search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிஷப் பண்ட்
    X
    ரிஷப் பண்ட்

    பிரித்வி ஷா தொடக்க வீரர், மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல்: அப்படி என்றால் ரிஷப் பண்ட்?

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பிரித்வி ஷா தொடக்க வீரராகவும், கேஎல் ராகுல் மிடில் ஆர்டர் வரிசையிலும் களம் இறங்குவார்கள் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. தவான் காயத்தால் விலகியதால் பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது ரோகித் சர்மாவும் அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் இரண்டு தொடக்க இடங்களும் காலியாக உள்ளன. ரோகித் சர்மாவுககு பதில் மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    டி20 தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார். அவருடன் களம் இறங்கும் மற்றொரு வீரர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

    கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினால் பிரித்வி ஷா அல்லது மயங்க் அகர்வால் ஆகியோரில் ஒருவர் அவருடன் தொடக்க வீரராக களம் இறங்கப்படலாம், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக பணியாற்றலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்குவார். கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் களம் இறங்குவார் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அப்படி என்றால் ரிஷப் பண்டுக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்பது கேள்வி எழுந்துள்ளது.

    ஒருநாள் தொடர் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா இடம் பெறாதது துரதிருஷ்டவசமானது. அவர் இல்லாதது அணிக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.

    முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் பிரித்வி ஷா தொடக்க வீரராக களம் இறங்குவார். கேஎல் ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார். அவர் அந்த இடத்தில் நன்றாக பழக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’’ என்றார்.

    இதனால் பிரித்வி ஷா உடன் மயங்க் அகர்வால்தான் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. அப்படி என்றால் 3-வது இடத்தில் விராட் கோலியும், 4-வது இடத்தில் ஷ்ரேயாஸ் அய்யரும் களம் இறங்குவார்கள். ஐந்தாவது இடத்தில் கேஎல் ராகுல் களம் இறங்குவார் என்று விராட் கோலி உறுதிப்படுத்தியுள்ளார்.

    மணிஷ் பாண்டேவை ஆடும் லெவன் அணியில் சேர்க்க விரும்பினால் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கும். அப்படி என்றால் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்ற வேண்டும். கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார் என்று விராட் கோலி கூறவில்லை. ஆகையால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டால் மணிஷ் பாண்டே அணியில் இடம் பெற முடியாது.

    ஆல்-ரவுண்டரான ஷிவம் டுபே உடன் இந்தியா விளையாட விரும்பினால் ரிஷப் பண்ட், மணிஷ் பாண்டே ஆகியோருக்கு இடம் இருக்காது. எப்படி பார்த்தாலும் ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடிப்பது கடினமான ஒன்றாகத்தான் இருக்கும்.
    Next Story
    ×