என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புஜாரா, மயங்க் அகர்வால், ரகானே, ஜடேஜா அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி நெருக்கடிக்குள்ளாகி 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 345 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது.

    49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மயங்க் அகர்வால் 4 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கினர். 

    புஜாரா 23 ரன்கள் எடுத்த நிலையிலும், மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரகானே 4 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ஜடேஜா ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் இந்தியா 51 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    நியூசிலாந்து வீரர்கள்

    6-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

    இந்தியா 4-வது நாள் மதிய உணவு இடைவேளை 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களுடனும், அஸ்வின் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    ஹூஸ்டனில் நடைபெற்று வரும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை இரண்டு பிரிவுகளில் காலிறுதியோடு வெளியேறினார்.
    ஹூஸ்டனில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா கலப்பு இரட்டையர், பெண்கள் இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டார்.

    கலப்பு இரட்டையர் பிரிவில் பத்ரா, ஜி. சத்தியன் உடன் இணைந்து காலிறுதியில் ஜப்பான் ஜோடியை எதிர்கொண்டார். இதில் பத்ரா ஜோடி 1-3 எனத் தோல்வியடைந்து வெளியேறியது.

    பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் அர்ச்சனா கமத் உடன் இணைந்து விளையாடினார். இதில் 0-3 எனத் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.
    ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி இந்தோனேசிய ஜோடியிடம் தோற்று ஏமாற்றம் அளித்தது.
    பாலி:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியனும், 8-ம் நிலை வீராங்கனையுமான ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்தித்தார். 

    இதில், பி.வி.சிந்து 21-15, 9-21, 14-21 என்ற செட் கணக்கில் ராட்சனோக்கிடம் வீழ்ந்து தோல்வியைச் சந்தித்தார்.

    சமீபத்தில் நடந்த இந்தோனேசியா மாஸ்டர்ஸ், பிரெஞ்சு ஓபன் போட்டியிலும் பி.வி.சிந்து அரையிறுதியில் தோற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் அடிலைட் ஸ்டிரைகர்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்.
    பெர்த்:

    ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி நேற்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், அடிலைட் ஸ்டிரைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற அடிலைட் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டிவைன் 35 ரன்னும், காப் 32 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலைட் அணி களம் இறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தானின் ஹசன் அலி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
    சட்டோகிராம்:

    பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3  டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் பாகிஸ்தான் 3-0 என வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேசம் முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் 113 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. லிட்டன் தாஸ் 114 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 91 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 330 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 

    பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 5 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி, பஹீம் அஷ்ரப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபித் அலி, அப்துல்லா ஷபிக் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தைக் கடைப்பிடித்து அரை சதமடித்தனர்.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 145 ரன்கள் எடுத்துள்ளது. அபித் அலி 93 ரன்னும், ஷபிக் 52 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    முதல் இரண்டு போட்டிகளில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய துணை கேப்டன சஞ்சய், இன்றைய ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்தார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் போலந்து அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர்கள் துவக்கம் முதலே எதிரணிக்கு வாய்ப்பு கொடுக்காமல் கோல் அடித்தனர். இறுதியில் 8-2 என்ற கோல்கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    முதல் இரண்டு போட்டிகளில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய துணை கேப்டன சஞ்சய், இன்றைய ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்தார். ஹூண்டால் 2 கோல்களும், சிர்மாகோ 2 கோல்களும், உத்தம் சிங், சர்தானந்த் திவாரி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

    இந்திய வீரர்கள்

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பெல்ஜியம் அணியுடன் மோத உள்ளது.
    ஆப்பிரிக்காவில் பரவியுள்ள புதிய மாறுபாடு கொரோனா காரணமாக இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் திட்டமிட்ட படி இருக்குமா? என்பது பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.
    மும்பை:

    தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வீரியமிக்க ஓமைக்ரான் ரக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என சொல்லப்படுகிறது. 

    உலக சுகாதார அமைப்பும் இந்த வகை கொரோனாவை கவலைக்குரிய திரிபாக வரிசைப்படுத்தியுள்ளது.  தென் ஆப்பிரிக்காவை தவிர்த்து  ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது.  புதிய வகை கொரோனா பரவலால் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை  சர்வதேச நாடுகள் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளன. 

    இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் பரவியுள்ள புதிய மாறுபாடு கொரோனா காரணமாக இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் திட்டமிட்ட படி இருக்குமா? என்பது பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. 

    இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாகூர், “தென் ஆப்பிரிக்கத் தொடர் ரத்தாகுமா என்பதை இப்போதே கூற இயலாது. ஆனால், இந்திய அணியைத் தென் ஆப்பிரிக்கா அனுப்பும் முன் பிசிசிஐ மத்திய அரசிடம் ஆலோசித்து அனுமதி பெற்றே அனுப்ப வேண்டும். 

