என் மலர்
விளையாட்டு
- தீபக் ஹூடா, முகமது சமி இந்த தொடரில் இருந்து விலகல்.
- ஷ்ரேயாஸ் அய்யர், ஷபாஸ் அகமது அணிக்கு திரும்பியுள்ளனர்.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதலில் டி20 போட்டி தொடர் நடக்கிறது. முதல் போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக தீபக் ஹூடாவும், கொரோனாவில் இருந்து குணமடையாததால் முகமது சமியும் இத்தொடரில் இருந்து விலகி உள்ளனர். அவர்களுக்கு பதில் ஷ்ரேயாஸ் அய்யர், ஷபாஸ் அகமது ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற உற்சாகத்துடன் இந்திய அணி களம் இறங்குகிறது. பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் வலுவான நிலையில் உள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை 20 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 11 முறையும், தென் ஆப்பிரிக்கா 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம்.
- பிற அணிகளுடனான தொடர்களில் மட்டும் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடும்.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடைசியாக கடந்த 2007ஆம் ஆண்டு நேரடி டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதன்பிறகு இந்தியாவிற்கு எதிரான எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக கூறி அந்நாட்டுடனான நேரடி கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன்பிறகு இதுவரை இரண்டு அணிகளும் இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் மார்ட்டின் டார்லோ இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வைத்து இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன், பேசியதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில்
இது குறித்து பதில் அளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் மூத்த நிர்வாகி ஒருவர், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் சொந்த வணிக ஆதாயங்களுக்காக இந்த வாய்ப்பை வழங்கினாலும், இந்தியா- பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
எனினுமி, பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்பது குறித்து பிசிசிஐ முடிவெடுக்க முடியாது என்றும், அது மத்திய அரசின் முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது, இந்திய அணி வெளிநாடுகளில் பிற அணிகள் பங்கேற்கும் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் விளையாடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- டி20 கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடித்து வருகிறது.
- இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த ஆஸ்திரேலியா 6-வது இடத்தில் உள்ளது.
துபாய்:
டி20 கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி (268 புள்ளிகள்) ஒரு புள்ளி அதிகரித்து முதலிடத்தில் நீடிக்கிறது.
2-வது இடத்தில் இங்கிலாந்து (261 புள்ளி) உள்ளது. தென்ஆப்பிரிக்கா (258 புள்ளி) 3-வது இடத்திலும், பாகிஸ்தான் (258 புள்ளி) 4-வது இடத்திலும், நியூசிலாந்து (252 புள்ளி) 5-வது இடத்திலும் தொடருகின்றன.
இந்தியாவுக்கு எதிரான தொடரை இழந்த ஆஸ்திரேலியா (250 புள்ளி) ஒரு புள்ளி குறைந்து 6-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் (241 புள்ளி) 7-வது இடத்திலும், இலங்கை (237 புள்ளி) 8-வது இடத்திலும், வங்காளதேசம் (224 புள்ளி) 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் (219 புள்ளி) 10-வது இடத்திலும் உள்ளன.
- 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா ஏ அணி முழுமையாக கைப்பற்றியது.
- சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், திலக் வர்மா ஆகியோர் அரை சதமடித்தனர்.
சென்னை:
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ஏ அணி, இந்திய ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது.
இரு போட்டிகளில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்று 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட் செய்தது. 49.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட் ஆனது.
சஞ்சு சாம்சன் 54 ரன்னும், ஷர்துல் தாக்குர் 51 ரன்னும், திலக் வர்மா 50 ரன்னும் எடுத்தனர்.
அதன்பின், 285 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து ஏ அணி 38.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ராஜ் பாவா 4 விக்கெட்டும், ராகுல் சஹார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 'ஏ' அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
- இந்தியா-தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் போட்டியில் இதுவரை 20 முறை மோதியுள்ளன.
- தென் ஆப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் 20 ஓவர் தொடரை இதுவரை இழக்கவில்லை.
திருவனந்தபுரம்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடக்கிறது.
முதல் போட்டி நாளை (28-ந்தேதி) திருவனந்தபுரத்திலும், 2-வது போட்டி அக்டோபர் 2-ந்தேதி கவுகாத்தியிலும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி 4-ந்தேதி இந்தூரிலும் நடக்கிறது. போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆல் ரவுண்டர் அக்ஷர் பட்டேல், பந்து வீச்சில் பும்ரா, தீபக் சாகர், சாஹல், ஹர்சல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.
ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக தீபக் ஹூடாவும், கொரோனாவில் இருந்து குணமடையாததால் முகமது சமியும் இத்தொடரில் இருந்து விலகி உள்ளனர். அவர்களுக்கு பதில் ஸ்ரேயாஸ் அய்யர், ஷபாஸ் அகமது ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை வென்ற கையோடு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி களம் இறங்குகிறது.
