என் மலர்
விளையாட்டு
- தனது சொந்த பணத்தில் விமான டிக்கெட் வாங்கி, ஓட்டலில் தங்கி, சிகிச்சை பெற்றார்.
- நான் அவருக்கு ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஷகீன்ஷா அப்ரிடி தனது காயத்துக்கு சிகிச்சை பெறு வதற்காக லண்டன் சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று அவர் தற்போது குணம் அடைந்துள்ளார். இதையடுத்து அடுத்த மாதம் நடக்கும் டி20 ஓவர் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் ஷகீன்ஷா அப்ரிடி இடம் பெற்றார்.
இந்த நிலையில், ஷகீன்ஷா அப்ரிடி சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டி உள்ளார்.
ஷகீன்ஷா அப்ரிடி தனது சிகிச்சைக்காக தனது சொந்த பணத்தில் விமான டிக்கெட் வாங்கி இங்கிலாந்து சென்றார். லண்டனில் ஓட்டலில் தங்குவதற்கு சொந்த பணத்தை செலவழித்தார். நான் அவருக்கு ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.பின்னர் அவர் அந்த டாக்டரை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை. ஷகீன்ஷா அப்ரிடி தனது சொந்த செலவில் அனைத்தையும் செய்து கொண்டார். டாக்டர்கள், ஓட்டல் மற்றும் உணவு என அனைத்தையும் அவர் தனது சொந்த பணத்தில் இருந்து செலுத்தினார்.
எனக்கு தெரிந்தவரை ஷகீன்ஷா அப்ரிடியுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சர்வதேச சுற்றுப் பயணங்களுக்கான இயக்குனர் ஜாகீர்கான் மட்டுமே ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பேசினார். இவ்வாறு ஷாகித் அப்ரிடி கூறினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே டி20 உலக கோப்பை போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணி குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும் போது, தலைமை தேர்வாளரின் மலிவான தேர்வு என்று பதிவிட்டுள்ளார்.
- ரோஜர் பெடரர் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்றவர்.
- தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் ரோஜர் பெடரர்.
மும்பை:
2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். 41 வயதான ரோஜர் பெடரர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர்.
பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற சாதனை படைத்தவர் ரோஜர் பெடரர். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர் ஆவார்.
இந்நிலையில், ரோஜர் பெடரருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என்ன ஒரு அர்ப்பணிப்பு, ரோஜர் பெடரர்.. உங்கள் டென்னிஸ் பிராண்டை நாங்கள் காதலித்தோம். மெல்ல மெல்ல உங்கள் டென்னிஸ் பழக்கமாகிவிட்டது. மேலும் பழக்கவழக்கங்கள் ஒருபோதும் விலகாது, அவை நம்மில் ஒரு பகுதியாக மாறும். அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
- டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
- காயத்தால் அவதிப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி உலக கோப்பை அணிக்கு திரும்பியுள்ளார்.
கராச்சி:
7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் துணை கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்காமல் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி உலக கோப்பை அணிக்கு திரும்பியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:
பாபர் அசாம் (கேப்டன்) , ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், யுஸ்மான் காதர்.
காத்திருப்பு வீரர்கள் - பகர் ஜமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி
- 2003ம் ஆண்டு பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
- அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் 3வது இடத்தில் உள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்ற ரோஜர் பெடரர், 2022 லேவர் கோப்பைக்குப் பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2003ம் ஆண்டு விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் பெடரர் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற்றார். அதன் பிறகு அடுத்தடுத்து பல சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்தார். 6 ஆஸ்திரேலிய ஓபன், 1 பிரெஞ்ச் ஓபன், 8 விம்பிள்டன் மற்றும் 5 அமெரிக்க ஓபன் என மொத்தம் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் வரிசையில் பெடரர் தனது முக்கிய போட்டியாளர்களான ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தனது ஓய்வு முடிவு குறித்து கூறி உள்ள பெடரர், 'கடந்த மூன்று ஆண்டுகளாக காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற கடுமையான சவால்கள் இருந்தன. இதனால் முழுமையான உடற்தகுதியுடன் போட்டிக்கு திரும்ப கடுமையாக உழைத்தேன். ஆனால் என் உடல் திறன் குறித்து எனக்குத்தான் தெரியும்' என்றார்.
- அனைத்து போட்டிகளுக்கும் இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
- வங்காளதேசம்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்பனை ஆகிவிட்டன
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்தியா தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்தமாக அனைத்து போட்டிகளுக்கும் இதுவரை 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
இதேபோல் வங்காளதேசம்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள், இந்தியா மற்றும் குரூப் A-ல் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியுடன் மோதும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இருப்பினும் கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படலாம்.
- அணியில் இரண்டு புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
- ரேமன் ரீபர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிளாய்ட் ரீபரின் மகன் ஆவார்.
