என் மலர்
விளையாட்டு
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியிடம் தோல்வி கண்டது. இந்த போட்டியின் போது ஒடிசா அணி வீரர் டிகோ மவுரிசியோவை, கோல் எல்லை பகுதிக்குள் ஜாம்ஷெட்பூர் அணியின் கோல்கீப்பர் ரிஹேனேஷ் விதிமுறைக்கு புறம்பாக தடுத்து நிறுத்தினார். இதற்கு பெனால்டி வாய்ப்பு வழங்காததற்கு ஒடிசா அணியின் பயிற்சியாளர் 67 வயதான ஸ்டூவர்ட் பேக்ஸ்டர் (இங்கிலாந்து) போட்டி முடிந்த பிறகு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பெனால்டி வாய்ப்பு கிடைக்கவில்லை. எங்களுக்கு பெனால்டி வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. எங்கள் வீரர்களில் ஒருவர் யாரையாவது ஒருவரை கற்பழித்தாலோ? அல்லது எங்கள் வீரர் கற்பழிப்புக்கு ஆளானாலோ தான் பெனால்டி கிடைக்கும் போலும்’ என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். பயிற்சியாளரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு உடனடியாக வருத்தம் தெரிவித்த ஒடிசா அணி நிர்வாகம் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் பேக்ஸ்டரை அந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
14 ஆட்டங்களில் ஆடி இருக்கும் ஒடிசா அணி ஒரு வெற்றி, 5 டிரா, 8 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியினருடன் வலைப்பயிற்சி பவுலராக சென்ற இடக்கை வேகப்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் அந்த தொடரில் ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டதுடன், பந்து வீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த 29 வயதான நடராஜன் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடந்த 6 மாதம் ஓய்வு இல்லாமல் விளையாடி இருக்கிறேன். தற்போது எனக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சில நாட்கள் ஓய்வு கொடுத்தார்கள். ஓய்வு முடிந்து இன்று (நேற்று) முதல் மீண்டும் பயிற்சியை தொடங்கி விட்டேன். எனது உடல் வலிமையில் ஏற்றம் காண என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறது. அடுத்த 3 வாரம் என்ன பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனை செய்ய இருக்கிறேன். ஆஸ்திரேலிய தொடரில் வலைப்பயிற்சி பவுலராக செயல்படுகையில் எனக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தது. ஆனால் அதனை இந்திய கிரிக்கெட் வாரியம் நல்ல முறையில் கையாண்டது.
ஐ.பி.எல். போட்டி முதல் ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி வரையில் மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினேன். ஆனால் டெஸ்டில் எனது பந்து வீச்சு வேகம் குறைந்து விட்டது. எனது உடல் வலிமை குறைந்தது இதற்கு காரணமாக இருக்கலாம். விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தால் தமிழக அணிக்காக விளையாடுவேன். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி கிடைக்காததால் சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் விளையாடவில்லை.
ஐ.பி.எல். போட்டிக்கு முன்பு விராட்கோலி, டிவில்லியர்ஸ், டோனி போன்ற வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது கனவாக இருந்தது. அவர்களது விக்கெட்டை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அதனை நினைத்து பார்க்கையில் பல நாட்கள் தூக்கம் வந்ததில்லை. ஆஸ்திரேலிய தொடர் முடிந்து வந்த பிறகு இன்னும் கூட ரசிகர்கள் பலர் என்னை பார்க்க வீட்டுக்கு வருகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருந்தாலும், வித்தியாசமான அனுபவமாக உள்ளது. தற்போது வெளியில் கூட போக முடியவில்லை. முன்பு போல் இயல்பாக வெளியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். பழனி கோவிலுக்கு சென்று மொட்டை போட்டு விட்டு திரும்பும் போது கூட பலரும் என்னை அடையாளம் கண்டு பாராட்டினார்கள். நான் எப்பொழுதும் சாதாரணமான மனிதனாக இருக்கவே விரும்புகிறேன். எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க டைரக்டர்கள் சிலர் சந்திக்க வீடு தேடி வந்தனர். ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை. கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்தவே விரும்புகிறேன்.
2015-ம் ஆண்டில் எனது பந்து வீச்சு சந்தேகத்துக்குள்ளாகி தடை விதிக்கப்பட்ட போது வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நினைத்தேன். மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டேன். அப்போது எனக்கு நண்பர்களும், பயிற்சியாளர்களும் உத்வேகம் அளித்தனர். தமிழக அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் சுப்பிரமணியம் எனது பந்து வீச்சை சரி செய்ய உதவிகரமாக இருந்தார். அவரது அறிவுரையை பின்பற்றி கடுமையாக உழைத்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. மூன்று வடிவிலான (20 ஓவர், ஒருநாள், டெஸ்ட்) போட்டியிலும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியமாகும்.