அந்த உத்வேகத்தை தொடர இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள். பேட்டிங்கில் ரோகித் சர்மா, கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. கடைசி கட்டத்தில் அதிக ரன்களை இந்திய பந்து வீச்சாளர்கள் விட்டு கொடுத்தனர். இதனால் கடைசி கட்ட பந்து வீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியமாகும்.
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்க்ராம், டேவிட் மில்லர், டுவைன் பிரிட்டோரியஸ், வெய்ன் பார்னல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரபடா, நார்ஜே, நிகிடி, ஷம்சி, கேசவ் மகராஜ், மார்கோ ஜேன்சன், ஹென்ரிச் கிளாசென் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் போட்டியில் இதுவரை 20 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 11 முறையும், தென் ஆப்பிரிக்கா 8 முறையும் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
தென் ஆப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் 20 ஓவர் தொடரை இதுவரை இழக்கவில்லை. 2015-ம் ஆண்டு நடந்த தொடரை 2-0 (3 ஆட்டம்) என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
2019-ம் ஆண்டு 1-1 (3 ஆட்டம்) என்ற கணக்கிலும், 2022 ஜூன் மாதம் நடந்த தொடர் 2-2 (5 ஆட்டம்) என்ற கணக்கிலும் சமனில் முடிந்தது.
- 2-வது ஆட்டத்தில் மழை காரணமாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டதால் அவர் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட வேண்டி இருந்தது.
- கோலியை போல லோகேஷ் ராகுல் சரியான ஷாட்களை ஆடும் போது அவரை தடுக்க முடியாது.
மும்பை:
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் முதல் ஆட்டத்தில் 55 ரன் எடுத்தார்.
2-வது ஆட்டத்தில் 10 ரன்னிலும், 3-வது ஆட்டத்தில் ஒரு ரன்னிலும் அவுட் ஆனார். அடுத்த மாதம் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெறும் சூழலில் லோகேஷ் ராகுல் பார்ம் பற்றி சிலர் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில் லோகேஷ் ராகுலுக்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் அரை சதம் அடித்தார். 2-வது ஆட்டத்தில் மழை காரணமாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டதால் அவர் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட வேண்டி இருந்தது. இதனால் லோகேஷ் ராகுல் தனது விக்கெட்டை அணிக்காக தியாகம் செய்தார்.
3-வது போட்டியில் ஒரு ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டி இருந்தது. இது ஒரு போதும் எளிதானது அல்ல. அந்த ஆட்டத்தில் நல்ல தொடக்கத்தை அளிக்க விரும்பினார். இதனால் அதிரடியாக விளையாட முயற்சித்து ஆட்டமிழந்தார். அன்றும் தனது விக்கெட்டை தியாகம் செய்தார். அவரை விமர்சிக்க வேண்டாம்.
கோலியை போல லோகேஷ் ராகுல் சரியான ஷாட்களை ஆடும் போது அவரை தடுக்க முடியாது. சில தேவையில்லாத ஷாட்களை தவிர்த்தால் ரன்களை குவித்துக் கொண்டே இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 15 அல்லது 20 பந்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் அணியில் இருக்க வேண்டும் என்றார்.
- கடந்த 1½ ஆண்டுகளாக அவரது ஆட்டத்தை பார்த்து எதிரணிகள் பயப்படுகிறார்கள்.
மெல்போர்ன்:
20 ஓவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் இடம் பெற்று உள்ளார். சிங்கப்பூரில் பிறந்த அவர் அந்த நாட்டு அணிக்காக விளையாடி வந்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ், ஐ.பி.எல். போன்ற வெளிநாட்டு 20 ஓவர் போட்டி தொடர்களில் விளையாடிய அவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டு அணியில் வாய்ப்பு அளித்து உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரின் 3-வது ஆட்டத்தில் டிம் டேவிட் 27 பந்தில் 54 ரன் எடுத்து அசத்தினார்.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் டிம் டேவிட்டுக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஆடும் லெவனில் டிம் டேவிட் இடம்பெற வேண்டும். கடந்த 1½ ஆண்டுகளாக அவரது ஆட்டத்தை பார்த்த போது எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் அவரை பார்த்து எதிரணிகள் பயப்படுகிறார்கள்.
15 அல்லது 20 பந்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் அணியில் இருக்க வேண்டும் என்றார்.
- இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் கார்ல்சென் (நார்வே), இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி மோதினர்.
- இரண்டு சுற்றுகளாக நடந்த இறுதி போட்டி முடிவில் கார்ல்சென் 4.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
நியூயார்க்:
ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் மூலம் நடந்தது.
இதன் இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் (நார்வே), இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி மோதினர். இரண்டு சுற்றுகளாக நடந்த இறுதி போட்டி முடிவில் மேக்னஸ் கார்ல்சன் 4.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் வந்தடைந்தனர்.
- ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இன்று பயிற்சியை தொடங்குகிறார்கள்.
திருவனந்தபுரம்:
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இதையொட்டி தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலிய தொடரை வென்ற கையோடு திருவனந்தபுரம் வருகை தந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் இன்று பயிற்சியை தொடங்குகிறார்கள்.

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை வந்த தென் ஆப்பிரிக்க வீரர்
இதற்கிடையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்கா வீர்ர கேசவ் மகாராஜ் திருவனந்தபுரத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றான ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலுக்கு பாரம்பரிய உடையுடன் வருகை தந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
- டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் பலமே ரன்களை கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான்.
- டி20 கிரிக்கெட்டில் இதுவரை அவர் எந்த போட்டியிலும் நான்கு சிக்சர்களை விட்டுக் கொடுத்தது கிடையாது.
உலகின் சிறந்த பந்துவீச்சாளராக பார்க்கப்படும் பும்ரா இதுவரை இந்திய அணிக்காக 60 டி20 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
காயத்தால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த பும்ரா டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடினார். இந்த தொடரின் முதல் போட்டியில் ஓய்வில் இருந்த பும்ரா இரண்டாவது போட்டியின் போது அற்புதமாக பந்து வீசி இருந்தார்.
ஆனால் மூன்றாவது டி20 போட்டியில் அவர் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தது அவருடைய பவுலிங் குறைபாட்டை வெளிக்காட்டியது. அதோடு டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் பலமே ரன்களை கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான்.
ஆனால் இதற்கு மாறாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்றாவது டி20 போட்டியில் மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் பந்து வீசிய அவர் விக்கெட்டை வீழ்த்தாமல் 50 ரன்களை வாரி வழங்கினார். இதுவே டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் மோசமான சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2016-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக நான்கு ஓவர்களில் 47 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார்.
அதன் பின்னர் தற்போது தான் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு டி20 கிரிக்கெட்டில் இதுவரை அவர் எந்த போட்டியிலும் நான்கு சிக்சர்களை விட்டுக் கொடுத்தது கிடையாது. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த போட்டியில் அவர் நான்கு சிக்சர்களை விட்டுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மிகவும் வலுவான அணிக்கு எதிரான இந்த ஆட்டம் வித்தியாசமானதாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் கூறினார்.
- இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்த முடியும்.
ஹோ சி மின் சிட்டி:
வியட்நாம், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகள் இடையிலான நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி வியட்நாமில் உள்ள ஹோ சி மின் சிட்டியில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூருடன் டிரா கண்டது. வியட்நாம் அணி தனது முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை துவம்சம் செய்தது.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 104-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, தரவரிசையில் 94-வது இடத்தில் உள்ள வியட்நாமை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்த முடியும். வியட்நாம் அணி தனது முதலாவது ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அளித்த பேட்டியில், 'மிகவும் வலுவான அணிக்கு எதிரான இந்த ஆட்டம் வித்தியாசமானதாக இருக்கும். அதற்கு தகுந்தபடி நமது அணியின் அணுகுமுறையை மாற்ற வேண்டியது அவசியமானதாகும். அவர்கள் பந்தை கடத்தி செல்லும் விதத்தை கணித்து செயல்படுவதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். என்றார்.
இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை யூரோ ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ஓட்டல் நிர்வாகத்தின் கவனக்குறைவு எனக்கு அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது.
- விரைவில் விசாரணை நடத்தி திருட்டு போன எனது பொருட்களை மீட்டு தருவார்கள் என்று நம்புகிறேன்.
மும்பை:
இங்கிலாந்து தொடரை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பான புகார் ஒன்றை பதிவிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்காக நாங்கள் லண்டனில் உள்ள ஓட்டலில் சமீபத்தில் தங்கியிருந்தோம். அப்போது மர்ம நபர் ஒருவர் எனது அறைக்குள் நுழைந்து, நான் வைத்திருந்த பேக், பணம், கார்டு, நகை மற்றும் வாட்ச்கள் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டார். ஓட்டல் நிர்வாகத்தின் கவனக்குறைவு எனக்கு அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது. இது போன்ற பாதுகாப்பு குறைபாடு உள்ள ஓட்டலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்னுரிமை அளித்திருப்பது வியப்பளிக்கிறது. விரைவில் விசாரணை நடத்தி திருட்டு போன எனது பொருட்களை மீட்டு தருவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அறிந்த ஓட்டல் நிர்வாகம், 'இந்த தகவல் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஓட்டலில் தங்கியிருந்த நாள் மற்றும் விவரங்களை இ-மெயில் மூலம் அனுப்புங்கள்.நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்' என்று கூறியுள்ளது.
24 வயதான தானியா பாட்டியாவுக்கு இங்கிலாந்து பயணத்தின் போது ஒரு நாள் தொடரில் களம் காண வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






