என் மலர்
விளையாட்டு
- எனது நாடு, எனது மாநிலத்திற்காக விளையாடியது மிகப்பெரிய கவுரவம்.
- சிறப்பான நினைவுகளை கொடுத்த சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு நன்றி.
பெங்களூரு:
ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த ராபின் உத்தப்பா ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராபின் உத்தப்பா ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
நான் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகின்றன, இது ஏற்ற தாழ்வுகள் நிறைந்த அற்புதமான பயணம். அது நிறைவாகவும், சுவாரஸ்யமாகவும், என்னை அனுமதித்துள்ளது. எனது நாட்டையும், எனது மாநிலமான கர்நாடகாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவது எனது மிகப்பெரிய கவுரவமாகும்.
இருப்பினும், அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும், மேலும் நன்றியுள்ள இதயத்துடன், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது குடும்பத்துடன் குறிப்பிடத்தக்க நேரத்தை செலவிடுவேன், அதே நேரத்தில் ஒரு புதிய பயணத்தை எதிர் நோக்கி உள்ளேன்.
எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவு மற்றும் ஊக்கம் அளித்த பிசிசிஐ தலைவர், செயலாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான நினைவுகளை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ராபின் உத்தப்பா இந்திய அணிக்காக 60 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 13 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4952 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் அடித்த 9வது இந்திய வீரராக இருந்து வந்தார்.
- நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
- நிர்வாகிகள் 12 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும்
புதுடெல்லி:
மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றில் உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய அனுமதி கோரி பிசிசிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது பி்சிசிஐ-யில் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தால் மூன்று ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் பதவி வகிக்க முடியும் என்று விதி உள்ளது. கட்டாயம் இடைவெளி விட வேண்டும் என்ற இந்த விதியை (cooling-off period) மாற்ற அனுமதிக்கும்படி பிசிசிஐ தனது மனுவில் தெரிவித்திருந்தது.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சட்ட விதிகளை மாற்ற பிசிசிஐக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பதவியில் தொடரமுடியும்.
மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஆறு ஆண்டுகள் மற்றும் பிசிசிஐயில் ஆறு ஆண்டுகள் என நிர்வாகிகள் 12 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. பிசிசிஐயில் ஒருவர் ஒரு பதவியில் இரண்டு முறை தலா 3 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் இனிமேல் இங்கிலாந்து பயப்படப்போவதில்லை.
- இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்துக்கு ஆஸ்திரேலிய அணி நிச்சயமாக மரியாதை கொடுக்கும்.
அடுத்த ஆஷஸ் தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி நிச்சயமாக வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஏப்ரல் மாத தொடக்கத்தில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை மீண்டும் வெல்லும் என்று சொல்லி இருந்தால் நாங்கள் அவர்களால் ஆஷஸ் தொடரை வெல்ல முடியாது என கூறியிருப்போம். ஆனால், கோடைக்கால டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்த முடிவு தெளிவானது.
அடுத்த கோடைக்கால ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்படும் என்றார். இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்துக்கு ஆஸ்திரேலிய அணி நிச்சயமாக மரியாதை கொடுக்கும். இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதையும், அவர்களால் எந்த இடத்திலும் அபாயகரமானவர்கள் என ஆஸ்திரேலிய அணிக்கு தெரியும். தோல்வி பயம் இல்லாமல் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவது தற்போதைய இங்கிலாந்து அணியை மிகவும் உற்சாகமான அணியாக மாற்றி உள்ளது.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் இனிமேல் இங்கிலாந்து பயப்படப்போவதில்லை. மெக்கல்லம் - ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி அழுத்தமில்லாமல் அதிரடியாக விளையாடும் போக்கினை அணியில் பழக்கப்படுத்தி இருக்கின்றனர்.

எல்லா அணிகளும் இந்த மாதிரி அதிரடியாக விளையாட வேண்டுமென நினைக்கிறேன். கடைசி கோடைக் காலத்தில் இங்கிலாந்து எப்படி டெஸ்ட் போடியை விளையாட வேண்டுமென உலகத்திற்கே தெரிவித்தது. அடுத்த ஆஷஸ் கோப்பையை நிச்சயமாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி வெல்லும் என்றார்.
