என் மலர்
விளையாட்டு
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி (பாக்சிங்டே டெஸ்ட்) வருகிற 26-ந் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் ஒருநாள் போட்டி தொடரின் போது காயம் அடைந்தார். இதையடுத்து அவர் முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை. அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் 2-வது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சீன்அபோட் ஆகியோர் அணியில்இடம் பெற மாட்டார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது.
டேவிட் வார்னர் இன்னும் காயத்தில் இருந்து மீண்டு உடல் தகுதியை எட்டாததால் அணியில் இடம்பெற வில்லை.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியதாவது:-
டேவிட் வார்னர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணம் அடைய வில்லை. இதனால் அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் இடம் பெற மாட்டார். பயிற்சி ஆட்டத்தில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் சீன் அபோட் குணம் அடைந்து உள்ளார்.
அவரது பெயர் 2-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் பலிசீலிக்கப்பட்டது. ஆனால் சிட்னியில் இருந்து மெல்போர்னுக்கு வரும் அவர் கொரோனா நெறிமுறையை கடைப்பிடிக்க வேண்டியது இருப்பதால் அவரும் அணியில் இடம்பெற வில்லை என்று தெரிவித்துள்ளது.
எனவே முதல் டெஸ்ட்டில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியே 2-வது போட்டியிலும் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வெறும் 36 ரன்னில் சுருட்டி வீசிய ஆஸ்திரேலியா மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது. டேவிட் வார்னர் இன்னும் முழு உடல்தகுதியை எட்டாததால் அவர் 2-வது டெஸ்டிலும் ஆட வாய்ப்பில்லை. எனவே ஆஸ்திரேலிய அணி மாற்றமின்றி களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் 31 வயதான ஸ்டீவன் சுமித் முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஒரு ரன்னில் அஸ்வின் சுழலில் சிக்கினார். 2-வது இன்னிங்சில் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். மெல்போர்ன் மைதானம் அவருக்கு ராசியானது. இங்கு அவர் 7 டெஸ்டில் விளையாடி 4 சதம், 3 அரைசதம் உள்பட 908 ரன்கள் எடுத்துள்ளார்.
மறுபடியும் முத்திரை பதிக்கும் வேட்கையுடன் காத்திருக்கும் ஸ்டீவன் சுமித் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அடிலெய்டு டெஸ்டில், அஸ்வின் வீசிய அந்த பந்து சுழன்று திரும்பவில்லை. அது பேட்டின் விளிம்பில் பட்டு கேட்ச்சாக மாறியது. துரதிர்ஷ்டவசமாக இது போன்று நடக்கத் தான் செய்யும். நான் ஆட்டம் இழப்பதற்கு முந்தைய இரு பந்துகளும் ஓரளவு சுழன்று திரும்பின. ஆனால் நேராக வந்து விக்கெட்டை பறித்த அந்த பந்தை நான் நினைத்த மாதிரி ஆடவில்லை. அஸ்வினின் பந்து வீச்சு நன்றாக இருந்தது. அவர் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தற்போது உலகத்தரம் வாய்ந்த பவுலராக திகழ்கிறார். தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த டெஸ்டில் அவரது பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்வேன் என்று நம்புகிறேன்.
இந்திய கேப்டன்விராட் கோலி எஞ்சிய 3 டெஸ்டுகளில் விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும். முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்து ரன் சேர்த்த விதம் (74 ரன்) அருமையாக இருந்தது. அந்த டெஸ்ட் முடிந்து அவரை களத்தில் சந்தித்த போது, ‘பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள். குழந்தை பிறந்து எல்லாம் நல்லபடியாக நடக்கும். எனது வாழ்த்துகளை உங்களது மனைவியிடம் சொல்லிவிடுங்கள்’ என்று அவரிடம் கூறினேன். அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் தொடர்ந்து இங்கேயே (ஆஸ்திரேலியா) இருந்தால் அவருக்கு நிறைய நெருக்கடி இருந்திருக்கும். முதல் குழந்தை பிறப்புக்காக அவர் தாயகம் திரும்ப எடுத்த முடிவு பாராட்டுக்குரியது. அதற்கு அவர் தகுதியானவர். அவரது வாழ்க்கையில் இது ஒரு மைல்கல். இந்த தருணத்தை நிச்சயம் தவற விடக்கூடாது.
