என் மலர்
விளையாட்டு
சச்சின் தெண்டுல்கரை அறிமுக போட்டியில் ஆட்டமிழக்க செய்தபோது, கிரிக்கெட்டில் ஜாம்பவான் என பெயர் எடுப்பார் என்று நினைக்கவில்லை என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக சுமார் 24 வருடங்கள் விளையாடியவர் சச்சின் தெண்டுல்கர். ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவிப்பு, அதிக சதம், அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என புகழப்படுகிறார்.
சச்சின் தெண்டுல்கர் தனது 16 வயதில் பாகிஸ்தானுக்கு எதிராக 1989-ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் இன்னிங்சில் 15 ரன்கள் எடுத்த நிலையில் வக்கார் யூனிஸ் பந்தில் க்ளீன் போல்டானார். அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான சச்சின் தெண்டுல்கரை வக்கார் யூனிஸ் வீழ்த்தினார். இதில் சச்சின் 2-வது பந்திலேயே டக் அவுட் ஆனார்.
சச்சினை அவுட்டாக்கும்போது கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் பெயர் பதிப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘சச்சின் தெண்டுல்கர் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் இருந்து வந்ததால் ஒட்டுமொத்த அணியும் ஆர்வமாக இருந்தது. முச்சதம் அடித்த ஒரே மாணவன் சச்சின் தெண்டுல்கர்தான், பள்ளிக்கூட அளவில் முச்சதம் அடித்தவர் யார்?. பள்ளிக்கூட அளவில் சதம் அடித்தாலே பெரிய விஷயம் என்று பெருமைப்பட்டனர்.
சச்சசினை நான் முதல்முறையாக பார்க்கும்போது, தற்போது கிரேட் சச்சினாக விளங்கும் அவர், அப்போது என்னை ஈர்க்கும் அளவிற்கு இல்லை. விளையாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் பல வருடங்களாக அவர் செய்தவை அற்புதமானது. கிரிக்கெட்டில் இவ்வளவு பெயரை பதிப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், கடின உழைப்பு அவருக்கு இந்த பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.
கராச்சியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவரை நான் மிக விரைவாக வீழ்த்தினேன். 15 ரன்கள் எடுத்தாலும் சில ஆன்-டிரைவ், ஸ்ட்ரெய்ட் டிரைவ்ஸ் ஷாட்டுகள் அற்புதமானது. அந்த தொடரில் அவர் மிகப்பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. ஆனால் சியால்கோட்டில் அரைசதம் அடித்ததை குறிப்பிட்டாக வேண்டும். ஏனென்றால், ஆடுகளம் பச்சை புற்களால் நிறைந்து இருந்தது.
நாங்கள் டெஸ்டில் முடிவு கிடைக்க வேண்டும் என்பதால் க்ரீன் ஆடுகளத்தை தயார் செய்தோம். சச்சின் களம் இறங்கியபோது மூக்கில் பந்து தாக்கியது. அப்போது அவருக்கு 16 வயது. இதனால் ஒருமாதிரியாக இருந்தார். ஆனால் உறுதியாக இருந்தார். அவருடன் சித்து பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இருவரும் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
அதன்பின் சச்சின் பேட்டிங் செய்ய தயாராகிவிட்டார். அதன்பின் அவருடைய கிளாஸ் பேட்டிங் மூலம் அரைசதம் அடித்தார். அப்போது ஏதோ சிறப்பான ஒன்றை செய்யப்போகிறார் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.’’ என்றார்.
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இந்த ஆண்டிற்கான சிறந்த வீரராகவும், சிறந்த டெஸ்ட் வீரராகவும் குயிண்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டால் ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விழா கொரோனா வைரஸ் தொற்றால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது.
ஒயிட் பால் கிரிக்கெட் அணியின் கேப்டன் டி காக் சிறந்த வீரராகவும், டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டில் 21 வயதாக லாரா வால்வார்த்ட் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டி காக் 2-வது முறையாக சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். இதற்கு முன் கல்லீஸ் (2004, 2011), நிதினி (2005, 2006), அம்லா (2010, 2013), டி வில்லியர்ஸ் (2014, 2015), ரபடா (2016, 2018) ஆகியோர் இரண்டு முறை இந்த விருதை பெற்றுள்ளனர்.
கொழும்பு புறநகரில் இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸ் ஓட்டிச் சென்ற கார் மோதி 74 வயது முதியவர் பலியானாதால், மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ். 25 வயதாகும் இவர் இலங்கை அணிக்காக 44 டெஸ்ட் மற்றும் 76 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்று அதிகாலை கொழும்பு புறநகர் பகுதியில் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
எதிர்பாராத விதமாக கார் 74 வயதான முதியவர் மீது மோதியுள்ளது. இதில் முதியவர் உயிரிழந்தார். இதனால் குசால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குசால் மெண்டிஸ் நீதிபதி முன் ஆஜர்படுத்த இருக்கிறார்.
