search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரூ.90 கோடியையும் முழுமையாக செலவழித்த லக்னோ
    X
    ரூ.90 கோடியையும் முழுமையாக செலவழித்த லக்னோ

    ஐ.பி.எல். ஏலத்தில் 18 வீரர்களை எடுத்தது - ரூ.90 கோடியையும் முழுமையாக செலவழித்த லக்னோ

    டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூ.89.90 கோடியை செலவழித்து உள்ளது. அந்த அணியில் மொத்தம் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 24 பேர் இடம் பெற்று உள்ளனர்.
    பெங்களூர்:

    15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூரில் நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்றது.

    இந்த ஏல பட்டியலில் 337 இந்தியர்கள் உள்பட மொத்தம் 600 வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். 2 நாட்கள் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 204 வீரர்கள் ரூ.551.7 கோடிக்கு விலை போனார்கள்.

    இதில் 137 பேர் இந்திய வீரர்கள் ஆவார்கள். மீதியுள்ள 67 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். சர்வதேச போட்டியில் விளையாடிய 107 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். மீதியுள்ள 97 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடாத உள்ளூர் மற்றும் புதுமுக வீரர்கள் ஆவார்கள்.

    இந்த ஐ.பி.எல். சீசனில் ஒவ்வொரு அணியும் வீரர்களுக்கு செலவழிக்க வேண்டிய தொகை ரூ.90 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் புதிய வரவான லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணி மட்டுமே ரூ.90 கோடியையும் முழுமையாக செலவழித்தது.

    அந்த அணி ஏற்கனவே ஏலத்திற்கு முன்பு லோகேஷ் ராகுல் (ரூ.17 கோடி), ஸ்டோனிஸ் (ரூ.9.2 கோடி), ரவிபிஷ்னோய் (ரூ.4 கோடி) ஆகிய 3 வீரர்களையும் ரூ.30.2 கோடிக்கு எடுத்து இருந்தது.

    லக்னோ அணி 2 நாட்கள் ஏலத்தில் 18 வீரர்களை எடுத்தது. இதற்கு அந்த அணி நிர்வாகம் எஞ்சிய முழு தொகையையும் செலவழித்தது. லக்னோ அணி மொத்தம் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 21 வீரர்களை ரூ.90 கோடிக்கு எடுத்துள்ளது.

    ஏலத்தில் அதிகபட்சமாக அவேஸ்கானை ரூ.10 கோடிக்கும், அதற்கு அடுத்தபடியாக ஜேசன் ஹோல்டரை ரூ.8.75 கோடிக்கும் எடுத்தது.

    டெல்லி கேபிட்டல்ஸ் அணி ரூ.89.90 கோடியை செலவழித்து உள்ளது. அந்த அணியில் மொத்தம் 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 24 பேர் இடம் பெற்று உள்ளனர்.

    இதேபோல மும்பை அணியும்(25 வீரர்கள்), ஐதராபாத் அணியும் (23 வீரர்கள்) தலா ரூ.89.90 கோடியை செலவழித்துள்ளது. குஜராத் அணி ரூ.89.85 கோடியும் (23 வீரர்கள்), கொல்கத்தா ரூ.89.55 கோடியும் (25 வீரர்கள்), ராஜஸ்தான் 89.05 கோடியும் (24 வீரர்கள்), பெங்களூர் அணி ரூ.88.45 கோடியும் (22 வீரர்கள்), சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.87.05 கோடியும் (25 வீரர்கள்), பஞ்சாப் அணி ரூ.86.58 கோடியும் (25 வீரர்கள்) செலவழித்தன.
    Next Story
    ×