என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா கோரதாண்டவம் ஆட தொடங்கியுள்ளது.

    நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    புதுவையில் ஜிப்மர், அரசு மருத்துவக்கல்லூரி, 7 தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் உள்ளது. தேவையான மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவ பணியாளர்கள் இருந்தும் கொரோனா தொற்று உயிரிழப்பு அதிகரித்து வருவது வேதனையாக உள்ளது.

    கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை 124 பேர் இறந்துள்ளனர். ஏப்ரல் மாத தொடக்கத்தில் நாள்தோறும் ஒருவர் அல்லது 2 பேர் என இறந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக சராசரியாக 10 பேர் இறக்கின்றனர்.

    முதல் அலையின்போது வயதானவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஆனால் 2-வது அலையில் 25 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டோர் அதிகளவில் இறக்கின்றனர்.

    மருத்துவ அறிக்கையில் நிமோனியா ஏற்பட்டு இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் உள்ளவர்கள் தொற்று அதிகரித்து கடைசி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்பேது சிகிச்சை பலனின்றி இறக்கின்றனர்.

    கடந்த ஆண்டு உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கான காரணம், சுகாதார பணியாளர்கள் கவனிப்பு குறித்து தனிப்பட்ட முறையில் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தும்.

    தற்போது எந்தவித விசாரணையும் நடக்கவில்லை. வீட்டு தனிமையில் உள்ளவர்களை சுகாதார பணியாளர்கள் நேரில் சென்று விசாரிப்பதும் இல்லை. அரசு சார்பில் ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் எந்த மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கு படுக்கைகள் வழங்கப்படுவது கிடையாது. இதனால்தான் சிகிச்சை பலனின்றி நாள்தோறும் 10 பேர் உயிரிழந்து வருகின்றனர்.


    புதுவை அரசு முன்பு இருந்தது போலவே தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

    புதுச்சேரி:

    புதுவை மேல்-சபை எம்.பி. கோகுலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பெரும் தொற்றின் 2-வது அலை புதுவையில் மக்களையும், அரசையும் பாடாய்படுத்தி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் மாநில அரசின் பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதுடன் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையும் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    புதுவை அரசு முன்பு இருந்தது போலவே தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு ஈடாக ஜிப்மர் நிர்வாகமும் தனது படுக்கைகளின் எண்ணிக்கையை 800 ஆக அதிகரிக்க வேண்டும் என்று நிர்வாகத்தை வற்புறுத்தி இருக்கிறேன்.

    கொரோனா வைரஸ்

    மாநில அரசுடன் செய்து கொண்ட புரிதலின்படி ஜிப்மர் நிர்வாகம் அதிதீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற நிலை இருப்பதால் தான் அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    இருந்தாலும் புதுவையில் மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தலையாய நிறுவனம் என்ற முறையிலும் மத்திய அரசின் நிறுவனமாக இருப்பதாலும் அதற்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

    அதற்கேற்ப அங்கு 10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் புதிய பிரிவு ஒன்றை ஏற்படுத்தி வருகிறார்கள். கூடுதலாக புதிய படுக்கைகளையும் ஒதுக்குவதாக உறுதி அளித்து உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    அனைத்து மாணவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் கவனமாக இருக்க வேண்டும். தடுப்பூசி போடாத மாணவர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா தொற்று அதி தீவிரமாக பரவி வருகிறது.

    தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிது. புதுவை பல்கலைக்கழகம் மூடப்பட்டு மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில் புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியும் தேதி குறிப்பிடப்படாமல் மூடப்படுகிறது.

    வருகிற 3-ந்தேதி தேதி முதல் எம்.பி.பி.எஸ்., பி.எஸ்.சி. நர்சிங், பொது சுகாதாரம் உள்ளிட்ட மருத்துவ இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள் வீட்டிலிருந்தே வகுப்புகளில் பங்கேற்கலாம். விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் கருத்தரங்கு கூடத்தில் நடக்கும் வகுப்பில் பங்கேற்கலாம். விடுதி மாணவர்கள் வீட்டுக்கு செல்ல விரும்பினால் விண்ணப்பிக்கலாம்.

