என் மலர்
விளையாட்டு
சென்னை:
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்த 34 வயதான இவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்டிலும் சாதித்தார்.
சேப்பாக்கம் மைதானத் தில் நடந்த 2 டெஸ்டிலும் சேர்த்து அஸ்வின் 17 விக்கெட் வீழ்த்தினார். முதல் போட்டியில் 9 விக்கெட்டும், 2-வது டெஸ்டில் 8 விக்கெட்டும் கைப்பற்றினார். அதோடு 2-வது போட்டியில் சதம் அடித்தும் முத்திரை பதித்தார்.
அஸ்வின் 76 டெஸ்டில் 394 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சராசரி 25.20 ஆகும். ஒரு இன்னிங்சில் 59 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும். ஒரு டெஸ்டில் 140 ரன் கொடுத்து 13 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 29 முறை 5 விக்கெட்டுக்கு மேலும், 7 தடவை 10 விக்கெட்டுக்கு அதிகமாகவும் எடுத்துள்ளார்.
அஸ்வின் 400 விக்கெட்டை நெருங்குகிறார். அதற்கு இன்னும் 6 விக்கெட் தேவை. இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் பகல்-இரவாக நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் இதை சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
400 விக்கெட்டை கைப்பற்றும் 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். உலக அளவில் 16-வது வீரர் என்ற சாதனையை படைப்பார்.
அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் கும்ப்ளே (619 விக்கெட்), கபில்தேவ் (434), ஹர்பஜன் சிங் (417) ஆகியோருக்கு அடுத்தபடியாக அஸ்வின் உள்ளார்.
கும்ப்ளே 85 டெஸ்டிலும், ஹர்பஜன்சிங் 96 டெஸ்டிலும், கபில்தேவ் 111 டெஸ்டிலும் 400 விக்கெட்டை தொட்டு இருந்தனர். ஆனால் அஸ்வின் 77-வது டெஸ்டில் 400 விக்கெட்டை எடுக்க அதிகமான வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் அவர் இந்திய வீரர்களில் புதிய சாதனை படைக்கிறார்.
சென்னை:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது.
இதற்கான மினி ஏலம் சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் 57 வீரர்கள் விலை போனார்கள். 8 அணிகளும் சேர்ந்து இவர்களை ரூ.143.69 கோடிக்கு ஏலத்தில் எடுத்தன.
தமிழகத்தை சேர்ந்த 25 வயதான ஷாருக்கான் ரூ.5.25 கோடிக்கு ஏலம் போனார். அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. உள்ளூர் போட்டியான முஸ்தாக் அலி 20 ஓவரில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதனால் தமிழக வீரர்கள் மீது ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
இதேபோல மற்ற தமிழக வீரர்களான ஹரிநிஷாந்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், எம்.சித்தார்த்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் தலா ரூ.25 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தன.
பஞ்சாப் அணி 2019-ம் ஆண்டு ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியை ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. பின்னர் அவரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. அதே பஞ்சாப் அணிதான் தற்போது அதிரடி பேட்ஸ்மேன் ஷாருக்கானை ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்த ஐ.பி.எல். போட்டியில் 13 தமிழக வீரர்கள் விளையாடுகிறார்கள். ஆர்.அஸ்வின், தினேஷ்கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், விஜய்ஷங்கர், டி.நடராஜன், முருகன் அஸ்வின், ஜெகதீசன், சாய் கிஷோர், சந்தீப் வாரியர் ஆகியோருடன் ஷாருக்கான், ஹரிநிஷாந்த், எம்.சித்தார்த் ஆகியோர் தற்போது ஐ.பி.எல். போட்டியில் இணைந்துள்ளனர்.
இ்ந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (புதன்கிழமை) தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் பகல்-இரவாக (மின்னொளியின் கீழ்) இந்த டெஸ்ட் நடத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக மிளிரும் தன்மை கொண்ட இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) பயன்படுத்தப்படுகிறது.

