search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோப்ரா ஆர்ச்சர்
    X
    ஜோப்ரா ஆர்ச்சர்

    இந்திய சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்கள் சமாளிப்பார்கள் - ஜோப்ரா ஆர்ச்சர்

    இந்திய சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்கள் சமாளிப்பார்கள் என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தெரிவித்தார்.

    சென்னை:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கிறது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டிக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

    பெரும்பாலும் இந்திய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சைவிட சுழற்பந்து வீச்சுக்கே ஒத்துழைக்கும். பந்து நன்கு சுழன்று திரும்பும். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு அணி வீரர்கள் சுழற்பந்துக்கு திணறுவார்கள். ஆனால் இங்கிலாந்து அணி இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

    இந்த நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்கள் சமாளிப்பார்கள் என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் இங்கு (இந்தியா) நிறைய ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் சிவப்புநிற பந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடுவது சவாலாக இருக்கும்.

    ஆடுகளங்கள் வேகபந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் வேகத்துடன் சில விக்கெட்டுகளை வீழ்த்த உதவும் என்று நம்புகிறேன்.

    இந்தியாவின் சுழற்பந்து வீச்சில் பந்து நன்கு திருப்பினாலும் ஆட்டம் ஒருதலைபட்சமாக இருக்காது. எங்கள் அணியில் நல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். எங்களை இந்தியா சுழற்பந்து வீச்சு மூலம் வெளியேற்ற முடியாது. இந்திய சுழற்பந்து வீச்சை சமாளித்து விளையாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இலங்கை டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து வீரர்கள் திறம்பட சமாளித்து விளையாடினார்கள். குறிப்பாக கேப்டன் ஜோரூட் சிறப்பாக விளையாடி ரன் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×