என் மலர்
விளையாட்டு
- இந்திய தரப்பில் சினே ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- தாய்லாந்து அணியில் ஒரு வீராங்கனை மட்டுமே இரட்டை இலக்க ரன்னை எடுத்தார்.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தாய்லாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு வீராங்கனையை தவிர மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். இதில் 4 வீராங்கனைகள் ரன் ஏதும் எடுக்கவில்லை. இந்திய தரப்பில் சினே ராணா 3 விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா ராஜேஸ்வரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இறுதியில் 15.1 ஓவரை மட்டுமே சந்தித்த தாய்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்கள் எடுத்தது. இதனால் 38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- ராஞ்சி மைதானத்தில் இதுவரை 4 பேர் மட்டுமே சதமடித்துள்ளனர்.
- ராஞ்சி மைதானத்தில் சதமடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார்.
ராஞ்சி:
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 278 ரன்களை குவித்தது. அதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 45.5 ஓவர்களிலேயே 282 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் 113 ரன்களை விளாசினார். இதில் 15 பவுண்டரிகள் அடங்கும். 2022-ம் ஆண்டில் இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ஷ்ரேயாஸ் 458 ரன்களை குவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சதம் மூலம் முக்கிய சாதனையை அவர் படைத்துள்ளார். ராஞ்சி மைதானத்தில் சதமடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் விராட் கோலி மட்டுமே இந்த மைதானத்தில் சதமடித்திருந்தார்.
2013-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 139 ரன்களும், 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 123 ரன்களையும் விராட் கோலி அடித்திருந்தார். வெளிநாட்டு வீரர்கள் இரண்டு பேர் இங்கு சதமடித்துள்ளனர். இலங்கையின் மேத்யூவ்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா ஆகியோர் சதமடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க கேப்டன் கேசவ் மகராஜூக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
- பனிபொழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை என கேசவ் மகராஜூ கூறினார்.
ராஞ்சி:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 279 ரன் இலக்காக இருந்தது.
மார்க்ராம் 79 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஹென்ட்ரிக்ஸ் 74 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்), டேவிட் மில்லர் 35 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். முகமது சிராஜ் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 279 ரன் இலக்கை 25 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் எளிதில் எடுத்தது. இந்தியா 45.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 282 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்தார். அவர் 111 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 113 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இஷான் கிஷன் 84 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 93 ரன் எடுத்தார்.
இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 161 ரன் எடுத்தது ஆட்டத்தின் முக்கிய அம்சமாகும். சஞ்சு சாம்சன் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 30 ரன் (அவுட் இல்லை) எடுத்தார்.
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது:-
பந்து ஆடுவதற்கு ஏற்ற வகையில் நன்றாக வந்தது. ஆனால் அதே நேரத்தில் அது அளவை விட மிக குறைவாகவே இருந்தது. இதனால் முதல் 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்களை வீழ்த்துவதே எங்கள் திட்டமாக இருந்தது. இந்த திட்டம் பலித்தது.
சரியான நேரத்தில் பனிபொழிவு ஏற்பட்டது. இது பேட்டிங்குக்கு ஏற்றதாக இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க கேப்டன் கேசவ் மகராஜூக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
இஷான் கிஷனும், ஸ்ரேயாஸ் அய்யரும் அபாரமாக பேட்டிங் செய்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியவிதம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.அறிமுக வீரர் ஷபாஸ் முதல் 10 ஓவர்களில் நேர்த்தியாக வீசி திருப்பு முனையை ஏற்படுத்தியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்க தற்காலிக கேப்டன் கேசவ் மகராஜ் கூறும் போது, பனிபொழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.அதனால் 'டாஸ்' வென்ற பிறகு பேட்டிங்கை தேர்வு செய்தோம். ஆனால் ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பனியின் தாக்கத்தால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக மாறி விட்டது என்றார்.
இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி பழி தீர்த்துக் கொண்டது. லக்னோவில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.
