என் மலர்
விளையாட்டு
பார்சிலோனா:
உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணியில் விளையாடி வருகிறார்.
33 வயதான மெஸ்சி 2004-ம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். 30-க்கும் அதிகமான பட்டங்களை வென்று கொடுத்துள்ளார்.
ஆனாலும் அணியின் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று அதிருப்தி தெரிவித்து மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறப் போவதாக தெரிவித்தார். ஆனாலும் அவரால் பல்வேறு சட்ட சிக்கல்களால் பார்சிலோனா கிளப்பில் இருந்து வேறு கிளப்புக்கு மாற முடியவில்லை.
இந்த நிலையில் மெஸ்சி கடந்த 2017 முதல் 4 ஆண்டுக்கு பார்சிலோனா அணியில் விளையாடுவதற்காக ரூ.4,904 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்ததாக ஸ்பெயினில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்மூலம் விளையாட்டு உலகில் தனி ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட அதிகபட்ச மதிப்பாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் உள்ள தகவல்படி ஒரு சீசனுக்கான மெஸ்சியின் ஊதியம் ரூ.1,217 கோடியாகும். இதில் நிர்ணயிக்கப்பட்ட வருவாயுடன் இதர வருவாயும் அடங்கும்.
ஆனாலும் ஸ்பெயின் வரி விதிகளின்படி இந்த தொகையில் பாதியை மெஸ்சி வரியாக செலுத்தி இருக்க வேண்டியது இருக்கும்.
ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பில் சுமார் ரூ.4,500 கோடியை மெஸ்சி ஏற்கனவே பெற்றுவிட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே 34-வது டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
இதுவரை நடந்த 33 தொடரில் இந்தியா 10 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து 19 முறை வென்றுள்ளது. 4 முறை தொடர் சமநிலையில் முடிந்தது. சொந்த மண்ணில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 7 டெஸ்ட் தொடரை கைபற்றி உள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 முறை தொடரை வென்றுள்ளது. 3 தொடர் சமநிலையில் முடிந்தது.
கடைசியாக 2018-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அந்த அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய மண்ணில் கடைசியாக 2016-17 தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வென்றது.
இரு அணிகளும் 122 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் இந்தியா 26-ல் இங்கிலாந்து 47-ல் வெற்றி பெற்றுள்ளது. 49 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
இந்திய அணி 2016-ம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்டில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இங்கிலாந்து அணி 2011-ம் ஆண்டு பர்மிங்காமில் 7 விக்கெட் இழப்புக்கு 710 ரன் குவித்து இருந்தது.
இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் அதிகபட்சமாக சென்னை டெஸ்டில் 652 ரன் எடுத்து இருந்தது.
இந்தியா 42 ரன்னில் சுருண்டதே (1947, லார்ட்ஸ்) குறைந்தபட்ச ஸ்கோராகும். சொந்த மண்ணில் 1977-ல் சேப்பாக்கத்தில் 83 ரன்னில் சுருண்டு இருந்தது.
இங்கிலாந்து 101 ரன்னில் சுருண்டதே (1971 ஓவல்) குறைந்தபட்ச ஸ்கோராகும். இந்திய மண்ணில் 1981-ல் மும்பையில் 102 ரன்னில் சுருண்டு இருந்தது.
தெண்டுல்கர் 32 டெஸ்டில் விளையாடி 2,535 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். சராசரி 51.73 ஆகும். 7 சதமும், 13 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 193 ரன் குவித்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக கவாஸ்கர் 38 டெஸ்டில் 2483 ரன் (4 சதம், 16 அரைசதம்) எடுத்துள்ளார். அதிகபட்சமாக 221 ரன் குவித்துள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் குக் 7 சதத்துடன் 2431 ரன் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார். இந்தியாவுக்கு எதிராக அவரது அதிகபட்ச ஸ்கோர் 294 ரன் ஆகும்.
ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவர் இங்கிலாந்து முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கிரகாம் கூச் ஆவார். 1990-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் 333 ரன் குவித்தார். அதற்கு அடுத்தபடியாக இந்திய வீரர் கருண் நாயர் 303 ரன் (2016, சென்னை) குவித்துள்ளார்.
வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் 27 டெஸ்டில் 110 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய முன்னாள் சுழற்பந்து வீரர் பி.எஸ். சந்திரசேகர் 95 விக்கெட் எடுத்து 2-வது இடத்திலும், கும்ப்ளே 92 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ட்ருமேன் 31 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதே (1952, மான்செஸ்டர்) ஒரு இன்னிங்சின் சிறந்த பந்துவீச்சு ஆகும். இந்திய வீரர்களில் மன்காட் 55 ரன் கொடுத்து 8 விக்கெட்டும், சந்திரசேகர் 79 ரன் கொடுத்து 8 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.
ஒரு டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் இயன் போத்தம். 1980-ம் ஆண்டு மும்பை டெஸ்டில் 106 ரன் கொடுத்து 13 விக்கெட் வீழ்த்தினார். அதற்கு அடுத்தபடியாக மன்காட், அஸ்வின், சிவ ராமகிருஷ்ணன் ஆகியோர் 12 விக்கெட் சாய்த்து இருந்தனர்.
சென்னை:
சையத் முஷ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப் போட்டியில் பரோடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டி தொடரில் தமிழக அணி லீக் உள்பட 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாதித்தது. 2-வது முறையாக தமிழகத்துக்கு கோப்பை கிடைத்தது. இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றிருந்தது.
இதுகுறித்து தமிழக அணியின் பயிற்சியாளர் டி.வாசு கூறும்போது, நீண்ட பயணத்துக்கு பிறகு கோப்பையை வென்றுள்ளோம். ஒட்டுமொத்த வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களால் வெற்றி பெற்றோம். சுழற்பந்துதான் எங்களது பலம் என்றார்.
சென்னை:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையிலும், 2-வது டெஸ்ட் 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலும் நடக்கிறது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் ரசிகர்கள் அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே அறிவித்தது.
இந்த நிலையில் பிப்ரவரி மாதத்துக்கான கொரோனா வழிகாட்டுதல் அறிவிப்பில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது.
இதனால் சென்னை டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பேச்சுக்கள் மீண்டும் எழுந்துள்ளன. முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் சில தினங்களே இருப்பதால், 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான வாய்ப்பு இல்லை.
இதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
சேப்பாக்கத்தில் நடை பெறும் 2-வது டெஸ்டில் பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்யும்.
இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் அந்த நாட்டு கிரிக்கெட் சங்கத்துடன் பேசி, இந்திய கிரிக்கெட் வாரியம் இது குறித்து முடிவு செய்து அறிவிக்கும்.
2-வது டெஸ்டில் ரசிகர்களை அனுமதிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.







