என் மலர்tooltip icon

    விளையாட்டு

    துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தலையீட்டை அடுத்து விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
    புதுடெல்லி:

    காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிஸ்டல் துப்பாக்கி சுடும் வீரர்  19 வயதான மனுபாக்கர். டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வாய்ப்புள்ளவர்.

    போபாலில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க மனு பாக்கர் துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவற்றைப் பையில் எடுத்துக்கொண்டு டெல்லி விமான நிலையத்துக்குச் சென்றார்.

    துப்பாக்கி கொண்டு செல்ல அனுமதி பெற்றுள்ளாரா என கேட்டு ஏர் இந்தியா அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். அனுமதி பெற்றுள்ளதாக மனு பாக்கர் தெரிவித்தும் அவரை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை.

    இதனால் பிரதமருக்கும், மத்திய மந்திரிகளுக்கும் தகவல் தெரிவித்து முறையிட்டார். மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தலையீட்டை அடுத்து போபாலுக்கு விமானத்தில் செல்ல மனு பாக்கர் அனுமதிக்கப்பட்டார்.

    தன்னை துன்புறுத்திய அவமதித்த இரண்டு ஏர் இந்திய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு பாக்கர் கோரியுள்ளார்.

    மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு உடனடி தலையீட்டிற்கு நன்றி தெரிவித்த அவர், டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். அதிகாரிகள் சிறிய மரியாதை கொடுக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒவ்வொரு முறையும் வீரர்களை அவமதிக்க வேண்டாம், தயவுசெய்து பணம் கேட்க வேண்டாம் என தெரிவித்தார்.

    ஏர் இந்தியாவும் தனது ஊழியர்களின் நடத்தைக்கு மன்னிப்பு கோரியது.
    இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிந்ததும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:

    விராட் கோலி (கேப்டன்) ரோகித் சர்மா ( துணை கேப்டன்), கேஎல் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், இஷன் கிஷான், யுஸ்வேந்திர சகால், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர், திவேதியா, புவனேஷ் குமார், தீபக் சகார், ஷர்துல் தாகூர்,

    இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டி 20 போட்டி வரும் மார்ச் 12 ஆம் தேதி தொடங்க உள்ளது.
    ஐபிஎல் ஏலத்தில் 15 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதை கேள்விப்பட்டதும், நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன் என கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார்.
    ஆர்சிபி அணி ரூ.15 கோடிக்கு ஏலம் எடுத்ததை கேள்விப்பட்டதும் நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். ரூ.15 கோடிக்கு நியூசிலாந்து டாலரில் எவ்வளவு என எனக்கு அப்போது கணக்குத் தெரியவில்லை என்று நியூசிலாந்து ஆல் ரவுண்டர் கைல் ஜேமிசன் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.

    14-வது ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணியால் ரூ.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கைல் ஜேமிஸன். 6.8 அடி உயரமுள்ள ஜேமிசன் 10-க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் அவரின் பந்துவீச்சும், அதிரடியான ஆட்டமும் ஐபிஎல் லீக்கிற்குள் இழுத்து வந்துள்ளது.

    ஐபிஎல் ஏலத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள், வேகப்பந்து வீச்சாளர்களை ஏலம் எடுக்க ஒவ்வொரு அணிகளும் ஆர்வம் காட்டின. கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி 94 பந்தில் 173 ரன்கள் குவித்தார்.
    இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி இன்று நடைபெற்றது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜார்க்கண்ட்- மத்திய பிரதேச அணிகள் மோதின. மத்திய பிரதேச அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    ஜார்க்கண்ட் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான இஷான் கிஷன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துகளை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் விரட்டி பவுண்டரி, சிக்சர் விரட்டி மத்திய பிரதேச பவுலர்களை திக்குமுக்காடச் செய்தார்.

    இறுதியாக0 94 பந்தில் 19 பவுண்டரி, 11 சிக்சருடன் 173 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். விராட் சிங் 49 பந்தில் 68 ரன்களும், சுமித் குமார் 58 பந்ததில் 52 ரன்களும், அனுகுல் ராய் 39 பந்தில் 72 ரன்களும் விளாச ஜார்க்கண்ட் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 422 ரன்கள் குவித்தது.