3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லியில் நாளை நடக்கிறது.
- இந்த போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக மந்தனா செயல்படுகிறார்.
- இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய இந்தியா 4 போட்டிகளில் வெற்றியும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.
பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய இந்தியா 4 போட்டிகளில் வெற்றியும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.
இந்நிலையில் 6-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் களமிறங்கும் இந்தியா இன்று தாய்லாந்துடன் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக மந்தனா செயல்படுகிறார்.
இந்திய அணி:-
ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, சபினேனி மேகனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ்(வ), கிரண் நவ்கிரே, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, மேக்னா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்
தாய்லாந்து அணி:-
நன்னபட் கொஞ்சரோஎங்கை, நட்டகன் சந்தம், நருயெமோல் சாய்வாய், சொர்ணரின் டிப்போச், சனிடா சுத்திருவாங், ரோசனன் கானோ, பன்னிதா மாயா, நாட்டாயா பூச்சதம், ஒன்னிச்சா கம்சோம்பு, திபாட்சா புத்தாவோங், நந்திதா போன்ஸ்
- ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது.
- நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து மிகவும் அனுபவித்து ஆடினேன்.
புதுடெல்லி:
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. உலகக்கோப்பைக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
வேகப்பந்து வீரர் பும்ரா, ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக 20 ஓவர் உலகக்கோப்பையில் ஆடவில்லை. முன்னணி வீரர்களான இருவரும் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. உலகக்கோப்பைக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த தீபக் சாஹரும் காயம் அடைந்துள்ளார். அதிகமான போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் காயத்தில் சிக்குவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிக அழுத்தம் இருப்பதாக உணரும் வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது. அதனை சிலர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் சொல்லி நான் பார்த்து உள்ளேன். இதனால் அவர்களுக்கு இதனை சொல்லிக்கொள்கிறேன்.
ஐ.பி.எல்.லில் ஆடுவதால் வீரர்கள் மீது அதிக அழுத்தம் இருப்பதாக சொல்கிறார்கள். அழுத்தமாக உணர்ந்ததால் வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாட வேண்டாம் என்று நான் சொல்லிக்கொள்கிறேன்.
வீரர்கள் கிரிக்கெட்டை ரசித்து ஆடினால் அழுத்தம் இருக்காது. மன அளவிலான சோர்வு குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து மிகவும் அனுபவித்து ஆடினேன். கிரிக்கெட் அழுத்தம் இருப்பதாக நான் உணர்ந்தது இல்லை. வீரர்களும் விளையாட்டை ரசித்து ஆடினால் அழுத்தம் எதுவும் இருக்காது.
இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.
- கடந்த இரு சீசனில் ‘பிளே-ஆப்’ சுற்றை கூட எட்டாமல் சொதப்பிய சென்னை அணியில் இந்த முறை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
- அண்மையில் தூரந்த் கோப்பை போட்டியில் சென்னை அணி கால்இறுதிவரை முன்னேறியது.
கொல்கத்தா:
11 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதலாவது லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகானுடன் கொல்கத்தாவில் இன்று (திங்கட்கிழமை) பலப்பரீட்சை நடத்துகிறது. கடந்த இரு சீசனில் 'பிளே-ஆப்' சுற்றை கூட எட்டாமல் சொதப்பிய சென்னை அணியில் இந்த முறை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
அண்மையில் தூரந்த் கோப்பை போட்டியில் சென்னை அணி கால்இறுதிவரை முன்னேறியது. அதில் கேப்டன் அனிருத் தபா 2 கோல்கள் அடித்தார். 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்தார். மற்றொரு வீரர் பீட்டர் சிலிஸ்கோவிச் 3 கோல்கள் போட்டார். இதே போல் ஐ.எஸ்.எல். போட்டியிலும் சிறப்பாக செயல்படுவதை எதிர்நோக்கி உள்ளனர்.
சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் பிர்டாரிச் கூறுகையில், 'கால்பந்தில் தாக்குதல் பாணியில் ஆடுவதையும், நிறைய கோல்கள் அடிப்பதையும் விரும்புகிறேன். அதற்கு ஏற்ப வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். எதிரணி வீரர்கள் செய்யும் தவறுகளை நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் நமக்குரிய சாதகமான அம்சங்களையும் சரியாக பயன்படுத்த வேண்டியது முக்கியம்' என்றார்.
கடந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் கொல்கத்தா வெற்றி பெற்றிருந்தது. மற்றொரு ஆட்டம் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
முன்னதாக நேற்றிரவு நடந்த ஐதராபாத் எப்.சி.- மும்பை சிட்டி அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
ஒரு கட்டத்தில் ஐதராபாத் 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 85-வது நிமிடத்தில் மும்பை வீரர் அல்பர்ட்டோ நோகுரா கோல் போாட்டு தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.
- பெண்களுக்கான டிரையத்லான் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஆர்த்தி வெண்கல பதக்கம் கைப்பற்றினார்.
- நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 67 பதக்கத்துடன் தொடர்ந்து 5-வது இடத்தில் உள்ளது.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த போட்டிகளின் முடிவில் தமிழக அணி 22 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் ஆக மொத்தம் 65 பதக்கங்களுடன் இருந்தது.
நேற்றைய போட்டியில் தமிழ்நாட்டுக்கு மேலும் 2 பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான டிரையத்லான் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஆர்த்தி வெண்கல பதக்கம் கைப்பற்றினார்.
இதே போல ஆண்களுக்கான 120 கிலோ மீட்டர் மாஸ் ஸ்டார்ட் சைக்கிள் பந்தயத்தில் தமிழக வீரர் ஸ்ரீநாத் லட்சுமிகாந்தும் வெண்கல பதக்கம் வென்றார். சைக்கிளிங் போட்டியில் கிடைத்த 2-வது பதக்கம் ஆகும்.
நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணி 67 பதக்கத்துடன் தொடர்ந்து 5-வது இடத்தில் உள்ளது. சர்வீசஸ் 51 தங்கம் உள்பட 113 பதக்கத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. அரியானா 2-வது இடத்தி லும், மராட்டியம் 3-வது இடத்திலும், கர்நாடகா 4-வது இடத்திலும் உள்ளன.
தேசிய விளையாட்டு போட்டிகள் நாளை மறு நாளுடன் முடிவடைகிறது.
- உங்கள் பலம் சிக்ஸர்களை அடிப்பதில் இருந்தால் அதை செய்யுங்கள்.
- சதத்தை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது.
ராஞ்சி:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே ராஞ்சியில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் அய்யர் 113 ரன் அடித்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 84 பந்துகளில் 93 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஷான் கிஷன் கூறியதாவது:
சில வீரர்களுக்கு ஸ்டிரைக்கை சுழற்றும் பலம் உண்டு, சிக்ஸர் அடிப்பதே எனது பலம். நான் சிரமமின்றி சிக்ஸர் அடித்தேன், பலரால் அதைச் செய்ய முடியாது. சிக்ஸர் அடித்து ரன்கள் குவித்தால், ஸ்ட்ரைக் ரேட் பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் பலம் சிக்ஸர்களை அடிப்பதாக இருந்தால் அதை செய்யுங்கள். ஒற்றை ரன்னாக எடுத்திருக்கலாம், சதம் அடித்திருக்கலாம். ஆனால் நான் எனக்காக விளையாட மாட்டேன்.

எனது தனிப்பட்ட ஸ்கோரை நினைத்தால், எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது, நான் ரசிகர்களை ஏமாற்றி விடுகிறேன். சதத்தை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது, ஆனால் 93 ரன் அணிக்கு ஒரு பெரிய பங்களிப்பு என்று நான் நினைக்கிறேன். ரன் எடுப்பதில் வேகத்தை அளித்து அணியை பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, இதனால் அடுத்து வரும் வீரர்கள் மீது அழுத்தம் குறைவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 278 ரன்களை எடுத்துள்ளது.
