என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர் சேர்க்கை நடைபெறும்போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரசால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மாணவர்களின் 9-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    கொரோனா வைரஸ்

    இந்த நிலையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்காக கடந்த மாதம் (ஜூன்) 23-ந் தேதி முதல் கடந்த 5-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கொரோனா தொற்றால் வேலை இழந்துள்ள பலர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

    மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அரசு பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இது அந்தந்த பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டது. இதனை ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

    பட்டியலில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் தங்களது பெயர் உள்ள மாணவ- மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியடைத்தனர். இவர்களுக்கான நேர்காணல் மற்றும் மாணவர் சேர்க்கை நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதில் ஒரு சில மாணவர்கள் சம மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு இடங்களை ஒதுக்குவது என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் 19-ந் தேதி காலியிட விவரங்கள் அறிவிக்கப்படும். அன்றைய தினம் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

    அவர்களுக்கு 21-ந் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும். 22-ந் தேதி காலியிட விவரங்கள் வெளியிடப்படும். அன்றைய தினம் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு 23-ந் தேதி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதன் பின்னர் காலியாக உள்ள இடங்கள் பட்டியல் கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்படும்.

    மாணவர் சேர்க்கை நடைபெறும்போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


    கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடந்த உள்ளூர் மக்களும், குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து செயற்கை மணல் பரப்பில் அமர்ந்து பொழுது போக்கி மகிழ்ந்தனர்.
    புதுச்சேரி:

    கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் படையெடுக்க தொடங்கினர்.

    வழக்கமாக வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு அதிகம் வருகை தருவார்கள். நேற்று தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

    கடற்கரை சாலை, பாரதி பூங்கா, அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடற்கரையில் ஆர்ப்பரித்து எழுந்த கடலில் குளித்து மகிழ்ந்தனர். சிலர் அங்கு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இதனால் மதிய நேரத்திலும் கடற்கரை சாலையில் மக்களை காண முடிந்தது.

    இதேபோல் கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடந்த உள்ளூர் மக்களும், குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து செயற்கை மணல் பரப்பில் அமர்ந்து பொழுது போக்கி மகிழ்ந்தனர்.

    இதேபோல் சண்டே மார்க்கெட்டில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    அமைச்சர் நமச்சிவாயத்துக்கு உள்துறை, மின்துறை, கல்வி, தொழில் மற்றும் வர்த்தகம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மற்றும் சைனிக் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி: 

    புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள் தொடர்பான பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம்  முதலமைச்சர் ரங்கசாமி இன்று வழங்கினார். ஆளுநர் ஒப்புதலையடுத்து அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டது. 

    முதல்வர் ரங்கசாமிக்கு கூட்டுறவுத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை, துறைமுகம், அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் மற்றும் விளம்பரம் உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    நமச்சிவாயம்: உள்துறை, மின்துறை, கல்வி, தொழில் மற்றும் வர்த்தகம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சைனிக் நலன்

    க.லட்சுமி நாராயணன் - பொதுப்பணித்துறை, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து, மீன்வளத்துறை, சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, அச்சகம்.

    தேனி ஜெயக்குமார்: வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, வனத்துறை, சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை.

    அமைச்சர்கள் பதவியேற்பு

    சாய் சரவணன் குமார்: நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, டிஆர்டிஏ, சமுதாய மேம்பாடு, நகர்ப்புற அடிப்படை சேவைகள், தீயணைப்பு, சிறுபான்மையினர் நலத்துறை

    சந்திர பிரியங்கா: ஆதி திராவிடர் நலத்துறை, போக்குவரத்து, வீட்டு வசதி, தொழிலாளர் நலத்துறை, கலை மற்றும் கலாச்சாரம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை.

    புதுச்சேரியில் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் கவனித்துவருகிறார். நேற்று புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த அவர், புதுச்சேரியில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்படுவதாகவும், ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுவதாகவும் கூறினார். 

    இந்நிலையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், திட்டமிட்டபடி புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும் என்றார்.

    புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழாவை துவக்கி வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

    ‘தடுப்பூசி போடுவதில் தெலுங்கானா மாநிலமும் முன்னேறி வருகிறது, ஆனால் பணியை விரைந்து முடிப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. அதிகமான பழங்குடியினர் உள்ளதே இதற்கு காரணம். அவர்கள் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள தயங்குகிறார்கள். 