டிரினிடாட்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
உலக கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நிகோலஸ் பூரன் கேப்டனாக நீடிக்கிறார். துணை கேப்டனாக ரோவ்மேன் பாவல் நியமிக்கப்பட்டு உள்ளார். பேட்ஸ்மேன் எவின் லீவிஸ் அணிக்கு திரும்பி உள்ளார். அணியில் இரண்டு புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் யானிக் கரியா, ஆல் ரவுண்டர் ரேமன் ரீபர் ஆகிய புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதில் ரேமன் ரீபர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிளாய்ட் ரீபரின் மகன் ஆவார். ரேமன் ரீபர் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். யானிக் கரியா கடந்த மாதம் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
இருவரும் சர்வசே 20 ஓவர் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர். அதிரடி பேட்ஸ்மேன் ஆந்த்ரே ரசல், சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் வருமாறு:-
நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மேன் பாவல், எவின் லிவீஸ், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், ஒடியன் சுமித், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ரேமன் ரீபர், மெக்காய், அல்சாரி ஜோசப், அகேல் ஹொசைன், காட்ரெல், யானிக் கரியா.
- இன்று நடைபெறும் கால் இறுதியில் கர்மன் தண்டி-ருதுஜா போசலே ஜோடி லூயிசா ஸ்டெபானி (பிரேசில்) கேப்ரியேபா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
- ரியா பாட்டியா, ஷர்மதா பாலு, இந்தியாவின் அங்கிதா ரெய்னா, நெதர்லாந்தின் வான்டெர் ஹோக் ஜோடி முதல் சுற்றில் தோற்றன.
சென்னை ஓபன் மகளிர் டென்னிசில் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய ஜோடியான கர்மன் தண்டி-ருதுஜா போசலே 3-6, 7-6 (7-5), 10-4 என்ற செட் கணக்கில் ஜெசி ரோம்பிஸ் (இந்தோனேசியா) பிரார்த்தனா தோம்பரே (இந்தியா) ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
இன்று நடைபெறும் கால் இறுதியில் கர்மன் தண்டி-ருதுஜா போசலே ஜோடி லூயிசா ஸ்டெபானி (பிரேசில்) கேப்ரியேபா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ரியா பாட்டியா - ஷர்மதா பாலு
மற்றொரு இந்திய ஜோடியான ரியா பாட்டியா, ஷர்மதா பாலு, இந்தியாவின் அங்கிதா ரெய்னா, நெதர்லாந்தின் வான்டெர் ஹோக் ஜோடி முதல் சுற்றில் தோற்றன.
- போட்டியின் தர வரிசையில் 4-ம் இடத்தில் இருக்கும் மரியா கால் இறுதிக்கு தகுதி பெறுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இன்று நடைபெறும் 2-வது சுற்றில் வெற்றி பெறுவோர் கால் இறுதிக்கு முன்னேறுவார்கள்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இன்று நடைபெறும் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மக்டா லிஸெட் (போலந்து)-ஒக்சானா செலக்மெட்தேவா (ரஷியா) மோதுகிறார்கள்.
மற்றொரு ஆட்டத்தில் கேட்டி ஸ்வான் (இங்கிலாந்து) அனஸ்டசிய கசனோவா (ரஷியா) பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இந்த இரு ஆட்டங்களும் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
மாலை 6.15 மணிக்கு நடக்கும் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 85-ம் இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் தட்ஜானா மரியா, அர்ஜென்டினாவின் பொடோரோஸ் காவுடன் மோதுகிறார்.
போட்டியின் தர வரிசையில் 4-ம் இடத்தில் இருக்கும் மரியா கால் இறுதிக்கு தகுதி பெறுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு ஆட்டத்தில் கரோல் ஜாவோ (கனடா) வர்வரா கிராச்சேவா (ரஷியா) மோதுகிறார்கள்.
கால் இறுதிக்கு யூஜெனி புசார்ட் (கனடா), நாவ் ஹிபிளோ (ஜப்பான்), லின்டா புரவிர்தோவா (செக் குடியரசு) ஆகியோர் தகுதி பெற்றனர்.
நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் கனடாவின் ரெபேக்கா மரினோ 7-5, 6-3 என்ற நேர்செட் கணக்கில் கதர்சினா காலாவை (போலந்து) வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் 2-வது சுற்றில் வெற்றி பெறுவோர் கால் இறுதிக்கு முன்னேறுவார்கள். ஒற்றையர் பிரிவில் நேற்று இந்திய வீராங்கனை கர்மன் தண்டி தோல்வி அடைந்ததன் மூலம் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
- உலக கோப்பை போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா இந்தியாவுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்.
- 1985-ம் ஆண்டு நடந்த சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
மும்பை:
ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் உலக கோப்பையில் ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
உலக கோப்பை போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா இந்தியாவுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார். 1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் ஆல் ரவுண்டர் ரவி சாஸ்திரி இந்தியாவுக்காக சாதித்தது போல் ஹர்த்திக் பாண்ட்யாவால் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.
ரவி சாஸ்திரி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார். அது போன்று செய்வதில் ஹர்த்திக் வல்லவர். ஹர்த்திக் பாண்ட்யா முதுகு காயத்திலிருந்து மீண்டு வந்து சில மாதங்கள் ஆகிறது. எனவே அவரை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மூலம் மேட்ச் வின்னராக இருப்பார். அவரது பீல்டிங்கும் அபாரமாக இருக்கிறது. ரன் அவுட் செய்வதும் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பும்.