    தேர்வு எழுத காத்திருக்கும் இறுதியாண்டு மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம். புதுவையிலேயே தங்கியிருக்க வேண்டும்.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செய்முறை தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். அனைத்து மாணவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் கவனமாக இருக்க வேண்டும். தடுப்பூசி போடாத மாணவர்கள் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். விடுதியிலிருந்து செல்லும் மாணவர்கள் கல்லூரி அறிவிப்புக்கு முன்பு மீண்டும் வரக்கூடாது. துறை தலைவர்கள் ஆன்லைன் வகுப்புகள், செய்முறை பயிற்சிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    வருகிற 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 2 வாரங்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை ஜிப்மர் டீன் தெரிவித்துள்ளார்.

    புதுவை மாநிலத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கான மேஜைகள் போடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந்தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி, அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மற்றும் மாகி, ஏனாம் பகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராமூலம் கண்காணிக்கப்படுகிறது.

    இதற்கிடையே நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கான மேஜைகள் போடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூட்டம் கூடாதவாறு வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றிலும் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்கள் ஆகியோர் தங்களது வாகனங்களை நிறுத்த தனித்தனி இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி மாநிலத்தில் 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்படி புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி ஆகிய 3 இடங்களிலும், காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி, மாகி மகாத்மா காந்தி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏனாமில் மினி சிவில் ஸ்டேஷன் ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    கொரோனா பரவல் அச்சம் காரணமாக தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி அனைத்து வேட்பாளர்கள், முகவர்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதுச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 8 இடங்களில் இந்த சிறப்பு பரிசோதனை முகாம் நடந்தது. மொத்தம் 3 ஆயிரத்து 27 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 19 அரசு ஊழியர்கள், 84 முகவர்கள் என 103 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    கொளுத்தும் வெயிலால் புதுவை மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். வெயில் காரணமாக மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின.
    புதுச்சேரி:

    அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே புதுவையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சாலைகளில் வெயில் கோர தாண்டவம் ஆடும் வகையில் நேற்று அனல் காற்று வீசியதால் சாலைகளில் வாகன நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

    தற்போது ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலமான புதுவையில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லை என்றாலும் வெயில் கொளுத்தியதால் பெரும்பாலானவர்கள் பகல் பொழுதில் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். சாலைகளில் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் குளிர் கண்ணாடிகள், தொப்பி அணிந்தபடி செல்வதையும் காண முடிந்தது. சாலைகளில் நடந்து செல்பவர்கள் குடைபிடித்தபடி செல்கின்றனர்.

    குறிப்பாக பெண்கள் தங்கள் சேலையாலும், சுடிதார் துப்பட்டாவினாலும் தலையையும், முகத்தையும் மூடிக்கொண்டு செல்வதை காண முடிகிறது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

    உடல் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் பழச்சாறு, கரும்புச்சாறு, குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்கி பருகி வருகின்றனர். இதுதவிர இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, வெள்ளரிப்பழம் ஆகியவற்றையும் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.

    குறிப்பாக மருத்துவ குணம் உள்ள நுங்கு விற்பனை ஜோராக நடக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். இதன் காரணமாக வியாபாரிகள், புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் ஆங்காங்கே நுங்குவை குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
    புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு 3 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்புள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய தந்தி டி.வி. கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
    புதுச்சேரி:

    மேற்கு வங்காளத்தில் நேற்று கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்ததுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்  கணிப்பை தந்தி டி.வி. வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தின் 234 தொகுதிகளில் திமுக தொகுதி 133 இடங்களையும், அதிமுக 68 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் 33 இடங்களில் கடும் போட்டி நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில்,  புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 23 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும், 4 தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.
    முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 30 பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் வேட்பாளர்கள், ஏஜெண்டுகள், அரசு அதிகாரிகள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் ஆகியோருக்கான கொரோனா பரிசோதனை முகாம் புதுவையில் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட 8 மையங்களில் தொடங்கியது.

