என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியா- இங்கிலாந்தும் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது.
    ஆமதாபாத்:

    ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. முதலாவது டெஸ்டில் இ்ங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இ்ந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    விராட் கோலி


    இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் மோடேராவில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது.

    தொடக்க டெஸ்டில் தோற்றதால் கடும் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி 2-வது டெஸ்டில் எழுச்சி பெற்றது. ஆடுகளமும் (பிட்ச்) முதல் நாளில் இருந்தே சுழலுக்கு ஒத்துழைத்ததால் இந்திய வீரர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின்-அக்‌ஷர் பட்டேல் கூட்டாக இணைந்து மொத்தம் 15 விக்கெட்டுகளை அறுவடை செய்ததோடு, இங்கிலாந்தை 3½ நாளிலேயே சுருட்டி வீசினர். ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோரது சதமும் வெற்றிக்கு உதவின.

    ஆனால் 3-வது டெஸ்ட் மின்னொளியில் அரங்கேறும் பகல்-இரவு போட்டி என்பதால் கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பகல்-இரவு டெஸ்டில், வழக்கமான சிவப்பு நிற பந்துக்கு பதிலாக இளஞ்சிவப்பு நிற (பிங்க்) பந்து பயன்படுத்தப்படுகிறது. பிங்க் பந்து கணிசமாக ஸ்விங் ஆகும். அதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அனுகூலமாக இருக்கும். எனவே முந்தைய டெஸ்டில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறங்கிய இந்திய அணி, இந்த டெஸ்டில் குல்தீப் யாதவை கழற்றி விட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கும் என்று தெரிகிறது. இதே போல் கடந்த டெஸ்டில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா திரும்புகிறார்.

    வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு இது 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 11-வது இந்தியர், 2-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெறுகிறார். 99 டெஸ்டில் விளையாடி 302 விக்கெட்டுகள் வீழ்த்திய இஷாந்த் ஷர்மா தனது செஞ்சுரி டெஸ்டில் முத்திரை பதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதே போல் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சாதனையை நோக்கி பயணிக்கிறார். இன்னும் 6 விக்கெட் கைப்பற்றினால் அவர் 400 விக்கெட் வீழ்த்திய 4-வது இந்தியராக சாதனை பட்டியலில் இணைவார். அனேகமாக அவர் டெஸ்டில் இந்த சாதனையை எட்டிப்பிடிக்க வாய்ப்புள்ளது.

    ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ள இந்திய கேப்டன் விராட் கோலி கடந்த 34 சர்வதேச இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்திருந்தார். அந்த டெஸ்ட் தான் இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் என்பது நினைவு கூரத்தக்கது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த டெஸ்டில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். குறைந்தது டிராவாவது செய்தாக வேண்டும். தோற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு புஷ்வாணமாகி விடும். அந்த வகையிலும் இந்த டெஸ்ட் இந்தியாவுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.
    தொடக்க டெஸ்டில் கேப்டன் ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மிரட்டிய இங்கிலாந்து அணி 2-வது டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களை கூட நெருங்க முடியாமல் முடங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற எஞ்சிய இரு டெஸ்டிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் அந்த அணிக்கும் இது வாழ்வா-சாவா? ஆட்டமாக அமைந்துள்ளது.

    இங்கிலாந்து அணியில் கடந்த டெஸ்டில் ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், முழங்கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இந்த போட்டியில் தாக்குதலை தொடுக்க ஆயத்தமாகி உள்ளனர். அவர்களது வருகை இங்கிலாந்து அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும். ஆனாலும் பேட்டிங்கில் ஜோ ரூட் தவிர மற்றவர்களின் ஆட்டம் சீரற்ற வகையில் இருப்பது அந்த அணியை கவலையடையச் செய்துள்ளது.

    இந்த போட்டி நடக்கும் மோடேரா சர்தார் பட்டேல் ஸ்டேடியம் இடித்து புதிதாக கட்டப்பட்டுள்ளது. 63 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.800 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த ஸ்டேடியம், ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கை வசதியை கொண்டது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் என்ற பெருமையை பெறுகிறது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (90 ஆயிரம் ரசிகர்கள் இருக்கை) உலகின் பெரிய ஸ்டேடியமாக இருந்தது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 50 சதவீதம் அளவுக்கே ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் 55 ஆயிரம் ரசிகர்கள் வரை போட்டியை நேரில் கண்டுகளிப்பார்கள்.