ரசிகர்கள் இன்றி நடைபெற்ற ஜெர்மன் கோப்பை இறுதிப் போட்டியில் பேயர் முன்னிச் 4-2 என ரெவர்குசன் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜெர்மனி கால்பந்து கோப்பைக்கான இறுதிப் போட்டி நேற்றிரவு ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. இதில் முன்னணி அணியான பேயர்ன் முனிச் - பேயர் லெவர்குசன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பேயர்ன் முனிச் அணி 4-2 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதன் மூலம் பேயர்ன் முனிச் ஜெர்மன் கோப்பையை 20-வது முறையாக வென்றுள்ளது. மேலும், லீக் மற்றும் ஜெர்மன் கோப்பை ஆகியவற்றை ஒரே ஆண்டில் 13 முறையாக கைப்பற்றியுள்ளது.
ரசிகர்கள் இல்லாமல் கோப்பையை வென்றது குறித்து பேயர்ன் முனிச் அணியின் முன்னணி வீரர் தாமஸ் முல்லர் கூறுகையில் ‘‘சிறப்பான ஸ்டேடியத்தில் ஜெர்மன் கோப்பையை வெல்லும்போது ரசிகர்கள் இல்லாதது சற்று கவலை அளிக்கிறது. வெற்றிக்கோப்பையை ஏந்தும்போது இந்த கவலை ஏற்பட்டது. இது லேசான காயத்தை ஏற்படுத்தியது’’ என்றார்.
டென்னிசில் போர் ஹேண்ட் ஷாட்டை எப்படி மேம்படுத்துவது என்று சச்சின் தெண்டுல்கர் பெடரரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டென்னிஸ் ஆட்டத்தின் மீது ஆர்வம் கொண்டவர். ஆண்டுதோறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் வழக்கம் உடையவர். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), தெண்டுல்கருக்கு பிடித்தமான டென்னிஸ் வீரர் ஆவார்.
தெண்டுல்கர் தான் டென்னிஸ் விளையாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து இருக்கிறார். 11 வினாடி கொண்ட அந்த வீடியோவில் தெண்டுல்கர் ‘போர் ஹேண்ட்’ ஷாட் அடிப்பது இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவை பெடரரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் தெண்டுல்கர் தனது ‘போர் ஹேண்ட்’ ஷாட்டை மேம்படுத்த ஆலோசனை எதுவும் இருக்கிறதா? என்று கேள்வி விடுத்து இருக்கிறார்.
ஆனால் இதற்கு இன்னும் பெடரர் பதில் எதுவும் அளிக்கவில்லை.
சுனில் கவாஸ்கரின் வலைப்பயிற்சியை பார்க்கும்போது, எப்படி ரன் குவிக்கப் போகிறார் எனத் தோன்றும் என கிரண் மோரே தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரரான இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கருக்கு வலை பயிற்சி என்றாலே அலர்ஜி என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார், அவருடன் இணைந்து விளையாடிய கிரண் மோரே.
முன்னாள் விக்கெட் கீப்பரான கிரண் மோரே அளித்த ஒரு பேட்டியில், ‘‘வலை பயிற்சியில் நான் பார்த்தமட்டில் மோசமான ஆட்டக்காரர்களில் ஒருவர் கவாஸ்கர். அவருக்கு வலைப்பயிற்சியில் ஈடுபடுவது ஒரு போதும் பிடிக்காது.
ஏனோ, அதில் அவர் எப்போதும் தடுமாறுவார். நீங்கள் அவரை வலை பயிற்சியில் பார்த்து விட்டு, மறுநாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் செய்வதை பார்த்தால் நிச்சயம் 99.9 சதவீதம் வித்தியாசம் இருக்கும்.
வலை பயிற்சியில் அவரை பார்க்கும்போது, இவர் எல்லாம் எப்படி ரன் குவிக்கப்போகிறார் என்று சொல்வீர்கள்.
மறுநாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் களத்தில் அவரை பார்க்கும்போது, ‘வாவ்’ பிரமாதமாக ஆடுகிறார் என்று ஆச்சரியப்பட்டு பாராட்டுவீர்கள். ஆட்டத்தின் மீது அவர் கவனம் செலுத்தும் விதம் நம்ப முடியாத அளவுக்கு இருக்கும்’’ என்றார்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் போட்டிக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 8-ந்தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. இதற்கான 30 பேர் கொண்ட பயிற்சி அணியை இங்கிலாந்து அணி அறிவித்திருந்தது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. ஜோ ரூட் இல்லாததால் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:-
1. பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), 2. ஜேம்ஸ் ஆண்டர்சன், 3. ஸ்டூவர்ட் பிராட், 4. ஜாஃப்ரா ஆர்சர், 5. டாம் பெஸ், 6. ரோரி பேர்ன்ஸ், 7. ஜோஸ் பட்லர், 8. ஜாக் கிராவ்லி, 9. ஜோ டென்லி, 10. ஒல்லி போப், 11. டாம் சிப்லி, 12. கிறிஸ் வோக்ஸ், 13. மார்க் வுட்.
ரிசர்வ் வீரர்கள்:-
1. ஜேம்ஸ் பிரேசி, 2. சாம் கர்ரன், 3. பென் ஃபோக்ஸ், 4. டான் லாரன்ஸ், 5. ஜேக் லீச், 6. சாகிப் மெக்மூத், 7. கிரேக் ஓவர்ட்டன், 8. ஒல்லி ராபின்சன், 9. ஒல்லி ஸ்டோன்.

மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஜோ ரூட் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. பேர்ஸ்டோவ் மோசமான ஃபார்ம் காரணமாக சேர்க்கப்படவில்லை. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது உடல்நிலை மோசம் காரணமாக விலகிய ஜேக் லீச் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மொயீன் அலி டெஸ்ட் போட்டிக்கு தற்காலிகமாக விடைகொடுத்திருந்தார். தற்போது பயிற்சிக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 75 ஆயிரம் ரசிகர்கள் உட்காரும் வகையில் உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட இருக்கிறது.
குஜராத் மாநிலம் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் மொதாரா கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 1.10 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கலாம். அதன்பின் ஆஸ்திரேலியாவில் 1.02 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய மெல்போர்ன் மைதானம் உள்ளது.
இந்நிலையில் 75 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் உலகின் 3-வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்ட இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 25 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சோன்ப் கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தில் சுமார் 350 கோடி ரூபாயில் இரண்டு கட்டமாக கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது. வேலை தொடங்குவதில் இருந்து இரண்டு வருடத்திற்குள் மைதானம் தயாராகி விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பயிற்சி மைதானங்கள் அமைக்கப்படும். இரண்டையும் ரஞ்சி கோப்பை போட்டிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் 30 வலைப்பயிற்சி பகுதியும், 250 பேர் அமரும் வகையில் பத்திரிகையாளர்கள் அறையும் கட்டப்பட இருக்கிறது.
இதுகுறித்து ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க செயலாளர் மகேந்திர சர்மா கூறுகையில் ‘‘மைதானத்தில் உள்விளைாட்டு போட்டிகள், விளையாட்டு பயிற்சி அகாடமி, கிளப் ஹவுஸ் மற்று் 4000 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் செய்யப்படும்.
90 கோடி ரூபாய் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் செலவழிக்கும். 100 கோடி ரூபாய் பிசிசிஐ-யிடம் கேட்க இருக்கிறோம். 100 கோடி ரூபாய் கடன் வாங்க இருக்கிறோம்’’ என்றார்.
உடற்தகுதி பெற்றதால் இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 4 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 8-ந்தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. ஜூலை 28-ம்தேதி டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. இந்த 3 டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடத்தப்படுகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள அனைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதோடு தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீரர் கேப்ரியல் சேர்க்கப்பட்டுள்ளார். 32 வயதான அவர் கணுக்காலில் ஆபரேஷன் செய்து கொண்டார். உடல்தகுதியை நிரூபித்து பயிற்சிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதால் தேர்வாகியுள்ளார்.
கேப்ரியல் 45 டெஸ்டில் விளையாடி 133 விக்கெட் கைப்பற்றி உள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு அவர் எந்த டெஸ்டிலும் ஆடவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த டேரன் பிராவோ, ஹெட் மையர், கீமோ பால் ஆகிய 3 பேரும் கொரோனாவுக்கு பயந்து இங்கிலாந்து செல்ல மறுத்து விட்டனர்.
சாம் கர்ரனுக்கு கொரோனா இல்லை
இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், திடீரென காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை தனிமைப்படுத்தியது. அவருக்கு கொரோனா பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் முதல் டெஸ்டில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் வீரர்கள் பயிற்சியாளர்கள் நிர்வாகிகள் என 702 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள விளையாட்டு மைதானங்கள் ஜூலை 31-ந்தேதி வரை திறக்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட போது. ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் மைதானங்களில் பயிற்சி பெற மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது.
