என் மலர்
விளையாட்டு
ரூ.12.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இதில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.
இந்த ஐ.பி.எல். போட்டிக்காக மெகா ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தின் போது ஷ்ரேயாஸ் அய்யரை கொல்கத்தா அணி ரூ.12.25 கோடிக்கு வாங்கியது. இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யரை நியமித்ததாக அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அணியின் உரிமையாளர்கள், நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஷ்ரேயாஸ் அய்யர் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஷ்ரேயாஸ் அய்யர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் ஐ.பி.எல். தொடரின் முதல் பகுதி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல். இவர் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். மேக்ஸ்வெல் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்போது இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட் போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடி வருகிறார்.
இந்தத் தொடர் முடிந்த உடன் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் சென்று விளையாடுகிறது. அதன்பின் ஐபிஎல் தொடர் வருகிறது. திருமணம் செய்ய இருப்பதால் பாகிஸ்தான் தொடர் முழுவதிலும் விளையாடுவதில்லை என மேக்ஸ்வெல் முடிவு செய்துள்ளார்.
அதேபோல் ஐ.பி.எல். தொடரில் முதல் பகுதி ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதால், மேக்ஸ்வெல் கேப்டனுக்கான போட்டியில் முன்னணியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் திருமணம் செய்ய இருப்பதால் ஆர்.சி.பி. சில போட்டிகளுக்கு வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 5-ந்தேதி முடிவடைகிறது. மார்ச் கடைசி வாரத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதனால் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், ஹேசில்வுட், மேத்யூ வடே, டேனியல் சாம்ஸ் போன்றோர் ஐ.பி.எல். தொடரின் தொடக்க போட்டிகளில் விளையாட வாய்ப்வில்லை.
இதையும் படியுங்கள்... சுரேஷ் ரெய்னாவை ஏன் வாங்கவில்லை? - சி.எஸ்.கே. தலைமை நிர்வாக அதிகாரி விளக்கம்
இலங்கை அணிக்கு எதிராக மொகாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்டாகும்.
புதுடெல்லி:
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான ஒருநாள் போட்டித்தொடர் ஏற்கனவே முடிந்துவிட்டது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் இன்று தொடங்குகிறது. 20-ந் தேதியுடன் இந்த தொடர் முடிகிறது.
அடுத்து இந்திய அணி இலங்கையுடன் விளையாடுகிறது. மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இலங்கை அணி இந்தியா வருகிறது. இந்த போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதலில் 20 ஓவர் தொடரும், பின்னர் டெஸ்ட் தொடரும் நடைபெறும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் டெஸ்ட் தொடர் முதலிலும், 20 ஓவர் தொடர் அதன்பிறகும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதல் 20 ஓவர் போட்டி வருகிற 24-ந் தேதி லக்னோவில் நடக்கிறது. அடுத்த 2 போட்டிகள் 26 மற்றும் 27-ந் தேதிகளில் தர்மசாலாவில் நடக்கிறது.
முதல் டெஸ்ட் மொகாலியில் மார்ச் 4-ந் தேதி தொடங்குகிறது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் பெங்களூரில் பகல்- இரவாக நடத்தப்படுகிறது. மார்ச் 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை இந்த டெஸ்ட் நடக்கிறது.
இது இந்தியாவில் நடைபெறும் 3-வது பகல்- இரவு டெஸ்டாகும். இதற்கு முன்பு வங்காளதேசம் (2019), இங்கிலாந்து (2021) ஆகிய அணிகள் இந்தியாவில் பகல்-இரவு போட்டியில் விளையாடி இருக்கிறது. சொந்த மண்ணில் நடந்த 2 பகல்-இரவு டெஸ்டிலும் இந்தியா வெற்றிபெற்று இருந்தது.
மொகாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்டாகும். ஏற்கனவே பல சாதனைகளை படைத்த அவர் இதன் மூலம் புதிய மைல்கல்லை எட்டுகிறார்.
100-வது டெஸ்டில் விளையாடும் 12-வது இந்திய வீரர் கோலி ஆவார். இதற்கு முன்பு தெண்டுல்கர் (200 டெஸ்ட்), ராகுல் டிராவிட் (163), வி.வி.எஸ்.லட்சுமண் (134), கும்ப்ளே (132), கபில்தேவ் (131), கவாஸ்கர் (125), வெங்சர்க்கார் (116), கங்குலி (113), இஷாந்த் சர்மா (105), ஹர்பஜன் சிங் (103), வீரேந்திர ஷேவாக் (103) ஆகியோர் 100-க்கும் மேற்பட்ட டெஸ்டில் விளையாடி இருந்தனர்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது.
கொல்கத்தா:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதித்தது.
அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி தொடர் நடத்தப்படுகிறது. ஒருநாள் போட்டித் தொடர் ஒரே இடமான அகமதாபாத்தில் நடத்தப்பட்டது போல் 20 ஓவர் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மா அறிவுறுத்தி உள்ளார்.