இந்திய அணி நீண்டகாலமாக பகல்-இரவு டெஸ்டில் விளையாட தயக்கம் காட்டியது. சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு வந்ததும், கேப்டன் விராட் கோலியிடம் பேசி சம்மதிக்க வைத்தார். இதன்படி இந்தியா, பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தா ஈடன்கார்டனில் வங்காளதேசத்துக்கு எதிராக மோதியது. 3 நாட்களுக்குள் நிறைவடைந்த இந்த டெஸ்டில் இ்ந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிங்க் பந்து டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி (136 ரன்) பெற்றார்.
இந்தியாவின் 2-வது பகல்-இரவு டெஸ்டை யாரும் எளிதில் மறந்து விட முடியாது. கடந்த டிசம்பர் மாதம் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்டில் இ்ந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதுவும் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 21.2 ஓவர்களில் வெறும் 36 ரன்னில் சுருண்டு டெஸ்டில் மோசமான ஸ்கோரை பெற்றது. ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்கை தொடாத சோக மான நாளாக அமைந்தது.
இங்கிலாந்து அணி இதுவரை 3 பகல்-இரவு டெஸ்டில் ஆடியுள்ளது. அவற்றில் ஒன்றில் வெற்றியும் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக) தழுவியுள்ளது.
பிங்க் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்களே வெகுவாக ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். பகல்-இரவு டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் 354 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் 115 விக்கெட்டும் அறுவடை செய்துள்ளனர். 21 சதங்கள் பதிவாகியுள்ளன. இதில் பாகிஸ்தானின் அசார் அலி (302 ரன்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (335 ரன்) முச்சதம் விளாசியுள்ளனர்.
1 லட்சத்து 10 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட பிரமாண்டமான ஆமதாபாத் சர்தார் பட்டேல் ஸ்டேடியம் புதிதாக கட்டப்பட்டது ஆகும். இதனால் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை இன்னும் முழுமையாக வீரர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆடுகளத்தில் வேகப்பந்துக்கு சாதகமான சூழல் காணப்பட்டால் தங்களது கை ஓங்கும் என்று இப்போதே இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லி கூறியுள்ளார்.
இருப்பினும் உள்ளூர் சீதோஷ்ண நிலையில் இந்திய வீரர்கள் சாதிப்பார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் இரு அணிகளும் மல்லுகட்டுவதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
11 அணிகள் இடையிலான 7-வது இ்ந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை நடந்த 101-வது லீக் ஆட்டத்தில் கோவா எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை வீழ்த்தியது. கோவா அணியில் இகோர் அங்குலோ (20-வது நிமிடம்), ரிடீம் (23-வது நிமிடம்) கோல் அடித்தனர். 19-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 7 வெற்றி, 9 டிரா, 3 தோல்வி என்று 30 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருப்பதுடன் அரைஇறுதி வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அதே சமயம் 7-வது தோல்வியை சந்தித்த பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
இரவில் நடந்த சென்னையின் எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தனது கடைசி லீக்கில் ஆடிய முன்னாள் சாம்பியனான சென்னை அணி 3 வெற்றி, 11 டிரா, 6 தோல்வி என்று 20 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத்- ஏ.டி.கே. மோகன் பகான் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

அகமதாபாத்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.
முதல் டெஸ்டில் இங்கி லாந்து 227 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் நடத்தப்படுகிறது.
3-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பகல்-இரவாக நடக்கிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த ஸ்டேடியத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தான் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளது. முதலில் இங்கு 49 ஆயிரம் பேர் அமர முடியும். மறு சீரமைப்புக்கு பிறகு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆனது. மெல்போர்ன் ஸ்டேடியத்தில் 90 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்ளது. அதை அகமதாபாத் ஸ்டே டியம் முறியடித்தது.
சுமார் 63 ஏக்கர் பரப்பள வில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் அதி நவீன வசதிகள் உள்ளன. மைதானத்தில் வீரர்களுக் காக 4 டிரெஸ்சிங் ரூம்கள் உள்ளன. மேலும் 11 சென்டர் பிட்ச்களும் உள்ளன.
