டில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ரசிகர்கள் அதிக அளவில் இந்த போட்டியை பார்ப்பார்கள்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.
    சர்வதேச போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் இந்த சீசனுக்கான பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் விளையாடவில்லை என்று இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    5-வது பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி பல்வேறு நகரங்களில் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 20-ந் தேதி முதல் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னணி வீரரான 26 வயது ஸ்ரீகாந்த் விலகி இருக்கிறார். அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடைபெறும் சர்வதேச போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த இந்த போட்டியில் பெங்களூரு ராப்டர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதில் ஸ்ரீகாந்த் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து ஸ்ரீகாந்த் தனது டுவிட்டர் பதிவில், ‘கடினமான பாதை எனக்கு காத்து இருக்கிறது. என் மீதான எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. சர்வதேச போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் இந்த சீசனுக்கான பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் விளையாடவில்லை. பெங்களூரு ராப்டர்ஸ் அணிக்கு எனது வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டியில் இருந்து ஏற்கனவே இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் விலகி இருந்தார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் தரவரிசையில் முன்னிலை வகிக்க வேண்டியது அவசியமானதாகும். எனவே சர்வதேச போட்டியில் அதிக அளவில் விளையாட ஏதுவாக இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
    யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் மான்சி தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்ல் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி சூப்பர் லீக்கில் விளையாடினார். முதல் ஆறு போட்டிகளில் விளையாட நடப்பு சாம்பியன் ஜோசி ஸ்டார்ஸ் அணியுடன் உடன் அணியுடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

    அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. நேற்று நடைபெற்ற 6-வது போட்டியில் கிறிஸ் கெய்ல் அரைசதம் அடித்தாலும் அந்த அணியால் வெற்றி பெறவில்லை.

    இதனால் சோகத்துடன் வெளியேறும் கிறிஸ் கெய்ல், நான் சில போட்டிகளில் விளையாடவில்லை என்றால், அணிக்கு சுமையாகி விடுவேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘நான் இந்த அணியைப் பற்றி மட்டும் பேசவில்லை. கடந்த சில வருடங்களாக விளையாடி வரும் எல்லா அணிகளையும் பற்றி இந்த விஷயத்தை பற்றி ஆராய்ந்துள்ளேன். ஒன்றிரண்டு போட்டிகளில் நான் விளையாடவில்லை என்றால், நான் அவர்களுக்கு சுமையாகிவிடுகிறேன். இது போன்று ஒரு தனிப்பட்ட வீரர் அணிக்கு சுமையாகி விடுகிறார்.

    கிறிஸ் கெய்ல்

    நான் மரியாதையை பெறுவதற்காக செல்லவில்லை. மக்கள் அவர்களுக்காக என்ன செய்தோம் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டார்கள். எனக்கு மரியாதை கிடைக்கவில்லை.

    நான் அந்த அணியை பற்றி பேசவில்லை. நான் பொதுவாக பேசுகிறேன். ஒரு வீரர், நிர்வாகம், தலைமை நிர்வாகம், போர்டு உறுப்பினர் என பேசுகிறேன். ஒருமுறை விளையாட வில்லை என்றால், என்னுடைய கேரியர் முடிந்து விடுகிறது. அவர் நன்றாக விளையாடவில்லை. மோசமான வீரர் என்று பேசத் தொடங்கி விடுகிறார்கள். இது போன்ற விஷயங்களை நான் எப்போதுமே ஒதுக்கிவிடுவேன்’’ என்றார்.
    ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தையில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான தீபிகா குமாரி, அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றனர்.
    ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான தீபிகா குமாரி - அட்டானு தாஸ் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் யிச்சை செங் - சயோஜுயுயான் வெய் ஜோடியை எதிர்கொண்டார். இதில் இந்திய ஜோடி 6-2 என வெற்றி பெற்றது.

    இந்திய பெடரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பொதுவான கொடியை ஏற்றுள்ளனர்.