    ஸ்டேடியம் சீரமைப்புக்கு முன்பாக இங்கு நடந்துள்ள 12 டெஸ்டுகளில் இந்தியா 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் 6-ல் டிராவும் கண்டுள்ளது. கடைசியாக 2012-ம் ஆண்டு நடந்த டெஸ்டில் இந்தியா புஜாராவின் இரட்டை சதத்தின் உதவியோடு 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

    பிங்க் பந்து டெஸ்டில் இரு அணிகளும் பெரிய அளவில் சாதித்ததில்லை. இந்திய அணி இதுவரை இரண்டு பகல்-இரவு டெஸ்டில் விளையாடி ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. இங்கிலாந்து அணி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

    இந்திய அணி தனது கடைசி பகல்-இரவு டெஸ்டில் 36 ரன்னில் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) சுருண்டதும், இங்கிலாந்து 56 ரன்னில் ஆல்-அவுட் ஆனதும் (நியூசிலாந்துக்கு எதிராக) குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதனால் யாருடைய கை ஓங்கும், தொடரில் முன்னிலை பெறப்போவது யார்? என்பதை கணிப்பது சிரமம். டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இ்ந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், பும்ரா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் அல்லது முகமது சிராஜ்.

    இங்கிலாந்து: டாம் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், பென் போக்ஸ், டாம் பெஸ் அல்லது கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச்.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    விஜய் ஹசாரே டிராபியில் ஷ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா சதம் விளாச மும்பை மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.
    விஜய் ஹசாரே டிராபியில் இன்று 10 ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் மும்பை - மகாராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் விளையாடிய மகாராஷ்ரா அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் விளாசியது. அந்த அணியின் யாஷ் நஹார் (119), அசிம் காஜி (104) சதம் விளாசினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    பின்னர் 280 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் யாஷவி ஜெய்ஸ்வால் 40 ரன்களும், பிரித்வி ஷா 34 ரன்களும் அடித்தனர்.

    அதன்பின் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 99 பந்தில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க மும்பை அணி 47.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் டெல்லி - புதுச்சேரி அணிகள் மோதின. டெல்லி அணியின் துருவ் ஷோரே 132 ரன்களும், நிதிஷ் ராணா 137 ரன்களும் விளாச 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.

    பின்னர் 355 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் புதுச்சேரி அணி களம் இறங்கியது. டெல்லி அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 175 ரன்னில் சுருண்டது. இதனால் 179 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

    ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாச்தில் இமாச்சல பிரதேசம் அணியும், அருணாச்சல பிரதேசம் அணியை அசாம் 5 விக்கெட்டிலும், மிசோரமை நாகலாந்து 29 ரன்னிலும், சிக்கிமை மேகாலயா 88 ரன்னிலும், மணிப்பூரை 7 விக்கெட்டில் உத்தரகாண்டும், ஹரியானாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவும், சர்வீசஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீர் அணியும், பெங்காலை சண்டிகர் அணியும் வீழ்த்தின.
    வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜுர் ரஹ்மான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ஐபிஎல் ஏலத்தில் முஷ்டாபிஜுர் ரஹ்மானை ஒரு கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடர் ஏப்ரல்- மே- ஜூன் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கையுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    இலங்கை அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும்படி தெரிவித்தால் கட்டாயம் நாட்டிற்காக விளையாடுவேன் என முஷ்டாபிஜுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முஷ்டாபிஜுர் ரஹ்மான் கூறுகையில் ‘‘வங்காளதேச கிரிக்கெட் போர்டு என விரும்புகிறதோ, அதை நான் செய்வேன். அவர்கள் என்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட கேட்டுக்கொண்டால், நான் கட்டாயம் விளையாடுவேன். அவர்கள் என்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டாம் என்று விரும்பினால், அதன்பின் நான் என்ன செய்வேன் என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய முதல் முன்னுரிமை நாட்டிற்காகத்ததான் இருக்கும்’’ என்றார்.
    இங்கிலாந்து அணி எப்படி இருக்கிறது என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. எங்கள் அணி மீதுதான் கவனம் செலுத்துவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நாளை அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு பந்து (Pink Ball) பயன்படுத்தப்படுகிறது.

