என் மலர்
விளையாட்டு
உலகின் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டினா ரொனால்டோ. போர்ச்சுகல்லை சேர்ந்த இவர் இத்தாலியின் ஜூவாண்டஸ் கிளப் அணியில் விளையாடி வருகிறார்.
தற்போது கால்பந்து போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ரொனால்டோ, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறையை மீறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் தனது காதலி ரோட்ரிக் பிறந்த நாளுக்காக துரின் நகரிலிருந்து 150 கி.மீட்டர் பயணம் செய்து கோர் மேயுர் பகுதிக்கு சென்று உள்ளார் என்று பல்வேறு இத்தாலி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது இத்தாலியில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுபாடுகள் பற்றி துரின் நகரில் இருந்து ஜோடியாக வெளியேற கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ரொனால்டோ மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவா:
7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இன்று இரவு நடக்கும் 75-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா- ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.
கோவா அணி இதுவரை 13 ஆட்டத்தில் 5 வெற்றி, 3 தோல்வி, 5 டிராவுடன் 20 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
கோவா அணி வீரர் இகோர் அங்குலோ (ஸ்பெயின்) இதுவரை 9 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவர் அந்த அணியின் நட்சத்திர வீரராக உள்ளார்.
அதேபோல் ஜார்ஜ் மென்டோசா, இஷான் பண்டித், தேவேந்திர முர்கோன்கர் போன்ற வீரர்கள் உள்ளனர். கோவா அணி வலுவாக இருப்பதால் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்ட் பெங்கால் இதுவரை 13 ஆட்டத்தில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது.
5 ஆட்டத்தில் தோற்றும், 6 போட்டியில் டிரா செய்தும், 12 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது. அந்த அணி வெற்றி பெற முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
ஈஸ்ட் பெங்கால் அணியில் மேட்தி ஸ்டெய்ன்மன், ஜாக்ஸ் மாக்கோமா தலா 3 கோல்கள் அடித்துள்ளனர். இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். இவர் பிரபல இந்தி சினிமா பட பாடல்களுக்கு நடனமாடி சமூக வலை தளங்களில் வெளியிட்டார். அதில் இந்தி மற்றும் தெலுங்கு பட பாடல்களுக்கு மனைவி மற்றும் மகள்களுடன் சேர்ந்து அவர் நடனமாடும் வீடியோக்கள் வைரலானது. இதை பலரும் ரசித்து பாராட்டு தெரிவித்தனர்.
இதற்கிடையே டேவிட் வார்னர் பிரபல இந்திய நடிகர்கள் நடித்த காட்சிகளில் அவர்களது முகத்துக்கு பதிலாக தனது முகத்தை பேஸ்வாப் செயலி மூலம் பொருத்தி வீடியோக்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த நடித்த எந்திரன் படத்தில் அவர் பல துப்பாக்கிகளை எடுத்து சுடும் காட்சியில் ரஜினி முகத்துக்கு பதில் டேவிட் வார்னர் தனது முகத்தை வைத்து வீடியோவை உருவாக்கி உள்ளார். தர்பார் படத்தின்பட காட்சியில் ரஜினி போல் நடித்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதேபோல் இந்தி நடிகர்கள் சல்மான்கான், ஹிருத்திக்ரோஷன், அயுஷ்மான் குரானா ஆகியோர் நடித்த பட காட்சிகளில் அவர்களது முகத்துக்கு பதில் தனது முகத்தை வைத்து வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளன. டேவிட் வார்னரின் இந்த வீடியோக்கள் ரசிக்கும்படி இருக்கிறது என்று பலரும் பாராட்டியுள்ளனர்.
சென்னை:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கிறது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டிக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
பெரும்பாலும் இந்திய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சைவிட சுழற்பந்து வீச்சுக்கே ஒத்துழைக்கும். பந்து நன்கு சுழன்று திரும்பும். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு அணி வீரர்கள் சுழற்பந்துக்கு திணறுவார்கள். ஆனால் இங்கிலாந்து அணி இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்கள் சமாளிப்பார்கள் என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நான் இங்கு (இந்தியா) நிறைய ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் சிவப்புநிற பந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடுவது சவாலாக இருக்கும்.
ஆடுகளங்கள் வேகபந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் வேகத்துடன் சில விக்கெட்டுகளை வீழ்த்த உதவும் என்று நம்புகிறேன்.
