என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பிரித்வி ஷா தொடக்க வீரராகவும், கேஎல் ராகுல் மிடில் ஆர்டர் வரிசையிலும் களம் இறங்குவார்கள் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. தவான் காயத்தால் விலகியதால் பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது ரோகித் சர்மாவும் அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் இரண்டு தொடக்க இடங்களும் காலியாக உள்ளன. ரோகித் சர்மாவுககு பதில் மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    டி20 தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார். அவருடன் களம் இறங்கும் மற்றொரு வீரர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

    கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினால் பிரித்வி ஷா அல்லது மயங்க் அகர்வால் ஆகியோரில் ஒருவர் அவருடன் தொடக்க வீரராக களம் இறங்கப்படலாம், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக பணியாற்றலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்குவார். கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் களம் இறங்குவார் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அப்படி என்றால் ரிஷப் பண்டுக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்பது கேள்வி எழுந்துள்ளது.

    ஒருநாள் தொடர் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா இடம் பெறாதது துரதிருஷ்டவசமானது. அவர் இல்லாதது அணிக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.

    முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்குவார். கேஎல் ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார். அவர் அந்த இடத்தில் நன்றாக பழக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’’ என்றார்.

    இதனால் பிரித்வி ஷா உடன் மயங்க் அகர்வால்தான் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. அப்படி என்றால் 3-வது இடத்தில் விராட் கோலியும், 4-வது இடத்தில் ஷ்ரேயாஸ் அய்யரும் களம் இறங்குவார்கள். ஐந்தாவது இடத்தில் கேஎல் ராகுல் களம் இறங்குவார் என்று விராட் கோலி உறுதிப்படுத்தியுள்ளார்.

    மணிஷ் பாண்டேவை ஆடும் லெவன் அணியில் சேர்க்க விரும்பினால் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கும். அப்படி என்றால் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்ற வேண்டும். கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார் என்று விராட் கோலி கூறவில்லை. ஆகையால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டால் மணிஷ் பாண்டே அணியில் இடம் பெற முடியாது.

    ஆல்-ரவுண்டரான ஷிவம் டுபே உடன் இந்தியா விளையாட விரும்பினால் ரிஷப் பண்ட், மணிஷ் பாண்டே ஆகியோருக்கு இடம் இருக்காது. எப்படி பார்த்தாலும் ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடிப்பது கடினமான ஒன்றாகத்தான் இருக்கும்.
    டி20 தொடரின்போது காயத்தால் அவதிப்பட்டு வந்த கேன் வில்லியம்சன் முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
    இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 , 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.  இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், நாளை (புதன்கிழமை) இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியின்போது கேன் வில்லியம்சனுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால கடைசி இரண்டு டி20 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.

    இந்த நிலையில், தோள்பட்டை காயம் குணமாகாததால், இந்தியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

    ஏற்கனவே நியூசிலாந்து டி20 கிரிக்கெட் தொடரை முழுமையாக இழந்த நிலையில்,  கேன் வில்லியம்சன் விலகியிருப்பது  நியூசிலாந்து அணிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நியூஸிலாந்து அணிக்கு  கேப்டனாக டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சனுக்கு பதிலாக  மார்க் சேப்மேன்  சேர்க்கப்பட்டுள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நாளை நடக்கவுள்ள நிலையில் இந்தியாவின் அதிரடி தொடருமா என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
    ஹேமில்டன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்து புதிய சாதனை படைத்தது.

    3 ஒருநாள் போட்டித்தொடரில் முதல் ஆட்டம் ஹேமில்டனில் நாளை (5-ந் தேதி) நடக்கிறது.

    20 ஓவர் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது போல் ஒருநாள் போட்டித் தொடரிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக ஆடிய 3 தொடரையும் கைப்பற்றி இந்தியா முத்திரை பதித்தது. 2016-ல் 3-2 என்ற கணக்கிலும் (இந்தியா), 2017-ல் 2-1 என்ற கணக்கிலும் (இந்தியா), 2019-ல் 4-1 என்ற கணக்கிலும் (நியூசிலாந்து) தொடரை வென்றது. தற்போது தொடர்ச்சியாக 4-வது தொடரை வெல்லும் வேட்கையில் இருக்கிறது.