1985-ம் ஆண்டில் ரவி சாஸ்திரி போல் ஹர்த்திக் பாண்ட்யா செயல்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
1985-ம் ஆண்டு நடந்த சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் ரவி சாஸ்திரி 5 ஆட்டத்தில் 182 ரன்னும், 8 விக்கெட்டும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2000 ஆம் ஆண்டில் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் நடுவராக பணியாற்றினார்.
- ஐபிஎல் போட்டிகள் உட்பட 40 முதல் தர போட்டிகளில் நடுவராக பணியாற்றினார்.
லாகூர்:
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசாத் ரவூப் லாகூரில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. அவரது மரணமடைந்த செய்தி கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா தன்னுடைய டுவீட்டரில், ஆசாத் ரவூப், மரணமடைந்ததாக வந்த செய்தி வருத்தமாக இருந்தது.
அவர் ஒரு நல்ல நடுவர் மட்டுமல்ல, நல்ல நகைச்சுவை உணர்வையும் கொண்டிருந்தார். அவர் எப்போதும் என் முகத்தில் புன்னகையை வரவழைப்பார். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்," என்று தெரிவித்தார்.
மறைந்த ஆசாத் ரவூப், 2000 ஆம் ஆண்டில் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் நடுவராக பணியாற்றினார்.
2006-ம் ஆண்டில், ஐசிசியின் எலைட் பேனலில் அவர் இடம் பெற்ற அவர் 2013 வரை அங்கம் வகித்தார். அவர் 64 டெஸ்ட் போட்டிகள், 139 ஒருநாள் போட்டிகள், 28 டி20 போட்டிகள் மற்றும் 11 பெண்கள் டி20 போட்டிகளில் நடுவராக மற்றும் டிவி நடுவராக பணியாற்றினார்.
ஐபிஎல் போட்டிகள் உட்பட 40 முதல் தர போட்டிகள், 26 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 89 டி20 போட்டிகளிலும் அவர் நடுவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
- எதிராளிகளுக்கு புள்ளிகளை தாரை வார்க்கும் தவறுகளை மட்டும் 26 முறை செய்தார்.
- ஏற்கனவே இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவும் தோற்று வெளியேறி விட்டார்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 359-வது இடம் வகிக்கும் இந்தியாவின் கர்மன் கவுர் தண்டி, அனுபவம் வாய்ந்த யூஜெனி புசார்ட்டை (கனடா) எதிர்கொண்டார்.
முதல் செட்டை எளிதில் இழந்த கர்மன் தண்டி 2-வது செட்டில் எதிராளிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். 5-2 என்ற முன்னிலையுடன் அந்த செட்டை வெல்லும் நிலைக்கு நகர்ந்தார். ஆனால் அதே உத்வேகத்தை அவரால் தொடர முடியவில்லை. சரிவில் இருந்து மீண்ட புசார்ட் 6-6 என்று சமனுக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட டைபிரேக்கரில் புசார்ட் வெற்றிக்கனியை பறித்தார். 2 மணி 13 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் புசார்ட் 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் தண்டியை தோற்கடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கர்மன் தண்டி, புசார்ட்டை விட அதிக தவறுகளை இழைத்தார்.
பந்தை வலுவாக வெளியே விரட்டுவது, வலை மீது அடிப்பது போன்ற எதிராளிகளுக்கு புள்ளிகளை தாரை வார்க்கும் தவறுகளை மட்டும் 26 முறை செய்தது பின்னடைவாக அமைந்தது. அத்துடன் சீதோஷ்ண நிலையும் அவரை சோர்வடையச் செய்தது. புழுக்கத்தால் வியர்த்து கொட்டி நனைந்து போனார்.
கர்மன் தண்டியின் தோல்வியின் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவும் தோற்று வெளியேறி விட்டார்.
- 53 கிலோ எடைப் பிரிவில் ஸ்வீடன் வீராங்கனையை தோற்கடித்தார்.
- உலக மல்யுத்த போட்டியில் இரண்டாவது முறையாக பதக்கம் வென்றார்.
செர்பியா தலைநகர் பெல்கிரேடில் 17-வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அரியானாவை சேர்ந்த வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்றார்.
பெண்களுக்கான 53 கிலோ உடல் எடைப்பிரிவின் தகுதி சுற்றில் மங்கோலியாவின் குலான் பட்குயாவிடம் 0-7 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார். பின்னர், ரெப்சேஜ் முறைப்படி அடுத்த சுற்று முன்னேறிய அவர், கஜகஸ்தான் வீராங்கனை எசிமோவாவை தோற்கடித்தார். பின்னர் அஜர்பைஜான் வீராங்கனை லேலா குர்பானோவா காயம் காரணமாக விலகியதால் வெண்கலப் பதக்கச் சுற்றுக்குள் வினேஷ் போகத் நுழைந்தார்.

அந்த போட்டியில் ஸ்வீடன் வீராங்கனை எம்மா மால்ம்கிரெனை 8-0 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து வினேஷ் போகத், வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக மல்யுத்த போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.






