என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, அனில் கும்ப்ளே போன்று பந்து வீசி அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கினார்.
    தற்போதைய காலக்கட்டத்தில் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார். அவரது வித்தியாசமான பவுலிங் ஆக்சன், பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறது. மற்ற வேகப்பந்து வீச்சாளர் போன்று வெகுதூரத்தில் இருந்து ஓடி வரமாட்டார். குறுகிய தூரத்தில் இருந்து ஓடி வந்து பந்து வீசுவார்.

    இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 5-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்தியாவின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே. இவரது பந்து வீச்சு ஸ்டைலும் வித்தியாசமாக இருக்கும்.

    நேற்று நடைபெற்ற வலைப்பயிற்சியின் போது பும்ரா. அனில் கும்ப்ளே போன்று பந்து வீசினார். பிசிசிஐ அனில் கும்ப்ளே பந்து வீச்சையும், பும்ராவின் பந்து வீச்சையும் இணைத்து வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஏப்ரல் 2-வது வாரத்தில் தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வருடம் தோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது.

    கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெற்றது.

    14-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறுமா? என்று கேள்வி எழுந்தது. இதனால் மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி இந்தியாவில்தான் நடைபெறும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே கோப்பை (ஆண்கள் 50 ஓவர் போட்டி), பெண்கள் தேசிய ஒருநாள் போட்டி பிப்ரவரி- மார்ச் மாதம் நடக்கிறது.

    இந்த போட்டிக்கு பிறகு ஏப்ரல் 2-வது வாரத்தில் ஐ.பி.எல் போட்டியை தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.

    ஏப்ரல் 11 முதல் 14-ந் தேதிக்குள் ஐ.பி.எல். போட்டி தொடங்கப்படும். ஜூன் முதல் வாரத்தில் ஐ.பி.எல் போட்டியை நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 6-ந் தேதி இறுதிப் போட்டி நடைபெறலாம்.

    14-வது ஐ.பி.எல். போட்டி பெரும்பாலான ஆட்டங்களை மும்பையில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அங்குள்ள வான்கடே ஸ்டேடியம், பிரபோன் மைதானம், டி.ஒய்.படேல் ஸ்டேடியம், ரிலையன்ஸ் மைதானம் (நவி மும்பை), புனே ஆகிய இடங்களில் போட்டி நடைபெறலாம். இதேபோல அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான சர்தார் படேல் மைதானத்திலும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    கொரோனா பரவலால் உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. 87 ஆண்டுகால வரலாற்றில் தற்போதுதான் ரஞ்சிக் கோப்பை போட்டி முதல் முறையாக நடைபெறாமல் ரத்தாகி உள்ளது.

    இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.
    பழனி:

    சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து அசத்தினார். 
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முன்று வடிவ போட்டிகளிலும் அறிமுகம் ஆகி அசத்தலாக பந்து வீசினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில் தாயகம் திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், பழனி தைப்பூச விழாவில் முருகப் பெருமானைத் தரிசிக்க நண்பர்களுடன் நேற்று பழனி வந்தார்.பழனி மலைக்கோயிலுக்குச் சென்ற கிரிக்கெட் வீரர் நடராஜன், நேர்த்திக் கடனாக மலைக்கோயில் அடிவாரத்தில் முடிக் காணிக்கை செலுத்தினார். 
    கொரோனா பிரச்சினையால் முதல்முறையாக இந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ரஞ்சிகோப்பை கிரிக்கெட் போட்டி 1934-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடந்த சீசனில் அரங்கேறிய ரஞ்சி போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. இதில் சவுராஷ்டிரா அணி சாம்பியன் கோப்பையை முதல்முறையாக உச்சிமுகர்ந்தது. உள்நாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்த உதவும் இந்த முதல்தர கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) முதல்முறையாக இந்த சீசனில் (2020-21) நடத்துவதில் சிக்கல் உருவானது.

    கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் ஒவ்வொரு மாநில அணி வீரர்களையும் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து முழுமையான பாதுகாப்புடன் நீண்ட நாட்கள் இந்த போட்டியை நடத்துவது என்பது சிரமமான காரியம். அத்துடன் ஏற்கனவே சில மாதங்கள் கடந்து விட்டது.

