search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 விக்கெட் வீழ்த்திய நாதன் லியான்
    X
    5 விக்கெட் வீழ்த்திய நாதன் லியான்

    நாதன் லியான் அபார பந்துவீச்சு - நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 251 ரன்னில் ஆல் அவுட்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் நாதன் லியான் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டை கைப்பற்ற, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 251 ரன்னில் ஆல் அவுட்டானது.
    சிட்னி:

    ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
     
    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். ஸ்டீவ் ஸ்மித் 63 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய லாபஸ்சாக்னே இரட்டை சதமடித்து 215 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ஆஸ்திரேலியா 150 ஓவரில் 454 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர், கிராண்ட்ஹோம் தலா 3 விக்கெட்டும், ஆஸ்லே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடினர்.
    இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. காலை முதல் ஆஸ்திரேலிய வீரர்கள் அபாரமாக பந்து வீசினர்.

    தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் ஒரு ரன்னில் அரை சதத்தை தவற விட்டார். லாதம் 49 ரன்னில் வெளியேறினார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் வீழ்ந்தன. கிளென் பிலிப்ஸ் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 95.4 ஓவரில் 251 ரன்னில் ஆல் அவுட்டானது. 

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான் 5 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. ஆட்ட நேர இறுதியில், ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 23 ரன்னுடனும், ஜோ பர்ன்ஸ் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×