என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்ஸ்மேன் கவுசிக் காந்தி, சுழற்பந்து வீச்சாளர் அலெக்சாண்டர், பேட்ஸ்மேன் சசிதேவ் ஆகியோரை தக்கவைத்துள்ளது.
    சென்னை:

    2020-ம் ஆண்டில் நடக்கும் 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியையொட்டி ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சம் 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 2 பேர் தமிழக அணிக்காக சீனியர் முதல்தர கிரிக்கெட்டில் பங்கேற்றவராக இருக்கலாம்.

    இதன்படி நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்ஸ்மேன் கவுசிக் காந்தி, சுழற்பந்து வீச்சாளர் அலெக்சாண்டர், பேட்ஸ்மேன் சசிதேவ் ஆகியோரை தக்கவைத்துள்ளது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷய் சீனிவாசன், கணேஷ் மூர்த்தி ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது. இதே போல் ஷாரூக்கான், டி.நடராஜன், அஜித் ராம் ஆகியோர் கோவை கிங்ஸ் அணியிலும், அருண் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, கிரன் ஆகாஷ் மதுரை பாந்தர்சிலும், முரளிவிஜய், சாய் கிஷோர், சோனு யாதவ் ஆகியோர் திருச்சி வாரியர்சிலும், பாபா அபராஜித், சஞ்சய் யாதவ், ஹரிஷ் ஆகியோர் காஞ்சி வீரன்ஸ் அணியிலும், ஆர்.அஸ்வின், விவேக், சிலம்பரசன் திண்டுக்கல் டிராகன்சிலும், தினேஷ் கார்த்திக், ராஜ்குமார், மான் பாப்னா காரைக்குடி காளை அணியிலும் நீடிக்கிறார்கள்.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் இன்று முதல் தங்கள் பெயரை புதிதாக பதிவு செய்துக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்திலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளத்திலும் கிடைக்கும். விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாளாகும்.

    இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

    ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் எப்.சி. அணியை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது கேரளா பிளாஸ்டர்ஸ்.
    ஐதராபாத்:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஐதராபாத் அணியின் போபோ ஒரு கோல் அடித்தார். அதன்பின்னர், கேரளா அணியினர் ஆட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர்.

    பர்த்லோமியோ 33 மற்றும் 75வது நிமிடத்திலும், துரோபரோவ் 39வது நிமிடத்திலும், மெஸ்சி பவுல் 45 நிமிடத்திலும், செலியாசென் சிங் 59வது நிமிடத்திலும் என மொத்தம் 5 கோல்கள் அடித்து அசத்தினர்.

    இறுதியில், கேரளா அணி 5-1 என்ற கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
     
    இதன்மூலம் கேரளா அணி 2 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி என 11 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி 1 வெற்றி, 2 டிரா, 8 தோல்வி என 5 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
    கிரிக்கெட் ரசிகர், பழைய செல்போன்களின் உதிரி பாகங்களை பயன்படுத்தி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் உருவப்படத்தை உருவாக்கியுள்ளார்.
    கவுகாத்தி:

    கவுகாத்தியை சேர்ந்த ராகுல் பரேக் என்ற கிரிக்கெட் ரசிகர், பழைய செல்போன்களின் உதிரி பாகங்களை பயன்படுத்தி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் உருவப்படத்தை உருவாக்கியுள்ளார்.

     ராகுல் பரேக்குடன் கோலி

    வெவ்வேறு வடிவிலான உதிரிபாகங்கள், வயர்களை கச்சிதமாக இணைத்து தத்ரூபமாக கோலியின் உருவத்தை கொண்டு வந்து ஆச்சரியப்படுத்திய அந்த ரசிகரை விராட் கோலி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் இந்த ஓவியத்தில் தனது ஆட்டோகிராப்பையும் பதிவிட்டார். பிறகு கோலிக்கு அந்த ஓவியத்தை பரிசாக ராகுல் பரேக் வழங்கினார். இதற்காக பகல்-இரவு பாராமல் 3 நாட்கள் செலவிட்டதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இலங்கை இடையே ஆன முதல் டி20 போட்டி மழையால் தடைபட்டு, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    மைதானத்தில் மழை நீர் தேங்கி இருக்கும் காட்சி

    டாஸ் போட்ட அடுத்த சில நிமிடங்களில் மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியது. அதனால், போட்டி துவங்குவதற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.  இடையே மழை விட்ட நிலையில் பிச்சில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. அப்போது மீண்டும் மழை பெய்ததால் போட்டி தொடங்குவதற்கு தொடர்ந்து தாமதம் ஆனது. பின் ஆடுகளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதை அறிந்து அதை காய வைக்கும் முயற்சிகள் அனைத்து தரப்பினரும் மேற்கொண்டனர்.