- அடுத்து ஆடிய இந்திய அணி 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
ராஞ்சி:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. ஹென்ரிக்ஸ் 74 ரன்னிலும், மார்கிராம் 79 ரன்னிலும் அவுட்டாகினர். டேவிட் மில்லர் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் களமிறங்கினர்.
தவான் 13 ரன்னிலும் கில் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அப்போது இந்தியா 2 விக்கெட்டுக்கு 48 ரன் எடுத்திருந்தது.
அடுத்து இறங்கிய இஷான் கிஷன் ஜோடி நேர்த்தியாக ஆடியது. கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். அரை சதம் கடந்த இஷான் கிஷன் அதிரடியில் மிரட்டினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்னில் ஆட்டமிழந்தார்.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 161 ரன்களை குவித்து அசத்தியது. அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் ஒத்துழைக்க இந்திய அணி வெற்றிப் பாதைக்குச் சென்றது.
பொறுப்புடன் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் சதமடித்து அசத்தினார். இது அவரது 2வது சதமாகும்.
இறுதியில், இந்திய அணி 45.5 ஓவரில் 282 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 113 ரன்னுடனும், சாம்சன் 30 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 208 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 200 ரன்களை மட்டுமே எடுத்தது.
பெர்த்:
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று பெர்த்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். ஹேல்ஸ் 84 ரன்னும், பட்லர் 68 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. டேவிட் வார்னர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 73 ரன்னில் அவுட்டானார். மிட்செல் மார்ஷ் 36 ரன்னும், ஸ்டோய்னிஸ் 35 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் இங்கிலாந்து 1- 0 என முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், டோப்ளே தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 278 ரன்களை எடுத்துள்ளது.
- அந்த அணியின் ஹென்ரிக்ஸ், மார்க்ரம் ஆகியோர் அரை சதமடித்தனர்.
ராஞ்சி:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. டி காக் 5 ரன்னில் அவுட்டானார். மலான் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஹென்ரிக்சுடன் ஜோடி சேர்ந்த மார்க்ரம் பொறுப்புடன் ஆடினார். இருவரும் அரை சதம் கடந்தனர்.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்கள் சேர்த்தது. ஹென்ரிக்ஸ் 74 ரன்னிலும், கிளாசன் 30 ரன்னிலும், மார்கிராம் 79 ரன்னிலும், பார்னெல் 16 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. டேவிட் மில்லர் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- 9-வது புரோ கபடி 'லீக்' போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
- பெங்களூரு அணி 2-வது வெற்றிக்காகவும், புனே முதல் வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.
பெங்களூரு:
9-வது புரோ கபடி 'லீக்' போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் அரியானா ஸ்டீலர்ஸ் 41-33 என்ற கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்தது. தமிழ் தலைவாஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் (31-31), பாட்னா பைரேட்ஸ்-புனேரி பல்தான் (34-34) அணிகள் மோதிய ஆட்டங்கள் டையில் முடிந்தன.
இன்று 3 ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்ஸ் பாந்தர்ஸ்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூர் அணி முதல் ஆட்டத்தில் உ.பி. யோதாவிடம் தோற்றது. இதனால் அந்த அணி முதல் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. இதே போன்று பாட்னா அணியும் முதல் வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.
இரவு 8.30 மணிக்கு நடை பெறும் 2-வது ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்று இருந்தது. இதனால் முதல் வெற்றி யாருக்கு? என்று ஆவலுடன் எதிர்பார்க் கப்படுகிறது.
இரவு 9.30 மணிக்கு நடைபெறும் 3-வது ஆட்டத்தில் புனேரி பல்தான்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி 2-வது வெற்றிக்காகவும், புனே முதல் வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.