    பின்னர் 423 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மத்திய பிரதேச அணி களம் இறங்கியது. பந்து வீச்சில் சொதப்பிய அந்த பேட்டிங்கிலும் சொதப்பியது. தொடக்க வீரர் அபிஷேக் பண்டாரி 42 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழக்க மத்திய பிரதேச அணி 98 ரன்னில் சுருண்டது. அந்த அணியால் 18.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. இதனால் ஜார்க்கண்ட் 324 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  பேட்டிங்கில் அசத்திய இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் பணியில் ஏழு கேட்ச் பிடித்து அசத்தினார். 

    ஜார்க்கண்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் 6 விக்கெட் வீழ்த்தினார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
    மெல்போர்ன்:

    இந்த ஆண்டில் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் 3-ம் தரநிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவும், அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடியும் பலப்பரீட்சை நடத்தினர்.

    ஒசாகா அரையிறுதியில் 23 பட்டம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். அத்துடன், மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கு முன்னேறி, மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பட்டம் வென்றதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

    ஒசாகா

    அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் துவக்கம் முதலே அதிரடியான சர்வீஸ்களை அடித்து, ஜெனிபரை திணறடித்தார். இறுதியில் 6-4, 6-3 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார் ஒசாகா. இதன்மூலம் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை ஒசாகா வென்றுள்ளார். இதுவரை 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி மெட்வதேவ் பட்டத்தை வெல்வார் என சிட்சிபாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதியில் மெட்வதேவுடன் தோற்ற கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபான் சிட்சிபாஸ் கூறியதாவது:-

    நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடாலுடன் ஆஸ்திரேலிய ஓபனில் மோதினேன். எனக்கு எதிராக அவரது ஆட்டம் மிகுந்த ஆக்ரோ‌ஷமாகவும், அபாரமாகவும் இருந்தது. அப்போது நடால் பட்டம் வெல்வார் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்தார்.

    தற்போது டேனியல் மெட்வதேவ் அற்புதமாக விளையாடி வருகிறார். அவர் தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளார். அவர் ஆட்டத்தை சரியாக கணித்து அதற்கேற்றார் போல் விளையாடுகிறார். மெட்வதேவின் சர்வீஸ் ஜான் இஷ்னருக்கு நிகராக இருக்கிறது. நான் அவரிடம் அரை இறுதியில் தோற்றது ஏமாற்றம் அளித்தது. அதே நேரத்தில் இந்த ஆட்டத்தின் மூலம் சில பாடங்களை கற்றுக் கொண்டேன்.

    இவ்வாறு சிட்சிபாஸ் கூறியுள்ளார்.

    சர்வதேச போட்டியில் அறிமுகம் இல்லாத மெரிடித்தை போட்டிப்போட்டு எடுக்கக் காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
    14-வது ஏலத்தில் 5-வது மிகப்பெரிய தொகையான ரூ.8 கோடிக்கு எடுக்கப்பட்டவர்தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிலே மெரிடித். சர்வதேச அறிமுகம் ஏதும் இல்லாத 24 வயது வீரரைப் பஞ்சாப் அணி பல போட்டிகளுக்குப்பின் ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளது.

    சர்வதேச அறிமுகம் இல்லாத ஒரு வீரரை ரூ.8 கோடிக்கு ஏலம் எடுத்தது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும். சர்வதேச அறிமுகம் இல்லாத மெரிடித்தை அணி ஏலத்தில் போட்டிப்போட்டு எடுக்கக் காரணம் என்ன?

    தாஸ்மானியாவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளரான மெரிடித்தை ஆஸ்திரேலியா அணிக்குள் எடுக்கப் பல ஆண்டுகளாகப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பதை பஞ்சாப் அணிஎடுக்க முக்கியக் காரணம். அதிலும் குறிப்பாக ஷேன் வார்ன் , டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்குத் துருப்புச் சீட்டாக இருப்பார் என்று கணித்துள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய லெவன் அணியில் இடம் பெற்றதே மெரிடித்தின் முதல் அறிமுகமாகும். அதன்பின் 2017-18ம் ஆண்டில் தாஸ்மானியா அணிக்காகப் பலப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    அந்த ஆண்டு நடந்த பிக்பாஷ் லீக்கில் தைமால் மில்ஸ்குக்கு காயம் ஏற்பட அரையிறுதியிலும், இறுதிப்போட்டியிலும் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. ஜோப்ரா ஆர்ச்சருக்கு கடும் போட்டியாக அந்தத் தொடரில் விளங்கினார். ஜோப்ரா ஆர்ச்சரின் வேகப்பந்துவீச்சும், துல்லியத்தையும் கேள்வி கேட்கும் அளவுக்கு மெரிடித்தின் பந்துவீச்சு அமைந்திருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.