அடிலெய்டு டெஸ்டில் எங்களது வேகப்பந்து வீச்சு நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. நான் பார்த்தமட்டில் அனேகமாக கடைசி 5 ஆண்டுகளில் மிகச்சிறந்த பந்து வீச்சு இது தான். குறை சொல்ல முடியாத அளவுக்கு துல்லியமாக பந்து வீசினர். இது போன்ற பந்துகள் பேட்டின் முனையில் பட்டு கேட்ச்சுக்குத் தான் செல்லும். இந்திய அணியினர் அந்த தோல்வியையே நினைத்துக் கொண்டு இருக்காமல் அதைவிட்டு நகர்ந்து தொடர்ந்து நேர்மறை எண்ணத்துடன் இருக்க முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு வீரர்களும் தனித்துவமானவர்கள். தாங்கள் ஆட்டம் இழந்த விதம் குறித்து டெஸ்ட் போட்டி முடிந்ததும் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களுடைய அடுத்த போட்டியின் செயல்பாடு அமையும். இன்னும் என்ன செய்திருக்கலாம் என்று ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்துக்கு பிறகு இப்படி யோசிப்பது நல்லது.
மெல்போர்னில் அரங்கேறும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சிறு வயதில் கனவாக இருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து மறுநாள் இந்த போட்டியை குடும்பத்தினருடன் பார்த்த அனுபவம் உண்டு. ரசிகர்களின் கரகோஷத்துக்கு மத்தியில் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் களம் காண்பது எப்போதும் சிலிர்ப்பாக இருக்கும். இந்த முறையும் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதால் சிட்னியில் 3-வது டெஸ்ட் (ஜன.7-11) நடக்குமா? என்று கேட்கிறீர்கள். என்னை பொறுத்தரை திட்டமிட்டபடி சிட்னியில் டெஸ்ட் போட்டி நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இங்கு ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொருவரும் சிட்னியில் விளையாடுவதற்கே முன்னுரிமை அளிப்போம். அதே சமயம் மருத்துவ, சுகாதாரத்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடப்போம்.
‘இனி எல்லா டெஸ்ட் போட்டிகளிலும் சிவப்பு பந்துக்கு பதிலாக இளஞ்சிவப்பு(பிங்க்) நிற பந்தை பயன்படுத்த வேண்டும்’ என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கூறிய யோசனையில் எனக்கு உடன்பாடு இல்லை. டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்து நீடிக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம். ஒரு தொடரில் ஒரு டெஸ்டில் பிங்க் பந்து பயன்படுத்தினால் போதும் நன்றாக இருக்கும்.
இவ்வாறு சுமித் கூறினார்.
உலக பேட்மிண்டன் சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி இருந்து பயிற்சி மேற்கொண்டு வருவதுடன், தனது உடல் தகுதியை மேம்படுத்த ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெற்று அதற்கு தகுந்தபடி செயல்பட்டு வருகிறார். கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதத்துக்கு பிறகு எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ளாத சிந்து உள்பட 8 இந்திய வீரர் வீராங்கனைகள் தாய்லாந்தில் அடுத்த மாதம் (ஜனவரி) 12-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும் யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன், டயோட்டா தாய்லாந்து ஓபன், உலக டூர் இறுதி சுற்று போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்று இந்திய பேட்மிண்டன் சங்கம் சமீபத்தில் அறிவித்தது. தற்போது இங்கிலாந்தில் ஒருவித புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்து இருக்கின்றன. எனவே தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் பி.வி.சிந்து கலந்து கொள்ள முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் பி.வி.சிந்து அளித்த ஒரு பேட்டியில், ‘ஜனவரி முதல் வாரத்தில் தாய்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளேன். இங்கிலாந்தில் இருந்து செல்பவர்களுக்கு தாய்லாந்தில் எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. வளைகுடா நாடு வழியாக தாய்லாந்து செல்ல இருக்கிறேன். லண்டனில் உள்ள தேசிய பயிற்சி மையம் மூடப்படவில்லை. கொரோனா மருத்துவ பாதுகாப்பு வசதியுடன் இயங்கி வருகிறது. இதனால் எனது பயிற்சி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்டுக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஏனெனில் அவர் 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 2 அரைசதம் அடித்திருந்தார். அதுவும் கடினமான நியூசிலாந்து தொடரில் ஒரு அரைசதம் எடுத்திருந்தார். அதனால் தொடரின் தொடக்கத்தில் அவர் அங்கம் வகித்தது நல்ல முடிவு தான். ஆனால் இப்போது அவர் பார்மில் இல்லை என்பதில் சந்தேகமில்லை. இதனால் அவரது நம்பிக்கையும் குறைந்து விட்டது. எனவே மெல்போர்னில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வாலுடன் இணைந்து சுப்மான் கில்லை பார்க்க ஆசைப்படுகிறேன். புஜாரா 3-வது வரிசையில் ஆடுவார்.