    இளஞ்சிவப்பு பந்து மாலை நேரத்தில் மிக அதிகமான அளவில் ஸ்விங் ஆகும். இங்கிலாந்து பந்து வீச்சாளர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர்கள்.

    இந்தியா அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டது. அந்த போட்டியும் பிங்க்-பாலில் நடைபெற்றதுதான். இதனால் இந்தியா சமாளிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.

    ஆனால் பிங்க் பால், எதிரணி பற்றி கவலை இல்லை. பிங்க் பால் போட்டி குறித்து நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி இதுகுறித்து கூறுகையில் ‘‘முதல் செசனில் பந்து பேட்டிற்கு சிறந்த முறையில் வரும். அதேவேளையில் பந்தை பார்ப்பது கடினம் என உணர்ந்துள்ளோம். லைட் போட்டபின் முதல் செசனில் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். பேட்ஸ்மேன் அதற்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொள்வது அவசியம். அதன்பின் மீண்டும் பேட்ஸ்மேன் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

    எங்களுடைய கவனம் முழுவதும் எங்களுடைய அணியின் மீதே இருக்கும். இங்கிலாந்து அணியின் பலம் மற்றும் பலவீனம் பற்றி நான் ஒருபோதும் கவலை அடைந்தது கிடையாது.

    பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் அவர்களுடைய சொந்த மண்ணில் நாங்கள் அவர்களை வீழ்த்தியுள்ளோம். ஒரு அணியாக சிறப்பாக விளையாட வேண்டும். இங்கிலாந்து அணியில் பலவீனம் இருக்கலாம். ஆனால், அவர்களை நாங்கள் வீழ்த்துவதில் ஆர்வமாக உள்ளோம்’’ என்றார்.
    உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் முதல் சர்வதேச போட்டியாக நாளை இந்தியா - இங்கிலாந்து இடையிலான போட்டி நடக்க இருக்கிறது.
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெறுகிறது. சீரமைக்கப்பட்ட ஸ்டேடியத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டிகள் நாளை தொடங்குகிறது.

    இந்த மைதானத்தை பற்றிய சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

    * அகமதாபாத் சபர்மதி நதியின் கரையில் அமைந்துள்ள இந்த மைதானம் 1982-ம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் உலகிலேயே மிகப்பெரிய மைதானமாக அதை மாற்றுவதற்கு 2015-ல் முடிவு செய்யப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் 2020 பிப்ரவரியில் நிறைவடைந்தன.

    * முதலில் 40 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருந்த இந்த ஸ்டேடியம் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் கட்டப்பட்டது. இதன் மூலம் 90 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட மெல்போர்ன் மைதானத்தை முறியடித்து உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மாறியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 55 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    * இந்த ஸ்டேடியத்தில் தலா 25 பேர் வசதியாக அமரக்கூடிய 76 கார்ப்பரேட் பாக்ஸ்களும் உள்ளன. இது நவீன வசதிகளை கொண்டது.

    * 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மைதானத்துக்கு நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன.

    * உலகிலேயே வேறு எந்த மைதானத்திலும் இல்லாத வகையில் இங்கு வீரர்களுக்காக 4 டிரஸ்சிங் ரூம்கள் உள்ளன. அதில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

    * பிரதான மைதானத்தின் ஆட்டத்துக்கு பயன்படுத்தும் வகையில் 11 ஆடுகளங்கள் (பிட்ச்) உள்ளன. வேறு எந்த மைதானத்திலும் இல்லாத வகையில் மைய ஆடுகளங்களில் பயன்படுத்தப்படும் மண்ணே பயிற்சி ஆடுகளத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

    * பிரதான மைதானம் தவிர பயிற்சிக்கு என தனியே 2 மைதானங்கள் உள்ளன. அவை சிறிய பெவிலியனுடன் கூடியதாகும்.

    * இதுதவிர பயிற்சிக்கு என தனியே 9 ஆடுகளங்கள் உள்ளன. இதில் 6 ஆடுகளங்கள் உள் அரங்கிலும், 3 ஆடுகளங்கள் வெளியிலும அமைந்து உள்ளன. உள் அரங்கு ஆடுகளங்களில் பேட்டிங் பயிற்சிக்காக பந்து வீசும் தானியங்கி பவுலிங் எந்திரங்கள் உள்ளன.

