என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியாவில் 30-க்கு மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட போதிலும் தென்ஆப்பிரிக்கா அணி திட்டமிட்டபடி இந்தியா வரும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. ஆனால் ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கிலும் இழந்து ‘ஒயிட் வாஷ்’ ஆனது.

    இந்திய அணி அடுத்து தென்ஆப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 12-ந் தேதி இமாச்சால பிரதேசம், தரம்சாலாவில் நடக்கிறது. 2-வது போட்டி லக்னோவில் 15-ந்தேதியும், 3-வது ஆட்டம் 18-ந்தேதி கொல்கத்தாவிலும் நடக்கிறது.

    இதற்கிடையே கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதேபோல் தென் ஆப்பிரிக்காவில் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

    இதற்கிடையே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி திட்டமிட்டபடி இந்தியா வரும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் தரம்சாலா, லக்னோ, கொல்கத்தா ஆகிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இதனால் தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வருவதில் சிக்கல் இல்லை. திட்டமிட்டபடி அந்த அணி வரும். நாங்கள் இதுகுறித்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. அதோடு சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    இந்திய அணியும் பல போட்டிகளில் இருந்து விலகியது. இதற்கிடையே தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை வில்வித்தையில் இருந்து இந்திய அணி விலகி உள்ளது. இந்த போட்டி வருகிற 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது.
    நாடுதான் முக்கியம், ரஞ்சி கோப்பை இறுதி போட்டிக்கு ஜடேஜாவை அனுப்ப முடியாது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. இதில் சவுராஷ்டிரா - பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    புஜாரா மற்றும் ஜடேஜா ஆகியோர் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடக்கூடியவர்கள். சகா பெங்கால் அணிக்காக விளையாடக்கூடியவர். நியூசிலாந்து தொடர் முடிந்துள்ளதால் சவுராஷ்டிரா அணிக்காக புஜாரா மற்றும் ஜடேஜா ஆகியோர் விளையாட விரும்பினார்கள்.

    ஆனால், தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் 12-ந்தேதி தொடங்குகிறது. புஜாரா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடாததால் அவர் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடலாம். இதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    ஆனால் ஜடேஜா ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளதால் அவரை ரஞ்சி இறுதி போட்டிக்கு அனுப்ப முடியாது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

    பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெய்தேவ் ஷா ஜடேஜாவை ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிக்கு விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சகாவும் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருவதால் பெங்கால் அணியில் இடம் பெற அவருக்கு சிக்கல் இல்லை.
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய கோப்பை உலக ரேங்கிங் வில்வித்தை போட்டியில் இருந்து இந்திய அணி விலகி இருக்கிறது.
    கொல்கத்தா:

    ஆசிய கோப்பை உலக ரேங்கிங் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி (நிலை 1) தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வருகிற 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய வில்வித்தை அணி நாளை புறப்பட்டு செல்ல திட்டமிட்டு இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) அறிவுறுத்தி இருந்தது.

    இதைத்தொடர்ந்து ஆசிய கோப்பை உலக ரேங்கிங் வில்வித்தை போட்டியில் இருந்து இந்திய அணி நேற்று விலகி இருக்கிறது. இது குறித்து உலக வில்வித்தை சங்கத்துக்கு, இந்திய வில்வித்தை சங்கம் கடிதம் மூலம் தனது விலகல் முடிவை தெரிவித்து இருக்கிறது. அதில் இந்திய அணி வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு கடினமான இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    ‘இறுதிசுற்றை எட்டிய இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துகள். உங்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்’ என்று இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணிக்கு இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இறுதிசுற்றை எட்டிய இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துகள். உங்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இறுதிப்போட்டியிலும் சாதிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், ‘லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் பெற்ற வெற்றிக்கு கிடைத்த பரிசு இது. இந்த ஞாயிற்றுக்கிழமை மகுடம் சூடுவதற்கு வாழ்த்துகள்’ என்றார்.

    விராட் கோலியின் மனைவியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா டுவிட்டர் பக்கத்தில், ‘மிகச்சிறந்த ஆட்டத்தை பார்க்க உற்சாகமாக இருந்த நிலையில் மழை புகுந்து பாழ்படுத்தி விட்டது. அடுத்து 8-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தை காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன்’ என்றார்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் சல்மி அணிக்காக விளையாடி வந்த டேரன் சமி, கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் டேரன் சமி பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் சல்மி அணிக்காக விளையாடி வருகிறார். 2016-ல் இருந்து அந்த அணிக்காக விளையாடி வரும் அவர் 39 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ளார்.