    ஆடுகளத்தை அயர்ன் பாக்ஸ், ஹேர் டிரையர் மூலம் காய வைக்கும் முயற்சியில் பணியாளர்கள்

    ஒரு கட்டத்தில் வாக்குவம் கிளீனர் வைத்தும் காய வைக்க முடியாமல், அயன் ஃபாக்ஸ், ஹேர் டிரையர் உள்ளிட்டவை மூலம் ஆடுகளத்தை காய வைக்க முயற்சி நடைபெற்றது.

    இதன் மூலமும் ஆடுகளத்தை குறித்த நேரத்திற்குள் தயார்செய்ய முடியவில்லை. இதையடுத்து, போட்டி கைவிடப்படுவதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

    மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில் , அடுத்து வரும் இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    கவுகாத்தியில் நடைபெறும் முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் 7 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    தவான், பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. தவான், 2. லோகேஷ் ராகுல், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. ரிஷப் பண்ட், 6. ஷிவம் துபே, 7. பும்ரா, 8. ஷர்துல் தாகூர், 9. நவ்தீப் சைனி, 10. குல்தீப் யாதவ், 11. வாஷிங்டன் சுந்தர்.
    கேப் டவுன் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இன்னிங்சில் ஐந்து கேட்ச்கள் பிடித்து பென் ஸ்டோக்ஸ் சாதனைப் படைத்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 269 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் இழந்தது.

    ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்த பென் ஸ்டோக்ஸ் பாய்ந்து பாய்ந்து கேட்ச்களை பிடித்தார். அவர் ஐந்து பேரை கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.

    பென் ஸ்டோக்ஸ்

    இதன் மூலம் விக்கெட் கீப்பர் அல்லாதவர் ஒரு இன்னிங்சில் ஐந்து கேட்ச்கள் பிடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சர்வீசஸ் அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த நிலையில், தற்போது கர்நாடகா அணிக்கெதிராக 5 விக்கெட்டில் தோல்வியை சந்தித்துள்ளது.
    ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - கர்நாடகா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை 194 ரன்னில் சுருண்டது.  பின்னர் விளையாடிய கர்நாடகா 218 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    24 ரன்கள் பின்தங்கிய நிலையில் மும்பை 2-வது இன்னிங்சில் விளையாடியது. 2-வது இன்னிங்சிலும் தடுமாறி 149 ரன்னில் சுருண்டது. சர்பராஸ் கான் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் சேர்த்தார். கர்நாடகா அணி சார்பில் பிரடீக் ஜெய்ன் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதனால் கர்நாடகா அணிக்கு 126 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தேவ்தத் படிக்கல்  50 ரன்கள் அடிக்க கர்நாடகா 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஏற்கனவே சர்வீசஸ் அணிக்கெதிராக படுதோல்வியடைந்திருந்த நிலையில், தற்போது கர்நாடகா அணிக்கெதிராகவும் தோல்வியை சந்தித்துள்ளது.
    கேப் டவுன் டெஸ்டில் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 223 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 269 ரன்கள் சேர்த்தது. ஒல்லி போப் மட்டும் தாக்குப்பிடித்து ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் அடித்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும் பிலாண்டர், பிரிட்டோரியஸ், நார்ட்ஜ்தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது, தொடக்க வீரர் டீன் எல்கர் ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாடினாலும் மறுபக்கத்தில் விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்ததால் தென்ஆப்பிரிக்கா திணறியது. டீன் எல்கர் 88 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வான் டர் துஸ்சன் 68 ரன்கள் அடித்தார்.

    இருவரின் அரைசதத்தால் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. பிலாண்டர் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆண்டர்சன் ரபாடா, நார்ஜ் ஆகியோரை வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 223 ரன்னில் சுருண்டது. பிலாண்டர் 17 ரன்கள் எடுத்து கடைசி வரை நின்றார்.

    இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஸ்டூவர்ட் பிராட், சாம் கர்ரன் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். இங்கிலாந்து 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக்கிற்கு அதிர்ச்சி அளித்து ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார் சோனம் மாலிக்.
    இத்தாலி தலைநகர் ரோமில் வருகிற 15-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெறும் முதலாவது ரேங்கிங் சீரிஸ் மற்றும் டெல்லியில் பிப்ரவரி 18-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த பெண்கள் அணி தேர்வுக்கான தகுதி சுற்று போட்டி லக்னோவில் நேற்று நடந்தது.

    இதில் 62 கிலோ எடைப்பிரிவில் உலக கேடட் போட்டியில் 2 முறை சாம்பியனான 18 வயது சோனம் மாலிக், ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக்கை சந்தித்தார்.

    விறுவிறுப்பான இந்த போட்டியில் சோனம் மாலிக் 10-10 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்தாலும், கடைசி புள்ளியை வென்றதன் மூலம் சாக்‌ஷி மாலிக்கை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இறுதி சுற்றில் சோனம் மாலிக் 4-1 என்ற புள்ளி கணக்கில் ராதிகாவை தோற்கடித்து இந்திய அணியில் இடம் பிடித்தார்.

    57 கிலோ எடைப்பிரிவில் ஆசிய ஜூனியர் சாம்பியனான அன்சு மாலிக், 2018-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற பூஜா தண்டா மற்றும் மான்சியை வென்று இந்திய அணியில் தடம் பதித்தார்.