    * மற்ற ஸ்டேடியங்களில் இல்லாத வகையில் மழை நீரை எளிதாக வெளியேற்றும் வசதிகள் இங்கு உள்ளன. ஆட்டத்தின் போது 8 செ.மீ அளவுக்கு மழை இருந்தாலும் நீரை விரைவாக வெளியேற்றி ஆட்டம் ரத்தாகாமல் மீண்டும் தொடங்க வகை செய்யப்பட்டுள்ளது.

    மொதேரா கிரிக்கெட் மைதானம்

    * பிரமாண்ட விளக்கு கம்பங்களுக்கு பதிலாக மைதானத்தின் மேற்கூரை விளிம்புகளில் வட்ட வடிவில் எல்.இ.டி. பிளாட் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    * இந்த மைதான வளாகத்தில் 40 பேர் தங்கும் வசதியுடன் கூடிய உள் அரங்கு கிரிக்கெட் பயிற்சி அகாடமி உள்ளது.

    * மிக முக்கிய நபர்கள் தங்கும் வகையில் 5 சூட்கள், 50 டீலக்ஸ் அறைகளுடன் கூடிய கிளப் ஹவுஸ் இதில் உள்ளது.

    * பிரமாண்ட உணவகம், மினி 3டி திரையரங்கம், மிகப்பெரிய நீச்சல்குளம், ஸ்குவாஷ் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட வசதிகளும் இங்கு உள்ளது.
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, நாளை இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் களம் இறங்கும்போது, 100-வது டெஸ்டில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இஷாந்த் சர்மா. 32 வயதான இவர் 99 டெஸ்டில் விளையாடி உள்ளார். 302 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 74 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும்.

    இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டி இஷாந்த் சர்மாவுக்கு 100-வது போட்டி ஆகும். அதுவும் உலகின் மிகப்பெரிய மைதானத்தில் அவர் தனது 100-வது டெஸ்டில் விளையாடுகிறார்.

    இந்த மைல் கல்லை எட்டும் 11-வது இந்திய வீரர் இஷாந்த் சர்மா ஆவார். பந்து வீச்சாளர்களில் 4-வது வீரர் என்ற பெருமையை பெறுகிறார். மேலும், வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது வீரராக இடம் பிடிக்கிறார். கபில் தேவ்-க்குப்பிறகு 100 டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர் இவர்தான்

    காயத்தால் அணியில் இருந்து வெளியேற்றம், சிறப்பாக பந்து வீசவில்லை என அணியில் இருந்து வெளியேற்றம் ஆகிய சோதனைகளை கடந்த இந்த இமாலய சாதனைய எட்ட இருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் இஷாந்த் சர்மாவுக்குப் பிறகு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அரிதான செயலாக பார்க்கப்படுகிறது.

    தெண்டுல்கர் 200 டெஸ்டில் விளையாடி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ராகுல் டிராவிட் (163 டெஸ்ட்), வி.வி.எஸ். லட்சுமணன் (134), அணில் கும்ப்ளே (132), கபில் தேவ் (131), கவாஸ்கர் (125), துலீப் வெங்சர்கார் (116), கங்குலி (113), ஹர்பஜன் சிங் (103), ஷேவாக் (103) ஆகியோர் உள்ளனர்.

    100-வது டெஸ்டில் களம் காண இருக்கும் 32 வயதான இஷாந்த் ஷர்மா கூறியதாவது:-

    என்னை அதிகம் புரிந்து கொண்ட கேப்டன் யார்? என்று குறிப்பிட்டு சொல்வது கடினமானதாகும். எனக்கு கேப்டனாக இருந்த எல்லோருமே என்னை நன்கு புரிந்து செயல்பட்டு இருக்கிறார்கள். கேப்டன் நம்மை புரிந்து கொள்வதை விட கேப்டன் என்ன நினைக்கிறார், நம்மிடம் இருந்து எத்தகைய செயல்பாட்டை எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்து செயல்பட வேண்டியது எப்பொழுதும் மிகவும் முக்கியமானதாகும்.

    ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதது 100 டெஸ்ட் போட்டி இலக்கை விரைவாக எட்ட உதவியதா? என்று கேட்கிறீர்கள். இதனை நான் கெட்டதிலும் நல்லது என்றுதான் பார்க்கிறேன். குறுகிய வடிவிலான போட்டியில் நான் விளையாட விரும்பவில்லை என்று சொல்லமாட்டேன். எந்த வகையிலான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ? அதில் சிறப்பாக செயல்பட பயிற்சி எடுப்பதுதான் விளையாட்டு வீரரின் பணியாகும். குறுகிய வடிவிலான போட்டியில் ஆடாததை நினைத்து எனது டெஸ்ட் போட்டியில் பாதிப்பை ஏற்படுத்த விரும்பமாட்டேன். ஒரு வடிவிலான போட்டியிலாவது விளையாட வாய்ப்பு கிடைப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    மற்ற விஷயங்கள் குறித்து அதிகம் சிந்திக்காமல் டெஸ்ட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தியது 100-வது டெஸ்டை எட்ட உதவி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். மூன்று வடிவிலான போட்டியிலும் விளையாடி இருந்தால் 100-வது டெஸ்ட் இலக்கை எட்டி இருக்க முடியாது என்று சொல்லமாட்டேன். ஆனால் இந்த இலக்கை எட்ட அதிக காலம் பிடித்து இருக்கலாம்.

    131 டெஸ்டில் விளையாடி இருக்கும் கபில்தேவின் சாதனையை கடப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும். தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவது குறித்து மட்டுமே சிந்திக்க நினைக்கிறேன். எனது தனிப்பட்ட சாதனையை காட்டிலும் அணியின் வெற்றிக்குதான் முக்கியத்துவம் அளிப்பேன்.

    உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றால் ஒருநாள் உலக கோப்பையை வென்றது போன்ற மகிழ்ச்சியை அடைவேன். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் போல் 38 வயது வரை விளையாடுவேனா? என்று சொல்ல முடியாது. ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அடுத்து என்ன வரும் என்பது யாருக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2013-ம் ஆண்டுக்கு பிறகு 20 ஓவர் அணியிலும், 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் அணியிலும் அவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது.

    3-வது மற்றும் கடைசி போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொதேராவில் நடக்கிறது. 3-வது டெஸ்ட் நாளைமறுதினம் தொடங்குகிறது. கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியா தொடரின்போது காயம் அடைந்த உமேஷ் யாதவ் அணியில் இடம்பிடித்தார். 3-வது போட்டிக்குள் உடற்தகுதியை நிரூபித்தால் 3-வது போட்டிக்கான அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று உமேஷ் யாதவ் உடற்தகுதியை நிரூபிக்க, இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
    விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணி 176 ரன்னில் ஆல்அவுட் ஆக, ஆந்திரா 29.1 ஒவரிலேயே சேஸிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு- ஆந்திரா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியால் 176 ரன்களே அடிக்க முடிந்தது. 41.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடியது. அதிகபட்சமாக அபரஜித் 62 பந்தில் 40 ரன்கள் அடித்தார். ஆந்திரா அணியில் ஸ்டீபன், சோயிப் முகமது கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆந்திரா அணி களம் இறங்கியதுது. தொடக்க வீரர் அஷ்வின் கெப்பர் ஆட்டமிழக்காமல் 84 பந்தில் 101 ரன்கள் விளாசி ஆந்திரா 29.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரனா ஹர்திக் பாண்ட்யா, தனது மகனுடன் குளியல் போடும் க்யூட் போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இங்கிலாந்து எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். காயத்திற்கு பின் ஹர்திக் பாண்ட்யா இன்னும் முழுமையாக பந்து வீச்சில் ஈடுபடவில்லை.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதேரா பட்டேல் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்கள் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருந்தாலும், குடும்பத்தினருடன் தங்குவதற்கு அனுமதி அளித்துள்ளனர். ஹர்திக் பாண்ட்யா, அவரது மகனுடன் உல்லாசமாக குளியல் போடும் க்யூட் போட்டோவை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.
    நியூசிலாந்து வீரர் கான்வே 59 பந்தில் 99 ரன்கள் விளாச, இஷ் சோதி 4 விக்கெட் வீழ்த்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.
    நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் (0), செய்ஃபெர்ட் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 12 ரன்னில் வெளியேறினார். இதனால் 19 ரன்கள் எடுப்பதற்குள் நியூசிலாந்து 3 விக்கெட்டை இழந்தது.

