என் மலர்tooltip icon

    விளையாட்டு

    2வது மற்றும் கடைசி டி20 போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிக்குமாறு பெங்கால் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    கொல்கத்தா:

    ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது. 

    இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான  20 ஓவர் போட்டித் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

    இந்நிலையில் பிப்ரவரி 18 மற்றும் 20ந் தேதிகளில் நடைபெறும் கடைசி இரண்டு 20 ஓவர் போட்டிகளை நேரடியாக பார்க்க ரசிகர்களை அனுமதிக்குமாறு பிசிசிஐயிடம் பெங்கால் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    உள்நாட்டுப் போட்டிகளை நடத்த, மூன்று மைதானங்களுடன் புதிய அகாடமி அமைகிறது.
    பெங்களூரு:

    பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதான வளாகத்தில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமி செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெங்களூருவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி அமைக்கப்படுகிறது. 

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அடிக்கல்லை நாட்டினர். பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பொருளாளர் அருண் துமால், இணைச் செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ், விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

    தேவனஹள்ளி பகுதியில் 40 ஏக்கரில் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி,  ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்படும். 

    உள்நாட்டுப் போட்டிகளை நடத்தக் கூடிய மூன்று மைதானங்களுடன் இது அமைகிறது. இதற்கான நிலத்தை கிரிக்கெட் வாரியம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்றுள்ளது. 

    இளம் வீரர்களிடையே திறமைகளை வளர்த்தெடுக்கவும், இந்தியாவில்  கிரிக்கெட் சூழலுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் ஒரு சிறப்பு மையத்தை உருவாக்குவது எங்களின் நோக்கம் என ஜெய் ஷா  தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



    நேபாள நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் 3 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியிருந்தனர்.
    தூத்துக்குடி:

    பிட் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக மத்திய விளையாட்டுதுறை அமைச்சகம் கடந்த மாதம் தேசிய அளவிலான குத்துசண்டை போட்டியை நடத்தியது. 

    இதில் வெற்றி பெற்றதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு கிராமத்தை சேர்ந்த தினேஷ் மோகன், ஆகாஷ் குமார், சிவகாசியை சார்ந்த சந்தணகுமார், மதுரையை சேர்ந்த பாலாஜி ஆகியோர் சர்வதேச குத்துச் சண்டை போட்டிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டனர். 

    இதைத் தொடர்ந்து நேபாள யூத் கேம் டெவலப்மெண்ட் அமைப்பு நேபாள நாட்டில் நடத்திய சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இவர்கள் பங்கேற்றனர்.

    இந்தியா, நேபாளம், தாய்லாந்து, பூட்டான் உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், தினேஷ் மோகன், ஆகாஷ்குமார், சந்தணகுமார் ஆகிய 3 பேரும் தங்கப் பதக்கமும், பாலாஜி வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

    தமிழகத்திற்கு பெருமையை தேடி தந்த இவர்கள் ரெயில் மூலம் தூத்துக்குடிக்கு திரும்பினர். குத்துச்சண்டை வீரர்களுக்கு ரெயில் நிலையத்தில் பிற குத்துச்சண்டை வீரர்கள், பொதுமக்கள், உறவினர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    புரோ கபடி லீக் போட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்ஸ்- புனேரி பல்தான் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணி 9-வது வெற்றிக்காகவும், புனே அணி 11-வது வெற்றிக்காகவும் காத்து இருக்கின்றன.
    பெங்களூர்:

    12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    நேற்று நடந்த ஆட்டங்களில் அரியானா 37-26 என்ற கணக்கில் மும்பையையும், பெங்களூரு புல்ஸ் 45-37 என்ற கணக்கில் ஜெய்ப்பூரையும், குஜராத் 38-31 என்ற கணக்கில் உ.பி.யோதாவையும் தோற்கடித்தன.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பாட்னா அணி 13 வெற்றி, 1 டை, 4 தோல்வியுடன் 70 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. அந்த அணி பலவீனமான தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி 14-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    தெலுங்கு டைட்டன்ஸ் 1 வெற்றி, 4 டை, 14 தோல்வியுடன் 27 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி- உ.பி.யோதா அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 10 வெற்றியுடன் 65 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 11-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. உ.பி. அணி 8 வெற்றியுடன் 58 புள்ளிகளை பெற்று 5-வது இடத்தில் உள்ளது. பாட்னாவை வீழ்த்தி 9-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.

