என் மலர்
புதுச்சேரி
வில்லியனூர் அருகே உருவையாறு காலனி திருக்காஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள். டாக்டரான இவர் அரியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது வீட்டில் ஏராளமான கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். அந்த கறவை மாடுகளை சிவபெருமாளின் தாயார் பராமரித்து வந்தார்.
இதற்கிடையே சிவபெருமாளின் தாயார் உடல் நலக்குறைவால் பசுமாடுகளை பராமரிக்க முடியாததால் அதனை விற்க சிவபெருமாள் முடிவு செய்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வில்லியனூர் காவேரி நகரை சேர்ந்த பால் கறவை தொழில் செய்து வரும் சங்கர் என்பவர் தான் மிகவும் கஷ்டபடுவதாகவும், குடும்ப நடத்தவே சிரமப்படுவதாக சிவபெருமாளிடம் முறையிட்டார். தனக்கு சில பசுமாடுகளை கொடுத்து உதவி செய்தால் அதன் மூலம் பால் கறந்து தனது குடும்பத்தை நடத்த முடியும் என்று சங்கர் வருத்தத்துடன் கூறினார்.
இதனை கேட்டு மனமிறங்கிய சிவபெருமாள் நம்பிக்கையின் அடிப்படையில் தனது வீட்டில் இருந்த 5 பசு மாடுகள் மற்றும் 2 கன்றுகுட்டிகளை கொடுத்து தான் கேட்கும்போது எந்தவித நிபந்தனையும் இன்றி பசுமாடுகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி ஒப்படைத்தார்.
இந்த நிலையில் சிவபெருமாள் தான் கொடுத்த பசுமாடுகளையும், கன்றுகுட்டிகளையும் திருப்பி கொடுக்கும்படி சங்கரிடம் கேட்டார். ஆனால் அதனை சங்கர் ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்தார்.
இதையடுத்து சிவபெருமாள் மங்களம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மோசடி வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியாங்குப்பம் கோட்டைமேடு ராகவ செட்டியார் வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது சகோதரர் ராஜீ (வயது23). தச்சு தொழிலாளி. இவர் மேட்டுப்பாளையத்தில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ராஜீவின் நண்பரான தேங்காய்திட்டை சேர்ந்த அய்யப்பன் என்பவர் இறந்து விட்டார். நண்பன் இறந்தது முதல் ராஜீ வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த வருத்தத்தில் ராஜீ அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். ஆனாலும் நண்பனின் மறைவு ராஜீயின் மனதைவிட்டு அகலவில்லை. தினமும் இறந்து போன நண்பரை நினைத்து விரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை ராஜீ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தான் குடியிருந்த வீட்டில் தாயாரின் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். உடனே பக்கம் பக்கத்தினர் ராஜீயை தூக்கில் இருந்து மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது சகோதரர் மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை மாவட்டம் மருதூர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது57). புதுவை நகராட்சியில் இளநிலை என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.
திருமணம் ஆகாத இவர் புதுவை காமராஜர் நகரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவரும் வில்லியனூர் கட்டிட மையத்தில் இளநிலை என்ஜினீயராக வேலை செய்து வரும் லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்த கல்யாணசுந்தரம் (56) என்பவரும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம்.
கடந்த 3 நாட்களாக கல்யாணசுந்தரம் செல்போனில் முருகானந்தத்திடம் பேச முயன்றார். ஆனால் முருகானந்தம் போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த கல்யாணசுந்தரம் நேற்று முருகானந்தம் வசித்து வந்த வீட்டுக்கு சென்றார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டியிருந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து கல்யாண சுந்தரம் பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் முருகானந்தம் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து உடல்நலக்குறைவால் முருகானந்தம் இறந்து போனாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை காந்திநகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முகமது சய்த். இவரது மகள் அஸ்மா (வயது19). 8-ம் வகுப்பு வரை படித்திருந்த அஸ்மா எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஒரு வருடமாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே அஸ்மா சென்னையை சேர்ந்த முரளி(25) என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பல இடங்களில் பணம் கடன் வாங்கி அஸ்மா கொடுத்திருந்தாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் கடந்த சில மாதங்களாக முரளி அஸ்மாவிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் அஸ்மா மன விரக்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை அஸ்மா தனது தங்கை நஸ்ரினை வீட்டின் வெளியே விளையாட செல்லுமாறு கூறி அனுப்பி விட்டு வீட்டின் முன் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த நஸ்ரின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது தனது அக்காள் அஸ்மா மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அலறல் சத்தம் போட்டார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த கதவை உடைத்து தூக்கில் தொங்கிய அஸ்மாவை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அஸ்மா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அஸ்மா தற்கொலை செய்துகொள்ளும் முன்பு தான் தூக்குபோட்டு தொங்குவதை செல்போனில் பதிவு செய்திருந்தார். மேலும் மற்றொரு பதிவில் சென்னையை சேர்ந்த முரளி என்பவருடன் பழகி வந்ததாகவும், அவருக்கு பணம் கடன் வாங்கி கொடுத்து இருந்ததாகவும், அந்த பணத்தை முரளி தராமல் ஏமாற்றி விட்டதால் தான் தற்கொலை செய்து கொள்வதாக பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து அஸ்மாவின் சகோதரர் சாஹித் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தகுதித்தேர்வின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தடகள போட்டிகளில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் 5 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு புதுவை கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், டோக்கியோ ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனைகள் தனலட்சுமி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் மற்றும் தடகள வீரர்கள் ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் பதக்கம் வென்று நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 597 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 283 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 1,588 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 1,871 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 262 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுச்சேரியில் இதுவரை 13 லட்சத்து 47ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 11 லட்சத்து 57 ஆயிரத்து 6 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. புதுவையில் கொரோனாவுக்கு நேற்று முதியவர் ஒருவர் பலியானார். அதாவது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரை சேர்ந்த 89 வயது முதியவர் பலியானார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1,762 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் தற்போது உயிரிழப்பு 1.49 சதவீதமாகவும், குணமடைந்தோர் 96.92 சதவீதமாகவும் உள்ளது. நேற்று சுகாதார பணியாளர்கள் 5 பேரும், பொதுமக்கள் 1,450 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மாநிலத்தில் இதுவரை 5 லட்சத்து 28 ஆயிரத்து 360 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பாகூர்:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100-ஐ தாண்டி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் புதுவையிலும் பெட்ரோல் லிட்டருக்கு 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முன்பெல்லாம் தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்ந்தால் புதுவையில் பெட்ரோல் விலை குறைவாக தான் இருக்கும். இதனால் தமிழகத்தில் இருந்து ஆட்டோ டாக்சி, பஸ் போன்ற வாகனங்கள் புதுவையை நோக்கி படையெடுக்கும்.
ஆனால் தற்போது தமிழகத்துக்கு நிகராக புதுவையிலும் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கிராமப்புறங்களான பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், அரியாங் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 தாண்டி ரூ.100.20-க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கிராமப்புறங்களில் உள்ள வாகன ஓட்டிகள் குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள், இருசக்கர வாகனத்தில் காய்கறி விற்பனை செய்பவர்கள் கிராமப்புறங்களில் இருந்து நகரப் பகுதிக்கு வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இதே நிலைமையில் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டு போனால் இரு சக்கர வாகனத்தில் இருந்து சைக்கிளுக்கு மாற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும் என வாகன ஓட்டிகள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.