15-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் சமீபத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. சில வீரர்களுக்கு அதிகப்படியான விலை கொடுக்கப்பட்டது. சில வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விலை போகவில்லை.
இந்திய அணியில் உள்ள வீரர்கள் ஐ.பி.எல். ஏலம், அணிகள் குறித்து விவாதித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் ரோகித் சர்மா இதை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
12 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக ஐ.பி.எல். ஏலத்தில் என் பெயர் இருந்தது. இதனால் அந்த உணர்வுகள் எப்படி இருந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. தற்போது ஐ.பி.எல் ஏலம் 2 நாட்கள் நடந்தது.
இந்த ஏலத்தில் வீரர்களுக்கு ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு இருக்கும். இது இயற்கையானதுதான். ஐ.பி.எல். போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. தற்போது வீரர்கள் சர்வதேச போட்டிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அடுத்த 2 வாரங்களில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவதில் வீரர்களின் கவனம் இருக்க வேண்டும்.
விராட் கோலியின் ஆட்டம் குறித்து நான் கவலைப்படவில்லை. நீங்கள் (ஊடகங்கள்) சிறிது நேரம் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாக நடக்கும். கோலி 10 வருடங்களுக்கு மேலாக சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறார். அழுத்தமான தருணங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.
ரோகித் சர்மாவுடன்,இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொல்கத்தா:
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை 3- 0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது.
காயம் காரணமாக லோகேஷ் ராகுல் விலகி விட்டதால் ரோகித் சர்மாவுடன், இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடுவார் என்று தெரிகிறது.
சுழற்பந்துவீசும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் தசைப்பிடிப்பால் விலகியுள்ளால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது புதுமுக வீரர் ரவி பிஷ்னோய் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு அந்த அணி கடும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பொல்லார்ட், நிகோலஸ் பூரன், ஜாசன் ஹோல்டர், ரோமன் பவெல் அதிரடியாக ஆட கூடியவர்கள் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும்.
இதையும் படியுங்கள்...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்
மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்டன் அணி 41-31 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வென்றது
பெங்களூரு:
12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, யு மும்பா அணியை 44-28 என்ற கணக்கில் வென்றது. இதன் மூலம் அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸின் கடுமையான சவாலை முறியடித்த பாட்னா பைரேட்ஸ் அணி 36-34 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
நேற்று இரவு நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் புனேரி பல்டன் அணி 41-31 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வென்றது. இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
எது நடந்தாலும் அது அணியின் மன உறுதியைக் குலைத்து விடக் கூடாது என்று கருதி ரோகித் சர்மா சரியானதைச் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டி20 கிரிக்கெட் தொடங்கும் நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
விராட் கோலி தொடர்ந்து ஃபார்ம் இன்றி தவித்து வருவது குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், உங்களை போன்ற நபர்கள் அமைதியாக இருக்கும்போது, அவர் ஆல்ரைட்டாக இருப்பார் என நினைக்கிறேன் என கூறியிருந்தார்.
ரோகித் சர்மா பேட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான அதுல் வாசன், ஏஎன்ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.
இந்திய டிரஸ்ஸிங் ரூம் மற்றும் முகாமில் விராட் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே கருத்து மோதல் இருப்பதாக வதந்திகள் பரவி வருவதால், கோலிக்கு ஆதரவான கருத்தை ரோகித் முன்னரே சொல்லியிருக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக அவர் கூறினார்.
ஒவ்வொரு வீரருக்கும் சில சிக்கல்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். வேறு யாராவது கேப்டனாக இருக்கும்போது அவர்கள் குறைவாக செயல்படுகிறார்கள் என்று கருதிவிட கூடாது என வாசன் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் பிஷன் சிங் பேடிக்கும்-சுனில் கவாஸ்கர் இடையேயும் மற்றும் கபில்தேவ்-சுனில் கவாஸ்கர் இடையேயும் கருத்து மோதல் இருந்ததை வரலாற்று ரீதியாக நடந்தது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் குடும்பம் போல் வாழ்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். சில அருகாமைகள் அவமதிப்பை வளர்க்கின்றன, அது மிகவும் உண்மை.
ஏதாவது நடக்கலாம், ஆனால் அது அணியின் மன உறுதியைக் குலைத்துவிடக் கூடாது என்று முன் வந்துள்ளதன் மூலம் ரோகித் சரியானதைச்செய்துள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது.
இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாடி வருகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
முதல் போட்டி பெங்களூருவில் பிப்ரவரி 25-ந்தேதி முதல் மார்ச் 1-ந்தேதி வரையும், 2-வது டெஸ்ட் மொகாலியில் மார்ச் 5-ந்தேதியில் இருந்து மார்ச் 9-ந்தேதி வரையியலும், அதன்பின் மார்ச் 13 முதல் மார்ச் 18-ந்தேதி வரையில் மூன்று டி20 போட்டிகளும் அடைபெறும் வகையில் ஏற்கனவே போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு முன் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. விரைவில் ஆட்டவணை வெளியாக இருக்கிறது.