    வினேஷ் போகத் (53 கிலோ), திவ்யா கக்ரன் (68 கிலோ), நிர்மலா தேவி (50 கிலோ), கிரண் கோதரா (76 கிலோ) ஆகியோரும் தங்கள் பிரிவில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு தேர்வானார்கள்.
    நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இடது கை பேட்ஸ்மேன் ஜோ கார்ட்டர் 6 பந்தில் 6 சிக்ஸ் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
    நியூசிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற போட்டியில் கான்டர்பெர்ரி கிங்ஸ்- நார்தர்ன் நைட்ஸ் (Northern Knights) அணிகள் மோதின.

    இதில் கான்டர்பெர்ரி அணியின் இடது கை பேட்ஸ்மேனான லியோ கார்ட்டர் எதிரணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆண்டன் டேவ்சிச் வீசிய ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினர்.

    இதன்மூலம் ஒரே ஓவரில் 6 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கிய வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். மேலும், நியூசிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையையும்  பெற்றளார். இவரது அதிரடியால் கான்டர்பெர்ரி கிங்ஸ் 220 ரன்களை சேசிங்  செய்தது. லியோ 29 பந்தில் 70 ரன்கள் விளாசினார்.

    இந்திய வீரர் யுவ்ராஜ் சிங், தென்அப்பிரிக்காவின் கிப்ஸ் ஆகியோர் சர்வதேச அளவில் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

    மேலும் ரவி சாஸ்திரி, கேரி சோபர்ஸ், ராஸ் ஒயிட்லி, ஆப்கானிஸ்தானின் ஹர்சதுல்லா சேசாய் ஆகியோரும் சாதனைப் படைத்துள்ளனர்.
    டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்திருக்கும் அஸ்வினை முந்த சாஹல், பும்ரா இடையே போட்டி நிலவுகிறது.
    இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படு கிறது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. இந்தியா கடைசியாக விளையாடிய 2 தொடர்களையும் கைப்பற்றி இருந்தது.

    வங்காளதேசத்துக்கு எதிராக 2-1 என்ற கணக்கிலும், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2-1 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. இதேபோல இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்துமா என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    அதேநேரத்தில் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும். இதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிய ரோகித் சர்மா, முகமது ‌ஷமி, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர் ஆகியோர் விளையாடவில்லை. அவர்களுக்குரிய இடத்தில் தவான், பும்ரா இடம்பெற்றுள்ளனர்.

    20 ஓவர் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக அஸ்வின் உள்ளார். அவர் 46 ஆட்டத்தில் 52 விக்கெட் எடுத்துள்ளார். சமீபத்தில் யசுவேந்திர சாஹல் அவரது சாதனையை சமன் செய்தார். இன்றைய ஆட்டத்தில் ஒரு விக்கெட் கைப்பற்றினால் அவர் அஸ்வின் சாதனையை முறியடிப்பார்.

    இதேபோல பும்ராவும் அவரது சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது. பும்ரா 42 ஆட்டத்தில் 51 விக்கெட் எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் பும்ரா, சாஹல் விக்கெட் கைப்பற்றுவதை பொறுத்து அதிக விக்கெட் வீழ்த்தும் இந்திய வீரர் யார்? என்பது தெரியவரும்.

    இதேபோல் 20 ஓவர் ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த சர்வதேச வீரர்களில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் முதல் இடத்தில் உள்ளனர். இருவரும் தலா 2633 எடுத்துள்ளனர். கோலி 70 இன்னிங்சிலும், ரோகித் சர்மா 96 இன்னிங்சிலும் இந்த ரன்னை எடுத்துள்ளனர்.

    ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இலங்கை தொடரில் ஆட வில்லை. இதனால் விராட் கோலி இந்த தொடரில் ரன்களை எடுத்து முன்னிலை பெறுவார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் நாதன் லியான் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டை கைப்பற்ற, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 251 ரன்னில் ஆல் அவுட்டானது.
    சிட்னி:

    ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
     
    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். ஸ்டீவ் ஸ்மித் 63 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய லாபஸ்சாக்னே இரட்டை சதமடித்து 215 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஆஸ்திரேலியா 150 ஓவரில் 454 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர், கிராண்ட்ஹோம் தலா 3 விக்கெட்டும், ஆஸ்லே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடினர்.
    இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. காலை முதல் ஆஸ்திரேலிய வீரர்கள் அபாரமாக பந்து வீசினர்.

    தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் ஒரு ரன்னில் அரை சதத்தை தவற விட்டார். லாதம் 49 ரன்னில் வெளியேறினார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் வீழ்ந்தன. கிளென் பிலிப்ஸ் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 95.4 ஓவரில் 251 ரன்னில் ஆல் அவுட்டானது. 

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான் 5 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. ஆட்ட நேர இறுதியில், ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 23 ரன்னுடனும், ஜோ பர்ன்ஸ் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ×