என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய வீரர் ராஜ் பாவா அதிரடியாக விளையாடி 14 பவுண்டரி, 8 சிக்சருடன் 162 ரன்களை குவித்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
    டிரினிடாட்:

    16 அணிகள் பங்கேற்றுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. பி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்திய அணி புதுமுக அணியான உகாண்டாவுடன் மோதியது. டாஸ் வென்ற உகாண்டா பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரகுவன்சி 144 ரன்களை குவித்தார். மற்றொரு வீரர் ராஜ் பாவா அதிரடியாக விளையாடி 14 பவுண்டரி, 8 சிக்சருடன் 162 ரன்களை குவித்தார்.  இறுதியில் இந்திய அணி 50  ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்களை குவித்தது. 

    இதையடுத்து 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி உகாண்டா அணி களமிறங்கி விளையாடியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து  விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.  கேப்டன் பஸ்கல் முருன்கி அதிகபட்சமாக 34 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.   

    முடிவில் உகாண்டா 19.4 ஓவர்களில் 79 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இதன் மூலம் இந்திய அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்திய அணி தரப்பில் கேப்டன் நிஷாந்த் சிந்து அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 162 ரன்கள் குவித்த ராஜ் பவா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். 
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இதுவரை 5 வெற்றிகளைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
    கோவா:

    8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி., நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் நார்த்ஈஸ்ட் அணியினர் ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியில் 52 மற்றும் 58வது நிமிடங்களில் சென்னை அணி வீரர்கள் கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கணக்கில் நார்த்ஈஸ்ட் அணியை வீழ்த்தி 5-வது வெற்றி பெற்றது.

    சென்னையின் எப்.சி. அணி தான் ஆடிய 12 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி, 3 டிரா என மொத்தம் 18 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
    நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரு அணிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15-வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ. தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தாண்டு புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அறிமுகமாகின்றன. ஐ.பி.எல். போட்டிகளை இந்தியாவில் நடத்தவே விரும்புவதாக ஐபிஎல் அணி உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    எனவே, இந்தியாவில் நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடரை நடத்துவதில் தான் உறுதியாக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    ரசிகர்கள் இல்லாமல் மும்பையில் மட்டும் போட்டிகளை நடத்தலாம் என தகவல்கள் வெளியாகின.

    பிக்பாஷ் லீக் தொடரில் நாளை நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் சிட்னி தண்டர் மற்றும் அடிலைட் ஸ்டிரைகர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    மெல்போர்ன்:

    பிக்பாஷ் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெர்த் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஷ் இங்லிஸ் 79 ரன்னும், குர்திஸ் பாட்டர்சன் 64 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி அணி களமிறங்கியது. பெர்த் அணியினரின் பந்துவீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    அந்த அணியின் பென் டுவார்சிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 29 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 66 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை. இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பெர்த் அணி சார்பில் ஜே ரிச்சர்ட்சன், ஜெசன் பெஹ்ரண்டாப், ஆஷ்டன் ஆகர் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் பெர்த் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பெர்த் அணியின் ஜோஷ் இங்லிஸ் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு ரபேல் நடால் மற்றும் ஸ்வரேவ் ஆகியோர் ஏற்கனவே முன்னேறியுள்ளனர்.
    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற்றது. இதில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் நெதர்லாந்தின் வான் டே சான்ட்சல்புடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 
     
    இதேபோல், மற்றொரு போட்டியில் இத்தாலி வீரர் ஜானி சின்னர் ஜப்பானின் டாரோ டேனியலுடன் மோதினார். இதில் சின்னர் 6-4, 1-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்றார்.
    அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்ட்யாவுக்கு, மும்பை இந்தியன்ஸ் ‘குட் லக்’ சொல்லி வழியனுப்பியுள்ளது.
    ஐ.பி.எல். 2022 சீசனில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் முதலில் இருந்து ஏலம் விடப்பட இருக்கிறார்கள். ஒவ்வொரு அணிகளும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    மற்ற வீரர்களை வெளியேற்றி பொது ஏலம் மூலம் எடுக்க வேண்டும். அதன்படி நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யா அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்காக அந்த அணி 15 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.