    இரவு 9.30 மணிக்கு நடைபெறும் 3-வது ஆட்டத்தில் குஜராத் ஜெய்ன்ட்ஸ்- புனேரி பல்தான் அணிகள் மோதுகின்றன. குஜராத் அணி 9-வது வெற்றிக்காகவும், புனே அணி 11-வது வெற்றிக்காகவும் காத்து இருக்கின்றன. 

    டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூ.89.90 கோடியை செலவழித்து உள்ளது. அந்த அணியில் மொத்தம் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 24 பேர் இடம் பெற்று உள்ளனர்.
    பெங்களூர்:

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூரில் நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்றது.

    இந்த ஏல பட்டியலில் 337 இந்தியர்கள் உள்பட மொத்தம் 600 வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். 2 நாட்கள் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 204 வீரர்கள் ரூ.551.7 கோடிக்கு விலை போனார்கள்.

    இதில் 137 பேர் இந்திய வீரர்கள் ஆவார்கள். மீதியுள்ள 67 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். சர்வதேச போட்டியில் விளையாடிய 107 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். மீதியுள்ள 97 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடாத உள்ளூர் மற்றும் புதுமுக வீரர்கள் ஆவார்கள்.

    இந்த ஐ.பி.எல். சீசனில் ஒவ்வொரு அணியும் வீரர்களுக்கு செலவழிக்க வேண்டிய தொகை ரூ.90 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் புதிய வரவான லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணி மட்டுமே ரூ.90 கோடியையும் முழுமையாக செலவழித்தது.

    அந்த அணி ஏற்கனவே ஏலத்திற்கு முன்பு லோகேஷ் ராகுல் (ரூ.17 கோடி), ஸ்டோனிஸ் (ரூ.9.2 கோடி), ரவிபிஷ்னோய் (ரூ.4 கோடி) ஆகிய 3 வீரர்களையும் ரூ.30.2 கோடிக்கு எடுத்து இருந்தது.

    லக்னோ அணி 2 நாட்கள் ஏலத்தில் 18 வீரர்களை எடுத்தது. இதற்கு அந்த அணி நிர்வாகம் எஞ்சிய முழு தொகையையும் செலவழித்தது. லக்னோ அணி மொத்தம் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 21 வீரர்களை ரூ.90 கோடிக்கு எடுத்துள்ளது.

    ஏலத்தில் அதிகபட்சமாக அவேஸ்கானை ரூ.10 கோடிக்கும், அதற்கு அடுத்தபடியாக ஜேசன் ஹோல்டரை ரூ.8.75 கோடிக்கும் எடுத்தது.

    டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூ.89.90 கோடியை செலவழித்து உள்ளது. அந்த அணியில் மொத்தம் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 24 பேர் இடம் பெற்று உள்ளனர்.

    இதேபோல மும்பை அணியும்(25 வீரர்கள்), ஐதராபாத் அணியும் (23 வீரர்கள்) தலா ரூ.89.90 கோடியை செலவழித்துள்ளது. குஜராத் அணி ரூ.89.85 கோடியும் (23 வீரர்கள்), கொல்கத்தா ரூ.89.55 கோடியும் (25 வீரர்கள்), ராஜஸ்தான் 89.05 கோடியும் (24 வீரர்கள்), பெங்களூர் அணி ரூ.88.45 கோடியும் (22 வீரர்கள்), சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.87.05 கோடியும் (25 வீரர்கள்), பஞ்சாப் அணி ரூ.86.58 கோடியும் (25 வீரர்கள்) செலவழித்தன.
    இலங்கை அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அனைவரும் கவரும் வகையில் ஒரு முயற்சியில் ஈடுபட்டார். இலங்கை அணிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஸ்டோனிஸ் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை இலங்கை வீரர் மகிஷ் தீக்ஷனா எல்லை கோட்டிற்கு அடித்தார். சிக்சர் என நினைத்த போது அங்கு வந்து ஸ்டீவ் ஸ்மித் அனைவரையும் மிரல வைக்கும் வகையில் அதை தடுத்தார். ஆனால் அவரது கால் பந்தை தடுப்பதற்கு முன்பே எல்லைக்கோட்டில் பட்டதால் அது சிக்சராக அறிவிக்கப்பட்டது. அந்த முயற்சியின் போதுதான் அவரின் தலையில் பலத்த காயமடைந்தது.  

    ஸ்டீவ் ஸ்மித்

    சிக்சரை தடுக்க முயன்ற போது ஏற்பட்ட காயம் காரணமாக 20 ஓவர் தொடரில் இருந்து ஸ்மித் விலகியுள்ளார். முன்னதாக இந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 15 பந்துகள் சந்தித்து 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.


    மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா அணி வெற்றி பெற்றுள்ளது.
    பெங்களூரு:

    8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. 12 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் உ.பி.யோத்தா, குஜராத் ஜெயண்ட் அணிகள் மோதின. இதில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 38-31 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 45-37 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூரை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    பெங்களூரு புல்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வீரர்கள்

    முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-யு மும்பா அணிகள் மோதின.  விறுவிறுபாக நடைபெற்ற இந்த போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 37-26 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை வீழ்த்தியது.

    இன்று இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது.
    இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஈஸ்ட் பெங்கால் அணியை எதிர் கொள்கிறது
    கோவா:

    8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி மற்றும் ஒடிசா அணிகள் மோதின. 

    மும்பை சிட்டி அணி சார்பில் இகோர் அங்குலோ, பிபின் சிங் ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர். ஒடிசா சார்பில் ஜோனதாஸ் டி ஒரு கோல் அடித்தார். 

    இதையடுத்து மும்பை சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.  இது மும்பை சிட்டி அணி பெற்றுள்ள 7-வது வெற்றி ஆகும். 

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.

    15-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீபக் சாஹரை 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    பெங்களூர்:

    ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் நாளில் 3 பவுலர்கள், பேட்ஸ்மேன், ஆல் ரவுண்டர், விக்கெட் கீப்பர் தலா ஒருவர் என 6 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம் வருமாறு:

    எம்.எஸ்.தோனி
    ருத்ராஜ் கெயிக்வாட்
    ரவீந்திர ஜடேஜா
    மொயீன் அலி
    தீபக் சாஹர் 

    அம்பதி ராயுடு
    டிவைன் பிராவோ
    ராபின் உத்தப்பா 
    துஷார் தேஷ்பாண்டே
    கே.எம்.ஆசிப்

    ஷிவம் டுபே  
    மகேஷ் தீக்‌ஷனா
    ராஜ்வர்த்தன் ஹங்கர்கேகர்
    சிமார்ஜித் சிங்
    டேவன் கான்வே

    டிவைன் பிரெடோரியஸ்
    மிட்செல் சான்ட்னர்
    ஆடம் மில்னே
    சுப்ரான்ஷு சேனாபதி
    முகேஷ் சவுத்ரி

    பிரசாந்த் சோலங்கி
    ஹரி நிஷாந்த்
    என்.ஜெகதீசன்
    கிறிஸ் ஜோர்டான்
    பகத் வர்மா
    இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட்டுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகமாக ஜோஷ் இங்லிஸ் 48 ரன்கள் எடுத்தார்.

    இலங்கை சார்பில் சமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் நிசாங்கா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் அவுட்டானார். சனகா 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    இதையடுத்து, ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் ஆடிய இலங்கை ஒரு ஓவரில் 1 விக்கெட்டுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 9 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
    ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.7.5 கோடியில் இருந்து அதற்கு மேல் உள்ள தொகைக்கு 25 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
    பெங்களூர்:

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூரில் 2 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஏலம் தொடங்கியது.

    இதற்கான பட்டியலில் மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்றனர். இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    தொடக்க நாளில் 74 வீரர்கள் ரூ.388.35 கோடிக்கு ஏலம் போனார்கள். 10 அணிகளும் சேர்த்து இவர்களை இந்த தொகைக்கு எடுத்தன. இதில் 41 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிவர்கள். 33 பேர் சர்வதேச போட்டியில் விளையாடாத உள்ளூர் மற்றும் புதுமுக வீரர்கள் ஆவார்கள்.

    விக்கெட் கீப்பரும், சிறந்த அதிரடி பேட்ஸ்மேனுமான இஷான் கி‌ஷன் ஏலத்தில் அதிக விலைக்கு போனார்.அவரை ரூ.15¼ கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்து தக்கவைத்துக்கொண்டது. அதற்கு அடுத்தபடியாக தீபக் சாஹர் ரூ.14 கோடிக்கும் (சென்னை), ஸ்ரேயாஸ் அய்யர் ரூ.12.25 கோடிக்கும் (கொல்கத்தா) ஏலம் போனார்கள்.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் 25 வீரர்கள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். ரூ.7.5 கோடியில் இருந்து அதற்கு மேல் உள்ள தொகைக்கு 25 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டார்கள்.