ஆனால் தமிழ்நாட்டில் வீரர் வீராங்கனைகள் பயிற்சி பெறுவதற்காக மைதானங்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் ஸ்டேடியஙகள் திறக்கப்படவில்லை.
பயிற்சிக்காக மைதானங்களை திறக்க வேண்டும் என்று வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் (எஸ்.டி.ஏ.டி) தொடர்ந்து வலியுறுத்தினர்.
சென்னையில் முழுமையான ஊரடங்குக்கு முன்பு நேரு ‘பி’ ஸ்டேடியம் மட்டும் திறக்கப்பட்டது. கடந்த 19-ந் தேதிக்கு பிறகு அதுவும் மூடப்பட்டது. விளையாட்டு வளாகங்கள் மற்றும் ஸ்டேடியங்களை பார்வையாளர்கள் இல்லாமல் திறக்க மாநில அரசு கடந்த 3 தினங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.
ஆனால் தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வருகிற 31-ம்தேதி வரை விளையாட்டு மைதானங்கள் திறப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் வீரர் வீராங்கனைகள் பயிற்சி மேலும் தாமதமாகிறது.
தொடர்ந்து ஸ்டேடியங்கள் மூடப்பட்டிருக்கும் போது வீரர், வீராங்கனை பயிற்சி பெறமுடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சென்னை ஆக்கி சங்க தலைவரும், முன்னாள் வீரருமான வி. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்..
ஸ்டேடியங்கள் மீண்டும் திறக்கப்படும்போது அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி வீர வீராங்கனைகள் பயிற்சி பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் கொரோனாவால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 64,689 பேரை இந்த வைரஸ் தாக்கி உள்ளது.
லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் கெடாபி அணியை வீழ்த்தியது.
மாட்ரிட்:
20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, கெடாபி கிளப்பை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியினர் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் அதிக நேரம் வைத்து இருந்தாலும், எதிரணியின் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிப்பது என்பது சவால் நிறைந்ததாகவே இருந்தது. 79-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரியல் மாட்ரிட் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் கோலாக்கினார். அதுவே வெற்றி கோலாக அமைந்தது.
முடிவில் ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் கெடாபி அணியை வீழ்த்தியது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட இடைவெளிக்கு பிறகு இந்த போட்டித் தொடரில் ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக ருசித்த 6-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் தனது முன்னிலையை வலுப்படுத்தி இருக்கிறது. ரியல் மாட்ரிட் அணி இதுவரை 33 ஆட்டத்தில் விளையாடி 22 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 74 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 33 ஆட்டத்தில் ஆடி 21 வெற்றி, 7 டிரா, 5 தோல்வியுடன் 70 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, கெடாபி கிளப்பை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியினர் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் அதிக நேரம் வைத்து இருந்தாலும், எதிரணியின் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிப்பது என்பது சவால் நிறைந்ததாகவே இருந்தது. 79-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரியல் மாட்ரிட் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் கோலாக்கினார். அதுவே வெற்றி கோலாக அமைந்தது.
முடிவில் ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் கெடாபி அணியை வீழ்த்தியது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட இடைவெளிக்கு பிறகு இந்த போட்டித் தொடரில் ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக ருசித்த 6-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் தனது முன்னிலையை வலுப்படுத்தி இருக்கிறது. ரியல் மாட்ரிட் அணி இதுவரை 33 ஆட்டத்தில் விளையாடி 22 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 74 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 33 ஆட்டத்தில் ஆடி 21 வெற்றி, 7 டிரா, 5 தோல்வியுடன் 70 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறிய கென்யா மாரத்தான் வீரர் கிப்சாங்கிற்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படுவதாக தடகளத்தின் நேர்மை கமிட்டி அறிவித்து உள்ளது.
நைரோபி:
நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் கென்யாவைச் சேர்ந்த வில்சன் கிப்சாங். மாரத்தானில் உலக சாதனை படைத்திருக்கிறார். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் மாரத்தானில் வெண்கலம் வென்றிருந்தார். போட்டி இல்லாத காலத்தில் ஊக்கமருந்து சோதனைக்கு தயாராக இருக்கும் வகையில் தான் எங்கே இருக்கிறேன் என்ற விவரத்தை அவர் ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கு முறையாக தெரியப்படுத்தவில்லை.
அத்துடன் சோதனையை தவிர்க்க தவறான தகவல்களையும் அளித்திருக்கிறார். 13 மாதங்களில் 4 முறை அவர் ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதால் 4 ஆண்டு தடை விதிக்கப்படுவதாக தடகளத்தின் நேர்மை கமிட்டி அறிவித்து உள்ளது. தடை காலம் 2020-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.