    அதன்பின் வந்த தேவன் கான்வே ஆட்டமிழக்காமல் 59 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் விளாச நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. டேனில் சாம்ஸ், ஜய் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    99 ரன்கள் விளாசிய தேவன் கான்வே

    பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் ரன்கள் குவிக்க இயலவில்லை.

    தொடக்க வீரர் மேத்யூ வடே 12 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 1 ரன்னிலும், ஜோஷ் பிலிப்ஸ் 2 ரன்னிலும் வெளியேறினர்.

    மிட்செல் மார்ஷ் 33 பந்தில் 45 ரன்கள் விளாசினார். அதன்பின் வந்த கிளென் மேக்ஸ்வெல் 1 ரன்னிலும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 8 ரன்னிலும் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலியா 17.3 ஓவரில் 131 ரன்னில் ஆல்அவுட் ஆனது,

    இதனால் நியூசிலாந்து 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் இஷ் சோதி 4 விக்கெட்டும் டிம் சவுத்தி மற்றும் டிரென்ட் போல்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    கேரளா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசந்த், உத்தர பிரதேசம் அணிக்கெதிராக ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    கேரள மாநிலத்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த். இவர் இந்திய அணிக்காக விளையாடியவர். ஐபிஎல் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஆயுட்கால தடைபெற்றார். அதன்பின் தண்டனை ஏழு ஆண்டாக குறைக்கப்பட்டது.

    தடைக்காலம் முடிந்ததும் மீண்டும் கேரள மாநில கிரிக்கெட் அணி்யில் இடம் பிடித்தார். முதன்முறையாக சையது முஷ்டாக் அலி டிராபியில் விளையாடினார்.

    தற்போது விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் கேரளா - உத்தர பிரதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் ஸ்ரீசந்த் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.

    சக்சேனா முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் அபிஷேக்கை 54 ரன்னில் வீழ்த்தினார் ஸ்ரீசந்த். 2-வது விக்கெட்டாக அக்‌ஷ்தீப் நாத்தை 68 ரன்னில் வீழ்த்தினார். 3-வது விக்கெட்டாக புவனேஷ்வர் குமாரையும், 4-வது விக்கெட்டாக மோசின் கானையும், 5-வது விக்கெட்டாக ஷிவம் சர்மாவையும் வீழ்த்தினார். இதனால் உத்தர பிரதேசம் 49.4 ஓவரில் 283 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    லிஸ்ட் ஏ போட்டியில் ஸ்ரீசந்த் 5 விக்கெட் வீழ்த்துவது இது 2-வது முறையாகும்.
    ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் ஜோகோவிச் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். இதன்மூலம் அவர் ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்தார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்தது.

    ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் உலகில் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரசியாவை சேர்ந்த 4-ம் நிலை வீரரான மெட்வதேவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

    33 வயதான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9-வது முறையாக கைப்பற்றினார். இதற்கு முன்பு 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று இருந்தார்.

    அவர் 9 முறை இறுதிப்போட்டிக்கு வந்து அனைத்திலும் பட்டம் வென்று சாதித்து உள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் தனக்கு நிகரான வீரர் யாரும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார்.

    ஜோகோவிச் கைப்பற்றிய 18-வது கிராண்ட் சிலாம் பட்டம் இதுவாகும். இதன்மூலம் அவர் முதல் இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரை நெருங்கி உள்ளார்.

    இருவரும் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று உள்ளார். அவர்கள் நிலையை அடைய ஜோகோவிச்சுக்கு இன்னும் 2 கிராண்ட்சிலாம் பட்டங்களே தேவை.

    அவர் ஆஸ்திரேலிய ஓப்பனை 9 முறையும், பிரெஞ்சு ஓபனை ஒரு தடவையும், விம்பிள்டன் பட்டத்தை 5 முறையும், அமெரிக்க ஓபனை 3 முறையும் வென்று உள்ளார்.

    ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் ஜோகோவிச் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். அவர் 311-வது வாரமாக நம்பர்-1 வரிசையில் உள்ளார்.

    இதன்மூலம் அவர் ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்தார். பெடரர் 310 வாரங்கள் டென்னிஸ் தர வரிசைப்பட்டியலில் நம்பர்ஒன் இடத்தில் இருந்தார்.

    ×