இதுவரை நடைபெற்ற 72 ஆஷஸ் தொடர்களில் 34-ல் ஆஸ்திரேலியாவும் 32-ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 6 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. ஆஸ்திரேலிய அணி 2017-18 ஆஷஸ் தொடரை வென்று, 2019 தொடரை சமன் செய்ததுள்ளது . அடுத்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரிலும் 4-0 என ஆஸ்திரேலிய அணி வென்று ஆஷஸ் கோப்பையை தங்கள்வசம் வைத்துள்ளது.
- 17 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடக்கிறது.
- இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன.
சென்னை:
17 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடக்கிறது. இந்த போட்டி அக்டோபர் 11-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை புவனேஸ்வர், கோவா, நவி மும்பை ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.
இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. லீக முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. அமெரிக்கா, மொராகோ, பிரேசில் ஆகிய நாடுகள் அந்த பிரிவில் உள்ளன.
இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் தமிழகத்தை சேர்ந்த நிவேதா தாஸ் இடம் பெற்றுள்ளார். உதவி பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து 30 வயதான நிவேதா தாஸ் கூறியதாவது:-
நான் காஞ்சீபுரம் அரசு பள்ளியில் படித்த போது கால்பந்து விளையாட ஆரம்பித்தேன். மாவட்டம் மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் தமிழக அணிக்காக விளையாடி இருக்கிறேன். தென் மண்டல போட்டியில் தமிழக அணிக்காக ஆடி தங்கம் வென்று உள்ளேன்.
கால்பந்து ஆடிக் கொண்டிருக்கும் போதே நான் பயிற்சியாளருக்கான படிப்பையும் முடித்தேன். உடற் கல்வி ஆசிரியர் தனலட்சுமி எனக்கு சரியான பாதையை காட்டினார். இதனால் நான் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்தேன்.
கடந்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்காக பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டேன். 17 வயதுக்குட்பட்ட உலக கோப்பை போட்டிக்கான இந்திய மகளிர் அணிக்கு உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். இதன் மூலம் எனது கனவு நனவானது.
இவ்வாறு நிவேதா தாஸ் கூறியுள்ளார்.
- ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
- 3 பேருக்கு பதிலாக நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ் மற்றும் சீன் அபோட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி மொஹாலியில் தொடங்கும் இந்தத் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் 3 முக்கிய வீரர்கள் விலகி உள்ளனர்.
கடைசி நிமிடத்தில் காயம் காரணமாக மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
ஏற்கனவே டேவிட் வார்னர் சுற்றுப்பயணத்தில் இடம் பெறதாக நிலையில் இவர்களும் 3 பேரும் விலகி உள்ளது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக அமையும். உள்நாட்டில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் 3 பேருக்கு பதிலாக நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ் மற்றும் சீன் அபோட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எல்லிஸ் டி20 சீசனில் 13 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை 6.87 என்ற சிறந்த ரன்ரேட்டில் பெற்றார். சாம்ஸ் 12 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் ஐபிஎல் போட்டியின் போது டேனியல் சாம்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக இருந்தார்.
ஆரோன் ஃபிஞ்ச் தலைமையில் களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி மொஹாலி, நாக்பூர் மற்றும் ஹைதராபாத்தில் செப்டம்பர் 20, 23, மற்றும் 25 ஆகிய தேதிகளில் விளையாடுகிறது. ஆரோன் பிஞ்ச் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணி:
சீன் அபோட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஆரோன் பின்ச் (கே), கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், ஆடம் ஜாம்பா.
- உலக கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா 20 ஓவர் தொடரில் இந்திய அணி ஆடுகிறது.
- உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாட என்னென்ன முறைகளை கையாள்வது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
புதுடெல்லி:
15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாகிஸ்தானை இறுதி போட்டியில் வீழ்த்தி இலங்கை ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் ஆட்டம் ஆசிய கோப்பையில் மோசமாக இருந்தது. பாகிஸ்தான், இலங்கையிடம் தோற்று இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
பல திறமையான வீரர்கள் இருந்தும் ஆசிய கோப்பையில் ஏற்பட்ட தோல்வி ஏமாற்றம் அளித்தது. இந்த போட்டிக்கு முன்பு சுழற்சி முறையில் பல வீரர்களுக்கு பல்வேறு தொடர்களில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் வெற்றி கிடைத்தது.