    ஏனென்றால் தென் ஆப்பிரிக்காவில்தான் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. எங்கு கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறதோ அங்கு இந்திய அணியை விளையாட அனுப்புவது சரியான முடிவாக இருக்காது. பிசிசிஐ ஆலோசிக்கும்போது, இதுபற்றி விரிவாகப் பேசுவோம்” என்றார்.
    ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பல்வேறு நாடுகள் விமான சேவையை துண்டித்துள்ளன.
    துபாய்:

    தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

    தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் போத்ஸ்வானா, ஆங்காங், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை துண்டித்துள்ளன. போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. 

    ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால், ஜிம்பாப்வேயில் நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அத்துடன், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் தரவரிசை அடிப்படையில் உலகக் கோப்பையில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டன.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 4ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நியூசிலாந்தில் நடைபெறுகிறது.
    இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    கான்பூர்:

    இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய  நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில்  57 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் வில் யங் 75 ரன்களுடனும், டாம் லாதம் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வில் யங் 89 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்களில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லாதம் 95 ரன்களில் அக்சர் வேகத்தில் வெளியேற, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டினை இழந்து வெளியேறினர். 

    கடைசியாக நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
    இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது.
    கான்பூர்:

    இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் அறிமுக டெஸ்ட்டிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 105 ரன்கள் எடுத்த நிலையில் சவுதி பந்தில் வெளியேறினார். சுப்மன் கில் 52 ரன்களும், ஜடேஜா 50 ரன்களும், அஸ்வின் 38 ரன்களும் எடுத்தனர். 

    இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய  நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில்  57 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் வில் யங் 75 ரன்களுடனும், டாம் லாதம் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வில் யங் 89 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்களில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இன்று உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 85.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்துள்ளது. 
    கவாஸ்கர் அறிமுக டெஸ்டுக்கான தொப்பியை எனக்கு வழங்கினார். அவர் எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தார் என ஷ்ரேயாஸ் அய்யர் கூறியுள்ளார்.

    கான்பூர்:

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5-வது வீரராக களம் இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் மிகவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 171 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அவர் 105 ரன்கள் எடுத்தார்.

    26 வயதான ஷ்ரேயாஸ் அய்யர் 2017-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் அவருக்கு டெஸ்டில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் டெஸ்டிலேயே அவர் சதம் அடித்து முத்திரை பதித்தார்.

    அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்த 16-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் அய்யர் பெற்றார். சர்வதேச அளவில் முதல் டெஸ்டில் சதம் அடித்த 112-வது வீரர் ஆவார்.

    அறிமுக டெஸ்டில் சதம் அடித்தது குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல் டெஸ்டிலேயே சதம் அடித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. என் வாழ்நாளில் இது மிகப்பெரிய சாதனையாகும். முதல் நாளில் இருந்தே நடந்த அனைத்திற்கும் சந்தோசமாக உள்ளேன்.

    கவாஸ்கர் அறிமுக டெஸ்டுக்கான தொப்பியை எனக்கு வழங்கினார். அவர் எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தார். சதம் அடித்தது மனதிற்கு மிகவும் மன நிறைவை தந்தது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் டிசம்பர் 17-ந் தேதி தொடங்குகிறது.
    கான்பூர்:

    தென்ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது அதிக வீரியத்துடன், வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அங்கு செல்வதற்கு கடும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. புதிய வகை வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக தென்ஆப்பிரிக்காவில் விளையாட்டு போட்டிகள் வெகுவாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதலாவது ஒரு நாள் போட்டியில் நேற்று விளையாடிய நெதர்லாந்து கிரிக்கெட் அணி எஞ்சிய இரு போட்டிகளை ரத்து செய்து விட்டு தாயகம் திரும்ப உத்தேசித்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. வைரஸ் மிரட்டல் காரணமாக இந்திய அணி அங்கு செல்லுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘அங்குள்ள அடிப்படை சூழ்நிலை என்ன என்பது பற்றிய தெளிவான விவரங்களை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளோம். அது கிடைக்காத வரை அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதுவும் சொல்ல முடியாது. தற்போதைய திட்டத்தின்படி இந்திய அணி நியூசிலாந்து தொடர் முடிந்து டிசம்பர் 8 அல்லது 9-ந்தேதி தென்ஆப்பிரிக்காவுக்கு புறப்பட வேண்டும்’ என்றார்.

    போட்டி அட்டவணைப்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் டிசம்பர் 17-ந் தேதி தொடங்குகிறது. ஆனால் வடக்கு தென்ஆப்பிரிக்காவில் தான் புதிய வகை வைரஸ் தொற்று காணப்படுகிறது. அதனால் ஜோகன்னஸ்பர்க், செஞ்சூரியன் ஆகிய இரு மைதானங்களில் நடக்க உள்ள போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படலாம். அடுத்து வரும் நாட்களில் நிலைமையை பொறுத்து, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தொடர் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவு எடுக்கும். தற்போது இந்திய ஏ அணி தென்ஆப்பிரிக்காவில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
    ×