என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பிருத்வி ஷா, புஜாரா மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தனர். இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களில் சுருண்டது. 

    நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமீசன் 5 விக்கெட்டும், சவுத்தி, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். வாக்னர் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லாதம் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். 
    பிளண்டல் 30 ரன்னும், கிராண்ட்ஹோம் 26 ரன்னும், வாக்னர் 21 ரன்னும் எடுத்தனர்.

    பந்து வீச்சில் அசத்திய கைல் ஜேமீசன் பேட்டிங்கிலும் அசத்தினார். அவ்வப்போது பவுண்டரி விளாசி இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்னில் பும்ராவிடம் ஆட்டமிழந்தார்.  

    இறுதியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 73.1 ஓவரில் 235 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்தியாவை விட 7 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் ஜடேஜா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    சென்னையில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் அரையிறுதி முதல் சுற்றில் கோவாவுக்கு எதிராக சென்னை அணி 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
    சென்னை:

    10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் முடிந்து, தற்போது அரையிறுதிக்கான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரையிறுதியில் கோவா, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் தகுதிபெற்றன.
     
    இந்நிலையில், அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டம் சென்னையில் இன்று இரவு நடைபெற்றது. இதில் சென்னையின் எப்.சி மற்றும் கோவா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியின் சென்னை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் 54, 61, 77, 79 ஆகிய நிமிடங்களில் தலா ஒரு கோல் என மொத்தம் 4 கோல்கள் அடித்தனர். ஆனால், கோவா அணி 85-வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது.

    இறுதியில், சென்னை அணி 4-1 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது. 
    ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரபேல் நடால், மெக்சிகோ ஓபனில் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஒன்றில் நட்சத்திர வீரரான ரபேல் நடால்
    பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.

    இதில் நடால் 6-3, 6-2 என எளிதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சக வீரரான ஜோன் இஸ்னெருடன் மோதினார். இதில் 2-6, 7-5, 6-3 என்ற கணக்கில் பிரிட்ஸ் வெற்ரி பெற்று இறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில்  ரபேல் நடாலும், டெய்லர் பிரிட்சும் மோதுகின்றனர்.
    மெல்போர்னில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை லீக் போட்டியில் வங்காளதேசத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
    மெல்போர்ன்:

    பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  வங்காளதேசம் அணியினர் சிறப்பாக பந்து வீசினர். இதனால் நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், நியூசிலாந்து அணி 18.2 ஓவரில் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ரேச்சல் பிரீஸ்ட் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார்.

    வங்காளதேசம் அணி சார்பில் ரிது மோனி 4 விக்கெட்டும், சல்மா கதுன் 3 விக்கெட்டும், ருமானா அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. ஆனால், நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 74 ரன்னில் சுருண்டது. இதையடுத்து 17 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் லே காஸ்பரேக், ஹெய்லி ஜென்சன் தலா 3 விக்கெட்டு வீழ்த்தினர். இந்த வெற்ரி மூலம் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.
    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய மகளிர் அணி தனது நான்காவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    மெல்போர்ன்:

    மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்தடுத்து 3 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த உற்சாகத்துடன் இன்று 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொண்டது. 

    மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் சேர்த்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜெயங்கனி 33 ரன்கள் எடுத்தார். தில்ஹரி அவுட் ஆகாமல் 25 ரன்கள் சேர்த்திருந்தார். இந்தியா தரப்பில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

    இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. துவக்க வீராங்கனை மந்தனா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கவுர் 15 ரன்களில் வெளியேறினார்.

    ரன் மெஷின் என்று அழைக்கப்படும் இளம் வீராங்கனை சபாலி வர்மா, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 34 பந்துகளில் 7 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 47 ரன்கள் குவித்து, அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். 

    அதன்பின்னர் ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் தலா 15 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். இந்தியா 32 பந்துகள் மீதமிருந்த நிலையில், 116 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    23 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ராதா யாதவ், ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். 
    நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    கடந்த போட்டியைப் போன்று இந்த போட்டியிலும் கைல் ஜேமீசன் , இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக விளங்கினார்.

    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் 7 ரன்களில் டிரண்ட் போல்ட் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்னர் பிருத்வி ஷா, புஜாரா ஆகியோர் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் இருவரும் தலா 54 ரன்களில் ஆட்டமிழந்தனர். இரு விக்கெட்டுகளையும் ஜேமீசன் கைப்பற்றினார். ரிஷப் பண்ட் (12), ஜடேஜா(9), உமேஷ் யாதவ் (0) ஆகியோரையும் ஜேமீசன் வீழ்த்தினார். 

    விக்கெட் வீழ்த்திய உற்சாகத்தில் ஜேமீசன்

    கேப்டன் கோலி 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சவுத்தி பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதேபோல் ரகானேவும் 7 ரன்கள் மட்டுமே சேர்த்து, சவுத்தி ஓவரில் ஆட்டமிழந்தார். 55 ரன்கள் சேர்த்த விகாரி, வாக்னரிடம் விக்கெட்டை இழந்தார். இறுதியாக ஷமி 16 ரன்களில் நடையைக் கட்ட, இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களில் சுருண்டது. 