இந்த மைதானத்தில் தான் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரப்பின் ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே போட்டியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதன்படி 3-வது டெஸ்ட் போட்டிக்கு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அங்கு 55 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுவிட்டன.
3-வது டெஸ்ட் போட்டி யில் விளையாடுவதற்காக இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் ஏற்கனவே சென்னையில் இருந்து அகமதாபாத் சென்று விட்டனர். அவர்கள் மொதேரா மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தை பார்த்து இரு அணி வீரர்களும் பிரமிப்பு அடைந்துள்ளனர்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப்பண்ட் டுவிட்டரில், ‘இந்த புதிய ஸ்டேடியத்தில் இருக்கும் உடற்பயிற்சி கூடம் அபாரமாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கூறும்போது, ‘‘உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இருப்பது பெருமையாக இருக்கிறது. இங்கு எல்லாமே அற்புதமாக இருக்கிறது. மைதானத்தை சுற்றிப்பார்க்கவே எங்களுக்கு ஒரு மணிநேரம் ஆனது’ என்றார்.
புஜாரா கூறும்போது, ‘சர்தார் படேல் மைதானம் பெரியது. வித்தியாசமான உணர்வை தருகிறது. பகல்- இரவு டெஸ்டில் விளையாடும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்’ என்றார்.
சுப்மன்கில்:- இந்தியாவில் தான் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் உள்ளது. இதில் எங்களுக்கு பெருமை அளிக்கிறது.
மயங்க் அகர்வால்:- ஸ்டேடியத்தில் நுழைந்து கேலரிகளை பார்த்ததுமே வியந்துவிட்டோம். இதற்கு முன்பு இவ்வளவு பெரிய மைதானத்தில் ஆடியது இல்லை.
இதேபோல இங்கிலாந்து வீரர் பென்ஸ்டோக்ஸ், முன்னாள் வீரர் பீட்டர் சன் ஆகியோரும் ஸ்டேடியத்தின் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கோவா:
7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.
இதுவரை 100 லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டது. இன்னும் 10 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதுவரை 2 அணிகள் மட்டுமே அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
2 முறை சாம்பியனான அட்லெடிகோ கொல்கத்தா மோகன் பகான் அணி 12 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி 39 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி தற்போது முதல் இடத்தில் உள்ளது. மோகன் பகான் அணிக்கு இன்னும் 2 ஆட்டம் இருக்கிறது.
மும்பை அணி 10 வெற்றி, 4 டிரா, 4 தோல்வியுடன் 34 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி தற்போது 2-வது இடத்தில் இருக் கிறது. மும்பை அணிக்கும் 2 ஆட்டம் எஞ்சியுள்ளன.
மற்ற 2 இடங்களுக்கு ஐதராபாத், கோவா, கவுகாத்தி, ஜாம்ஷெட்பூர், பெங்களூர் அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இதில் ஐதராபாத், கோவா, கவுகாத்தி அணிகள் தலா 27 புள்ளிகளுடனும், ஜாம்ஷெட்பூர் 24 புள்ளிகளுடனும், பெங்களூர் 22 புள்ளிகளுடனும் உள்ளன.
இந்த 5 அணிகளும் முறையே 3 முதல் 7-வது இடங்களில் உள்ளன. இதில் ஜாம்ஷெட்பூர் தவிர மற்ற 4 அணிகளுக்கும் 2 ஆட்டங்கள் உள்ளன. ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஒரே ஒரு ஆட்டமே உள்ளது.
2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த அணி 19 ஆட்டத்தில் 3-ல் மட்டுமே வெற்றிபெற்றது. 6 ஆட்டத்தில் தோற்றது. 10 போட்டியை டிரா செய்தது. 19 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
சென்னையின் எப்.சி. கடைசி லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்சை இன்று எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. சென்னை அணி கேரளாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படு கிறது.
இரு அணிகளும் ஏற்கனவே மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது. கேரளா அணி 3 வெற்றி, 7 டிரா, 8 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.
முன்னதாக இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர்- கோவா அணிகள் மோதுகின்றன. அரை இறுதி வாய்ப்பை பெற இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.