    மற்றொரு ஜோடியான அபிஷேக் வர்மா - ஜோதி சுரேகா அரையிறுதியில் கொரியா ஜோடியை 159-154 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சீன தைபே ஜோடியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளைமறுநாள் நடக்கிறது.
    கொல்கத்தா பிங்க்-பால் டெஸ்ட் கிரிக்கெட் இரண்டரை நாட்களுக்குள் முடிவடைந்ததால் 4-வது மற்றும் 5-வது நாட்களுக்கான டிக்கெட் தொகை திருப்பி அளிக்கப்படுகிறது.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

    முதல்முதலாக இந்திய அணி பிங்க்-பால் டெஸ்டில் விளையாடியதால் ஈடன் கார்டனில் ரசிகர்கள் குவிந்தனர். முதல் நான்கு நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்று தீர்ந்தன. ஐந்தாவது நாட்களுக்கான டிக்கெட் ஓரளவிற்கு விற்றிருந்தன.

    போட்டி இரண்டரை நாட்களுக்குள் முடிந்ததால், நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் போட்டியை பார்க்க டிக்கெட் எடுத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில் கடைசி இரண்டு நாட்களுக்கு கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு டிக்கெட் எடுத்திருந்த ரசிகர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் என பெங்கால் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.
    மனஅழுத்தம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த மேக்ஸ்வெல் மற்றும் மேடின்சன் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர்.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல். கடந்த அக்டோபர் 31-ந்தேதி மனநிலை அழுத்தம் (MentAL Health Issues) காரணமாக கிரிக்கெட்டில் இருந்த சிறிது காலம் ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். அதேபோல் நிக் மேடின்சன் கடந்த 9-ந்தேதி அறிவித்தார்.

    இந்நிலையில் இருவரும் இன்று மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளனர். தற்போது விக்டோரியா பிரிமீயர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மெக்ஸ்வெல் பிட்ஸ்ராய் டான்காஸ்டர் அணிக்காக விளையாடினார். ஐந்து ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து அவர், இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்.

    நிக் மேடின்சன்

    செயின்ட் கில்டா அணிக்காக விளையாடிய மேடின்சன் 58 ரன்கள் விளாசினார்.
    அபு தாபி டி10 லீக் இறுதிப் போட்டியில் மராதா அரேபியன்ஸ் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    அபுதாபி டி10 லீக்கின் இறுதிப் போட்டி அபு தாபியில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் யுவராஜ் இடம் பிடித்துள்ள மரதா அரேபியன்ஸ் - டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின.

    டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ராஜபக்சே 12 பந்தில் 23 ரன்களும், ஆசிஃப் கான் ஆட்டமிழக்காமல் 17 பந்தில் 25 ரன்களும், கட்டிங் 5 பந்தில் 12 ரன்களும் அடிக்க கிளாடியேட்டர்ஸ் 10 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் சேர்த்தது.

    மராதா அரேபியன்ஸ் அணியின் பிராவோ 2 விக்கெட்டும், மெக்கிளேனகன், மலிங்கா, ரஜிதா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 88 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மராதா அரேபியன்ஸ் அணியின் வால்டன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லின் 10 பந்தில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லித் 2 ரன்னில் வெளியேறினார்.

    தொடக்க வீரர் வால்டன் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 51 ரன்கள் விளாசி மராதா அரேபியன்ஸ் 7.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி, தேர்வுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
    ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்டவர் ஜார்ஜ் பெய்லி. 37 வயதாகும் இவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஐந்து டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 30 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் அவர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை.

    தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தேர்வுக்குழு உறுப்பினராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெய்லி பிக் பாஷ் டி20 லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளயைாடி வருகிறார். அதேபோல் டாஸ்மானியா அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

    தேர்வுக்குழுவில் இடம் பிடித்தாலும் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவார் எனத் தெரிகிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வுக்குழுவின் சேர்மனாக டிரெவோர் ஹோன்ஸ் இருந்து வருகிறார். ஜஸ்டின் லாங்கர் உறுப்பினராக இருக்கிறார்.
    விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஹாமில்டன் டெஸ்டில் டிரென்ட் போல்ட் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
    நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

    இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. மதிய உணவு இடைவேளைக்கு முன் நியூசிலாந்து வேகபந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமான வெறியேறினார்.

    உணவு இடைவேளைக்குப்பின் களம் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் டிரென்ட் போல்ட் போட்டி முடியும் வரை களம் இறங்கவில்லை.

    காயத்தின் தன்மையை துல்லியமாக கண்டறிய நாளை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பின் காயம் குறித்த முழுத்தகவல் தெரிய வரும்.

    இதனால் ஹாமில்டனில் 29-ந்தேதி தொடங்கும் 2-வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது.

    முதல் இன்னிங்சில் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்திய போல்ட், 2-வது இன்னிங்சில் 6 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×