    ஹர்திக் பாண்ட்யா

    மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் ஒரே குடும்பமாக விளையாடி வந்தார்கள். தற்போது அந்த குடும்பத்தில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். இருந்தாலும், ‘குட் லக்’ என மும்பை இந்தியன்ஸ் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும், உங்களை மறுபக்கத்தில் சந்திப்போம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஹாலெப், கோலின்ஸ் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. 3-வது வரிசையில் உள்ள ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹாலெப் இன்று காலை நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் மாண்டர்கோ நாட்டை சேர்ந்த டாங்காகோவிநிச்சை எதிர்கொண்டார். இதில் ஹாலெப் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    அவர் 4-வது சுற்றில் பிரான்சை சேர்ந்த அலிசிகோர்நெட்டை எதிர்கொள்கிறார். கோர்நெட் 3-வது சுற்றில் 4-6, 6-4, 6-2 என்ற கணக்கில் தமரா ஷிடன்செக்கை (சுலோவேனியா) வீழ்த்தினார்.

    கோலின்ஸ்

    27-வது வரிசையில் உள்ள கோலின்ஸ் (அமெரிக்கா) 4-6, 6-4, 7-5 என்ற கணக்கில் கிளாராவை (டென்மார்க்) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் 19-வது வரிசையில் உள்ள மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கனேபி (எஸ்டோனியா) ஆகியோர் வெற்றிபெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
    முன்னணி வீரர்களான கிறிஸ் கெய்ல், ஸ்டார்க், ஆர்ச்சர் ஆகியோர் ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இடம்பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான வீரர்கள் தக்கவைப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. அதன்படி 8 அணிகளும் 27 வீரர்களை தக்கவைத்துக் கொண்டது.

    புதிய அணிகளான லக்னோ, அகமதாபாத் ஆகியவை தக்கவைத்துக் கொண்டுள்ள வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் நேற்று வெளியானது. லக்னோ அணியில் லோகேஷ் ராகுல் (ரூ.17 கோடி), ஸ்டோய்னிஸ் (ரூ.9.2 கோடி), பிஷ்னோய் (ரூ.4 கோடி) ஆகியோரும், அகமதாபாத் அணியில் ஹர்த்திக் பாண்ட்யா, ரஷித் கான் தலா (ரூ.15 கோடி), சுப்மன் கில் (ரூ.8 கோடி) ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் ராகுல் லக்னோ அணிக்கும், ஹர்த்திக் பாண்ட்யா அகமதாபாத் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13-ந்தேதிகளில் நடைபெறுகிறது. ஐ.பி.எல். ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் இன்று வெளியானது.

    270 சர்வதேச வீரர்கள், 312 புதுமுக வீரர்கள், அசோசியேட் நாடுகளை சேர்ந்த 41 வீரர்கள் உள்பட மொத்தம் 1,214 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் இருந்து இறுதி பட்டியல் முடிவு செய்யப்படும். ஐ.பி.எல். ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலை ரூ.2 கோடியாகும். இதற்கான பட்டியலில் 49 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    20 ஓவர் உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதை பெற்ற வார்னர், மிச்சேல் மார்ஷ் (ஆஸ்திரேலியா), அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர், தவான், இஷான் கி‌ஷன், ரெய்னா, படிக்கல், அம்பதி ராயுடு, முகமது ‌ஷமி, ‌ஷர்துல் தாகூர், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களுக்கு ரூ.2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஸ்டீவ் சுமித், கம்மின்ஸ், ஆடம் சம்பா (ஆஸ்திரேலியா), டு பிலிஸ்சிஸ், குயிண்டன் டி காக், ரபடா (தென் ஆப்பிரிக்கா), பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), பவுல்ட் (நியூசிலாந்து), மார்க்வுட் (இங்கிலாந்து), சாஹிப்-அல்-ஹசன் (வங்காள தேசம்) ஆகிய வீரர்களுக்கும் அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 17 இந்திய வீரர்களுக்கும், 32 வெளிநாட்டு வீரர்களுக்கும் அடிப்படை விலை ரூ.2 கோடி ஆகும்.

    ஐ.பி.எல். போட்டியில் அதிரடி வீரரான வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் ஏலப்பட்டியலில் இடம்பெறவில்லை. ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் கரண் (இங்கிலாந்து) ஆகிய வீரர்களும் ஐ.பி.எல். போட்டியில் ஆடவில்லை.

