என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர் அறிவித்துள்ளார்.
    மும்பை:

    2000-ம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமானவர் வாசிம் ஜாபர் (42). 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 212 ரன்களை குவித்தது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 

    ஒரு நாள் போட்டிகளில் அதிகம் விளையாடாத ஜாபர் 2000 முதல் 2008 வரை இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். வலது கை பேட்ஸ்மேனான இவர்  31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 இரட்டை சதங்கள் உள்பட 5 சதங்களை விளாசி மொத்தம் ஆயிரத்து 944 ரன்கள் அடித்துள்ளார்.

    வாசிம் ஜாபர் (கோப்பு படம்)

    2008-க்கு பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் உள்ளூர் போட்டிகளான ரஞ்சி கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் விளையாடிவந்தார். விதர்பா அணிக்காக விளையாடிவந்த இவர் ரஞ்சிக்கோப்பையில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

    இந்நிலையில்,  42 வயது நிரம்பிய வாசிம் ஜாபர், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
    ‘பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அதிரடி வீராங்கனைகள் ஷபாலி, மந்தனாவுக்கு எதிராக பவர்-பிளே சமயத்தில் பந்து வீச விரும்பவில்லை’ என்று ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் கூறியுள்ளார்.
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது.

    மெல்போர்னில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு அரங்கேறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. அரையிறுதி மழையால் பாதிக்கப்பட்டது போல் இறுதிஆட்டத்துக்கு மழை ஆபத்து இல்லை என்று அங்கு வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை மழை குறுக்கிட்டாலும் மாற்று நாள் (ரிசர்வ் டே) இருக்கிறது. நேற்று வரை இந்த ஆட்டத்துக்கு 75 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளன. இதனால் அதிக ரசிகர்கள் பார்க்கும் பெண்கள் போட்டியாக இது அமையும் என்று கருதப்படுகிறது.

    இதையொட்டி நடப்பு தொடரில் இதுவரை 9 விக்கெட்கள் கைப்பற்றி இருக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 27 வயதான மேகன் ஷூட் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    சொல்லப்போனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை நான் வெறுக்கிறேன். எனது பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். குறிப்பாக இந்திய தொடக்க வீராங்கனைகள் மந்தனாவும், ஷபாலி வர்மாவும் எனது பந்து வீச்சை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த முத்தரப்பு தொடரில் எனது பந்து வீச்சில் ஷபாலி பிரமாதமான ஒரு சிக்சர் தூக்கினார். அனேகமாக எனது பந்து வீச்சில் விரட்டப்பட்ட மிகப்பெரிய சிக்சராக அது இருந்தது.

    அவர்களை மீண்டும் சந்திக்கும் நிலையில் சில திட்டங்களை வகுத்துள்ளோம். ஆனால் பவர்-பிளேயில் (முதல் 6 ஓவர்) மந்தனா, ஷபாலிக்கு எதிராக நான் பந்து வீசுவது சரியானதாக இருக்காது. ஏனெனில் அவர்கள் எனது பவுலிங்கை எளிதில் அடிக்க பழகி விட்டனர்.

    இறுதிப்போட்டியில் இந்திய அணியை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாங்கள் நீண்ட காலமாகவே பேசிக்கொண்டு இருக்கிறோம். அதற்கு ஏற்றவாறு தான் முத்தரப்பு 20 ஓவர் தொடரை கருதி விளையாடினோம்.

    அண்மை காலமாக குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடி விட்டு அவர்களையே இறுதி ஆட்டத்திலும் சந்திப்பது ஒரு வகையில் நல்ல விஷயம் தான். அவர்களுக்கும் அப்படி தான் இருக்கும். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு மேகன் ஷூட் கூறினார்.

    இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்தது. இதில் மேகன் ஷூட்டின் முதல் ஓவரிலேயே ஷபாலி 4 பவுண்டரிகள் விரட்டியது குறிப்பிடத்தக்கது.

    இறுதிப்போட்டியில் நியூசிலாந்தின் கிம் காட்டன், பாகிஸ்தானின் ஆசன் ராசா ஆகியோர் கள நடுவர்களாக பணியாற்றுவார்கள் என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது. டி.வி. நடுவராக வெஸ்ட் இண்டீசின் கிரிகோரி பிராத்வெய்ட் செயல்படுவார். 
    இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.
    பல்லேகலே:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
    முதலில் நடந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி 3-0 என கைப்பற்றி அசத்தியது.
     
    இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி 20 போட்டி பல்லேகலேவில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது.