பேட்டிங்கில் 4-வது வரிசையில் அஜிங்யா ரகானே ஆட வேண்டும். அவர் தொடர்ந்து 5-வது வரிசையில் விளையாடுவதை பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் இப்போது அவர் பொறுப்பு கேப்டன். அணியை முன்னெடுத்து செல்ல வேண்டும். எனவே கோலி இடத்தில் ரகானே ஆட வேண்டும். 5-வது வரிசையில் லோகேஷ் ராகுல், அடுத்து ரிஷப் பண்ட், 7 மற்றும் 8-வது இடங்களில் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் களம் காண வேண்டும். கடைசி 3 இடங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள். இந்த டெஸ்டில் 5 பந்து வீச்சாளர்கள் இடம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்தார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனைக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.
வானொலியில் தமிழ்நாடு - கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டியில் அப்துல் ஜப்பார் முதல்முறையாக வர்ணனை செய்தார். வானொலியில் அவரது வர்ணனையை கேட்ட பலரும் அவரது குரலுக்கு அடிமையாகினர். அதன்பிறகு ஈஎஸ்பின், நியோ ஸ்போர்ட்ஸ் போன்ற விளையாட்டுத் தொலைக்காட்சிகளிலும் தமிழ் வர்ணனை செய்துள்ளார்.
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 81. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
2007-ம் ஆண்டு சிங்கப்பூரில் ஈஎஸ்பின்-ஸ்டார் கிரிக்கெட் தொலைக்காட்சிக்காக, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20:20 உலகக்கோப்பை கிரிக்கெட்டை தமிழில் வர்ணனை செய்தார். மொத்தம் 35 கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளின் வர்ணனையாளராக சிறப்பாகச் செயல்பட்டு உலகத் தமிழரின் நன்மதிப்பைப் பெற்றவர் அப்துல் ஜப்பார்.
லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் ஈபரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் 34 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, ஈபர் கிளப் அணியை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரியல் மாட்ரிட் அணி 6-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கரிம் பென்ஜிமா இந்த கோலை அடித்தார். 13-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி அடுத்த கோலை போட்டது. கரிம் பென்ஜிமா கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் லூகா மோட்ரிச் கோல் வளையத்துக்குள் லாவகமாக திணித்தார். 28-வது நிமிடத்தில் ஈபர் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் கார்சியா கிகே இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பிற்பாதியில் ரியல் மாட்ரிட் அணிக்கு கோல் அடிக்க கிடைத்த சில வாய்ப்புகள் கைநழுவி போனது. கடைசி நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்ஜிமா கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் லூகாஸ் வஸ்காஸ் கோலாக்கினார். முடிவில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈபரை தோற்கடித்து அசத்தியது. 14-வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி பெற்ற 9-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 2 டிரா, 3 தோல்வியுடன் மொத்தம் 29 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு முன்னேறியது. அட்லெடிகோ மாட்ரிட் அணி 12 ஆட்டத்தில் ஆடி 9 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 29 புள்ளிகள் குவித்துள்ளதுடன், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு பெரும்பாலான சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. சில போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் தொடங்குகின்றன. யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் போட்டி ஜனவரி 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும், டயோட்டா தாய்லாந்து ஓபன் போட்டி ஜனவரி 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையும் நடக்கிறது.
உலக டூர் இறுதி சுற்று போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஜனவரி 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதை கருத்தில் கொண்டு இந்த 3 சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொள்ளும் 8 இந்திய வீரர்-வீராங்கனைகள் பட்டியலை இந்திய பேட்மிண்டன் சங்கம் நேற்று அறிவித்தது.
இந்த பட்டியலில் முன்னணி வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால், அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி, வீரர்கள் சாய் பிரனீத், ஸ்ரீகாந்த், சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ரெட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஸ்ரீகாந்த் மட்டும் அக்டோபர் மாதம் நடந்த டென்மார்க் ஓபன் போட்டியில் கலந்து கொண்டார். மற்ற அனைவரும் மார்ச் மாதத்துக்கு பிறகு பங்கேற்க இருக்கும் முதல் போட்டி இதுவாகும்.