    2018-19ம்ஆண்டுதான் மெரிடித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. ஷெப்பீல்ட் ஷீல்ட் போட்டியில் 8 ஆட்டங்களில் விளையாடிய 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    பிக்பாஷ் லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் இடம் பெற்று 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஏற்கெனவே ஷேன் வார்ன் வேறு மெரிடித்தை ஆஸி. அணிக்குள் கொண்டுவாருங்கள் என்று வலியுறுத்திய நிலையில் மெரிடித்தின் இந்த அற்புதமான ஆட்டம் அவருக்கான ஆதரவுக் குரல்களை வலுப்பெறச் செய்தது.

    2019-ம் ஆண்டில் பிக்பாஷ் லீக்கில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடிய காயம் காரணமாகப் பாதியிலேயே விலக நேரிட்டது. இந்த சீசனில் டி20 போட்டியில் மெரிடித்தின் எக்கானமி ரேட் 6.68ஆக வைத்திருந்தார்.

    மார்ஷ் கோப்பையில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எளிதாக வீழ்த்திய பந்துவீச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 2020ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மெரிடித்தை சேர்க்கப் பல ஆதரவுக் குரல்கள் வந்தபோதிலும் இறுதிவரை மெரிடித்தின் பெயரை ஆஸ்திரேலியத் தேர்வாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

    2020-21-ம் ஆண்டில் நடந்த பிக்பாஷ் லீக்கில் மீண்டும் மெரிடித்த தனது திறமையை வெளிப்படுத்தி, 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மெரிடித்தின் பந்துவீச்சில் பவர்ப்ளே ஓவர்களை டெத்ஓவர்களாகவே இருக்கும் அளவுக்குக் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி கவனத்தை ஈர்த்தார். மெரிடித்தின் பந்துவீச்சைப் பார்த்த ஆஸ்திரேலியத் தேர்வாளர்கள் இறுதியாக நியூஸிலாந்து தொடருக்கான ஆஸி.அணியில் அறிவித்தனர்.

    கடந்த ஆண்டு ஒரு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ” இந்தியாவில் நடக்கும் தொடர் உலகச்சிறப்பு வாய்ந்தது. அதில் எப்படியாவது நான் விளையாட வேண்டும். உலகின் தலைசிறந்த வீரர்கள் விளையாடும் அந்தத் தொடரில் இடம் பெற வேண்டும். எனக்கு அதில் விளையாட வாய்ப்புக் கிடைத்தால் அந்த வாய்ப்பை இருகரத்துடன் வரவேற்றுப் பெற்றுக்கொள்வேன்”எனப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.

    மெரிடித் குறித்து ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் கூறுகையில் ” பலமுறை உள்நாட்டுப்போட்டிகளில் மெரிடித்தின் திறமை குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். மிக அற்புதமாகப் பந்து வீசுகிறார். ஆஸ்திரேலிய அணிக்குள் வந்தால் இருகரத்துடன் வரவேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
    பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் கிறிஸ் கெய்லை சந்திக்க மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக ரூ.5¼ கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர் ஷாருக்கான் கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் தமிழக வீரர் ஷாருக்கானை ரூ.5¼ கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. இவரது அடிப்படை தொகை ரூ.20 லட்சம் தான். ஆனால் 3 அணிகள் அவரை வாங்க மல்லுகட்டியதால் தொகை எகிறி இப்போது கோடீஸ்வரர் ஆகி விட்டார். எந்த சர்வதேச போட்டிகளிலும் ஆடாத ஷாருக்கான் தற்போது விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். 
    சென்னையைச் சேர்ந்த 25 வயதான ஷாருக்கான் கூறியதாவது:-

    என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என்று தெரியும். ஆனால் இவ்வளவு தொகைக்கு விலை போவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஏலம் நடந்து கொண்டிருந்த போது, விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கான பயிற்சியை முடித்துக்கொண்டு ஓட்டல் அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். அங்கு சென்றதும் கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்குரிய பரிசு இது. தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப்பில் ஆடியது வியப்புக்குரிய அனுபவம். அவர் திறமையான கேப்டன். எனக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கிறார்.

    பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுலை சில தடவை சந்தித்து இருக்கிறேன். ஆனால் இப்போது கிறிஸ் கெய்லை சந்திக்க மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன். கெய்ல் பந்தை பலமாக அடித்து நொறுக்கக்கூடியவர். அபாயகரமான ஒரு பேட்ஸ்மேன். கெய்ல், ராகுல் போன்ற வீரர்களுடன் இணைந்து ஓய்வறையில் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது சந்தோஷமாக இருக்கும். இதே போல் தலைமை பயிற்சியாளர் கும்பிளேவை சந்தித்து பேசுவதையும் எதிர்நோக்கி உள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்த பஞ்சாப் அணி நிர்வாகத்துக்கு நன்றி. அணிக்கு நிச்சயம் எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளிப்பேன்.

    நான் இயல்பாகவே அதிரடியாக ஆடும் திறமை கொண்டவன். அந்த அளவுக்கு வலு என்னிடம் உண்டு. அதில் முன்னேற்றம் காண தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன். அது மட்டுமின்றி கடந்த 2 ஆண்டுகளாக வேகப்பந்தும் வீசி வருகிறேன். என்னால் வேகமாக பவுலிங் செய்ய முடியும்.
    எனது சித்தி இந்தி நடிகர் ஷாருக்கானின் தீவிர ரசிகை. உனக்கு ஆண் குழந்தை பிறந்தால் ஷாருக்கான் பெயர் தான் வைக்க வேண்டும் என்று எனது அம்மாவிடம் அடிக்கடி சொல்வாராம். இப்படி தான் எனக்கு ஷாருக்கான் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
    இவ்வாறு ஷாருக்கான் கூறினார்.

    முன்னதாக ஏலத்தின் போது ஷாருக்கானை வாங்கியதும் பஞ்சாப் அணியின் உரிமையாளரான இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா, ஏலத்திற்கு வந்திருந்த கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை சீண்டினார். ‘நாங்கள் ஷாருக்கானை வசப்படுத்தி விட்டோம்’ என்று பிரீத்தி, ஆர்யனை நோக்கி கூறினார்.

    ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான 24 வயதான ஜய் ரிச்சர்ட்சன் ஆச்சரியப்படும் வகையில் ரூ.14 கோடிக்கு ஏலம் போனார். அவரை பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. 20 ஓவர் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ள ரிச்சர்ட்சன் கூறுகையில், ‘எனது பெயரை ஏலத்தில் வாசித்த போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். சில நிமிடங்கள் என்ன நடக்கப்போகிறதோ என்ற பதற்றமும் தொற்றியது. மிகப்பெரிய தொகைக்கு விலை போனதும் ஒன்றிரண்டு தடவை தொகை சரிதானா? என்று பரிசோதித்து கொண்டேன். ஏதோ நேற்று (நேற்று முன்தினம்) களத்தில் விளையாடியது போல் நினைப்பு. மனரீதியாக சோர்வுக்குள்ளானேன். அந்த அளவுக்கு எனக்குள் உணர்ச்சிமயம் ஆட்கொண்டது.

    திடீரென பெரிய சுவற்றில் மோதினால் எப்படி ஸ்தம்பித்து நிற்போமோ அதே போல் ஒரு கணம் திகைத்து போனேன். இன்னும் மகிழ்ச்சியில் தான் மிதக்கிறேன். இந்த தொகை எனது வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பதே உண்மை’ என்றார்.

    ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும் நான்காவது வரிசையில் உள்ள டேனியல் மெட்வதேவும் மோதுகிறார்கள்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)- நான்காவது வரிசையில் உள்ள டேனியல் மெட்வதேவ் (ரஷியா) மோதுகிறார்கள்.

    மெட்வதேவை வீழ்த்தி ஜோகோவிச் 18-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளார். அவர் அதிக பட்டம் பெற்ற வீரர்களில் முதல் இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபேல் நடால் (ஸ்பெயின்) ஆகியோருக்கு அடுத்தபடியாக உள்ளார். இருவரும் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றுள்ளனர்.

    களிமண் தரையான பிரெஞ்சு ஓபனில் ஆடுவதில் நடால் புதிய வரலாறு படைத்து உள்ளார். அவர் அதில் மட்டுமே 13 பட்டங்களை வென்றுள்ளார். புல்தரையான விம்பிள்டனில் பெடரர் அதிகபட்சமாக 8 பட்டங்களை வென்றுள்ளார்.

    இதேபோலத்தான் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் அசைக்க முடியாத வீரராக உள்ளார். அவர் 8 பட்டங்களை கைப்பற்றியுள்ளார். 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார்.