    எனவே, நாளை நான் ரங்காரெட்டியில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்திற்குச் சென்று அவர்களிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்கிறேன். நாளை பழங்குடி சகோதர- சகோதரிகளுடன் இருப்பேன். நான் அங்கு சென்று அவர்களுடன் தடுப்பூசி போட்டுக்கொள்வதால், அவர்களும் தடுப்பூசி போடுவார்கள்’ என நம்பிக்கை தெரிவித்தார் தமிழிசை சவுந்தரராஜன்.
    பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி: 

    புதுவையில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்- அமைச்சராக ரங்கசாமி கடந்த மே மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றார். அமைச்சர்கள் கடந்த 27-ந்தேதி பதவி ஏற்றனர். அவர்களுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    அமைச்சர்கள் பதவி ஏற்று 2 வாரங்கள் ஆகியும் இன்னும் அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. 

    தமிழிசை சவுந்தரராஜன்

    இந்நிலையில்,  அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள் தொடர்பான பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று வழங்கினார். 

    இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் வருகிற 16-ந்தேதி 9 ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தார். 

    கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கல்லூரிகளும் வருகிற 16-ந்தேதி முதல் திறக்கப்படும் என்றார். மேலும் பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். 

    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 145 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,976 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,08,37,222 ஆக உயர்ந்துள்ளது.

    நாடு முழுவதும் ஒரே நாளில் 895 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,08,040 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,99,75,064 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 41,526 பேர் குணமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,976 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 1,505 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    அமைச்சர்கள் பதவி ஏற்று 2 வாரங்கள் ஆகியும் இன்னும் அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. இதற்கு காரணம் முக்கிய இலாகாக்களை பா.ஜனதா கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்- அமைச்சராக ரங்கசாமி கடந்த மே மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றார்.

    கூட்டணி மந்திரி சபையில் என்.ஆர். காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவியும், பா.ஜனதாவுக்கு 2 அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

    அமைச்சர்கள் கடந்த 27-ந்தேதி பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    அமைச்சர்கள் பதவி ஏற்று 2 வாரங்கள் ஆகியும் இன்னும் அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. இதற்கு காரணம் முக்கிய இலாகாக்களை பா.ஜனதா கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அமைச்சர்களுக்கு விரைவில் இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

    அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது சம்பந்தமாக எனது விருப்பத்தை ரங்கசாமியிடம் கூறுவேன் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    புதுவை வீராம்பட்டினத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைத்த பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனாவை முதலில் ஒழித்து விட்டால் அதன் பிறகு வளர்ச்சி திட்டங்களில் நாம் கவனம் செலுத்தலாம். முதல்-அமைச்சருடன் இணைந்து கவர்னர் அலுவலகமும் பல வளர்ச்சி திட்டங்களுக்கான முயற்சிகளை முன்னெடுத்து செல்லும்.

    அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது மட்டும் தான் என்னுடைய வேலை. கவர்னர் என்ற முறையில் கூட்டணி கட்சிக்குள் நடக்கும் பேச்சுவார்த்தையில் நான் தலையிட முடியாது.

    ஆனால், மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவராக விரைவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டு அதன் மூலம் அவர்களுடைய பணிகளை செய்வதற்கான என்னுடைய ஆரோக்கியமான ஆலோசனைகளை சொல்லலாம்.

    இது தொடர்பாக எனது விருப்பத்தை முதல்-அமைச்சரிடம் கூறுவேன்.

    புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய சுற்றுலாத்துறை மந்திரியுடன் கலந்தாலோசித்து புதுவையை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சுதேசி மில் அருகில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி: 

    புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சுதேசி மில் அருகில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைமை பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். நகர்ப்புற பொதுச்செயலாளர் ராஜன், கிராமப்புற பொதுச்செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    மாநில செயலாளர் ஹரிகிருஷ்ணன், அய்யப்பன், ஆனந்து, மலர்விழி, ரூபன் தாஸ், ருத்தரகுமார், சோம நாதன், சக்திவேல்  மற்றும் அணி நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். 

    ஆர்ப்பாட்டத்தில் இருசக்கர வாகனத்திற்கு 100 ரூபாய் அச்சிடப்பட்ட மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்வது போல்  சங்கு ஊதினர். முடிவில், பிராங்கிளின் பிரான்சுவா நன்றி கூறினார்.
    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 831 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 489 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று 6 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக 134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 96, காரைக்காலில் 25, ஏனாமில் 6, மாகியில் 7 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 151, காரைக்காலில் 23, ஏனாமில் 13, மாகியில் 43 பேர் என 230 பேர் தொற்றுடன் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று  வருகின்றனர்.