    இதில் 15 வீரர்கள் இந்தியர்கள் ஆவார்கள். வெஸ்ட் இண்டீஸ்-3, நியூசிலாந்து -2, ஆஸ்திரேலியா-1 இங்கிலாந்து-1, தென் ஆப்பிரிக்கா-1, இலங்கை -1 ஆகிய வீரர்கள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.

    ஐ.பி.எல். ஏலத்தில் எந்த முறையும் இல்லாத வகையில் தற்போது பந்து வீச்சாளர்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது.

    வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் பந்து வீச்சாளர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனார். அவரை ரூ.14 கோடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. அவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது.

    கடந்த சீசனில் சென்னை அணியில் ஆடிய தீபக் சாஹரை இந்த முறை வாங்க டெல்லி, ராஜஸ்தான் அணிகள் கடுமையாக முயற்சித்தன. இறுதியாக சென்னை அணி அவரை அதிக தொகை எடுத்து தக்க வைத்துக் கொண்டது.

    மற்ற வேகப்பந்து வீரர்களான ‌ஷர்துல் தாகூர் (டெல்லி) 10.75 கோடிக்கும், ஹர்‌ஷல் படேல் (பெங்களூர்) ரூ.10.75 கோடிக்கும், பிரசித் கிருஷ்ணா (ராஜஸ்தான்) ரூ.10 கோடிக்கும், பெர்குசன் (குஜராத்) ரூ.10 கோடிக்கும், ரபடா (பஞ்சாப்) ரூ.9.25 கோடிக்கும், லிவிங்ஸ்டன் (பஞ்சாப்) ரூ.11.50 கோடிக்கும் ஏலம் போனார்கள். 

    இதில் பிரசித் கிருஷ்ணாவையும், பெர்குசனையும் ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியது.

    மற்றொரு வேகப்பந்து வீரரான ஆவேஸ்கானை லக்னோ அணி ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐ.பி.எல். ஏலத்தில் அதிக தொகைக்கு போன சர்வதேச போட்டியில் விளையாடதா வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவர் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக 16 ஆட்டத்தில் விளையாடி 24 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இதனால் அவரை எடுக்க கடும் போட்டி இருந்தது.

    ஆவேஸ்கானுக்கான அடிப்படை விலை ரூ.20 லட்சம் ஆகும். அவர் 50 மடங்கு அதிகமாக ஏலத்தில் விலை போனார். இதற்கு முன்பு கடந்த ஐ.பி.எல்லில் சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்களில் கிருஷ்ணப்பா கவதம் அதிக தொகையான ரூ.9.25 கோடிக்கு ஏலம் போனார். அதை அவேஸ்கான் முறியடித்தார். 

    இந்த ஐ.பி.எல்.லில் அதிக தொகையான ரூ.15.25 கோடிக்கு ஏலம் போன இஷான் கி‌ஷனை எடுக்க கடுமையான போட்டி நிலவியது.

    மும்பை அணியில் விளையாடும் அவரை தக்க வைத்துக்கொள்ள அந்த அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

    அந்த அணியுடன் பஞ்சாப் இஷான் கி‌ஷனுக்காக முதலில் போட்டி போட்டது. ரூ.8 கோடி வரை போட்டிக்கு வந்தது. பின்னர் அந்த அணி விலக குஜராத் அணி மும்பையிடம் போட்டியிட்டது. ரூ.12.75 கோடி வரைக்கும் குஜராத் அணி போட்டியிட்டது.

    பின்னர் மும்பையுடன் போட்டி போட முடியாமல் அந்த அணி விலகி கொள்ள ஐதராபாத் களத்தில் குதித்தது. ஐதராபாத் அணி ரூ.15 கோடி வரை கொடுக்க முன்வந்தது. ஆனால் இறுதியில் மும்பை ரூ.15.25 கோடி கொடுத்து தக்க வைத்துக் கொண்டது.

    ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு இந்திய வீரர் ஷிவம் டுபேவை ஏலத்தில் எடுத்துள்ளது.
    பெங்களூரு:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. ஏலப்பட்டியலில் இடம்பிடித்த வீரர்கள் எண்ணிக்கை 600 ஆனது. இதில் 377 பேர் இந்தியர்கள் ஆவர்.

    தீபக் சாஹரைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடி வழங்கியது.

    இதற்கிடையே, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்று வருகிறது. அதில் இந்திய வீரர் ஷிவம் டுபேவை ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. 

    இந்நிலையில், சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர் ஷிவம் டுபேவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×