    கடந்த 2-ந்தேதி கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான ஆடும் லெவன் அணியில் இடம் பெறவில்லை. அந்த போட்டியில் பெஷாவர் அணி தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் டேரன் சமி பெஷாவர் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் உடனடியாக கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
    பிரேசில் கால்பந்து அணியின் ஜாம்பவானாக திகழ்ந்த ரொனால்டினோ போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக பராகுவே போலீசார் பிடியில் சிக்கியுள்ளார்.
    பிரேசில் கால்பந்து அணியில் தலைசிறந்த வீரராக திகழ்ந்தவர் ரொனால்டினோ. 39 வயதாகும் இவர் தொண்டு நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பராகுவே சென்றுள்ளார். அங்கு தனது சகோதரருடன் ஆசுன்சியோனில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.

    அப்போது போலீசார் அவரிடம் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ரொனால்டினோ பராகுவே நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடியும்வரை ஹோட்டலில் இருந்து வெளியேறக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.

    போலீசார் அவரது பாஸ்போர்ட்-ஐ பரிசோதனை செய்ததில் அது போலி எனத் தெரியவந்துள்ளது.  பாஸ்போர்ட்டில் ரொனால்டினோ டி ஆஸ்சிஸ் மொரைரா எனக் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மாதம் 7-ந்தேதி பாஸ்பார்ட் வழங்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் பிரேசில் இருந்து பிரேசில் அணிக்காக விளையாடி உலக புகழ் பெற்றவர். ஆனால், பராகுவே சொந்த நாடு எனத் தெரிவித்துள்ளார்.
    ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் பெங்கால் அணிக்கெதிராக புஜாரா விளையாடுவார் என்று சவுராஷ்டிரா அணி கேப்டன் உனத்கட் தெரிவித்துள்ளார்.
    ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் பெங்கால் - சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி வருகிற 9-ந்தேதி நடக்கிறது. இந்திய அணிக்காக விளையாடும் புஜாரா மற்றும் ஜடேஜா ஆகியோர் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடக் கூடியவர்கள். அதேபோல் விக்கெட் கீப்பர் சகா பெங்கால் அணிக்காக விளையாடக் கூடியவர்.

    நியூசிலாந்து தொடரை முடித்துக் கொண்டு இந்திய அணி தாயகம் திரும்பிவிட்டது. புஜாரா மற்றும் ஜடேஜா ஆகியோர் விளையாடினால் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என சவுராஷ்டிரா அணி கேப்டன் உனத்கட் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து புஜாராவிடம் பேசியதாக கூறும் உனத்கட், இறுதி போட்டியில் விளையாட புஜாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் புஜாரா ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் விளையாடுகிறார். ஆனால் ஜடேஜா விளையாடுவது குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை என்றார்.

    பெங்கால் அணியில் சகா விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கிர்கிஸ்தானைச் சேர்ந்த 4-ம் நிலை வீரரை 5-0 என வீழ்த்தி ஒலிம்பிக் ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை காலிறுதிக்கு முன்னேறினார் ஆஷிஷ்.
    ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில்  நடைபெற்று வருகிறது.

    ஆண்களுக்கான 75 கிலோ எடைபிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஆஷிஷ் குமார் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிர்கிஸ்தானைச் சேர்ந்த உமுர்பெக் பெக்சைட்டை எதிர்கொண்டார். இதில் ஆஷிஷ் குமார் 5-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் இந்தோனேசியைச் சேர்ந்த மைக்கேல் ரோபர்ட் முஸ்கிட்டாவை எதிர்கொள்கிறார். காலிறுதியில் வெற்றி பெற்றால் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்து கொள்ள முடியும்.
    டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை முன்னதாகவே நடத்த வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு வைத்த கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்றுள்ளது.
    வங்காளதேசம் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாட சம்மதம் தெரிவித்தது.

    மூன்று டி20, ஒரேயொரு ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட வேண்டும். பாதுகாப்பு காரணத்தால் தொடரை இரண்டாக பிரித்தது வங்காளதேசம். முதலில் மூன்று டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் டி20 தொடரை 2-0 எனவும், டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    அடுத்த மாதம் ஒரேயொரு ஒருநாள் போட்டியிலும், 2-வது டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகிறது. ஒருநாள் போட்டி ஏப்ரல் 3-ந்தேதியும், டெஸ்ட் போட்டி ஐந்தாம் தேதியும் நடைபெற இருப்பதாக இருந்தது.

    இந்நிலையில் 3-ந்தேதி ஒருநாள் போட்டியை முடித்துக் கொண்டு 5-ம் தேதி டெஸ்ட் போட்டிக்கு தயாராக போதுமான நேரம் இல்லை. இதனால் ஏப்ரல் 1-ந்தேதிக்கு ஒருநாள் போட்டியை மாற்ற வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஒருநாள் போட்டியை 1-ந்தேதிக்கு மாற்றியுள்ளது.
    சிட்னியில் மழை அச்சுறுத்திய நிலையிலும் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.
    பெண்கள் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் அரையிறுதி போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஆட்டம் நடைபெற்றது.