இவ்வாறு நடராஜன் கூறினார்.


சென்னை:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடு கிறது.
இதற்காக அந்த அணி இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையிலும், 2-வது டெஸ்ட் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையும் நடக்கிறது.
சென்னையில் நடைபெறும் முதல் 2 போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அதே நேரத்தில் அகமதாபாத்தில் நடைபெறும் கடைசி 2 டெஸ்டுகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்தநிலையில் பிப்ரவரி மாதத்திற்கான கொரோனா வழிகாட்டுதல் அறிவிப்பில் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு குறிப்பிட்டு இருந்தது. இதையடுத்து சென்னையில் நடைபெற உள்ள 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது என்று பி.சி.சி.ஐ.யும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் முடிவெடுத்துள்ளன.
சேப்பாக்கம் மைதானத்தில் 38 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். தற்போது 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால், 15 ஆயிரம் முதல் 19 ஆயிரம் பேர் வரை 2-வது டெஸ்டுக்கு அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை விவரங்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணக ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று கருதப்படுகிறது.
போதிய கால அவகாசம் இல்லாததால் முதல் டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் 180 கிளப் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஒரு கிளப்புக்கு 2 டிக்கெட் வீதம் 360 டிக்கெட் வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக 360 பார்வையாளர்கள் மட்டுமே முதல் டெஸ்ட் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் மீடியாவுக்கு முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்களின் தனிமைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கினர். கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் 2 மணி நேரம் பயிற்சி பெற்றனர்.
இன்று 2-வது நாளாக வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். பிற்பகலில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி மேற்கொள்கிறார்கள். இலங்கை தொடரில் இடம் பெறாத பென்ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
சென்னை:
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட். 30 வயதான இவர் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் வருகிற 5-ந் தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் புதிய மைல்கல்லை எட்டுகிறார்.
ஜோ ரூட் 99 டெஸ்டில் விளையாடி உள்ளார். சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டி அவருக்கு 100-வது டெஸ்ட் ஆகும். இந்த மைல்கல்லை எட்டும் 15-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெறுகிறார்.
அலஸ்டர் குக் (161 டெஸ்ட்), ஜேம்ஸ் ஆண்டர்சன் (157), ஸ்டூவர்ட் பிராட் (144), அலெக்ஸ் ஸ்டூவர்ட் (133), இயன் பெல் (118), கிரகாம் கூச் (118), டேவிட் கோவர் (117), மைக் ஆதர்டன் (115), காலின் கவுத்திரி (114), பாய்காட் (108), பீட்டர்சன் (104), இயன் போத்தம் (102), ஸ்டராஸ் (100), துரோப் (100) ஆகியோர் வரிசையில் அவர் இணைகிறார்.
100-வது டெஸ்டில் விளையாடுவது குறித்து ஜோ ரூட் கூறியதாவது:-
2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நாக்பூர் டெஸ்டில் அறிமுகமானேன். தற்போது 100- வது போட்டியில் இந்திய மண்ணில் விளையாடுவது பெருமையானது. சென்னையில் 100-வது டெஸ்டில் ஆடுவது மிகவும் சிறப்பானது.
இந்திய அணி வலுவானது. மிக சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கடந்த 12 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட்களில் 7 முதல் 8 தடவை 400 ரன்னுக்கு மேல் குவித்து இருக்கிறோம். இது சிறந்த சாதனையாகும். இந்திய ஆடுகளங்களில் எங்கள் அணி வீரர்களால் நேர்த்தியாக விளையாட முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜோ ரூட் 99 டெஸ்டில் விளையாடி 8249 ரன் எடுத்துள்ளார். சராசரி 49.39 ஆகும். 19 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 254 ரன் குவித்துள்ளார்.
அவர் தனது அறிமுக நாக்பூர் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 70 ரன்னும், 2-வது இன்னிங்சில் 20 ரன்னும் எடுத்தார். அவர் இந்திய மண்ணில் 6 டெஸ்டில் விளையாடி 584 ரன் எடுத்துள்ளார். சராசரி 53.09 ஆக இருக்கிறது.
இங்கிலாந்து அணி சமீபத்தில் இலங்கை மண்ணில் நடந்த 2 டெஸ்டிலும் வெற்றி பெற்று சாதித்தது. இதில் ஜோரூட் ஆட்டம் முத்திரை பதிக்கும் வகையில் இருந்தது. அவர் முதல் டெஸ்டில் இரட்டை சதமும் (228 ரன்), 2-வது டெஸ்டில் சதமும் (186 ரன்) அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