    அந்த அணியின் டாசன் ஷனகா 31 ரன்னும், ஏஞ்சலோ மேத்யூஸ் 23 ரன்னும், திசாரா பெராரா 21 ரன்னும் எடுத்தனர். எக்ஸ்டிரா வகையில் 21 ரன் கிடைத்தது.

    இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.

    156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் 21 பந்தில் 43 ரன்கள் குவித்தார்.

    அடுத்து இறங்கிய ஹெட்மையர் இறுதிவரை நிலைத்து நின்றார். நான்காவது விக்கெட்டுக்கு இறங்கிய ரசல் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 14 பந்தில் 6 சிக்சருடன் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் பிடிப்பேன் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியில் குல்தீப் யாதவ் - சாஹல் ஜோடி அபாரமாக பந்து வீசி வந்தது. ஆனால் சமீப காலமாக அவர்கள் இணைந்து அணியில் இடம் பிடிப்பது இல்லை. உலக கோப்பை கிரிக்கெட்டுக்குப்பின் ஜடேஜா சிறப்பாக விளையாடுவதால் குல்தீப் யாதவுக்கு தொடர்ந்து அணியில் இடம் கிடைப்பதில்லை.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீரர்களும் அதிகமான போட்டிகளில் விளையாட விரும்புவார்கள். ஏனென்றால் அதிகமான போட்டியில் விளையாடினால், முன்னேற்றம் அதிகமாக இருக்கும். ஐபிஎல் தொடரில் ஒன்றரை மாதங்கள் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலமாக பெர்பார்மன்ஸ் செய்ய முடியும்.

    நான் தற்போது ஐபிஎல் தொடருக்கு தயாராகி உள்ளேன். ஐபிஎல் தொடருக்கான திட்டம் தீட்டுவதற்கு எனக்கு போதுமான நேரம் கிடைத்தது. இந்திய அணிக்கு திரும்ப ஐபிஎல் மிகமிக முக்கியமானது’’ என்றார்.
    ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் மற்றும் போட்டியை பார்க்க வரும் ரசிகர்களை கொரோனா வைரஸ் தாக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என கங்குலி தெரிவித்துள்ளார்.
    சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இத்தாலியைச் சேர்ந்த 16 சுற்றுலா பயணிகள் உள்பட 31 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் மத்திய அரசும், டெல்லி அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் வருகிற 29-ந்தேதி ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. கொரோனா வைரஸ் மூலம் ஐபிஎல் போட்டி நடக்குமா? என்ற அச்சம் நிலவி வருகிறது.

    ஆனால், ஐபிஎல் போட்டி நடந்தே தீரும், வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு வைரஸ் தொற்றாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதியளித்துள்ளார்.

    இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டி குறிப்பிட்ட தேதியில் தொடங்கும். எல்லா இடங்களிலும் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து ஏற்கனவே இலங்கை சென்று விளையாடுவதை உறுதி செய்துள்ளது. தென்ஆப்பிரிக்கா இந்தியா வர இருக்கிறது. அங்கே எந்த பிரச்சினையும் இல்லை.

    கவுன்ட்டி அணிகள் உலகின் எல்லா இடங்களுக்கும் பயணம் செய்கின்றன. அவைகள் அபு தாபி, ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று விளையாடுகின்றன. ஆகவே, எந்த பிரச்சினையும் இல்லை.

    நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம். கூடுதலாக  என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனக்கு சரியாக தெரியவில்லை. மருத்துவக்குழு இதுகுறித்து எங்களுக்கு தெரிவிக்கும். மருத்துவக்குழு ஏற்கனவே மருத்துவமனைகளுடன் தொடர்பில் உள்ளது. ஆகவே எல்லாம் கிடைக்கும் வகையில் உள்ளது. டாக்டர்கள் என்ன கூறுகிறார்களோ, அதை செய்வோம்.

    மருத்துவம் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் மருத்துவக்குழு மூலம் ஆராய்வோம். ஒவ்வொரு தொடரும் நடைபெறும்’’ என்றார்.
    கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் டக்வொர்த் லீவிஸ் விதியின்படி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கிரேட்டர் நொய்டாவில் இன்று நடைபெற்றது. டாஸ்வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. பால் ஸ்டிர்லிங் 41 பந்தில் 60 ரன்களும், ஓ'பிரைன் 17 பந்தில் 35 ரன்களும் விளாசினர்.

