search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசம் அணி கேப்டன் மோர்தசா
    X
    வங்காளதேசம் அணி கேப்டன் மோர்தசா

    வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் மோர்தசா

    வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் மோர்தசா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் மோர்தசா. இவரது தலைமையில் வங்காளதேசம் அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றுள்ளது. இவரது தலைமையில் வங்காளதேசம் 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49-ல் வெற்றி பெற்றுள்ளது.

    சமீப காலமாக இவருக்கும் வங்காளதேசம் கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது வேண்டுமென்றாலும் இவரது கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என்ற நிலை இருந்தது.

    தற்போது ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற வங்காளதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது.

    நாளை 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக மோர்தசா அறிவித்துள்ளார். நாளை ஜிம்பாப்வேவுக்கு எதிராக மோர்தசா கேப்டனாக கடைசி போட்டியில் விளையாடுகிறார். இதில் வெற்றி பெற்றால் 50 வெற்றிகளை ருசித்த வங்காளதேசம் கேப்டன் என்ற சாதனையை பெறுவார்.

    2010-ம் ஆண்டு முதன்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மோர்தசா, ஏழு போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக பொறுப்பேற்றார். அதில் மூன்றில் வெற்றி பெற்றார். பிரிஸ்டோலில் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றியும் அதில் ஒன்று.

    அதன்பின் 2014-ல் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மோர்தசா தற்போது வரை அந்த பதவியில் நீடித்து வருகிறார்.
    Next Story
    ×