    இந்த முகாமில் ஆயிரத்து 546 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் என 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 30 பேருக்கு மேல் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

    அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகளை வருகிற 1-ந்தேதி மதியத்திற்குள் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை வீரியமாக உள்ளது. தேர்தல் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2 நாட்களில் மட்டும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஆண், பெண் போலீஸ்காரர்கள் என 107 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருபுவனை அருகே நோய் கொடுமையால் பெண் எலி மருந்து தின்று தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    திருபுவனை அருகே சன்னியாசிகுப்பம் காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவுரி (வயது33). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென இறந்து போனார். இதனால் கவுரி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கவுரிக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மருந்து, மாத்திரைகளும் வாங்கி சாப்பிட்டு வந்தார்.

    சம்பவத்தன்று கவுரிக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவுரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று விட்டார்.

    இதில் மயங்கி விழுந்த கவுரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை கவுரி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தாய் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    உளுந்தூர்பேட்டை அருகே திருப்பெயர் கிராமம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறது.

    இவரது மகன் அரவிந்த (வயது24). இவர் புதுவையில் உள்ள தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    புதுவையில் 4 நாட்கள் பஸ்சில் பணிபுரிந்து விட்டு அரவிந்த் ஓய்வு எடுக்க வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்று மாலை அரவிந்த் பணி முடிந்து கணக்கு, வழக்குகளை ஒப்படைக்க மோட்டார் சைக்கிளில் பஸ் அலுவலகத்துக்கு வந்துகொண்டிருந்தார்.

    வில்லியனூர் சுல்தான் பேட்டையில் தனியார் கோழி இறைச்சிக்கடை அருகே வந்த போது அந்தவழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக அரவிந்த் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அரவிந்த் தலையில் பலத்த காயமடைந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அரவிந்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அரவிந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தந்தை வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    வீட்டுமனை தகராறில் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கொம்பாக்கம் பேட் புதுநகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது46). இவர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி எதிரே சொந்தமாக ஆம்புலன்ஸ் வாங்கி ஒட்டி வருகிறார்.

    இவருக்கும் இவரது தம்பி ஆரோனுக்கும் சொந்தமாக ஓதியம்பட்டு ஜெய்கிருஷ்ணா நகரில் வீட்டுமனை உள்ளது. சம்பவத்தன்று அந்த வீட்டு மனையை கொம்பாக்கம்பேட் புதுநகரை சேர்ந்த ரத்தினவேலு(59) என்பவர் ஜே.சி.பி. எந்திரத்தால் அங்குள்ள முட்செடிகளை அகற்றிக்கொண்டிருந்தார்.

    இதனை கலைவாணன் தட்டிக்கேட்டார். அப்போது ரத்தினவேலு அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து கலைவாணன் தலையில் ஓங்கி அடித்தார். மேலும் கலைவாணனை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த ரத்த வெள்ளத்தில் மயங்கிபோன கலைவாணனை அவரது தம்பி ஆரோன் மற்றும் அங்குள்ளவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கலைவாணன் சிகிச்சை பெற்ற வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரத்தினவேலை தேடி வருகிறார்கள். 

    மூலக்குளத்தில் குடும்பத்தினருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை மூலக்குளம் அன்னை தெரேசாநகர் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது54). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு தேவி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    கடந்த 3 மாதமாக ரவிக்குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தார்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரவிக்குமாரை அவரது குடும்பத்தினர் டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்தனர்.

    இந்தநிலையில் மருத்துவ பரிசோதனை முடிவில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வந்தது. அதில் ரவிக்குமாருக்கு புற்றுநோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் அன்று முதல் ரவிக்குமார் மனவருத்தத்தில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு தூங்க சென்றனர். ரவிக்குமார் வீட்டு வராண்டாவில் தூங்கினார்.

    நேற்று காலை பார்த்தபோது வீட்டின் மெயின் கேட்டில் ரவிக்குமார் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தை கண்டு அவரது மனைவி தேவி அதிர்ச்சியடைந்தார்.

    அவரது உடல் அருகே ரவிக்குமார் ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் நான் தெய்வமாக மதிக்கும் மாமா, அக்கா, மாமனார், மாமியார் மற்றும் அன்பான மனைவி, பாசமான மகன், மகள் மற்றும் மாமன் மகன்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    எனக்கு புற்றுநோய் உள்ளதால் அது குணமாக போவது கிடையாது. ஆகையால் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீங்கள் அனைவரும் என்னை மன்னித்துவிடவும், இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து அவரது மனைவி தேவி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×