    நியூசிலாந்து தரப்பில் ஜேமீசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சவுத்தி, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். வாக்னர் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர்களாக லாதம், புளுண்டேல் ஆகியோர் களமிறங்கினர்.
    ராஞ்சியில் இயற்கை முறையில் தர்ப்பூசணி பயிரிடுவதற்கு விதைகளை நிலத்தில் விதைக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, விவசாயத்தில் கால்பதித்தது நெகிழ்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
    ராஞ்சி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 38 வயதான டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது சந்தேகம் தான். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் அவர் விரைவில் பயிற்சியை தொடங்க உள்ளார்.

    ஓய்வு நேரத்தில் டோனி வித்தியாசமாக எதையாவது செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். சமீபத்தில் டோனி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி ஸ்டேடியத்தின் ஆடுகளத்தில் ரோலர் எந்திரத்தை ஓட்டியது வைரலானது. இப்போது அவர் விவசாயம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    அதில், இயற்கை முறையில் தர்ப்பூசணி பயிரிடுவதற்கு விதைகளை அவரே நிலத்தில் விதைக்கிறார். பயிரிடுவதற்கு முன்பாக விவசாயிகள் செய்வது போல் அவரே ஊதுபத்தி ஏற்றி, தேங்காய் உடைத்து வணங்குகிறார்.

    ராஞ்சியில் இந்த தர்ப்பூசணி தோட்டத்தை அமைத்துள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ள டோனி, 20 நாட்களுக்கு முன்பு பப்பாளி நடவு செய்யப்பட்டதாகவும், முதல்முறையாக விவசாயத்தில் கால்பதித்தது நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.



    கிர்ஸ்ட்சர்சில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யும்படி பணித்து விளையாடி வருகிறது.
    கிர்ஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 

    இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி நியூசிலாந்தில் உள்ள கிர்ஸ்ட்சர்ச் மைதானத்தின் நடைபெற்றுவருகிறது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

    இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிரண்ட் போல்ட் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். 

    புஜாரா பந்தை விளாசும் காட்சி

    தற்போதைய நிலவரப்படி இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் பிரித்வி ஷா 44 ரன்களுடனும் புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:-

    இந்தியா:- 

    விராட் கோலி (கேப்டன்), பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (கீப்பர்), ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா

    நியூசிலாந்து:- 

    கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லாதம், டாம் பிளன்டெல், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், காலின் டி கிரான்ட்ஹோம், வாட்லிங் (கீப்பர்), கைல் ஜாமிசன், நீல் வாக்னெர், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி 
    காயத்திற்குப் பிறகு சுமார் ஐந்து மாதங்கள் கழித்து கிரிக்கெட்டில் களம் இறங்கிய ஹர்திக் பாண்ட்யா முதல் போட்டியிலேயே ஆல்-ரவுண்டர் பணியில் அசத்தியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தவர் ஹர்திக் பாண்ட்யா. இவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் சுமார் ஐந்து மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார்.

    இந்நிலையில் டாக்டர் டி.ஒய். பாட்டீல் டி20  கோப்பைக்கான தொடரில் களம் இறங்கினார்.  இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இவர் இடம் பிடித்திருந்த ரிலையன்ஸ்-1 அணி பாங்க் ஆஃப் பரோடா அணியை எதிர்கொண்டிருந்தது.

    இதில் 25 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்ட்யா நான்கு சிக்சர்களுடன் 38 ரன்கள் அடித்தார். இவரது அதிரடியால் ரிலையன்ஸ் 1 அணி 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின் பந்து வீசும்போது 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் இதனால் ஹர்திக் பாண்ட்யா விளையாடிய ரிலையன்ஸ் 1 அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மார்க் வுட் விலகியுள்ளார்.
    இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி காலேயில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் இடம் பிடித்திருந்தார்.

    சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா தொடரை இங்கிலாந்து முடித்துக் கொண்டு சொந்த நாடு திரும்பியது. அப்போது இருந்தே மார்க் வுட் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ பரிசோதனையில் இடது பக்கம் இடுப்புப் பகுதியில் லேசான தசை முறிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இலங்கை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சாகிப் மெஹ்மூத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    கிறிஸ்ட்சர்ச் ஆடுகளம் பிளாட்டாக இருந்தாலும் அல்லது க்ரீனாக இருந்தாலும் இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும் என கவுதம் காம்பிர் வலியுறுத்தியுள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நாளை தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா தொடரை சமன் செய்ய முடியும். மேலும் ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 60 புள்ளிகள் கிடைக்கும்.

    இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் பிளாட் பிட்ச் ஆக இருந்தாலும், க்ரீன் பிட்ச் ஆக இருந்தாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும் என கவுதம் காம்பிர் விராட் கோலிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும். ஆடுகளம் எப்படி இருந்தாலும் (பிளாட் அல்லது க்ரீன்) விராட் கோலி ஹனுமா விஹாரிக்குப் பதிலாக ஜடேஜாவுடன் களம் இறங்க வேண்டும்.’’ என்றார்.
    பெண்களுக்கான டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை 116 ரன்னில் சுருட்டி 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
    பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர். கேப்டன் ஹீதர் நைட் 47 பந்தில் 62 ரன்களும், ஸ்கிவர் 29 பந்தில் 36 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.

    பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. அலியா ரியாஸ் 41 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற 116 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான். இதனால் இங்கிலாந்து 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.
    ×