    அவர் 9-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மெட்வதேவ் அவருக்கு எல்லா வகையிலும் கடும் சவாலாக விளங்குவார்.

    28-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதி போட்டியில் ஜோகோவிச் விளையாடுகிறார். அவர் இதுவரை ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் தோற்றது கிடையாது. ஆண்டி முர்ரேயை (2011, 2013, 2015, 2016) 4 முறையும், நடாலை (2012, 2019) 2 தடவையும், வில்பிரட் சோங்கா (2008), டொமினிக் தீம் (2020) ஆகியோரை தலா ஒரு முறையும் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் வீழ்த்தினார்.

    25 வயதான மெட்வ தேவ் 2-வது முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.

    இதன்மூலம் 2-க்கும் மேற்பட்ட கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த 3-வது ரஷிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கபெல்னிகோவ், மாரட்சபின் ஆகியோருக்கு அடுத்த நிலையை அவர் பெற்றார்.

    ஜோகோவிச்சை வீழ்த்தி மெட்வதேவ் முதல் கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்வாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    இன்று பிற்பகல் நடைபெறும் பெண்கள் இறுதிப்போட்டியில் 3-வது வரிசையில் உள்ள நவோமி ஒசாகா (ஜப்பான்)- ஜெனிபர் பிராடி (அமெரிக்கா) மோதுகிறார்கள். 

    2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் தான் அனுபவித்த வேதனைகள் குறித்து இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி நினைவு கூர்ந்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த தொடர் விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத அளவுக்கு மோசமானதாக இருந்தது.

    இங்கிலாந்து வேகப்பந்து வீரர்கள் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரது சுவிங் பந்தில் அவர் பலமுறை விக்கெட் கீப்பரிடமும், சிலிப் பகுதியிலும் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

    இந்த தொடரில் விராட் கோலியின் ஸ்கோர் 1, 8, 25, 0, 39, 28, 0, 6, 20 ஆகிய ரன்களாக இருந்தது. அவரது சராசரி 13.5 ஆக இருந்தது. இந்த டெஸ்ட் தொடரில் பாடங்களை கற்று தனது தவறுகளை திருத்திக் கொண்டு விராட் கோலி அடுத்து நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 692 ரன்களை விளாசினார்.

    இங்கிலாந்து பயணத்தில் தான் அனுபவித்த வேதனைகள் குறித்து இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி ‘நாட் ஜஸ்ட் கிரிக்கெட்’ என்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் நிக்கோலசுடன் பகிர்ந்து கொண்டார்.

    இந்த உரையாடலின்போது 2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் மோசமாக பேட்டிங் செய்தபோது எப்படி உணர்ந்தீர்கள். மன அழுத்தம் இருந்ததா? என்று நிக்கோலஸ் கேட்டார். இதற்கு பதிலளித்து விராட் கோலி கூறியதாவது:-

    மோசமான ஆட்டத்தால் எனக்கு மன அழுத்தம் இருந்தது. அதனுடன் கடுமையாக போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மிகுந்த அதிகமான வலியால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

    மோசமான ஆட்டத்தில் இருந்து எப்போது மீண்டு வருவேன் என்று புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் எதையும் செய்ய முடியாதவனாக நான் இருந்தேன். அப்போது உலகிலேயே நான் தனி மனிதனாக இருந்ததாக உணர்ந்தேன்.

    நான் மிகுந்த மன அழுத்தத்திலும் நம்பிக்கை அற்றவனாக இருந்தபோது பலரும் ஊக்கமளித்தனர். யாரும் என்னுடன் பேசவில்லை. ஆதரவு அளிக்கவில்லை என்று சொல்ல மாட்டேன்.

    1990களில் இருந்த இந்திய அணிதான் என் கிரிக்கெட் சார்ந்த கற்பனையை மேலும் விசாலப்படுத்தியது. நான் பார்த்த வரையில் மிகவும் வித்தியாசமாக இருந்தது.

    18 வயதில் என் தந்தையை இழந்தேன். நான் சிறந்த கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என்று அவர் விரும்பினார். என்னுடைய தந்தையின் கனவும், என்னுடைய கனவும் ஒருநாள் நனவாகும்.

    தேசத்துக்காக உயர்ந்த இடத்தில் இருந்து விளையாடுவேன் என்று நம்பினேன்.

    இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார். 

    ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் சிறப்பான வகையில் வீரர்களை ஏலம் எடுத்தது என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. 2020 சீசனில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சென்னை அணி ஏறக்குறைய முழுவதுமாக மாற்றமடைய வேண்டும் ரசிகர்கள் விரும்பினார்கள்.

    மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்த மேக்ஸ்வெல்லை சென்னை சூப்பர் கிங்ஸ் குறிவைத்தது. ஆனால் 14 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போனதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை ஏலம் எடுக்கவில்லை. கிருஷ்ணப்பா கௌதமை 9.25 கோடி ரூபாய்க்கும், மொயீன் அலியை 7 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்தது.

    மேக்ஸ்வெல்லுக்கு கொடுக்கக்கூடிய தொகையில் இருவரை ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும், புஜாராவை 50 லட்சத்திற்கும் கே.பகத் வர்மா, ஹரி நிஷாந்த், ஹரிசங்கர் ரெட்டி ஆகியோரை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. கௌதம், மொயீன் அலி ஆகியோரைத் தவிர மற்ற நான்கு பேரையும் அடிப்படை விலையிலேயே வாங்கியுள்ளது.

    மீண்டும் டேடி பேமிலியா.... என சிறு விமர்சனம் எழும்பிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் சிறப்பானது என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘மறுசீரமைப்பு எங்கே? எனக்கேட்கும் நிலையில் சிஎஸ்கே-வைவிட மற்ற அணிகள்தான் அதிக அளவில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். கடந்த போட்டியில் பிளே-ஆப்ஸ் சுற்றுக்குக் கூட தகுதி பெறாததால், சிஎஸ்கே நோக்கி அந்த கேள்வி எழுந்தது.

    ஆனால், ஆக்சனில் கலந்து கொண்டு 3 வீரர்களை தேர்வு செய்தது மகிழ்ச்சியானது. சிறந்த ஆக்சன் என்று நான் நினைக்கிறேன். தொடக்கத்தில் மேக்ஸ்வெல்லுக்காக கடுமையாக போராடினார்கள். பின்னர் ஏறக்குறைய அதே விலைக்கு கே. கௌதம், மொயீன் அலி ஆகியோரை எடுத்துள்ளனர். ஆகவே, ஒரு வீரருக்கான தொகையில் இரண்டு வீரர்களை எடுத்துள்ளனர்.

    அவர்கள் மூன்று வீரர்களை மட்டுமே எடுத்துள்ளனர் என் ரசிகர்கள் கூறலாம். ஆனால், இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த ஆக்சன் என்பேன். ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மிகப்பெரிய தொகைக்கு வீரர்களை எடுத்தனர். சிஎஸ்கே விரும்பியதை ஏலத்தில் எடுத்தார்கள். இது பணத்தை மிகப்பெரிய அளவில் செலவழிப்பது அல்ல, உங்கள் அணிக்கு வலு சேர்க்கும் வீரர்களை அணியில் சேர்ப்பது. இருவராலும் சென்னை அணிக்கு தொடரை வென்று கொண்டுக்க முடியும். சிஎஸ்கே-வுக்கு இரண்டு பேரும் சிறந்த ஆபசன்’’ என்றார்.
    திறமை அடிப்படையில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    14-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கடைசி நபராக இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் பல சாதனைகளை நிகழ்த்திய சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனும் வந்தார். ஏலத்தொகையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அவரை வேறு எந்த அணியும் வாங்க முன்வராத நிலையில் ரூ.20 லட்சத்திற்கு மும்பை அணியே ஏலத்தில் எடுத்தது. 

    ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அர்ஜுன் தேர்வானது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியது. 

    இந்நிலையில், திறமை அடிப்படையில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியிருப்பதாவது:

    நாங்கள் முற்றிலும் திறன் அடிப்படையில் மட்டுமே இதை அணுகினோம். ஏனெனில், சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கப்போகிறது. அதிர்ஷ்டவசமாக அவர் (அர்ஜுன்) பந்துவீச்சாளாராக உள்ளார்.  

    எனவே அர்ஜுனைப் போல பந்து வீச முடிந்தால் சச்சின் மிகவும் பெருமைப்படுவார் என்று நான் நினைக்கிறேன்.  அர்ஜுனுக்கு ஒரு கற்றல்  நடைமுறையாகவே  இருக்கப்போகிறது என நான் நினைக்கிறேன். அவர் இளம் வீரர் என்பதால் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியும். எனவே, அவருக்கு நாம் உரிய நேரம் கொடுக்க வேண்டும். அவருக்கு அதிகமான அழுத்தங்களை கொடுக்கக் கூடாது என தெரிவித்தார். 
    ×