    மழை எந்த நேரத்திலும் போட்டியை பாதிக்கும் என்பதால் தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர்.

    தொடக்க வீராங்கனைகளான அலிசா ஹீலி 18 ரன்களும், பெத் மூனே 28 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் மெக் லானிங் ஆட்டமிழக்காமல் 49 பந்தில் 49 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது.

    தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்ய தயாரானபோது மழை பெய்தது. சிறிது நேரம் கழித்து மழை நின்றன. இதனால் டக்-வொர்த் லீவிஸ் விதிப்படி தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 13 ஓவரில் 98 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    13 ஓவரில் 98 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடக்க வீராங்கனைகளான லீ, டேன் வான் நீகெர்க் ஆகியோரால் அதிரடியாக விளையாட முடியாமல் திணறினர். லீ 10 பந்தில் 12 ரன்களும், வான் நீகெர்க் 12 பந்தில் 12 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ப்ரீஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 4.5 ஓவரில் 24 ரன்கள் எடுப்பதற்குள் தென்ஆப்பிரிக்கா மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு லூயஸ்  உடன் வால்வார்த் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் தென்ஆப்பிரிக்கா வெற்றியை நோக்கி சென்றது. 10 ஓவரில் முடிவில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்க்ள எடுத்திருந்தது.

    கடைசி 18 பந்தில் 32 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் 11-வது ஓவரில் ஆஸ்திரேலிய வீராங்கனை டெலிசா கிம்மின்ஸ் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்டது. 12-வது ஓவரை ஸ்கட் வீசினார். இந்த ஓவரில் லூயஸ் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் வால்வார்த் சிக்ஸ் விளாசினார். என்றாலும் 8 ரன்களே கிடைத்தது.

    இதனால் கடைசி 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தென்ஆப்பிரிக்கா அணியால் 13 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா டக்-வொர்த் லீவிஸ் விதியின்படி ஐந்து ரன்னில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    சிட்னியில் மழை பெய்ததால் விளையாடாமலேயே வெளியேற்றப்பட்டதால் இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் கடும் வேதனை அடைந்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் ‘பி’ பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

    இன்று இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் சிட்னி மைதானத்தில் நடைபெறும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டது.

    முதல் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால் மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

    லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் முதல் இடம் பிடித்த இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மழை பெய்யும் என்பதால் ரிசர்வ் டே தேவை எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஐசிசி இந்த கோரிக்கையை மறுத்துவிட்டது.

    இந்நிலையில் விளையாடாமலேயே வெளியேறியதால் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் மனமுடைந்துள்ளனர். இந்நிலையில் எங்கள் நிலை வேறு எவருக்கும் வரக்கூடாது என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹீதர் நைட் கூறுகையில் ‘‘விதி அப்படி இருப்பதால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளனர். முக்கியமான போட்டி மழையால் பாதிக்கப்பட்டு விட்டது. வருங்காலத்தில் விதிமுறைகள் மாற்றப்படும் என்று நம்புகிறோம். அதை நோக்கி நகர வேண்டும். மற்ற அணிகளுக்கு இதுபோன்ற ஒரு நிலைமை வரக்கூடாது. இந்த முடிவை ஏற்றுக் கொள்ள தற்போ எங்களுக்கு கடினமாக உள்ளது’’ என்றார்.
    வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் மோர்தசா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் மோர்தசா. இவரது தலைமையில் வங்காளதேசம் அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றுள்ளது. இவரது தலைமையில் வங்காளதேசம் 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49-ல் வெற்றி பெற்றுள்ளது.

    சமீப காலமாக இவருக்கும் வங்காளதேசம் கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது வேண்டுமென்றாலும் இவரது கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என்ற நிலை இருந்தது.

    தற்போது ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற வங்காளதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது.

    நாளை 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக மோர்தசா அறிவித்துள்ளார். நாளை ஜிம்பாப்வேவுக்கு எதிராக மோர்தசா கேப்டனாக கடைசி போட்டியில் விளையாடுகிறார். இதில் வெற்றி பெற்றால் 50 வெற்றிகளை ருசித்த வங்காளதேசம் கேப்டன் என்ற சாதனையை பெறுவார்.

    2010-ம் ஆண்டு முதன்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மோர்தசா, ஏழு போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக பொறுப்பேற்றார். அதில் மூன்றில் வெற்றி பெற்றார். பிரிஸ்டோலில் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றியும் அதில் ஒன்று.

    அதன்பின் 2014-ல் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மோர்தசா தற்போது வரை அந்த பதவியில் நீடித்து வருகிறார்.
    ×