    டெக்டர் ஆட்டமிழக்காமல் 17 பந்தில் 29  ரன்கள் அடிக்க அயர்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் 4 ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. வீரர்கள் ஹஸ்ரதுல்லா சேசாய் 15 பந்தில் 23 ரன்களும், விக்கெட் கீப்பர் குர்பாஸ் 13 பந்தில் 28 ரன்களும் அடித்து சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

    அதன்பின் வந்த கரிம் ஜனத் 6 ரன்னிலும், கேப்டன் ஆஷ்கர் ஆஃப்கன் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

    நஜிபுல்லா ஜத்ரன் 21 பந்தில் 42 ரன்கள் விளாச ஆப்கானிஸ்தான் 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    அதன்பின் ஆட்டம் தொடர சாத்தியம் இல்லாததால் டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. அப்போது ஆப்கானிஸ்தான் 123 ரன்கள் எடுத்தாலே வெற்றி என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    உலக கோப்பை தொடரில் ‘ப்ரீ பாஸ்’ மூலம் இறுதி போட்டிக்கு முன்னேறுவதை விட விளையாடி தோற்பது மேல் என தென்ஆப்பரிக்கா அணி கேப்டன் இந்தியாவை மறைமுகமாக தாக்கியுள்ளார்.
    பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் இடம் பிடித்த இந்தியா, 2-வது இடம் பிடித்த ஆஸ்திரேலியா, ‘பி’ பிரிவில் இடம் பிடித்த தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று சிட்னியில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. கனமழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் லீக் ஆட்டத்தில் முதல் இடம் பிடித்த இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகவே முதன்முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறின.

    அதே மைதானத்தில் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாட இருந்தனர். இந்த போட்டியும் மழையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி மழை பெய்து போட்டி ரத்து  செய்யப்பட்டால் தென்ஆப்பிரிக்கா இறுதி போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது.

    ஆனால், மைதான ஊழியர்களின் தீவிர முயற்சியால் ஆடுகளம் போட்டிக்கு தயாரானது. ஆஸ்திரேலியா முதலில் 20 ஓவர்களும் பேட்டிங் செய்தது. அதன்பின் மழை பெய்ததால் 13 ஓவரில் 98 ரன்கள் தென்ஆப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    பரபரப்பான ஆட்டத்தில் தென்அப்பிரிக்கா அணி ஐந்து ரன்னில் வெற்றியை நழுவ விட்டது. போட்டி முடிந்த பின்னர் மழை பெய்திருந்தால் இந்தியாவை போன்று விளையாடாமல் இறுதி போட்டிக்கு முன்னேறியிருக்க வாய்ப்பு இருந்தது குறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் வான் நீகெர்க்கிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு ‘ப்ரீ பாஸ்’ மூலம் செல்வதை விட தோற்பது மேல் என இந்தியாவை மறைமுகமாக சாடினார். இதுகுறித்து வான் நீகெர்க் கூறுகையில் ‘‘நான் மைதான ஊழியர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அவர்கள் நாங்கள் விளையாடுவதற்காக கடுமையான வகையில் பணியாற்றினார்கள்.

    நாங்கள் இங்கே கிரிக்கெட் விளையாட வந்தோம். உலக கோப்பை இறுதி போட்டிக்கு ‘ப்ரீ பாஸ்’ பெறுவதை விட தோல்வியை ஏற்பேன். எதிர்காலத்தில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு ரிசர்வ் டே தேவை’’ என்றார்.
    தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிட்செல் ஸ்டார்க் பெண்களுக்கான உலக கோப்பை இறுதி போட்டியில் மனைவியின் ஆட்டத்தை காண்பதற்காக ஆஸ்திரேலியா விரைகிறார்.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. 3-வது ஆட்டம் நாளை நடக்கிறது.

    இதற்கிடையே ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பெண்கள் டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பரும், தொடக்க வீராங்கனையாக களம் இறங்கும் அலிசா ஹீலி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி ஆவார்.

    சொந்த மண்ணில் உலக கோப்பை இறுதி போட்டியில் மனைவி விளையாட இருப்பதை ஸ்டார்க் நேரில் சென்று பார்வையிட ஆசைப்பட்டார். இதற்காக அணி நிர்வாகத்திடம் அனுமதி கோரினார். அணி நிர்வாகமும் அனுமதி வழங்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா புறப்பட இருக்கிறார் மிட்செல் ஸ்டார்க்.
    டி.ஒய். பாட்டீல் 20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா 39 பந்தில் சதம் விளாசியதோடு, ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் குவித்தார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தவர் ஹர்திக் பாண்ட்யா. இவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதனால் சுமார் ஐந்து மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார்.

    இந்நிலையில் டாக்டர் டி.ஒய். பாட்டீல் டி20  கோப்பைக்கான தொடரில் களம் இறங்கினார். ஹர்திக் பாண்ட்யா ரிலையன்ஸ்-1 அணிக்காக விளையாடி வருகிறார்.