இந்தியாவின் சுழற்பந்து வீச்சில் பந்து நன்கு திருப்பினாலும் ஆட்டம் ஒருதலைபட்சமாக இருக்காது. எங்கள் அணியில் நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். எங்களை இந்தியா சுழற்பந்து வீச்சு மூலம் வெளியேற்ற முடியாது. இந்திய சுழற்பந்து வீச்சை சமாளித்து விளையாடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்கள் திறம்பட சமாளித்து விளையாடினார்கள். குறிப்பாக கேப்டன் ஜோரூட் சிறப்பாக விளையாடி ரன் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். 2-வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் ‘பி’ பிரிவு 2-வது லீக் ஆட்டத்தில் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 5-வது இடத்தில் உள்ள தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை சந்தித்தார். 43 நிமிடம் நடந்த இந்த மோதலில் சிந்து 18-21, 13-21 என்ற நேர்செட்டில் ராட்சனோக்கிடம் தோல்வியை தழுவினார். முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 11-6 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த சிந்துவால் அதனை தக்கவைத்து கொள்ள முடியாமல் போனது. கடந்த வாரம் தாய்லாந்து ஓபன் போட்டியில் ராட்சனோக்கிடம் தோல்வி அடைந்த சிந்து மீண்டும் அவரிடம் சரண் அடைந்திருக்கிறார். இந்த தொடரில் சிந்து முதல் ஆட்டத்தில் சீன தைபேயின் தாய் ஜூ யிங்கிடம் தோற்று இருந்தார்.
இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-19, 9-21, 19-21 என்ற செட் கணக்கில் போராடி சீன தைபே வீரர் வாங் ஜூ வெய்யிடம் வீழ்ந்தார். இந்த ஆட்டம் 1 மணி 18 நிமிடம் நீடித்தது. ஸ்ரீகாந்த் தனது முதல் ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஆன்டோன்செனிடம் தோற்று இருந்தார். தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்த சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினர். இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் சிந்து, தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவீ சோச்சுவோங்கையும், ஸ்ரீகாந்த், ஹாங்காங் வீரர் நிகா லாங் அங்குஸ்சையும் எதிர்கொள்கிறார்கள். இது சம்பிரதாயத்துக்கான ஆட்டமாகும்.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 74-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பெங்களூரு அணியில் கேப்டன் சுனில் சேத்ரி 9-வது நிமிடத்திலும், லியோன் அகுஸ்டின் 61-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த சீசனில் சுனில் சேத்ரி அடித்த 5-வது கோல் இதுவாகும்.
2 கோல்கள் முன்னிலை பெற்றதால் இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றியை ருசிக்கும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் அரிடேன் சந்தனா 86-வது நிமிடத்திலும், பிரான் சன்டஜா 90-வது நிமிடத்திலும் அதிரடியாக பதில் கோல் திருப்பி அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்கள். இந்த தொடரில் அரிடேன் சந்தனா அடித்த 7-வது கோல் இதுவாகும்.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-ஈஸ்ட் பெங்கால் அணிகள் சந்திக்கின்றன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பாலி வர்க்கீஸ். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலரும் பணத்தை இழந்து வருகின்றனர். பல தற்கொலை சம்பவங்களும் நடந்துள்ளன. பல மாநிலங்கள் இந்த விளையாட்டை கட்டுப்படுத்தி உள்ளன. கேரளாவில் கடந்த 1960-ம் ஆண்டிலேயே, இதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது.
ஆனால் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளம்பரங்கள் மூலம் சமூகத்தில் செல்வாக்கு உள்ள பிரபலங்கள் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் அதிகளவில் கவரப்படுகின்றனர்.எனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை சட்டப்படி தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா, மலையாள நடிகர் அஜூ வர்க்கீஸ் மற்றும் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வருடந்தோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில்தான் நடத்தப்படும் என்று கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 18-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் போட்டி நடைபெறும் இடத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஐ.பி.எல். ஏலம் முடிந்தபிறகுதான் போட்டி நடைபெறும் இடத்தை முடிவு செய்யப்படும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக கட்டுக்குள் வராததால், இந்த ஆண்டும் ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெறுமா? என்று உறுதியாக தெரியவில்லை.