    இது குறித்து ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் யோசனை கேட்டது. இதில் பெரும்பாலான மாநில சங்க உறுப்பினர்கள் இந்த சீசனில் ரஞ்சி போட்டி வேண்டாம் என்று கருத்து தெரிவித்தனர். அவர்களின் யோசனையை ஏற்று 87 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக இந்த சீசனில் ரஞ்சி போட்டி நடத்தப்படாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    விஜய்ஹசாரே நடக்கும்

    இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, மாநில கிரிக்கெட் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘ரஞ்சி கோப்பை போட்டியை இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என்று மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் (ஆண்கள் 50 ஓவர்), பெண்களுக்கான தேசிய அளவிலான ஒரு நாள் போட்டி மற்றும் வினோ மன்கட் கோப்பைக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் போட்டி ஆகியவை கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இது தொடர்பான விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

    முஷ்டாக் அலி கோப்பை போட்டியை கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திய மாநில சங்கங்களுக்கு நன்றி. முஷ்டாக் அலி போட்டிக்கு எந்த மாதிரியான கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அதே பாதுகாப்பு நடைமுறைகள் விஜய் ஹசாரே கோப்பை போட்டியிலும் தொடரும்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடாமல் ஊதியத்தை இழக்கும் வீரர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஏற்கனவே கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 76-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 1-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டிடம் (கவுகாத்தி) அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
    கோவா:

    11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 76-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை சிட்டி அணி 1-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டிடம் (கவுகாத்தி) அதிர்ச்சி தோல்வி அடைந்தது. கவுகாத்தி அணியில் டேஷோர்ன் பிரவுன் 6-வது மற்றும் 9-வது நிமிடத்தில் கோல் அடித்தார். மும்பை சிட்டி தரப்பில் 85-வது நிமிடத்தில் ஆடம் லே பான்ட்ரோ கோல் திருப்பினார். கடந்த 12 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத மும்பை சிட்டி இந்த ஆட்டத்திலும் டிராவோ அல்லது வெற்றியோ கண்டிருந்தால் ஐ.எஸ்.எல். வரலாற்றில் தொடர்ந்து அதிக ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத அணி என்ற சாதனையை படைத்திருக்கும். மயிரிழையில் அச்சாதனை நழுவிப் போனது.

    மும்பை சிட்டி அணி மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 3 டிரா, 2 தோல்வி என்று 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 5-வது வெற்றியை ருசித்த கவுகாத்தி அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது.

    இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-ஐதராபாத் எப்.சி.(மாலை 5 மணி), ஏ.டி.கே. மோகன் பகான்-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி)அணிகள் மோதுகின்றன.
    பிக் பாஷ் லீக் போட்டியின் குவாலிபையர் சுற்றில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது.
    கன்னிபெரா:

    பிக் பாஷ் லீக் போட்டியின் குவாலிபையர் சுற்று கன்னிபெரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் ஜோஷ் இங்லிஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 69 ரன்னில் அவுட்டானார். டர்னர் 33 ரன்னும், முன்ரோ 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், பெர்த் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஷ் பிலிப் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக ஆடினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிலிப் 45 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய வின்ஸ் அரை சதமடித்து அதிரடி காட்டினார்.

    இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் அணி 17 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இரண்டாவது முறையாக பிக் பாஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

    ஜேம்ஸ் வின்ஸ் 53 பந்துகளில் ஒரு சிக்சர், 14 பவுண்டரியுடன் 98 ரன்னுடனும், டேனியல் ஹக்ஸ் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    பிக் பாஷ் லீக் போட்டியின் இறுதிப்போட்டி பிப்ரவரி 6-ம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் வார்னரின் மகளுக்கு, விராட் கோலி தனது ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார்.
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரை வென்ற உற்சாகத்துடன் நாடு திரும்பியது. நாடு திரும்பிய வீரர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 

    இதற்கிடையே தனது மனைவியின் பிரசவத்திற்காக முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்பிய விராட் கோலி, வார்னரின் மகளுக்கு தனது ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார். கோலி கையெழுத்திட்ட அந்த ஜெர்சியுடன், சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கிறாள் வார்னரின் மகள் இண்டி. இந்த புகைப்படத்தை வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

    ‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், இந்திய கேப்டன் விராட் கோலி எனது மகளுக்கு கொடுத்த மறக்க முடியாத பரிசை நான் ஞாபகம் வைத்திருக்கிறேன். என் மகள் இண்டி மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். கோலி, உங்கள் ஜெர்சியை கொடுத்தமைக்கு நன்றி. அந்த ஜெர்சி இண்டிக்கு மிகவும் பிடித்துள்ளது. என்னையும் ஆரோன் பிஞ்சையும் தவிர கோலியும் என் மகளுக்கு மிகவும் பிடித்தமானவர்.” என வார்னர் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலிக்கு கடந்த 2-ந் தேதி லேசான மாரடைப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கங்குலிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 இதய தமணிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.

    ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இதய தமணி ஒன்றில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கங்குலி வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    கங்குலிக்கு 2-வது முறையாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு இதய தமணியில் 2 ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

    இந்த நிலையில் கங்குலியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். டாக்டர்கள் அப்தாப்கான், அஸ்வின் மேத்தா ஆகியோர் கங்குலியின் உடல்நிலையை பரிசோதித்து சீராக இருப்பதாக தெரிவித்ததாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா அச்சுறுத்தலால் நடுவர்கள் வெளிநாட்டிற்கு பயணிப்பது சவாலாக இருப்பதால் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு உள்நாட்டு நடுவர்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.
    சென்னை:

    இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான நடுவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    இதில் முழுக்க முழுக்க உள்நாட்டு நடுவர்களே பணியாற்ற இருக்கிறார்கள். இதன்படி இந்தியாவைச் சேர்ந்த அனில் சவுத்ரி, நிதின் மேனன் முதலாவது டெஸ்டுக்கும், வீரேந்தர் ஷர்மா, நிதின் மேனன் 2-வது டெஸ்டுக்கும் கள நடுவர்களாக பணியாற்ற இருக்கிறார்கள். ‘ஐ.சி.சி. எலைட் பேனல்’ என்ற உயரிய நடுவர் குழுவில் அங்கம் வகிக்கும் நிதின் மேனன் தவிர மற்ற இருவரும் இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியில் நடுவராக செயல்பட்டதில்லை. 

    முதலாவது டெஸ்டில் ஷம்சுதினும், 2-வது டெஸ்டில் அனில் சவுத்ரியும் 3-வது நடுவர் பணியை கவனிப்பார்கள். போட்டி நடுவராக ஜவஹல் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நடுவர்கள் வெளிநாட்டிற்கு பயணிப்பது கடினமாக இருப்பதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு உள்ளூர் நடுவர்களை பயன்படுத்திக்கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது
    சையது முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியை 25 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பரோடா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
    சையது முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டின் முதல் அரையிறுதி போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி தமிழ்நாடு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    2-வது அரையிறுதியில் பஞ்சாப் - பரோடா அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பரோடா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான தேவ்தார் 49 பந்தில் 64 ரன்கள் விளாசினார். மற்றொரு வீரர் கார்த்திக் ககாடே 41 பந்தில் 53 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் சிம்ரன் சிங் 15 ரன்னிலும், அபிஷேக் சர்மா 5 ரன்னிலும், அன்மோல்ப்ரீத் சிங் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    குர்கீரத் சிங் மான் 39 ரன்களும், கேப்டன் மந்தீப் சிங் ஆட்டமிழக்காமல் 24 பந்தில் 42 ரன்கள் அடித்தாலும் பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இதனால் பரோடா அணி 25 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறும இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    கராச்சியில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் கடந்த 26-ந்தேதி தெடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 220 ரன்னில் சுருண்டது.

    தொடக்க வீரர் டீன் எல்கர் அதிகபட்சமாக 58 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி சார்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி, நௌமான் அலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 378 ரன்கள் குவித்தது. ஃபவாத் ஆலம் 109 ரன்களும், பஹீம் அஷ்ரப் 64 ரன்களும், அசார் அலி 51 ரன்களும் சேர்த்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபடா, மகாராஜ் தலா 3 விக்கெட்டும், அன்ரிச் நோர்ஜோ, நிகிடி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    யாசிர் ஷா

    பின்னர் 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தான் அணியை சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 245 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர் மார்கிராம் 74 ரன்களும், வான் டெர் துஸ்சன் 64 ரன்களும், ஜார்ஜ் லிண்டே 40 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் நௌமான் அலி 5 விக்கெட்டும், யாசிர் ஷா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஒட்டுமொத்தமாக தென்ஆப்பிரிக்கா 87 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றதால் பாகிஸ்தான் அணிக்கு 88 ரன்கள்  வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    அசார் அலி ஆட்டமிழக்காமல் 31 ரன்களும், பாபர் அசாம் 30 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
    சையது முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டில் அருண் கார்த்திக் அபாரான ஆட்டத்தை வெளிப்படுத்த தமிழக அணி ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் அரையிறுதி ஆட்டம் இன்று மதியம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு - ராஜஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் மெனாரியா 32 பந்தில் 51 ரன்களும், ஏ. குப்தா 35 பந்தில் 45 ரன்களும்  சேர்த்தனர். தமிழக அணி சார்பில் எம். முகமது 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணியின் ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹரி நிஷாந்த் 4 ரன்னிலும், என். ஜெகதீசன் 28 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த பாபா அபரஜித் 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    4-வது வீரராக களம் இறங்கிய அருண் கார்த்திக் அபாரமாக விளையாடினார். அவர் ஆட்டமிழக்காமல் 54 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 89  ரன்கள் விளாச தமிழ்நாடு அணி 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 17 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    ×