என் மலர்
விளையாட்டு
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 82-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கோவா அணியில் அலெக்சாண்டர் ரோமாரியோ ஜேசுராஜ் 21-வது நிமிடத்திலும், அமர்ஜித் சிங் 80-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கவுகாத்தி அணி தரப்பில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பெடரிகோ காலேகோ 41-வது மற்றும் 83-வது நிமிடங்களில் பதில் கோல் திருப்பினார். 15-வது ஆட்டத்தில் ஆடிய இரு அணிகளுக்கும் இது 7-வது டிராவாகும்.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி காணொலி மூலம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆஸ்திரேலிய பயணத்தில் முதலாவது டெஸ்டுடன் நான் தாயகம் திரும்பினாலும், அணியுடனான எனது தொடர்பு எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. எந்த சூழலிலும் அது விட்டுப்போனதில்லை. எல்லா டெஸ்ட் போட்டிகளையும் பார்த்தேன். எனது மனைவிக்கு குழந்தை பிறப்புக்காக ஆஸ்பத்திரிக்கு டாக்டர் அழைக்கும் முன்பு வரை, பிரிஸ்பேன் டெஸ்டில் ஷர்துல் தாகூர்- வாஷிங்டன் சுந்தரின் பார்ட்னர்ஷிப்பை போனில் பார்த்துக் கொண்டு இருந்தேன். தந்தை என்ற அந்தஸ்தை எட்டியது, எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான, மிகச்சிறப்பு வாய்ந்த தருணம். அதை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை தவறவிட்டதுடன் ஒப்பிட முடியாது. டெஸ்ட் போட்டியை தவறவிட்டதற்காக நான் கவலைப்படவில்லை.
ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்பதை எதிர்நோக்கி இருக்கிறோம். அவர்களிடம் இருந்து சிறந்த தொடக்கத்தை எதிர்பார்க்கிறோம். இந்த டெஸ்டில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஆடுவார். ஆஸ்திரேலியாவில் முத்திரைபதித்த அவர் நல்ல நிலையில் இருக்கிறார்.
எனக்கும், ரஹானேவுக்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த அணியினருடன் நம்பிக்கை அடிப்படையில் நட்புறவு இருக்கிறது. இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நாங்கள் அனைவரும் உழைக்கிறோம். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரஹானே தனது பொறுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார். அவர் அணிக்கு தலைமைதாங்கி வெற்றித் தேடித்தந்ததை பார்க்க வியப்பாக இருந்தது. நானும், ரஹானேவும் இணைந்து உற்சாகமாக பேட்டிங் செய்திருக்கிறோம். களத்தில் இருவரும் பரஸ்பர மரியாதையுடன் நடந்து கொள்வதை பார்த்து இருப்பீர்கள். களத்திற்கு வெளியேயும் இந்த உறவு நீடிக்கிறது.
நாட்டில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அது பற்றி நாங்கள் பேசுவது உண்டு. இதே போல் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்தும் அணி வீரர்களின் ஆலோசனை கூட்டத்தில் சிறிது நேரம் விவாதித்தோம். ஒவ்வொரு வீரர்களும் தங்களது கருத்தை தெரிவித்தனர். அதன் பிறகு டெஸ்ட்டுக்கான திட்டங்கள் குறித்து பேசினோம்.
இவ்வாறு கோலி கூறினார்.
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘இந்திய வீரர் புஜாரா அற்புதமான வீரர். அவருடன் இணைந்து கவுண்டி கிரிக்கெட்டில் சில ஆட்டங்களில் விளையாடி நிறைய கற்று இருக்கிறேன். இந்திய அணியில் அங்கம் வகிக்கும் போது அவர் எவ்வளவு மதிப்புமிக்கவராக இருக்கிறார் என்பது தெரியும். அவரது விக்கெட் தான் எங்களுக்கு மிகப்பெரியது. நிச்சயம் கடும் சவாலாக இருக்கப்போகிறார்’ என்றார்.
சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 5 தடவை வெற்றி பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1952: இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்னில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
1973: 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
1993: இன்னிங்ஸ் மற்றும் 22 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
2008: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
2016: இன்னிங்ஸ் மற்றும் 75 ரன் வித்தியாசத்தில் வெற்றி.
சேப்பாக்கத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றி விவரம்:
1934: 203 ரன்னில் இந்தியாவை தோற்கடித்தது, 1977: 200 ரன்னில் வெற்றி,
1985: 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி,
1982-ம் ஆண்டு இரு அணிகளும் இங்கு மோதிய டெஸ்ட் டிரா ஆனது.
சென்னை:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் விளையாடுகிறது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளும் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி இலங்கையில் இருந்து நேரடியாக சென்னை வந்தது.
இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதுவும் முதல் டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவிய பிறகு தொடரை கைப்பற்றியது மிகவும் பாராட்டுக்குரியது.
இதனால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்தை எதிர்கொள்ளும். அதே நேரத்தில் ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 2 டெஸ்டிலும் வீழ்த்தி இருந்தது. இதனால் மிகவும் கவனமுடன் ஆடவேண்டும்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
11 வீரர்களை தேர்வு செய்வது கேப்டனுக்கு சவாலான பணியாகும். ஆஸ்திரேலிய பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு விராட்கோலி நாடு திரும்பினார். எஞ்சிய 3 டெஸ்டில் ஆடவில்லை. அவர் தற்போது அணியில் இணைந்து இருக்கிறார். இதேபோல காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் விலகிய இஷாந்த் சர்மாவும் அணியோடு இருக்கிறார்.
6 பேட்ஸ்மேன்கள், 5 பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்கலாம். பந்து வீச்சாளர்களில் பும்ரா, அஸ்வின், இஷாந்த் சர்மா இடம் பெறுவது உறுதி. மற்ற 2 இடத்திற்கு முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.
ஆடுகள தன்மையை பொறுத்து 3 வேகப்பந்து வீரர்களா? 3 சுழற்பந்து வீரர்களா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
ஹர்திக் பாண்ட்யா பந்து வீசுவதற்கு ஏற்ற உடல் தகுதியுடன் இல்லை. இதனால் ஆல்ரவுண்டரான அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.
ஆஸ்திரேலியாவில் ஆடியது போல ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். புஜாரா, விராட் கோலி, ரகானே, ரிஷப் பண்ட் ஆகியோர் அதற்கு அடுத்த வரிசையில் ஆடுவார்கள்.இந்தியா வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டது. சொந்த மண்ணில் விளையாடுவதால் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள்.
ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி இலங்கையில் 2 டெஸ்டிலும் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவால் கொடுத்து விளையாடும்.
கேப்டன் ஜோரூட் பேட்டிங்கில் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். அவர் இலங்கை தொடரில் இரட்டை சதமும், சதமும் அடித்தார். அவர் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கலாம்.
இது தவிர பென் ஸ்டோக்ஸ், பட்லர், டாம் சிப்லி, மொய்ன்அலி, பர்ன்ஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
பந்துவீச்சில் ஆண்டர்சன் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார். அவர் 606 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீரர் ஆவார்.
இது தவிர ஸ்டூவர்ட் பிராட் (517 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரும் சிறப்பாக வீசக்கூடியவர்கள்.
நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.