விராட் கோலி தொடர்ந்து ஃபார்ம் இன்றி தவித்து வருவது குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு ரோகித் சர்மா பதில் அளித்தார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றாலும், விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் ஒருநாள் போட்டியில் 8 ரன்களிலும், 2-வது போட்டியில் 18 ரன்களிலும், 3-வது போட்டியில் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். மூன்று போட்டிகளில் 26 ரன்களே அடித்தார். சராசரி 8.67 ஆகும். இது அவருக்கு மோசமான தொடராகும்.
விராட் கோலி இப்படியே விளையாடினால் கடும் சவால் நேரிடும். அணியில் தொடர்ந்து நீடிப்பதில் சிக்கல் ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நாளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டி20 கிரிக்கெட் தொடங்கும் நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உங்களை போன்ற நபர்கள் அமைதியாக இருக்கும்போது, அவர் ‘ஆல்ரைட்’டாக இருப்பார் என நினைக்கிறேன். உங்கள் பக்கத்தில் இருந்து நாங்கள் அதிக அளவில் பேச வேண்டியதில்லை. அப்படி இருந்தால் எல்லாவற்றையும் பற்றி பேச வேண்டிய நிலை ஏற்படும்.
நான் பார்த்த வரையிலும் அவரை சிறந்த மனநிலையுடன்தான் இருக்கிறார். 10 வருடத்திற்கு மேலாக சர்வதேச கிரிக்கெட் அணியில் ஒரு வீரராக உள்ளார். 10 வருடத்திற்கு மேல் அணியில் இருக்கும் ஒரு வீரருக்கு நெருக்கடியை எப்படி சமாளிப்பது, சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட எல்லாவற்றையும் பற்றி தெரியும். இது எல்லாம் உங்களை போன்ற நபர்களிடம் இருந்துதான் உருவாகிறது. உங்களை போன்றவர்கள் சற்று அமைதியாக இருந்தால், எல்லாம் அந்தந்த இடத்தில் சரியாக இருக்கும்’’ என்றார்.
மூன்று டி20 போட்டிகளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
இதையும் படியுங்கள்... ஐ.பி.எல். ஏலத்தில் 18 வீரர்களை எடுத்தது - ரூ.90 கோடியையும் முழுமையாக செலவழித்த லக்னோ
சுரேஷ் ரெய்னா இல்லாதது சென்னை அணிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐ.பி.எல். ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.
புதுடெல்லி:
15-வது ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூருருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 204 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்ச விலையாக இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு ஏலம் போனார்.
ஆனால் சென்னை அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது ஆச்சரியத்தை அளித்தது. இதனால் மனமுடைந்த அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிஸ்டர் ஐ.பி.எல் என்ற ஹேஷ்டேகை டிரெண்டாக்கி, தங்களது வருத்தங்களையும் பதிவிட்டனர்.
சுரேஷ் ரெய்னா இதுவரை 205 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5,528 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம் உள்பட 39 அரைசதங்கள் அடங்கும். மேலும், ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், ரெய்னாவை ஏலம் எடுக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில அவர் கூறியதாவது:
சி.எஸ்.கே. அணியின் முக்கிய வீரராக கடந்த 12 ஆண்டாக சுரேஷ் ரெய்னா திகழ்ந்து வந்தார். இவரை ஏலம் எடுக்காதது எங்களுக்கு வருத்தமே. அணியின் தேவையை கருத்தில்கொண்டே ஏலத்தில் செயல்பட முடியும். அணியின் தேவைதான் முதன்மையானது என அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த உத்தேச அணியில் சுரேஷ் ரெய்னாவின் தேவை இருப்பதாக தெரியவில்லை. இதனாலேயே அவரை வாங்கவில்லை. டுபிளசிஸ், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடத்தை நிரப்புவது நிச்சயம் எளிதல்ல என தெரிவித்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் தீப்தி சர்மா பொறுப்புடன் பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.
குயின்ஸ்டவுன்:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது.
இந்நிலையில். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மிதாலி ராஜ் 66 ரன்னும், ரிச்சா கோஸ் 65 ரன்னும் எடுத்தனர். தொடக்க வீராங்கனை மேக்னா 49 ரன்னில் அவுட்டானார்.
271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. முதலில் விக்கெட்டுகளை இழந்தாலும், எமிலியா கெர் தாக்குப்பிடித்து அசத்தினார். அவர் சதமடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 49 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
சதமடித்ததுடன், வெற்றிக்கு உதவிய எமிலியா கெர் ஆட்டநாயகி விருதை பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.
இதையும் படியுங்கள்...புதிய தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அடிக்கல்: கங்குலி, ஜெய் ஷா பங்கேற்பு
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
கொல்கத்தா:
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை 3- 0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது.
இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.