    10 அணிகளும் இதுவரை 33 வீரர்களுக்காக ரூ.338 கோடியை செலவழித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    பும்ரா, புவனேஸ்வர் குமார், அஸ்வின் ஆகியோருக்கு அடுத்த போட்டியில் ஓய்வு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் காம்பீர் கூறியுள்ளார்.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கடைசி ஒருநாள் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர் காம்பீர் கூறியதாவது:-

    பும்ரா, புவனேஸ்வர் குமார், அஸ்வின் ஆகியோருக்கு அடுத்த போட்டியில் ஓய்வு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுன் நகரில் நாளை நடைபெறுகிறது.
    பார்ல்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது. 

    பார்ல் நகரில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்தது. 

    ரிஷப்பண்ட் 71 பந்தில் 85 ரன்னும் (10 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் லோகேஷ் ராகுல் 55 ரன்னும், ஷர்துல் தாகூர் 38 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். 

    பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

    தொடக்க வீரர்களான மலான் 91 ரன்னும், குயின்டன் டிகாக் 66 பந்தில் 78 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே முதல் ஆட்டத்தில் அந்த அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது-. இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்திருந்தது. தற்போது ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. 

    இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் தற்காலிக கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்க அணி அதன் சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்கள் உள்ளூரில் நன்றாக ஆடினார்கள் என்று நினைக்கிறேன். மிடில் ஓவரில் நாங்கள் தவறு செய்தோம். 

    தென் ஆப்பிரிக்காவிடம் ஏற்பட்ட தோல்வி மூலம் நாங்கள் நன்றாக பாடம் கற்றுக்கொண்டோம். முதல் போட்டியில் தவானும், விராட் கோலியும் நன்றாக ஆடினார்கள். 2-வது போட்டியில் ரிஷப்பண்ட் சிறப்பாக ஆடினார். ஷர்துல் தாகூர் எங்கள் அணிக்கு முக்கியமானவர். 

    3-வது ஒருநாள் போட்டியில் நாங்கள் வெற்றிபெற கடுமையாக போராடுவோம். வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம்.

    இவ்வாறு ராகுல் கூறியுள்ளார். 

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுன் நகரில் நாளை நடக்கிறது. 

    இந்திய அணி நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதும் தோல்விக்கான காரணம் என்றும் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் குறிப்பிட்டுள்ளார்.
    பார்ல்: 

    இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டி நிறைவுக்கு பின்னர் பேட்டியளித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தெரிவித்திருப்பதாவது:

    கடந்த போட்டியில் நாங்கள் சேஸ் செய்தோம், இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம், எனவே அவர்கள் பேட்டிங் செய்யும் போது, ​​ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சிறப்பாக இருந்தது.  அவர்கள் மிடில் ஓவர்களில் நன்றாக பேட்டிங் செய்தார்கள் அதனால்தான் அவர்கள் இலக்கைத் துரத்தினார்கள். மிடில் ஓவர்களில் எங்களுக்கு போதுமான விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. அவர்கள் (தென்ஆப்பிரிக்க ஸ்பின்னர்கள்) சீரான முறையில் பந்து வீசினார்கள் என்று நான் நினைக்கிறேன், மேலும் அவர்கள் ஆட்டத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடுவதற்குப் பழகிவிட்டனர். 

    நாங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறோம்.  நீண்ட காலத்திற்கு 50 ஓவர் ஆட்டத்தில் விளையாடாததது தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு அணியாக, நாங்கள் எப்போதும் எங்கள் ஆட்டத்தை மேம்படுத்த விரும்புகிறோம், வரும் போட்டிகளில் அவற்றை சரிசெய்ய முடியும் என்று நம்புகிறோம் இவ்வாறு தமது பேட்டியின்போது ரிஷப் பண்ட் குறிப்பிட்டார்.

    இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக் 66 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    பார்ல்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பார்ல் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 287 ரன்களை எடுத்தது. ரிஷப் பண்ட் 85 ரன்னும், கே.எல்.ராகுல் 55 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 40 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மலானும், டி காக்கும் இறங்கினர்.

    தொடக்கம் முதல் டி காக் அதிரடியாக ஆடினார். இந்திய பவுலர்கள் இண்ட ஜோடியை எளிதில் பிரிக்க முடியவில்லை. இருவரும் அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த நிலையில், டி காக் 78 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மலான் 91 ரன்னில் வெளியேறினார். அப்போது தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பவுமா 35 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய மார்கிரமும், வான் டெர் டுசனும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். மார்கிராம் 37 ரன்னுடனும், வான் டெர் டுசன் 37 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 48.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.  

    ×