    கடந்த 3-ந்தேதி ரிலையன்ஸ்-1 அணி சிஏஜி அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில்  ஹர்திக் பாண்ட்யா 37 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 39 பந்தில் 105 ரன்கள் அடிக்க ரிலையன்ஸ்-1 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவிததது. 105 ரன்னில் 10 சிக்ஸ் மற்றும் எட்டு பவுண்டரிகள் அடங்கும். அத்துடன் ஐந்து விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் ரிலையன்ஸ்-1 சூர்யகுமார் யாதவ் தலைமையிலான பிபிசிஎல் அணியை எதிர்கொண்டது. இதில் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 55 பந்தில்  158 ரன்கள் குவித்தார். இதில் 20 சிக்சர்கள் விளாசினார். அத்துடன் ஆறு பவுண்டரிகளும் அடித்தார். 39 பந்தில் சதம் அடித்த அவர், கடைசி 16 பந்தில் 58 ரன்கள் விளாசினார்.

    இந்த அதிரடி மூலம் உடற்தகுதி பெற்று மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்ப தயாராக இருக்கிறேன் என்பதை தேர்வு குழுவுக்கு சூசகமாக தெரிவித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹர்திக் பாண்ட்யா உள்ளார்.

    ஹர்திக் பாண்ட்யா காயத்திற்குப்பின் சிறப்பாக விளையாடி வருவது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
    எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் ஜிஎஸ்டி மற்றும் கலால்வரி, எஸ்டிஏடி அணிகள் வெற்றி பெற்றன.
    சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜிஎஸ்டி மற்றும் கலால்வரி - தமிழ்நாடு போலீஸ் அணிகள் மோதின. இதில் ஜிஎஸ்டி மற்றும் கலால்வரி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

    மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) அணி 2-0 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தியது.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்திய விளையாட்டு ஆணையம் - இந்திய உணவு கழகம் தமிழ்நாடு போலீஸ்-ஸ்டேட் வங்கி (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் 5-வது சீசன் ஜூன் 10-ந்தேதி கோவையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    இதுவரை 4  தொடர்கள் நடைபெற்றுள்ளன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 முறையும் (2017, 2019), டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகியவை தலா ஒரு தடவையும் டிஎன்பிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளன.

    8 அணிகள் பங்கேற்கும் 5-வது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் ஜூன் 10-ந்தேதி தொடங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு அங்குள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டி நெல்லையில் ஜூலை 12-ந் தேதி நடைபெறுகிறது.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தனது லீக் ஆட்டங்களில் ஜூன் 14-ந்தேதி திருப்பூர் தமிழன்ஸ் அணியையும், ஜூன் 17-ந்தேதி திருச்சி வாரியர்ஸ் அணியையும், ஜூன் 19-ந்தேதி காஞ்சி வீரன்ஸ் அணியையும், ஜூன் 21-ந்தேதி மதுரை பாந்தர்ஸ் அணியையும், ஜூன் 28-ந்தேதி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியையும், ஜூலை 3-ந் தேதி சேலம் ஸ்பார்டன்ஸ் அணியையும், ஜூலை 5-ந்தேதி கோவை கிங்ஸ் அணியையும் சந்திக்கிறது.
    இந்தியாவில் 30-க்கு மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட போதிலும் தென்ஆப்பிரிக்கா அணி திட்டமிட்டபடி இந்தியா வரும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது. ஆனால் ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கிலும் இழந்து ‘ஒயிட் வாஷ்’ ஆனது.

    இந்திய அணி அடுத்து தென்ஆப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் வருகிற 12-ந் தேதி இமாச்சால பிரதேசம், தரம்சாலாவில் நடக்கிறது. 2-வது போட்டி லக்னோவில் 15-ந்தேதியும், 3-வது ஆட்டம் 18-ந்தேதி கொல்கத்தாவிலும் நடக்கிறது.

    இதற்கிடையே கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதேபோல் தென் ஆப்பிரிக்காவில் ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

    இதற்கிடையே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி திட்டமிட்டபடி இந்தியா வரும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் தரம்சாலா, லக்னோ, கொல்கத்தா ஆகிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இதனால் தென் ஆப்பிரிக்க அணி இந்தியா வருவதில் சிக்கல் இல்லை. திட்டமிட்டபடி அந்த அணி வரும். நாங்கள் இதுகுறித்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. அதோடு சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    இந்திய அணியும் பல போட்டிகளில் இருந்து விலகியது. இதற்கிடையே தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை வில்வித்தையில் இருந்து இந்திய அணி விலகி உள்ளது. இந்த போட்டி வருகிற 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கிறது.
    ×