ஆனால் முக்கியமான ஆசிய கோப்பையில் இந்திய வீரர்கள் சொதப்பி விட்டனர். இதனால் அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அடுத்த மாதம் நடைபெற உள்ளதால் அதற்குள் அணி மீண்டும் நல்ல நிலையை பெறுவது அவசியமாகும். உலகக்கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா 20 ஓவர் தொடரில் இந்திய அணி ஆடுகிறது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஆய்வு நடத்தியது.
கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செய லாளர் ஜெய்ஷா, தேர்வு குழுவினர் உள்ளிட்டோர் இந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆசிய கோப்பையில் 7 முதல் 15-வது ஓவர் வரை அதாவது மிடில் ஓவரில் பேட்டிங் மிகவும் மெதுவாக இருந்தது. அதிரடியான பேட்டிங் இல்லாததால் ரன் குவிப்பு இல்லாமல் போனது.
இதுகுறித்து இந்த கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது. உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாட என்னென்ன முறைகளை கையாள்வது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டம் தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
ஆசிய கோப்பையில் ஏற்பட்ட மோசமான செயல்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் வெளிப்படையான பல பிரச்சினைகள் உள்ளன. 20 ஓவர் உலக கோப்பையில் அதை மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
ஆசிய கோப்பையில் 7 முதல் 15 ஓவர் வரை வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை. இது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அணியின் தேவைக்கேற்ப வீரர்களின் வரிசை மாற்றி அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 1-2 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.
- கேப்டவுன் அணிக்கு தலைமை பயிற்சியாளாராக மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
அந்த வகையில் ஜோகன்னஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கேப்டவுன் அணி மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சுக்கும் சொந்தமாகிறது.
ஐ.பி.எல். போன்றே தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக்கிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் களம் காண அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில் கேப்டவுன் அணிக்கு தலைமை பயிற்சியாளாராக மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவர் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு பதவியில் இருந்து விலக உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 1-2 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புரமோட்டர்ஸுக்குச் சொந்தமான 3 நிறுவனங்களுடனும் பவுச்சர் ஒரு லாபகரமான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதால் தான் இவர் தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் போட்டியில் கேப்டவுன் அணியின் பயிற்சியாளராகவும், 2023 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சர்வதேச லீக் டி20-ல் எம்ஐ எமிரேட்ஸ் உடன் இணைய உள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது.
- வைல்டு கார்டு மூலம் நுழைந்த இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னா முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
- அலிசன் ரிஸ்கே (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் வார்வரா கிராசேவா நேற்றைய முதல் சுற்று ஆட்டத்தில் சக நாட்டை சேர்ந்த மரியா தகச்சேவாவை எதிர் கொண்டார். இதில் கிராசேவா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அவர் 2-வது சுற்றில் கனடாவை சேர்ந்த கரோல் ஜாவ்வை சந்திக்கிறார். கரோல் முதல் சுற்றில் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒலிவியாவை எளிதில் வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் 3-வது வரிசையில் இருக்கும் மக்டா லினெட் (போலந்து) 6-4, 6-0 என்ற செட் கணக்கில் ஜப்பானை சேர்ந்த மயூக்காவை வீழ்த்தினார். அவர் 2-வது சுற்றில் ரஷியாவின் ஒக்சானா செலக்மேடாவை சந்திக்கிறார். ஒக்சானா முதல் சுற்றில் 6-3, 6-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை டெஸ்பினாவை வீழ்த்தினார்.
இந்த போட்டியின் முதல் நிலை வீராங்கனையான அலிசன் ரிஸ்கே (அமெரிக்கா) முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். ரஷியாவை சேர்ந்த அனஸ்டசியா கசனோவா 6-2, 6-3 என்ற கணக்கில் அவரை வீழ்த்தினார்.
வைல்டு கார்டு மூலம் நுழைந்த இந்திய வீராங்கனை அங்கீதா ரெய்னாவும் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
போட்டியின் 3-வது நாளான இன்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை கர்மன் தண்டி முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான யூஜின் பவுச்சர்ட்டை (கனடா) எதிர் கொள்கிறார். பவுச்சர்ட்டை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி கர்மன் தண்டி கால் இறுதிக்கு தகுதி பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற ஆட்டங்களில் ரெபேக்கா பீட்டர்சன் (சுவீடன்) லின்டா (செக் குடியரசு), கவா (போலந்து)-ரெபோக்கா மரினோ (கனடா), ஹிபினோ (ஜப்பான்) கியாங் வாங் (சீனா) மோதுகிறார்கள்.
- சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கே தோல்வி அடைந்தார்.
- முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ஜெர்மனி வீராங்கனையிடம் தோல்வி கண்டார்.
சென்னை:
சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ஒற்றையர் முதலாவது சுற்று போட்டிகள் நடைபெற்றன.
இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கரகோஷம், கைதட்டலுக்கு மத்தியில் ஆடிய அங்கிதா ரெய்னா, அனுபவம் வாய்ந்த தாட்ஜனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.
முதல் செட்டில் ஒரு கேம் கூட எடுக்காத அங்கிதா 2-வது செட்டில் 5-வது கேமை வென்றது மட்டுமே ஒரே ஆறுதல். 76 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த தாட்ஜனா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் அங்கிதாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் உலக தரவரிசையில் 23-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே, ரஷியாவின் அனஸ்டசியா கசனோவாவுடன் மோதினார். இதில் அலிசன் ரிஸ்கே 2-6, 3-6 என்ற நேர் செட்டில் பணிந்தார்.
- உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் நடந்து வருகிறது.
- இதில் 53 கிலோ எடைப்பிரிவின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தோல்வி அடைந்தார்.
பெல்கிரேடு:
17-வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் கடந்த 10-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது.
53 கிலோ எடைப்பிரிவில் அரியானாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 53 கிலோ உடல் எடைப்பிரிவின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மங்கோலியாவின் குலான் பட்குயாவை சந்தித்தார். தொடக்கம் முதலே சற்றே தடுமாறிய வினேஷ் போகத் 0-7 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து 3 முறை தங்கப்பதக்கம் வென்றவர் வினேஷ் போகத் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 142 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 16.4 ஓவரில் 146 ரன்கள் எடுத்து வென்றது.
லண்டன்:
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டெர்பியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து பெண்கள் அணி 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கெம்ப் அதிரடியாக ஆடி 37 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பவுச்சர் 34 ரன்கள் எடுத்தார்.
இந்திய பெண்கள் அணி சார்பில் ஸ்னே ரானா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 20 ரன்னிலும், ஹேமலதா 9 ரன்னிலும் அவுட்டாகினர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா அதிரடி காட்டினார். அவர் 53 பந்தில் 13 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 29 ரன்கள் எடுத்துள்ளார்.
இறுதியில், இந்திய பெண்கள் அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
- கோலிக்கு 49 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் ரசிகர்கள் உள்ளனர்.
- சமூக ஊடகங்களில் அவரைப் பின்தொடர்பவர்களின் மொத்த எண்ணிக்கை 310 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சதம் அடிக்காமல் பல்வேறு விமர்சனங்களுக்கு தள்ளப்பட்டார். அவருக்கு பல டி20 தொடர்களில் ஓய்வும் வழங்கப்பட்டது. கிரிக்கெட்டில் எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் சமூக வலைதளங்களில் விராட் கோலி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.
களத்தில் சாதனைகளை முறியடித்ததோடு, சமீபத்தில் 50 மில்லியன் ட்விட்டர் பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
இதேபோல் இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிக பாலோவர்கள் கொண்ட விளையாட்டு வீரர்கள் வரிசையில் 211 மில்லியன் பாலோவர்களுடன் விராட் கோலி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ (476 மில்லியன்) முதல் இடத்திலும் லியோனல் மெஸ்ஸி (356 மில்லியன்) 2-வது இடத்திலும் உள்ளனர்.
கோலிக்கு 49 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் ரசிகர்கள் உள்ளனர். சமூக ஊடகங்களில் அவரைப் பின்தொடர்பவர்களின் மொத்த எண்ணிக்கை 310 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
இரண்டு அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன், கோலி 2022 ஆசிய கோப்பையின் போது ஃபார்முக்கு திரும்பினார். ஆசிய கோப்பைக்கு முன்பு ஒரு மாதமாக தனது பேட்டை தொடவில்லை என்று கோலி தெரிவித்திருந்தார்.