    புதுவையில் 203, காரைக்காலில் 28, ஏனாமில் 1,  மாகியில் 13 பேர் என 255 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.  

    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு  லட்சத்து 18 ஆயிரத்து 831 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 489 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    புதுவையில் ஆயிரத்து 62, காரைக்காலில் 196, ஏனாமில் 21, மாகியில் 64 பேர் என ஆயிரத்து 343 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது ஆயிரத்து 573 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். 

    காரைக்காலில் 68 வயது பெண் சிகிச்சை பலனினின்றி இறந்தார். இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது.
    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தந்தை - மகள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அருந்ததிபுரம் ஆனந்தம் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). கட்டிட தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் மரப்பாலம் 100 அடி ரோட்டில் இருந்து தனது மகள் பார்வதி (24) என்பவரை மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

    மரப்பாலம் சிக்னல் மின்துறை அலுவலகம் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக ராமச்சந்திரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த ராமச்சந்திரனும், அவரது மகள் பார்வதியும் காயம் அடைந்தனர்.

    உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வெளிப்புற நோயாளியாக சிகிச்சை பெற்ற இருவரும் பின்னர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த விபத்து குறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் புதுவை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை கன்னியக்கோவில் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவசங்கரன் (26). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனக்கு சொந்தமான ஆட்டோவை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக வந்த டேங்கர் லாரி நிறுத்தி இருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது.

    இதுகுறித்து சிவசங்கரன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே டாக்டரிடம் கறவை மாடுகளை வாங்கி மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே உருவையாறு காலனி திருக்காஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள். டாக்டரான இவர் அரியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் தனது வீட்டில் ஏராளமான கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். அந்த கறவை மாடுகளை சிவபெருமாளின் தாயார் பராமரித்து வந்தார்.

    இதற்கிடையே சிவபெருமாளின் தாயார் உடல் நலக்குறைவால் பசுமாடுகளை பராமரிக்க முடியாததால் அதனை விற்க சிவபெருமாள் முடிவு செய்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வில்லியனூர் காவேரி நகரை சேர்ந்த பால் கறவை தொழில் செய்து வரும் சங்கர் என்பவர் தான் மிகவும் கஷ்டபடுவதாகவும், குடும்ப நடத்தவே சிரமப்படுவதாக சிவபெருமாளிடம் முறையிட்டார். தனக்கு சில பசுமாடுகளை கொடுத்து உதவி செய்தால் அதன் மூலம் பால் கறந்து தனது குடும்பத்தை நடத்த முடியும் என்று சங்கர் வருத்தத்துடன் கூறினார்.

    இதனை கேட்டு மனமிறங்கிய சிவபெருமாள் நம்பிக்கையின் அடிப்படையில் தனது வீட்டில் இருந்த 5 பசு மாடுகள் மற்றும் 2 கன்றுகுட்டிகளை கொடுத்து தான் கேட்கும்போது எந்தவித நிபந்தனையும் இன்றி பசுமாடுகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி ஒப்படைத்தார்.

    இந்த நிலையில் சிவபெருமாள் தான் கொடுத்த பசுமாடுகளையும், கன்றுகுட்டிகளையும் திருப்பி கொடுக்கும்படி சங்கரிடம் கேட்டார். ஆனால் அதனை சங்கர் ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்தார்.

    இதையடுத்து சிவபெருமாள் மங்களம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மோசடி வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மேட்டுப்பாளையத்தில் நண்பன் இறந்த வேதனையில் தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கோட்டைமேடு ராகவ செட்டியார் வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது சகோதரர் ராஜீ (வயது23). தச்சு தொழிலாளி. இவர் மேட்டுப்பாளையத்தில் தனியாக வசித்து வந்தார்.

    கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ராஜீவின் நண்பரான தேங்காய்திட்டை சேர்ந்த அய்யப்பன் என்பவர் இறந்து விட்டார். நண்பன் இறந்தது முதல் ராஜீ வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த வருத்தத்தில் ராஜீ அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். ஆனாலும் நண்பனின் மறைவு ராஜீயின் மனதைவிட்டு அகலவில்லை. தினமும் இறந்து போன நண்பரை நினைத்து விரக்தியில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை ராஜீ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தான் குடியிருந்த வீட்டில் தாயாரின் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். உடனே பக்கம் பக்கத்தினர் ராஜீயை தூக்கில் இருந்து மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது சகோதரர் மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×