    அதிரடி தொடக்க வீரர் ரோகித்சர்மா காயத்தால் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்டில் விலகி இருப்பது அணிக்கு மிகப்பெரிய பாதிப்பே. இதனால் லோகேஷ் ராகுலும், அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். கேப்டன் விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், மனீஷ்பாண்டே ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது பவுன்சர் பந்து ஹெல்மட்டில் தாக்கியதால் ரி‌ஷப்பண்ட் அதிர்ச்சி அடைந்தார். இதனால் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றினார். அவர் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரி‌ஷப்பண்ட் நீக்கப்பட்டார்.

    ஒரு நாள் தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது உறுதியில்லை. ரோகித்சர்மா இல்லாததால் ராகுல் தொடக்க வரிசைக்கு செல்வார். இதனால் மிடில் ஆர்டர் வரிசையில் ஒரு வேளை வாய்ப்பு கொடுக்கப்படலாம். அதே நேரத்தில் கேதர் ஜாதவும் மிடில் ஆர்டர் வாய்ப்பில் இருக்கிறார்.

    பந்து வீச்சில் பும்ரா, முகமது‌ஷமி, ‌ஷர்துல் தாக்கூர், குல்தீப்யாதவ் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 20 ஓவர் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளனர்.

    கேப்டன் வில்லியம்சன், முன்னாள் கேப்டன் டெய்லர், மார்ட்டின் குப்தில், ஜேம்ஸ் நீசம், டாம்லாதம், பென்னட் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    இந்திய அணி கடைசியாக ஆடிய 3 ஒரு நாள் தொடர்களிலும் (வெஸ்ட் இண்டீஸ்-2, ஆஸ்திரேலியா) வென்று இருந்தது. இரு அணிகளும் கடைசியாக உலக கோப்பை அரை இறுதியில் மோதி இருந்தன. இதில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா நாளை பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    நியூசிலாந்து அணி உலக கோப்பைக்கு பிறகு தற்போதுதான் ஒரு நாள் போட்டியில் ஆடுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    நியூசிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக 5 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில், நியூசிலாந்து அணியை 5 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி தொடரை ஒயிட் வாஷ் செய்தது.  

    இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதன்பிறகு, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்தியா- நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில், காயம் காரணமாக ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு ; - விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மான் கில், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, விர்திமான் சகா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பாண்ட் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகம்மது சமி, நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா ( உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்).
    நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    மும்பை: 

    இந்தியா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5டி20 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி, ஹமில்டன் நகரில் நாளை (பிப்ரவரி 5ம் தேதி ) காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

    இதற்கிடையே கடந்த 3ம் தேதி நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா காரணமாக பேட்டிங் செய்யும் போது தசை பிடிப்பால் அவதிப்பட்டார். இதனால் 60 ரன்கள் எடுத்திருந்தபோது மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின் பீல்டிங் செய்ய வரவில்லை. தசை பிடிப்பு முழுமையாக குணமடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    ‘நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் ஆடிய இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. ரோகித் சர்மா முழுமையாக குணமடையாததால் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்’ என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. 

    அதே போல் ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் பிரித்வி ஷா மற்றும் சுப்மான் கில் ஆகியோரும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

    புனேயில் நடைபெற்ற மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல், செர்பியா வீரர் விக்டர் டிரோக்கியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
    புனே:

    3-வது மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 125-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல், முன்பு 12-வது இடம் வகித்த செர்பியா வீரர் விக்டர் டிரோக்கியை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 2-6, 7-6 (7-4), 1-6 என்ற செட் கணக்கில் விக்டர் டிரோக்கியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் செட்ரிக் மார்செல் செபி 6-3, 6-4 என்ற நேர்செட்டில் கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த குரோஷியா வீரர் இவோ கார்லோவிச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் யூசி சுஜிதா 6-3, 6-0 என்ற நேர்செட்டில் இத்தாலியின் தாமஸ் பாபியனோவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் 6-3, 4-6, 5-7 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் சால்வட்டோர் காருசோவிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.

    உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.
    மெல்போர்ன்:

    உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (9,720 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

    32 வயதான ஜோகோவிச் 5-வது முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் நம்பர் ஒன் இடத்தை 276-வது வாரமாக அலங்கரிக்கிறார். இதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை அதிக வாரங்கள் வகித்த வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த வகையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (310 வாரங்கள்) முதலிடத்திலும், அமெரிக்க முன்னாள் வீரர் பீட் சாம்பிராஸ் (286 வாரங்கள்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

    ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கால்இறுதியில் டொமினிக் திம்மிடம் தோல்வி கண்ட ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,395 புள்ளிகள்) முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அரைஇறுதியில் தோல்வி கண்ட சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (7,130 புள்ளிகள்) 3-வது இடத்தில் நீடிக்கிறார். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் (7,045 புள்ளிகள்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை பிடித்துள்ளார். 4-வது சுற்றில் தோல்வி கண்ட ர‌ஷிய வீரர் டேனில் மெட்விடேவ் (5,960 புள்ளிகள்) ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தை பெற்றுள்ளார்.

    கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் (4,745 புள்ளிகள்) 6-வது இடத்திலும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (3,885 புள்ளிகள்) 7-வது இடத்திலும், இத்தாலி வீரர் மாட்டோ பெர்ரெட்டினி (2,905 புள்ளிகள்) 8-வது இடத்திலும் தொடருகின்றனர். பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் (2,700 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தையும், பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் (2,555 புள்ளிகள்) ஒரு இடம் ஏற்றம் கண்டு 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் பிரஜ்னே‌‌ஷ் குணேஸ்வரன் ஒரு இடம் முன்னேறி 122-வது இடத்தையும், சுமித் நாகல் 6 இடம் உயர்ந்து 125-வது இடத்தையும், ராம்குமார் 2 இடம் முன்னேறி 182-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 2 இடம் சறுக்கி 40-வது இடத்தை பிடித்துள்ளார். திவிஜ் சரண் 53-வது இடத்திலும், புரவ் ராஜா 91-வது இடத்திலும் தொடருகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலிய ஓபன் அரைஇறுதியில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய வீராங்கனை ஆ‌‌ஷ்லி பார்ட்டி (8,367 புள்ளிகள்) நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். அரைஇறுதியில் தோற்ற ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (6,101 புள்ளிகள்) 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். 3-வது சுற்றில் தோல்வி கண்ட செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (5,290 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்தை பெற்றுள்ளார். உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (4,775 புள்ளிகள்) ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தையும், சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச் (4,675 புள்ளிகள்) 2 இடம் முன்னேறி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர். கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு (4,665 புள்ளிகள்) 6-வது இடத்தில் நீடிக்கிறார்.

    ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை உச்சி முகர்ந்த அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் (4,495 புள்ளிகள்) 8 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார். நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் (3,965 புள்ளிகள்) 2 இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்து இருக்கிறார். அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (3,915 புள்ளிகள்) 9-வது இடத்தில் நீடிக்கிறார். முன்னாள் சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (3,626 புள்ளிகள்) 6 இடம் சறுக்கி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
    உடற்தகுதி டெஸ்டில் தோல்வியடைந்ததால் இலங்கை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஹெட்மையர், எவின் லீவிஸ் நீக்கப்பட்டுள்ளனர்.
    வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 22-ந்தேதி தொடங்குகிறது. டி20 கிரிக்கெட் மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

    ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. முன்னணி அதிரடி பேட்ஸ்மேன்களான ஹெட்மையர், எவின் லீவிஸ் ஆகியோர் உடற்பயிற்சி டெஸ்டில் தோல்வியடைந்ததால் நீக்கப்பட்டுள்ளனர். டேரன் பிராவோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இலங்கை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. பொல்லார்டு (கேப்டன்), 2. ஃபேபியன் ஆலன், 3. சுனில் அம்ப்ரிஸ், 4. டேரன் பிராவோ, 5. ராஸ்டன் சேஸ், 6. ஷெல்டன் காட்ரெல், 7. ஜேசன் ஹோல்டர், 8. ஷாய் ஹோப், 9. அல்ஜரி ஜோசப், 10. பிராண்டன் கிங், 11. கீமோ பால், 12. நிக்கோலஸ் பூரன், 13. ரோவ்மேன் பொவெல், 14. ரொமாரியோ ஷெப்பர்டு, 15. ஹெய்டன் வால்ஸ் ஜூனியர்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் ஜெர்சியை கழற்றி கொழுப்பு எங்கே இருக்கிறது? என்று கேட்டதால் தடைக்கு உள்ளாக இருக்கிறார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் உமர் அக்மல். ஒழுங்கீனம் மற்றும் உடற்தகுதி போன்ற பிரச்சனைகளால் சர்வதேச அணியில் விளையாட முடியாமல் இருக்கிறார்.

    தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்களும் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.

    உமர் அக்மல் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிக்க சென்றார். அப்போது சில தேர்வில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அவர் டிரைனரிடம் ஜெர்சியை கழற்றிவிட்டு கொழுப்பு எங்கே இருக்கிறது? என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதனால் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அவருக்கு தடைவிதிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
    நீண்ட மாதங்களாக ஓய்வில் இருக்கும் எம்எஸ் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கருதவில்லை என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி தற்போது நீண்ட ஓய்வில் இருக்கிறார். மீண்டும் இந்திய அணிக்கு அவர் திரும்புவாரா? என்பது புரியாத புதிராக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் அணிக்கு திரும்பலாம் எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும் எம்எஸ் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்புள்ள இருப்பதாக நான் கருதவில்லை என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. அப்படி இருக்கும்போது மீண்டும் அணிக்கு திரும்பும் வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால், ஐபிஎல் தொடரில் இன்னும் நிலைத்து இருக்கும் அவருக்கு பார்ம் முக்கியமானது. அப்போது தேசிய அணிக்கு எது தேவை என்பதை தேர்வுக்குழுவினர் கட்டாயம் பார்க்க வேண்டும்’’ என்றார்.
    ஐபிஎல் தொடரில் விளையாடுவதுதான் எனது விருப்பம் என்று கூறி மைக்கேல் வாகனுக்கு பதில் அளித்துள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் டாம் பாண்டன்.
    ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இங்கிலாந்தை சேர்ந்த 21 வயதான இளம் பேட்ஸ்மேன் டாம் பாண்டனை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    டாம் பாண்டன் ஐபிஎல் தொடரை புறக்கணித்து விட்டு கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் சோமர்செட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற மைக்கேல் வாகன் ஆலோசனை கூறியிருந்தார்.

    அதற்கு டாம் பாண்டன் பதில் அளித்து கூறுகையில் ‘‘நான் 100 சதவீதம் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது உறுதி. நான் கிரிக்கெட்டராக வளரும்போது ஐபிஎல் வித்தியாசமாக தெரிந்தது. அதில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன். ஒயிட்-பால் இங்கிலாந்து அணி வலிமையாக உள்ளது. இருந்தாலும் அணியில் இணைய விரும்புகிறேன். ஐபிஎல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அது உலக கோப்பைக்கு உதவியாக இருக்கும்’’ என்றார்.
    நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை இந்தியா வீசி முடிக்காததால் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 163 ரன்கள் சேர்த்தது. பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து கடைசி நேரத்தில் தடுமாறி தோல்வியை சந்தித்தது.

    இந்த போட்டியின்போது இந்தியா குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை. ஒரு ஓவர் குறைவாக வீசியது. இதனால் இந்திய அணி வீரர்களுக்கு இந்த போட்டிக்கான சம்பளத்தில் தலா 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 4-வது போட்டியில் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×